May 1, 2012

விண்வெளியில் உள்ள ’பறக்கும் மலைகள் ‘ யாருக்குச் சொந்தம்?

Share Subscribe
பூமியும் சந்திரனும் இருக்கின்ற வட்டாரத்தை நோக்கி ‘பறக்கும் மலைகள்’ என்று சொல்லத்தக்க பெரும் பாறைகள் அவ்வப்போது ‘சர், சர்’ என்று வேகமாக வரும். ஆனால் அவை பூமியின் மீது அல்லது சந்திரன் மீது மோதாமல் தமது சுற்றுப் பாதையில் வேகமாகச் சென்று விடும். இவற்றுக்கு   ‘ஆபத்தை உணடாக்கக்கூடிய் அஸ்டிராய்டுகள்’ என்று பெயர். உதாரணமாக மே 19 ஆம் தேதியன்று 31 மீட்டர் நீளம் கொண்ட அஸ்டிராய்ட் சுமார் 9 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் பூமியைக் கடந்து செல்ல இருக்கிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் கடைசியிலான நிலவரப்படி இப்படியான அஸ்டிராய்டுகள் மொத்தம் 1287 உள்ளன. இந்த அஸ்டிராய்டுகள் காலம் காலமாக வந்து போய்க் கொண்டிருக்கின்றன. பூமியுடன் மோத வாய்ப்பில்லை தான். ஆனாலும் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸா பல்வேறு வழிகளில் இவற்றைக் கண்காணித்து வருகிறது.

அஸ்டிராய்ட் ஐடா
நாம் இந்த அஸ்டிராய்டுகள் குறித்து கவலைப்படுவதற்குப் பதில் இந்த அஸ்டிராய்டுகள் இனி மனிதனைக் கண்டு பயப்படலாம் .காரணம். அமெரிக்காவின் கோடீஸ்வர முதலாளிகள் இந்த அஸ்டிராய்டுகள் மீது கண் வைத்து விட்டனர்.

அஸ்டிராய்டுகளிலிருந்து பிளாட்டினம், தங்கம் போன்ற அரிய உலோகங்களை வெட்டி எடுத்து வரும் நோக்கில் இப்போது அமெரிக்காவில் தனி கம்பெனி அமைக்கப்பட்டுள்ளது. பிரபல ஹாலிவுட் படத் தயாரிப்பாளரும் கோடீஸ்வரருமான ஜேம்ஸ் கேமரான், கூகுள் நிறுவனர் லாரி பேஜ், கூகுள் சேர்மன் எரிக் ஷ்மிட் முதலானோர் முதலீடு செய்து Planetary Resources  என்னும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.

அஸ்டிராய்டுகளில் நிறைய உலோகம் அடங்கிய அஸ்டிராய்ட், பெரிதும் பாறையால் ஆன அஸ்டிராய்ட் என பல வகைகள் உண்டு. பெரிதும் உலோகத்தால் ஆன அஸ்டிராய்டில் பிளாட்டினம், தங்கம் போன்ற விலையுயர்ந்த உலோகங்கள் அடங்கியிருக்கும்.

பிளாட்டினமும் தங்கமும் நிறைய உள்ளதாகக்
கூறப்படும் அஸ்டிராய்ட் 3554 அமுன்
இரண்டு கிலோ மீட்டர் குறுக்களவு கொண்ட 3554 அமுன் எனப்படும் அஸ்டிராய்டில் இரும்பு மற்றும் நிக்கல் உலோகங்கள் 8 லட்சம் கோடி டாலர் மதிப்புக்கு உள்ளன. கோபால்ட் எனப்படும் உலோகம் 6 லட்சம் கோடி டாலர். பிளாட்டினம், தங்கம் ஆகிய உலோகங்களின் மதிப்பு மேலும் 6 லட்சம் கோடி டாலர் என்று ஜான் லூயிஸ் என்ற நிபுணர் கூறுகிறார்.

இந்த அமெரிக்க நிறுவனத்தினர் அஸ்டிராய்டுகளிலிருந்து தண்ணீரையும் பெறுவதற்குத் திட்டமிட்டுள்ளனர். இத்தண்ணீரிலிருந்து ஆக்சிஜனையும் ஹைட்ரஜனையும் தனித்தனியே பிரித்து அவற்றைத் திரவமாக்கி விண்வெளியிலிலேயே பெரிய டாங்கிகளில் சேமித்து வைக்கவும் திட்டம் உள்ளது. உயரே செல்கின்ற ராக்கெட்டுகளுக்கு அவற்றை எரிபொருட்களாக விலைக்கு விற்க முடியும்.

அஸ்டிராய்டுகளிலிருந்து உலோகங்களை எடுப்பது என்பது ஏதோ புதிதாகத் தோன்றிய கருத்து அல்ல. விண்வெளி ராக்கெட் இயலின் தந்தை என்று வர்ணிக்கப்படும் ரஷிய மேதை கான்ஸ்டாண்டின் சியோல்கோவ்ஸ்கி 1903 ஆம் ஆண்டிலேயே இது பற்றிய கருத்தை வெளியிட்டார்.

சூரிய குடும்பத்தில் அஸ்டிராய்ட் மண்டலம்
சூரிய மண்டலத்தில் அஸ்டிராய்டுகள் தனி வகை. செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கும் வியாழன் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கும் இடையே அஸ்டிராய்ட் மண்டலம் உள்ளது. அங்கு லட்சோப லட்சம் அஸ்டிராய்டுகள் உள்ளன. குடியரசு தின விழாவில் அணிவகுத்துச் செல்லும் ராணுவ வீரர்கள் போல இவை அனைத்தும் ஓர் ஒழுங்குடன் அணிவகுத்துச் செல்பவையாக சூரியனைச் சுற்றுகின்றன.

இந்த அஸ்டிராய்ட் மணடலத்திலிருந்து பல ஆயிரம் அஸ்டிராய்டுகள் தனியே கிளம்பி பூமிக்கு அருகே வந்து செல்கின்றன. இவ்விதமான அஸ்டிராய்டுகள் மீது தான் குறிப்பாக கவனம் செலுத்தப்படும்.

விண்வெளித் துறையில் இன்று எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சந்திரனுக்குச் சென்று வருவதை விட அஸ்டிராய்டுக்குச் சென்று வருவது சுலபமானதே. சந்திரனுக்கும் அத்துடன் கிரகங்களுக்கும் ஈர்ப்பு சக்தி உண்டு. ஆகவே அவற்றில் போய் இறங்கினால் ஈர்ப்பு சக்தி காரணமாக அங்கிருந்து எளிதில் உயரே கிளம்ப முடியாது. ராக்கெட் உயரே கிளம்புவதற்கு நிறைய எரிபொருள் தேவைப்படும். அவற்றுடன் ஒப்பிட்டால் அஸ்டிராய்டுகளில் போய் இறங்குவதும் அங்கிருந்து கிளம்புவதும் எளிது. வடிவில் அவை சிறியவை என்பதால் அஸ்டிராய்டுகளின் ஈர்ப்பு ச்கதி மிகக் குறைவாக இருக்கும். ராக்கெட் உயரே கிளம்புவதற்கு கொஞ்சம் எரிபொருள் இருந்தாலும் போதும்.

நாஸா அனுப்பிய டான் (Dawn) என்னும் செயற்கைக்கோள் பூமியிலிருந்து சுமார் 18 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெஸ்டா என்னும் அஸ்டிராய்டை அடைந்து அதைச் சுற்றி வருகிறது.

அஸ்டிராய்ட் வெஸ்டா 
பூமியில் பல நூறு டன் எடை கொண்ட ஒரு பொருளின் எடை அஸ்டிராய்ட் ஒன்றில் மிக அற்ப அளவில் இருக்கும். ஆகவே அங்கிருந்து அரிய உலோகங்கள் அடங்கிய பாறையை எடுத்துக் கொண்டு உய்ரே கிளம்புவது எளிது. சொல்லப் போனால் அவற்றை பூமியில் கொண்டு வந்து இறக்குவது தான் மிகக் கடினமான வேலையாக இருக்கும்.

இத்திட்டத்தை மேற்கொள்வோர் முதலில் தகுந்த அஸ்டிராய்டுகளைத் தேர்ந்தெடுக்க பூமிக்கு மேலே பல டெலஸ்கோப்புகளைப் பறக்க விடுவர். இது இரண்டு ஆண்டுகளில் சாத்தியமாகி விடும் என்று கருதப்படுகிறது. அடுத்த கட்டப் பணி அஸ்டிராய்டுகளுக்கு அனுப்புவதற்காகத் தானியங்கி ரோபாட்டுகளை உருவாக்குவதாகும். மூன்றாவது கட்டத்தில் தான் அஸ்டிராய்டுகளில் ரோபாட்டுகளை இறக்கி அரிய உலோகங்கள் அடங்கிய பாறைகள் வெட்டி எடுக்கப்படும்.

புதிய நிறுவனம் ஏற்கெனவே 25 எஞ்சினியர்களை வேலைக்கு அமர்த்திக்கொண்டுள்ளது. இவர்களில் பலர் முன்னர் அமெரிக்க நாஸா அமைப்பில் வேலை பார்த்தவர்கள்.

எடுத்த எடுப்பில் இவர்கள் ஒரு முக்கிய பிரச்சினையை சமாளிக்க வேண்டியிருக்கும். சந்திரன், கிரகங்கள், விண்வெளி பற்றி 1967 ஆம் ஆண்டில் சர்வதேச சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி எந்த நாடும் விண்வெளியில் உள்ள சந்திரன் மற்றும் கிரகங்கள் மீது உரிமை கொண்டாட முடியாது. இதில் அஸ்டிராய்டுகளும் அடங்கும். சர்வதேச சட்டத்தில் அரசுகள் பற்றித் தான் கூறப்பட்டுள்ளதே தவிர, தனியார் கம்பெனிகள் பற்றி எதுவும் கூறப்படவில்லை என்று வாதிக்கப்படுகிறது.

அஸ்டிராய்டுகளிலிருந்து பிளாட்டினம், தங்கம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த உலோகங்களை எடுத்து வருவது என்பது நல்ல திட்டம் தான். ஆனால் இப்படி அஸ்டிராய்டுகளிலிருந்து ஏராளமான அளவில் பிளாட்டினம், தங்கம் ஆகியவை பூமிக்கு வரும் போது உலக மார்க்கெட்டில் இவற்றின் விலை ஒரேயடியாகச் சரிந்து போக வாய்ப்புள்ளது.உதாரணமாக தங்கத்தின் (ஒரு பவுன்) விலை ரூ 20 ஆயிரத்திலிருந்து ஒரு பவுன் ரூ 2000 ஆகக் குறைந்து போனால் என்ன ஆகும்? பெண்ணைப் பெற்றவர்கள் ரொம்ப சந்தோஷப்படுவார்கள்.

7 comments:

puduvaisiva said...

"ரூ 2000 ஆகக் குறைந்து போனால் என்ன ஆகும்? பெண்ணைப் பெற்றவர்கள் ரொம்ப சந்தோஷப்படுவார்கள்"

:-))))))))

Salahudeen said...

மனிதனின் பேராசையால் பூமியின் அனைத்து கனிம வளங்களும் கடந்த ஒரு நூற்றாண்டாக அதிகமாக உரிஞ்சபடுகிறது.இனி எதிர்காலத்தில் வின் வெளியில்தான் அனைத்தும் தேட வேண்டும்.இதிலும் அமெரிக்காவே முன்னிலையில் உள்ளதால் விலை குறைய வாய்பே இல்லை :-((((( உங்களது இந்த பதிவுக்கு மிக்க நன்றி அய்யா.

srinivasansubramanian said...

நீங்கள் கூறுவது போல் தங்கம் விலை குறையாது.என்றைக்கு வியாபாரிகள் ஏற்றிய விலையை இறக்கியிருக்கிறார்கள். அரசும் தட்டிக்கேட்டுள்ளது.

Anonymous said...

தங்கத்தின் (ஒரு பவுன்) விலை ரூ 20 ஆயிரத்திலிருந்து ஒரு பவுன் ரூ 2000 ஆகக் குறைந்து போனால் என்ன ஆகும்? பெண்ணைப் பெற்றவர்கள் ரொம்ப சந்தோஷப்படுவார்கள்.

super..............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இனி இதிலும் கடும் போட்டி வந்து போர் வரை போகாமல் இருந்தால் சரிதான்.

BABIYAN said...

"தங்கத்தின் (ஒரு பவுன்) விலை ரூ 20 ஆயிரத்திலிருந்து ஒரு பவுன் ரூ 2000 ஆகக் குறைந்து போனால் என்ன ஆகும்?" ..... இதுபோல, பெட்ரோல்&டீசல் விலை குறைய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா ஐயா...???

Usman said...

கல் உடைக்கும் குவாரி கம்பனிதாரர்கள் உளி சுத்தியுடன் கிளம்பும் தேதியை எனக்கு மாத்திரம் முன்கூட்டியே சொல்லிவிடுங்கள் ஐயா.அப்பத்தான் இருக்கும் பழைய சரக்கை நல்ல விலையில் விற்க முடியும்.

Post a Comment