![]() |
| புளூட்டோ. இது நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் சுமார் 40 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது எடுத்த படம். |
அமெரிக்காவின் நாஸா அனுப்பிய நியூ ஹொரைசன்ஸ்(New Horizons) என்னும் அந்த விண்கலம் புளூட்டோவை (Pluto) அடைவதற்குப் பயணம் செய்த தூரம் சுமார் 482 கோடி கிலோ மீட்டர். 2006 ஆம் ஆண்டில் பூமியிலிருந்து கிளம்பிய அந்த விண்கலம் புளூட்டோவை அடைய ஒன்பதரை ஆண்டுகள் பிடித்தன.
![]() |
| நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் சென்ற பாதை |
![]() |
| நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் |
வியாழன், சனி முதலானவை பிரும்மாண்டமான பனிக்கட்டி உருண்டைகள். ஆனால் புளூட்டோ கிரகம் பூமியைப் போல பாறைகளால் ஆனது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் புளூட்டோ கிரகமானது பூமி, செவ்வாய் ஆகியவை இருக்கின்ற வட்டாரத்தில் இருந்திருக்க வேண்டும் என்றும் ஏதோ ஒரு சூழ்நிலையில் அது தூக்கி எறியப்பட்டு இப்போதுள்ள இடத்துக்குப் போயிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.
![]() |
| புளூட்டோவின் குட்டி சந்திரன்கள் |
இரவு வானில் நீங்கள் வியாழன், சனி போன்றவற்றை வெறும் கண்ணால் பார்க்க முடியும். புளூட்டோவைப் பார்க்க முடியாது. புளூட்டோ மிகத் தொலைவில் இருப்பதால் சக்திமிக்க டெலஸ்கோப் மூலம் பார்த்தாலும் மங்கலான புள்ளியாகத்தான் தெரியும். புளூட்டோ சைஸில் சிறியது என்பதும் அதற்குக் காரணம். புளூட்டோ (குறுக்களவு (2368 கி.மீ) சந்திரனை (குறுக்களவு சுமார் 3474 கி.மீ) விடவும் சிறியது .சூரியனை புளூட்டோ ஒரு தடவை சுற்று முடிக்க 248 ஆண்டுகள் ஆகின்றன.
![]() |
| கைப்பர் வட்டாரத்தைக் காட்டும் படம் |
ஆனால் 2006 ஆம் ஆண்டில் சர்வதேச வானவியல் விஞ்ஞானிகள் சங்க மாநாடு நடந்த போது புளூட்டோ கிரக அந்தஸ்திலிருந்து அகற்றப்பட்டது. புளூட்டோ தனது வட்டாரத்தில் உள்ள குட்டி சந்திரங்களை ஏப்பம் விட்டு தனது ஆதிக்கத்தை நிலை நாட்டாத காரணத்தால் அது கிரகம் அல்ல என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். அவர்கள் புளூட்டோவை குட்டிக் கிரகம் என்ற நிலைக்கு கீழே இறக்கினர்.
ஆனால் இப்படியான முடிவு எடுக்கப்பட்டதற்கு முன்னரே நாஸா புளூட்டோவுக்கு நியூ ஹொரைசன்ஸ் விண்கலத்தை அனுப்பி விட்டது. அமெரிக்காவில் இன்னமும் பலர் புளூட்டோவை ஒரு கிரகமாகவே கருதுகின்றனர். புளூட்டோ அமெரிக்கர் ஒருவர் கண்டுபிடித்த ஒரே கிரகம் என்பது ஒரு காரணம்.
நாஸாவின் அந்த விண்கலம் புளூட்டோவை நெருங்கிக் கடந்த பின்னர் புளூட்டோவுக்கும் அப்பால் உள்ள கைப்பர் பெல்ட் (Kuiper Belt) என்னும் பிராந்தியத்தை நோக்கிச் செல்லும். சொல்லப்போனால் புளூட்டோவும் கைப்பர் வட்டாரத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
![]() |
| புளூட்டோவைக் கண்டுபிடித்த கிளைட் டாம்போவின் அஸ்தி அடங்கிய டப்பி |
அவ்வப்போது தலைகாட்டும் சிறிய வால் நட்சத்திரங்கள் கைப்பர் வட்டாரத்திலிருந்து வருவதாகக் கருதப்படுகிறது,
![]() |
| புளூட்டோவைக் கண்டுபிடித்த கிளைட் டாம்போ |
புளூட்டோவை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானியின் பெயர் கிளைட் டாம்போ. அவரது அஸ்தியின் சிறு பகுதி நியூ ஹொரைசன்ஸ விண்கலத்தில் வைக்கப்பட்டுள்ளது.






