May 12, 2012

காக்கைக்கு உங்கள் குரல் தெரியும்

Share Subscribe
தமிழகத்தில் பல வீடுகளிலும் காக்கைக்கு ஒரு பிடி சோறு வைத்த பின்னர் தான் சாப்பிடுவார்கள். இந்தப் பழக்கம் குறைந்து வந்தாலும் இன்னமும் இருந்து வருகிறது. இல்லத்தரசி காக்கைக்கான சோற்றை வாய்ப்பான இடத்தில் வைத்து விட்டு கா,,,கா என்று குரல் கொடுப்பார். உடனே பல காக்கைகள் கூடிவிடும்.

பிடி சோற்றை வைத்து விட்டு குரல் கொடுப்பவர் வழக்கமான நபரா அல்லது வேறு ஒருவரா என்பது காக்கைக்குத் தெரியும் என்கிறார்கள் நிபுணர்கள். அதாவது மனிதக் குரலை அடையாளம் காணும் திறன் காக்கைக்கு உள்ளது என்று கூறப்படுகிறது.


வியன்னா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவினர் இது தொடர்பாக காக்கைகளை வைத்து நடத்திய ஆராய்ச்சியின் முடிவுகள் Journal Animal Cognition  என்னும் ஏட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவரான டாக்டர் கிளாடியா வாஷர் தங்களது இந்த ஆராய்ச்சியின் முடிவுகளை தெரிவித்தார்.

காக்கைகளிடம் அன்பு காட்டுபவரும் உண்டு. காக்கைகளைக் கண்டால் விரட்டியடிப்பவர்களும் உண்டு. அந்த அளவில் தங்களிடம் வழக்கமாக அன்பு காட்டுபவர்களின் குரலை காக்கைகள் அடையாளம் கண்டுகொள்கின்றன. புதிதாக ஒருவர் அழைத்தால் அவை சற்றே தயக்கம் காட்டுகின்றன.


வியனனா பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி நோக்கில் பல வகையான பறவைகளை வளர்க்கின்றனர். அவர்கள் எட்டு காகங்களைத் தேர்ந்தெடுத்து தங்களது ஆராய்ச்சியை நடத்தினர்.

இது ஒரு புறம் இருக்க, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் வனவளப் பேராசிரியரான ஜான் மார்ஸ்லுப் சில ஆண்டுகளுக்கு முன் நடத்திய ஆராய்ச்சியில் காகங்கள் மனித முகங்களை எளிதில் அடையாளம் காண்பதாகக் கண்டறியப்பட்டது. மார்ஸ்லுப் 20 ஆண்டுகளாகக் காகங்களை ஆராய்ந்து வருபவர்.

மார்ஸ்லுப் தலைமையிலான குழுவினர் தங்களது ஆராய்ச்சிக்காக ரப்பரினால் ஆன இரு முகமூடிகளைத் தயாரித்தனர். ஒன்று காட்டுவாசி போன்ற முகமூடி. இன்னொன்று அமெரிக்கத் துணை அதிபராக இருந்த டிக் செனியின் முகம் மாதிரியிலான முகமூடி.

காக்கை நிபுணர்
மார்ஸ்லுப்
காட்டுவாசி முகமூடி அணிந்த ஆராய்ச்சி ஊழியர்கள் காகங்களைத் துரத்திப் பிடித்து காலில் அடையாள வில்லையைக் கட்டுவதற்காக, சிறிது நேரம் அடைத்து வைத்துப் பிறகு வெளியே விட்டனர். டிக் சேனி முகமூடி அணிந்தவர்கள் காகங்களைத் துன்புறுத்தவில்லை. சில தடவை இப்படி நடந்த பின்னர் காட்டுவாசி முகமூடி அணிந்து யார் சென்றாலும் காகங்கள் கூட்டமாக ஆக்ரோஷத்துடன் தாக்க முனைந்தன.

டிக் சேனி முகமூடி அணிந்தவர்களை காகங்கள் எதுவும் செய்யவில்லை. முகத்தை (முகமூடியை) வைத்து தங்களுக்கு தீங்கு இழைக்கக்கூடியவர் யார் என்பதை காகங்கள் அடையாளம் கண்டு கொண்டன எனபதை இந்த ஆராய்ச்சி காட்டியது.

பறவை இனங்களில் காக்கைகள் புத்திசாலி என்பதாகப் பல நிபுணர்களும் கூறுகின்றனர்.

4 comments:

Murli said...

"Aakaram unna ellorum abodu odi vaanga...." is a song of the film Parashakthi.
Crows are more intelligent and human can learn a lot from them.
May be, that is the reason, we offer them food as "guru dakshina"???

Salahudeen said...

இன்று மாரி வரும் அவசர உலகில் பறவைகளை யாரும் கவனிபதில்லை காகம் மட்டும் அல்ல அனைத்து பறவைகளும் நமது சுற்றுசூழல் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.உங்கள் வீட்டுக்கு வெளியில் சிறிது தானியங்களையும்,தண்ணீரும் வைத்து அவற்றிக்கு உணவளிகலாம்.

Usman said...

குருவிகூட்டை கலைத்ததை போல என்ற சொல் நம்மால் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு சொல்.ஆனால் நம்முடைய வாழ்க்கை முறைகளினால் பல பறவை இனங்களையே ஒழித்துவிட்டோம்.சிட்டுக்குருவியை நகர வாழ்வில் பல நாட்கள் ஆசைப்பட்டும் பார்க்க முடியாத நிலை. நாளைய சந்ததிகளுக்கு பள்ளி புத்தகங்களில் மாத்திரமே பறவைகளை காட்டும் நிலை ஏற்படுமோ என்ற அச்சம் எனக்கு உண்டு.

Anonymous said...

தினமும் ஒரு ஆழாக்கு தயிர் சாதம்
கலந்து மொட்டை மாடியில் மதியம் நான்கு மணி வாக்கில் வைப்பது எங்கள் வழக்கம்.
பல வருடங்களாக இதை செய்கிறோம்.
காக்கைகள் மட்டுமல்ல புறாக்கள்.,மைனாக்கள்.,
குயில்கள் என ஒரு கூட்டமே முறை வைத்து
சாப்பிட்டு செல்கின்றன.முதல் ரவுண்ட்எல்லோரும்ஓரிரு கவளங்கள்
தான் சாப்பிடுகின்றன.அதன் பிறகும் மீதி இருந்தால் தான் அடுத்த ரவுண்ட்.
அவை சாப்பிடுவதை பார்க்கும்போது
கிடைக்கும் சந்தோஷத்துக்கு ஈடு இணையே இல்லை

Post a Comment