அண்டார்டிகா பல நூறு மீட்டர் ஆழத்துக்கு உறைபனியால் மூடப்பட்டிருந்தாலும் கெட்டியான உறை பனிக்கட்டிக்கு அடியில் பல ஏரிகள் உள்ளன என்பது ஏற்கெனவே கண்டுபிடிக்கப்ப்ட்ட விஷயம் மொத்தம் 387 பாதாள ஏரிகள் உள்ளன.
![]() |
| லேக் விடா பகுதி |
லேக் விடா பகுதி மற்ற இடங்களைப் போலவே உறைபனிக்கட்டியால் ஆனதே. அங்கு 60 அடி ஆழத்துக்கு அடியில் ஏரி உள்ளது. அந்த பாதாள ஏரியில் உள்ள தண்ணீரானது மைனஸ் 13 டிகிரி அளவுக்குக் கடும் குளிர்ச்சியானது. பாதாள ஏரி என்பதால் சுத்தமாக வெளிச்சம் கிடையாது. கும்மிருட்டு..அத்துடன் ஏரி நீர் கடும் உப்புக் கரிப்பதாகும்.
![]() |
| லேக் விடா பாதாள ஏரில் நீரில் காணப்பட்ட நுண்ணுயிர்கள் |
இக்கண்டுபிடிப்பு பற்றிய விவரங்கள் அமெரிக்க அறிவியல் தேசிய அகாடமியின் ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஏரியானது 2800 ஆண்டுகளுக்கு முன்னர் ஐஸ்கட்டிக்கு அடியில் புதையுண்டு போயிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.இந்த பாதாள ஏரியில் 32 வகையான நுண்ணுயிர்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் கிடையாது. சூரிய ஒளியும் கிடையாது. ஆனாலும் பாதாள ஏரியில் உள்ள நுண்ணுயிர்கள் ஹைட்ரஜனைப் பயன்படுத்தி உயிர் வாழ்கின்றன என்று கருதப்படுகிறது. வழக்கமான முறைகளுக்குப் பதில் முற்றிலும் மாறுபட்ட சூழ் நிலைகளில் நுண்ணுயிர்கள் உயிர் வாழ்வது என்பது பூமியில் புதிது அல்ல.
கடல்களில் சில இடங்களில் நல்ல ஆழத்தில் Black Smokers எனப்படும் கூம்பு வடிவ வென்னீர் ஊற்று உள்ள இடங்களில் பல நூறு டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சூடான நீர் வெளிப்படுகிறது. அவற்றின் அருகே அதாவது கடும் வெப்பம் நிலவும் சூழலில் நுண்ணுயிர்கள் காணப்படுகின்றன.
இதற்கு நேர் மாறான சூழ் நிலைகளில் லேக் விடா பகுதியில் நுண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது சனி, வியாழன் போன்ற கிரகங்களின் சந்திரன்களில் கிட்டத்தட்ட இம்மாதிரியான சூழ் நிலைகளில் நுண்ணுயிர்கள் ஒரு வேளை இருக்கலாம் எனபதைக் காட்டுவதாகச் சொல்லலாம்.
![]() |
| லேக் எல்ஸ்வர்த் பகுதியில் அமைந்த முகாம்கள் |
ஹோஸ் பைப் மூலம் மிகுந்த வேகத்தில் வென்னீரைப் பீச்சி உறைபனிக்கட்டியில் துளையிட்டு பாதாள ஏரியிலிருந்து தண்ணீர் சாம்பிளை எடுப்பது என்பது திட்டமாகும். 90 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் கொண்ட வென்னீரைத் தொடரந்து தயாரிக்கின்ற யந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் பிரிட்டிஷ் திட்டம் டிசம்பர் மாதக் கடைசி வாக்கில் பாதியில் நின்று விட்டது. மீண்டும் இங்கு முயற்சி மேற்கொள்ள சில ஆண்டுகள் ஆகலாம் என்று கருதப்படுகிறது
![]() |
| லேக் வோஸ்டாக் பாதாள ஏரி மேலே அமைந்த ரஷ்ய முகாம் |
ரஷியர்கள் வென்னீரைப் பயன்படுத்தும் உத்தியைக் கையாளவில்லை. பனிக்கட்டித் தரையில் வழக்கமான முறையில் துரப்பணமிடும் உத்தியைக் கையாண்டனர். ஆனால் அவர்கள் 20 ஆண்டுக் காலம் பாடுபட வேண்டியிருந்தது. எது எப்படியோ லேக் வோஸ்டாக் நீரை வெளியே எடுப்பதில் ரஷியர்கள் நிகழ்த்திய சாதனை மகத்தானதே.
![]() |
| லேக் வில்லான்ஸ் பாதாள ஏரியை ஆராய அண்டார்டிகாவில் வந்து இறன்கும் அமெரிக்கக் குழுவினர் |
லேக் வில்லான்ஸ் பாதாள ஏரியை எட்டுவதற்கு அமெரிக்க நிபுணர்கள், எல்ஸ்வர்த் ஏரி விஷயத்தில்பிரிட்டிஷ் நிபுணர்கள் கையாண்டது போலவே வென்னீரைப் பயன்படுத்த இருக்கின்றனர். அமெரிக்கர் இந்த விஷயத்தில் வெற்றி பெறுவரா என்பது இப்போது கேள்விக்குறியாக உள்ளது ( காண்க: பாதாள ஏரியை எட்டுவதற்கு வெந்நீர் ஒரு கருவி )
(குறிப்பு: இந்த வலைப் பதிவுக்கு Link கொடுக்க என்னால் அனுமதிக்கப்பட்டுள்ள ஓரிரு இணைய தளங்கள், வலைப் பதிவுகள் தவிர, வேறு எவரும் கண்டிப்பாக இந்த வலைப்பதிவில் வெளியாகும் கட்டுரைகளை அப்படியே காப்பியடித்து அல்லது அவற்றின் ஒரு பகுதியைத் தங்களது இணைய தள்த்தில் அல்லது வலைப் பதிவில் போடலாகாது என்று எச்சரிக்கப்படுகிறார்கள்)




