Apr 4, 2012

சப்மரீன்களில் இரட்டைச் சுவர்

Share Subscribe
சப்மரீன் (Submarine) எனப்படும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கடலில் மிதந்து கொண்டிருக்கிறது. அதன் கேப்டன் ஒரு பொத்தானை அழுத்துகிறார். அது உடனே கடலுக்குள் மூழ்கிறது. ஒத்திகை பார்ப்பது போல அவர் சற்று நேரம் கழித்து இன்னொரு பொத்தானை அழுத்துகிறார். உடனே சப்மரீன் மேலே வந்து மிதக்க ஆரம்பிக்கிறது.

சப்மரீன் என்பது நன்கு மூடப்பட்ட காலி பிளாஸ்டிக் பாட்டில் மாதிரி. ஒரு காலி பாட்டிலை நீரில் போட்டால் அது மிதக்கும். மூடப்பட்ட அந்த பாட்டிலுக்குள் காற்று உள்ளது என்பதே அதற்குக் காரணம். சில இரும்புத் துண்டுகளை அந்த பாட்டிலுடன் சேர்த்துக் கட்டி நீருக்குள் போட்டால் பாட்டில் மூழ்கி விடும்.

ஆனால் சப்மரீனின் கேப்டன் ஒரு பொத்தானை அழுத்தியதும் சப்மரீன் --எடை எதுவும் சேர்க்கப்படாமல் -- எப்படி நீருக்குள் மூழ்கியது? அவர் எடை சேர்க்கத் தான் செய்தார். அதாவது சப்மரீனின் எடையை அதிகரிக்க கடல் நீரே பயன்படுத்தப்படுகிறது.

மிதக்கும் நிலையில் சப்மரீன்
நீங்கள் ஓர் அலுவலகத்தில் கண்ணாடியால் ஆன தடுப்பின் மறுபுறம் நிற்கிறீர்கள். இப்போது அந்தத் தடுப்புக்கு சில செண்டி மீட்டர் அருகே இன்னொரு கண்ணாடித் தடுப்பை அமைக்கலாம். இரு புறங்களையும் அடைத்து விட்டு இந்த இரு தடுப்புகளுக்கும் நடுவே தண்ணீரை ஊற்றுவதாக வைத்துக் கொள்வோம். சமரீன் இவ்விதமாகத் தான் இரட்டைச் சுவர்களால் ஆனது. இந்த இரட்டைச் சுவர்களின் நடுவே கடல் நீர் புகும்படி செய்தால் சப்மரீனின் எடை கூடும். நாம் சுவர் என்று குறிப்பிட்டாலும் சப்மரீனின் இரு சுவர்களும் வலுவான உருக்குத் தகடுகளால் ஆனவை.
நீரில் மிதக்கும் நிலையில் சப்மரீன் குறுக்கு வெட்டுத் தோற்றம்.
1. வெளிப்புறச் சுவர் 2. உட்புற்ச் சுவர்
3. காற்று வெளியே செல்வதற்கான வால்வுகள்
4. கடல் நீர் உள்ளே செல்வதற்கான திறப்பு.
நடுவே உள்ள பகுதி யந்திரங்கள் மற்றும் மாலுமிகளுக்கானது.
சப்மரீனின் வெளிப்புறச் சுவரில் வால்வுகள் உள்ளன. கேப்டன் பொத்தானை அழுத்தியதும் வால்வுகள் திறந்து கொள்கின்றன. மேற்புறத்திலுள்ள வால்வுகளின் வழியே காற்று வெளியேறுகிறது. அதே சமயத்தில் அடிப்புற வால்வு வழியே கடல் நீர் உள்ளே செல்கிறது. இதன் விளைவாக சப்மரீனின் எடை அதிகரித்து அது நீருக்குள் இறங்கும்.

இரட்டைச் சுவர்களுக்கு நடுவே முழுவதுமாக நீரை நிரப்புவதா, அரை வாசி நிரப்புவதா, முக்கால் வாசி நிரப்புவதா என்பதற்கெல்லாம் கணக்கு உள்ளது. சப்மரீன் இறங்க வேண்டிய ஆழத்துக்கு ஏற்ப நீர் நிரப்பப்படுகிறது. வால்வுகள் மூடப்படுகின்றன.
நீரில் மூழ்கிய நிலையில் சப்மரீனில் இரண்டு சுவர்களுக்கு இடையே
கடல் நீர் உள்ளதைக் கவனிக்கவும்
சப்மரீன் எப்படி மறுபடி மேலே வருவது? சப்மரீனுக்குள் மிகுந்த அழுத்தத்தில் காற்று நிரப்பப்பட்ட தொட்டிகள் உள்ளன. கேப்டன் அடுத்த பொத்தானை அழுத்தும் போது சக்தி மிக்க பம்புகள் செயல்படும். அதன் விளைவாகக் இக்காற்று சப்மரீனின் இரட்டைச் சுவர்களுக்கு நடுவே உள்ள பகுதிக்குச் சென்று அங்குள்ள கடல் நீரை வெளியேற்றும். இரட்டைச் சுவர் பகுதி காலியானதும் வால்வுகள் மூடப்பட்டு சப்மரீன் மறுபடி மேலே வந்து விடும்.

சப்மரீன்களின் நோக்கம் கடலுக்குள் எட்டு கிலோ மீட்டர் பத்து கிலோ மீட்டர் ஆழத்துக்குச் செல்வதல்ல. அந்த கடல் பிராந்தியத்தில் நடமாடக்கூடிய எதிரிக் கப்பல்கள், விமானங்கள் கண்ணில் படாமல் இருந்தால் போதும். ஆகவே சப்மரீன்கள் கடலுக்கு அடியில் சில நூறு மீட்டர ஆழத்துக்கு கீழே இறக்குவதில்லை. அப்படி செய்யவும் முடியாது.

நீருக்குள் மூழ்கிய நிலையில் சப்மரீன்
கடலுக்கு அடியில் சுமார் 11 கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள நீர்மூழ்கு கலங்கள் பற்றி முந்தைய பதிவில் கவனித்தோம். அவ்வகைக் கலங்களில் நீருக்குள் மூழ்க இரும்பு உருண்டைகள் அல்லது இரும்பு வில்லைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் கவனித்தோம்.

இதற்குப் பதில் சப்மரீனில் செய்வது போல இரட்டைச் சுவர்களை அமைத்து கடல் நீரையே எடையாகப் பயன்படுத்த இயலாது. அதற்குக் காரணம் உண்டு. எட்டு கிலோ மீட்டர் அல்லது பதினோரு கிலோ மீட்டர் ஆழத்தில் நீரின் அழுத்தம் பயங்கரமான அளவுக்கு இருக்கும் .உள்ளே நுழைகின்ற நீரை வெளியேற்றுகின்ற அளவுக்குத் திறன் படைத்த பம்புகளை மனிதனால் ஒருபோதும் உருவாக்க இயலாது.

சப்மரீன்களின் பின்புறத்தில் சுழலிகள் உண்டு. அந்த சுழலிகளின் உதவியால் சப்மரீன் நீருக்குள்ளாக எந்த இடத்துக்கும் செல்ல இயலும். சப்மரீனில் உள்ள சுழலிகள் உட்பட அனைத்தும் பாட்டரிகள் மூலம் இயங்குபவை. இந்த பாட்டரிகள் அடிக்கடி சார்ஜ் செய்யப்பட வேண்டும். ஆகவே சப்மரீனில் டீசலினால் இயங்கும் மின் உற்பத்தி ஜெனரேட்டர்கள் உண்டு. இக்காரணத்தால் இந்த வகை சப்மரீன்கள் டீசல்--எலக்ட்ரிக் சபமரீன்கள் என வர்ணிக்கப்படுவதுண்டு.
சப்மரீனின் பின்புறத்தில் சுழலிகள் உள்ளதைக் கவனிக்கவும்
நீர்ப்பரப்பின் மேல் மிதக்கின்ற நிலையில் டீசல் ஜெனரேட்டர்கள் இயங்கும். நீருக்குள் இறங்கியதும் எல்லாமே பாட்டரிகள் மூலம் தான் இயங்கும். நீருக்குள் இருக்கின்ற நிலையில் ஒரு சப்மரீன் எவ்வித சத்தத்தையும் எழுப்பலாகாது. அப்படி சத்தம் எழுப்பினால் அது தான் இருக்கின்ற இடத்தைத் தானே காட்டிக்கொடுத்து விடுவதாக ஆகிவிடும். அதன் விளைவாக அது எதிரி சப்மரீனால் தாக்கப்படுகின்ற ஆபத்து உள்ளது. ஒரு சப்மரீன் இருக்கின்ற இடம் வெளியே தெரியக்கூடாது என்பது தான் சப்மரீன் இயக்கத்தின் முதல் விதியாகும்.

தவிரவும், நீருக்குள்ளாக இருக்கும் போது டீசல் எஞ்சினை இயக்குவதானால் அவை இயங்க ஆக்சிஜன் (காற்று) தேவை. டீசல் எஞ்சின்கள் வெளியிடும் புகையை நீருக்கு மேலே வெளியேற்ற ஏற்பாடு தேவை. தவிர்க்க முடியாத சமயங்களில் ஒரு சப்மரீன் சில அடி ஆழத்தில் மூழ்கிய நிலையில் டீசல் எஞ்சின்கள் இயக்கப்படும். அப்போது வெளிக் காற்று உள்ளே நுழைவதற்கு ஒரு குழாயும், டீசல் புகை வெளியேற ஒரு குழாயும் பொருத்தப்பட்டிருக்கும். இவை நீருக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.

பாட்டரிகளால் இயங்கும் சப்மரீன்களிலும் டார்பிடோ(torpedo), ஏவுகணை முதலான ஆயுதங்கள் இருக்கும். எனினும் இவ்வகை சப்மரீன்களால் அதிக தொலைவு செல்ல முடியாது .தவிர, அதிக ஆழத்துக்கும் செல்ல இயலாது. மிஞ்சிப் போனால சுமார் 300 அடி ஆழம் வரை செல்லும்.

சப்மரீன் ஒன்றின் உட்புறத்தில் டீசல் எஞ்சின்கள்
பாட்டரிகளை இயக்க டீசலை ஒரு அளவுக்கு மேல் எடுத்துச் செல்ல முடியாது. அந்த அளவில் பாட்டரிகளால் இயங்கும் சப்மரீன்கள் எல்லையோரக் கடல்களில் ஈடுபடுத்துவதற்கு ஏற்றவை.

டீசல், பாட்டரி என எதுவும் தேவையில்லாமல் அணுசக்தியால் இயங்குகின்ற சப்மரீன்கள் உள்ளன. அணுசக்தி சப்மரீன் ஒன்று மாதக் கணக்கில் நீருக்குள்ளிருந்து வெளியே தலைகாட்டாமல் உலகின் கடல்கள் அனைத்திலும் சுற்றி வரலாம். வல்லரசு நாடுகளிடம் மட்டுமே உள்ள இவை பிரும்மாஸ்திரங்கள் என்று வர்ணிக்கப்படுகின்றன.

11 comments:

சார்வாகன் said...

வணக்கம் நண்பரே,
மிக்க நன்றி

வடுவூர் குமார் said...

இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்பதை இப்போது தான் தெரிந்துகொண்டேன், மிக்க நன்றி.

Babiyan said...

மிகவும் பயனுள்ள பதிவு....

Siva said...

thanks sir. Useful article

Siva said...

Thanks Sir. Useful article

Salahudeen said...

நீர் மூழ்கி கப்பல் இயங்கும் முறை பற்றி எளிமையாக விளக்கயுளிர்கள் நன்றி சில நேரங்களில் இந்த கப்பல் விபதுகுள்ளகிறது அது எதனால் சில வருடங்களுக்கு முன்பு ரஷ்யா கப்பல் விபதுகுள்ளனது.

என்.ராமதுரை / N.Ramadurai said...

அந்த ரஷிய நீர்மூழ்கிக் கப்பலில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டதால் அது கடலில் மூழ்கியது. முன்பு அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் ஏதோ கோளாறு ஏற்பட்டு அது நிர்ணயிக்கப்பட்ட ஆழத்தை விட மிக அதிக ஆழ்த்துக்குச் செல்ல நேரிட்டது. அப்போது அது கடல் நீரின் அழுத்த்த்தைத் தாங்க முடியாமல் நொறுங்கி கடலில் மூழ்கியது. இப்படியான விபத்துகள் அபூர்வமாக நிகழ்கின்றன

Ayya76 said...

Really Great. I after reading asked an iit enginer about submarine. he was blank and I scored a point..skr.moorthy

Salahudeen said...

மிக்க நன்றி அய்யா.

மதி said...

அருமையான தகவல்கள் நன்றி

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நீர் மூழ்கி கப்பல் பற்றி பல தகவல்கள் அறிந்துகொண்டோம்

Post a Comment