Apr 24, 2012

அமெரிக்க வானில் அதிசய ஒளி, பயங்கர இடி முழக்கம்

Share Subscribe
அமெரிக்காவில் கலிபோர்னியா, நெவாடா மாகாணங்களில் வசிப்பவர்களுக்கு ஏப்ரல் 22 ஆம் தேதி ஞாயிறு காலை அபூர்வ அனுபவம் ஏற்பட்டது. அதை பயங்கர அனுபவம் என்றும் கூறலாம். காலை 8 மணி அளவில் வானில் அதிசய ஒளி தென்பட்டது. ஒரு போதும் கண்டிராத ஒளியாக, பெரிய நெருப்பு உருண்டையாகக் காட்சி அளித்தது. அந்த பகல் நேரத்திலும் வீட்டுக்குள் இருந்தவர்களின் நிழல் விழுந்தது. அந்த அளவுக்கு ஒளி பிரகாசமாக இருந்தது.

அந்த ஒளி தோன்றியதைத் தொடர்ந்து இடி முழக்கத்தை மிஞ்சும் சத்தம் - இரண்டு முறை இப்படி நிகழ்ந்தது. வீடுகள் அதிர்ந்தன. குழந்தைகள் பயத்தால் அலறின. வீடுகளில் இருந்தவர்கள் நிலை தடுமாறி சுவர் மீதும் ஜன்னல் மீதும் மோதினர்.

விண்கல் ஒன்று பூமியை நோக்கி
இறங்குவதை விளக்கும் வரைபடம்
கலிபோர்னியா பிராந்தியத்தில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுவதுண்டு. ஆகவே சிலர் இது நில நடுக்கமோ என்று சந்தேகித்தனர். நில நடுக்கமல்ல என்று பின்னர் உறுதிப்படுத்திக் கொண்டனர்.

கலிபோர்னியா, நெவாடா மாகாணங்களில் சுமார் 600 கிலோ மீட்டர் பிராந்தியத்தில் இக்காட்சி தென்பட்டுள்ளது. வாஷிங் மெஷின் அளவிலான விண்கல் காற்று மண்டலத்தில் நுழைந்து தீப்பிடித்து வெடித்த போது தான் இப்படியான அதிசய விளைவுகள் ஏற்பட்டன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பலரும் இரவு வானில் எப்போதாவது ’ நட்சத்திரம் விழுவதை’ பார்த்திருக்கிறோம். கலிபோர்னியாவிலும் நெவாடாவிலும் நடந்துள்ளது அது போன்ற, ஆனால் அதை விடப் பெரிய சமாச்சாரம்.

விண்கல் எவ்விதம் நெருப்பு உருண்டையாகக்
காட்சி அளிக்கும் என்பதைக் காட்டும் படம்
பூமி என்ற இந்தப் பெரிய உருண்டை அந்தரத்தில் அமைந்திருப்பதாகச் சொல்லலாம். பூமியைச் சுற்றி அமைந்த விண்வெளியில் தூசு, கடுகு அல்லது மிளகு அளவிலான எண்ணற்ற கற்கள், நெல்லிக்காய் மற்றும் ஆரஞ்சுப் பழ அளவிலான கற்கள் என பல வகையான கற்கள் எங்கிருந்தோ வந்து ஏதோ ஒரு திசை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கின்றன. இவற்றில் சில எப்போதாவது பூமியின் காற்று மண்டலம் வழியே கீழ் நோக்கிப் பாய்வது உண்டு.

கடுகு, அல்லது மிளகு அள்விலான கற்கள் சில, காற்று மண்டலத்தில் நுழைந்தால் மேலும் மேலும் வேகத்தில் இறங்கும். அப்போது அவை காற்றை மேலும் அதிக அளவில் அழுத்தும் போது கடுமையான அளவுக்கு சூடேறி தீப்பற்றும். இதன் விளைவாக அக்கற்கள் தீப்பிழம்பாகி ஒளி வீசியபடி கீழ் நோக்கிப் பாயும்.அத்துணுக்கு முற்றிலுமாக அழிந்து பொடியாக உதிர்ந்து விடும். இதைத் தான் நாம் ‘நட்சத்திரம் விழுகிறது’ என்கிறோம் (நட்சத்திரம் விழுவதைப் பார்க்க நேர்ந்தால் உடனே பச்சை மரத்தைப் பார்த்தாக வேண்டும் என்று கிராமப்புறங்களில் கூறுவார்கள்).

நட்சத்திரங்கள் கோடானு கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் இருப்பவை. அதே சமயம் சூரியனை விடப் பல மடங்கு பெரியவை. அவை பூமியில் வந்து ‘விழ’ என்றுமே வாய்ப்பில்லை. ஒரு நட்சத்திரம் பூமியை நோக்கி வருவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் அந்த நட்சத்திரம் பூமியை வந்து அடைவதற்கு முன்னரே பூமி பொசுங்கி அழிந்து போய் விடும். ஆகவே அடுத்த தடவை வானில் நீங்கள் ஒளிக்கீற்றைக் கண்டால் அது ஒரு சிறிய கல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அபூர்வமாக வடிவில் பெரிய கல் வந்து விழுமானால் அது காற்று மண்டலம் வழியே இறங்கும் போது பயங்கர சத்த்த்துடன் வெடிக்கும். அதனால் ஏற்படும் அதிர்ச்சி அலைகளால் கட்டடங்கள் அதிரும். அத்துடன் ஒளிக்கீற்று பெரிய அளவில் இருக்கும். அந்த பெரிய கல் பல சமயங்களிலும் துண்டு துண்டுகளாகக் கீழே விழுவது உண்டு. அவை சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன்.

இப்படியாக பூமியில் வந்து விழுந்த கற்களை மியூசியத்தில் காணலாம். இவற்றை விண்கல் (Meteorite) என்று குறிப்பிடுகின்றனர். சில சமயம் பெரிய விண்கல அவ்வளவாகச் சேதமடையாமல் பூமியில் வந்து விழுவதுண்டு. ஆப்பிரிக்காவில் நமீபியா நாட்டில் வந்து விழுந்த விண்கல் இதற்கு உதாரணம். இதன் எடை 60 டன். இது சுமார் 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வந்து விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நமீபியா நாட்டில் விழுந்த விண்கல்.
இதன் எடை 60 டன்.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய மணடலத்தில் ஏற்பட்ட ஏதோ களேபரத்தின் விளைவாகப் பல கிலோ மீட்டர் நீள அகலம் கொண்ட -- மலை அளவிலான -- பிரம்மாண்டமான பாறைகள் பூமி, சந்திரன், புதன், செவ்வாய், வெள்ளி முதலான கிரகங்களைத் தாக்கின. இதன் விளைவாக வட்ட வடிவிலான பெரிய பெரிய பள்ளங்கள் தோன்றின. சந்திரன், செவ்வாய், புதன் ஆகியவற்றில் இப்பள்ளங்களை இன்றும் காணலாம். பூமியில் ஏற்பட்ட பள்ளங்கள் மழை, காற்று, தாவர வள்ர்ச்சி ஆகியவை காரணமாக இருந்த இடம் தெரியாமல் போயின.

விண்கற்கள் வந்து விழுந்ததால்
சந்திரனில் ஏற்பட்ட பள்ளங்கள்
அதன் பின்னரும் அபூர்வமாக பெரிய பாறை பூமியில் வந்து விழுந்தது உண்டு. அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் உள்ள Barringer Crater என்னும் வட்ட வடிவப் பள்ளம் பெரிய பாறை வந்து விழுந்ததால் ஏற்பட்டதே. சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், 45 மீட்டர் அகலம் கொண்ட விண்கல் வந்து விழுந்ததால் இது தோன்றியுள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றன்ர்.

பூமியும் சந்திரனும் இருக்கின்ற இடம் நோக்கி Asteroid எனப்படும் பெரிய பாறைகள் இப்போதும் வந்து போய்க் கொண்டிருக்கின்றன. கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி 18 மீட்டர் நீளம் கொண்ட ஓர் அஸ்டிராய்ட் பூமியை 36 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திலிருந்தபடி கடந்து சென்றது. வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி 67 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஓர் அஸ்டிராய்ட் பூமியை சுமார் 5 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்லும். பூமியை பயமுறுத்தக்கூடியவை என்று வகைப்படுத்தப்பட்டுள்ள அஸ்டிராய்டுகள் சுமார் 1200 உள்ளன.

அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் உள்ள
வட்ட வடிவப் பள்ளம்
அமெரிக்க நாஸா அமைப்பு இந்த அஸ்டிராய்டுகளின் சுற்றுப்பாதைளைத் தொடர்ந்து கவனித்து வருகிறது. ஓர் அஸ்டிராய்ட் பூமிக்கு அருகில் வருமேயானால் இயற்கை விதிகளின்படி முதலில் அது வெடித்துச் சிதறும். அதன் சிதறல்கள் பூமியைச் சுற்ற ஆரம்பிக்கும். ஒரு பெரிய அஸ்டிராய்ட் பூமியின் மீது வந்து மோதுவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. பத்து கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்விதம் அஸ்டிராய்ட் ஒன்று பூமியின் மீது வந்து மோதலாம் என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சுமார் 6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் அஸ்டிராய்ட் வந்து பூமியில் மோதியதன் விளைவாகத்தான் டைனோசார் வகை விலங்குகள் அழிந்ததாகச் சொல்லப்படுகிறது. இதைப் பின்புலனாக வைத்துத் தான் ஜுராசிக் பார்க் என்ற ஹாலிவுட் சினிமாப் படம் எடுக்கப்பட்டது.

17 comments:

துளசி கோபால் said...

வழக்கம் போல் அருமையான தகவல்கள் அடங்கிய பதிவு!

//(நட்சத்திரம் விழுவதைப் பார்க்க நேர்ந்தால் உடனே பச்சை மரத்தைப் பார்த்தாக வேண்டும் என்று கிராமப்புறங்களில் கூறுவார்கள்).//

ராத்திரி நேரத்தில் பச்சை மரம் பார்க்கறது எப்படி? அது பகல் நேரத்தில் நம்ம காலில் முள் குத்தி அதை எடுக்கும்போது வலி தெரியாமல் இருக்க பச்சை மரத்தைப்பார் என்று சொல்வார்கள்.

நட்சத்திரம் விழும்போது அல்லி மல்லி லில்லின்னு மூணு பூக்களைச் சொல்லணும் என்று எங்க பெரியக்கா சொல்வாங்க. அண்ணன் மட்டும் அல்லி மல்லி கொள்ளீன்னுவார்:-))))

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

பதிவுகள் அதிகம் தற்சமயம் எழுதுகிறீர்கள் போலிருக்கிறது..வாழ்த்துக்கள்.

தினமணியில் அதிகம் எழுதிய ராமதுரை நீங்கள்தானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சுவராசியமான தகவல்கள்......!

Anonymous said...

Sir, You are Genius.Now a dya, i am regulat visitor to your web to read lot.

Note: Your way of explanation is awesome.

Balaji.R

manohar said...

very interesting sir thanking you.

என்.ராமதுரை / N.Ramadurai said...

¬அறிவன்:
அதே ராமதுரை தான். நன்கு நினைவில் வைத்திருக்கிறீர்கள்

Ashok said...

sir Tamil natural in tha mathiri eari kal vilunthatha? athanala eathavathu pathippu earpattu ullatha ?

Ashok said...

intha karkalinal namakku ethum pathippu or nanmai kidaikuma?

Ashok said...

sir Tamil natural in tha mathiri eari kal vilunthatha? athanala eathavathu pathippu earpattu ullatha ?

Salahudeen said...

வின் கற்கள் பற்றி அருமையான தகவல்கள் நன்றி அய்யா உலகின் பல பகுதிகளில் வின் கற்கல் விழுகின்றன அனால் நான் இது வரை கண்டதில்லை காணவேண்டும் என்று ஆசை.எனது முக்கியமான பொழுதுபோக்கே இரவில் வானத்தை ஆராய்வதுதான் இந்தியாவில் எதாவது விண்கற்கள் விளிந்துள்ளதா?

என்.ராமதுரை / N.Ramadurai said...

தமிழகத்தில் பெரிய விண்கல் விழுந்ததாக அல்லது அதனால் பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. சிறிய விண்கற்கள் விழுந்திருக்கலாம். இரவில் கண் எதிரே ஒளிக்கீற்று தென்பட்டு சிறிய விண்கல் விழுவதை நேரில் பாரத்து அதை சேகரித்தால் உண்டு அபூர்வமாகவே அப்படி நிகழும். தரையில் விழுந்து விட்ட பின்னர் அது கல்லோடு கல்லாகக் கிடைக்கும். அப்ப்டியான நிலையில் எது விண்கல் என்பதை நிபுணர்களால் தான் அடையாளம் காண இயலும்

என்.ராமதுரை / N.Ramadurai said...

சலாஹுதீன்:
இந்தியாவில் 1865ல் செவ்வாயிலிருந்து ஒரு கல் பிகாரில் ஷெர்ஹோட்டி என்னுமிடத்தில் வந்து விழுந்தது. பாலவனப் பகுதி, அண்டார்டிகா ஆகிய இடங்களில் விண்கல் வந்து விழுந்தால் எளிதில் அதைக் கண்டுபிடித்து விட முடிகிறது. விண்கற்கள் ச்ர்வதேச் சந்தையில் விற்கப்படுகின்றன. வாங்கப்படுகின்றன.விண்கல்லைப் பொருத்து நல்ல விலை கிடைக்கிறது.விண்கல் ஒன்றின் எடை அதே சைஸ் கொண்ட சாதாரணக் கல்லை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிக எடை கொண்டதாக இருக்கும்.கையில் தூக்கிப் பார்த்தாலே தெரியும். உலகில் விண்கல்லைத் தேடி அலைவதையே வேலையாகக் கொண்ட சிலர் உள்ளனர்

Salahudeen said...

தங்கள் விளக்கத்திற்கு நன்றி அய்யா

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

ராமதுரை சார்,
சுஜாதா எழுதிய கடவுள் இருக்கிறாரா என்ற புத்தகத்தில் பெரு வெடிப்பு நிகழ்வதற்கு முன் கணத்தில் என்ன இருந்தது என்பது பற்றிய சுவையான விவாதக் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது..

இன்றைய தினத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட பெரும்பான்மை என்ன?

இதனைப் பற்றி விளக்கமாக ஒரு பதிவில் எழுதுங்களேன்..

mackie said...

Sir. You are really great. you induced and helped me to see the God through his creations. God Bless you and all around you.

Mohammed Mackie
Sri Lanka

sankar ganesh said...

arumai

sankar ganesh said...

thanks

Post a Comment