Jun 10, 2012

தலைக்கு மேலே இந்திய செயற்கைக்கோள்கள்

Share Subscribe
செயற்கைக்கோள் இல்லையேல் டிவி ஒளிபரப்பே சாத்தியமில்லை. டிவி சேனல்கள் தங்களது நிகழ்ச்சிகளை சிக்னல்கள் வடிவில் உயரே உள்ள செயற்கைக்கோளுக்கு அனுப்புகின்றன. செயற்கைக்கோள் அவற்றை வாங்கி கீழ் நோக்கி அனுப்பும் போது எல்லா இடங்களுக்கும் அந்த சிக்னல்கள்  (நிகழ்ச்சிகள் ) கிடைக்கின்றன.

டிவி ஸ்டுடியோவிலிருந்து இணை சுற்று
செயற்கைக்கோளுக்கு சிக்னல் அனுப்பப்படுவதையும்
பின்னர் சிக்னல்கள் கீழே திருப்பி அனுப்பப்படுவதையும்
இப்படம் விளக்குகிறது.
கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கிண்ண வடிவ ஆண்டெனாக்கள் மூலம் இந்த சிக்னல்களைப் பெற்றுப் பிறகு வீடுகளுக்கு கேபிள் மூலம் டிவி நிகழ்ச்சிகள் அளிக்கின்றனர். இப்போதெல்லாம் DTH சேவை அளிக்கும் நிறுவனங்கள்   வீட்டு மாடிகளில் சிறிய கிண்ண வடிவ ஆண்டெனாக்களைப் பொருத்தி உங்களுக்கு டிவி நிகழ்ச்சிகள் கிடைக்கும்படி செய்கின்றன.

செயற்கைக்கோளிலிருந்து சிக்னல் பெற
கிண்ண வடிவ ஆண்டெனா
சென்னையில் எங்காவது வீட்டு மாடியில் நிறுவப்பட்டுள்ள கிண்ண வடிவ ஆண்டெனாவை கவனித்துப் பாருங்கள். அது வானில் தென் கிழக்கு திசையை நோக்கி அமைந்திருக்கும். அபூர்வமாக ஒரிரு ஆண்டெனாக்கள் தென்மேற்கு திசையை நோக்கி இருக்கலாம். இந்த ஆண்டெனாக்கள் குறிப்பிட்ட தீர்க்க ரேகைக்கு மேலே அமைந்துள்ள செயற்கைக்கோளைப் பார்த்தபடி அமைந்திருக்கும். அந்த ஆண்டெனா சிறிது கூட அந்தப் பக்க்கம் இந்தப் பக்கம் திரும்பி விடக்கூடாது. இது செயற்கைக்கோளுக்கும் பொருந்தும்.

தட்டை வடிவ ஆண்டெனா
ஆண்டெனா நகராதபடி உறுதியாக ஆணி அடித்து முடுக்கி விட முடியும். செயற்கைக்கோள் அப்படி அல்ல. எந்த செயற்கைக்கோளானாலும் ஓயாமல் பூமியை சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும். வானில் எந்த செயற்கைக்கோளும் நிலையாக ஓரிடத்தில் நிற்க முடியாது. அது பூமியைச் சுற்றுகின்ற வேகம் குறைந்தாலும் இறுதியில் பூமியில் விழுந்து விடும். அப்படியிருக்கும்போது செயற்கைக்கோள் வானில் எப்படி “ நிலையாக” இருக்க முடியும்?


நம்மைப் பொருத்த வரையில் அது “ நிலையாக “ இருக்கும்படி செய்ய முடியும்.
பூமியானது தனது அச்சில் ஒரு முறை சுற்றி முடிக்க மிகச் சரியாக 23 மணி 56 நிமிஷம், நான்கு வினாடி ஆகிறது. பூமியைச் சுற்றுகின்ற ஒரு செயற்கைக்கோள் பூமியை ஒரு தடவை சுற்றி முடிக்க மிகச் சரியாக இதே நேரத்தை எடுத்துக் கொண்டால் சென்னைக்கு மேலே வானில் குறிப்பிட்ட இடத்தில் தெரிகிற செயற்கைக்கோள் என்றும் சென்னைக்கு மேலே அதே இடத்தில் தெரிந்து கொண்டிருக்கும்.

செயற்கைக்கோள் இப்படி ஏன் ’நிலையாக’ இருக்க வேண்டும்? கீழே உள்ள டிவி நிலையம் அனுப்புகின்ற சிக்னல் நேர் கோட்டில் செல்லும். செயற்கைக்கோள் சிறிது நகர்ந்தாலும் சிக்னல்  செயற்கைக்கோளை சென்றடையாது வேறு எங்கோ போய்க் கொண்டிருக்கும். இவ்விதமாக வானில் குறிப்பிட்ட தீர்க்க ரேகைக்கு மேலே ‘நிலையாக‘ இருக்கின்ற செயற்கைக்கோள்களுக்கு Geostationary Satellite  என்று பெயர். இவை பூமிக்கு இணையாக பூமியைச் சுற்றுவதால் தமிழில் இவற்றை இணைசுற்று செயற்கைக்கோள்கள் என்று கூறலாம்.

பூமியை சுற்றுகின்ற எந்த செயற்கைக்கோள் ஆனாலும் அது இயற்கை விதிகளுக்கு ஏற்ப செயல்படுகின்றது. பூமியை சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுகின்ற செயற்கைக்கோள் பூமியை ஒரு தடவை சுற்ற சுமார் 90 நிமிஷம் எடுத்துக் கொள்ளும். செயற்கைகோள் இருக்கின்ற உயரம் அதிகரிக்க அதிகரிக்க அது (கெப்ளர் கூறிய விதியின்படி)  மேலும் மேலும் மெதுவாக பூமியைச் சுற்றும். உதாரணமாக 20,200 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்த ஒரு செயற்கைக்கோள் பூமியை ஒரு தடவை சுற்றி முடிக்க சுமார் 12 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.

இந்தியாவின் ஜிசாட் 12
இணைசுற்று செயற்கைக்கோள்
இந்த இயற்கை விதிகளின்படி பார்த்தால் பூமியை ஒரு தடவை சுற்றி வருவதற்கு 23 மணி, 56 நிமிஷம் 4 வினாடி எடுத்துக் கொள்கின்ற செயற்கைக்கோள் சரியாக 35,786 கிலோ மீட்டர் உயரத்தில் பறப்பதாக இருக்க வேண்டும். தவிர, அது பூமியிலிருந்து எப்போதும் அதே உயரத்தில் இருக்க வேண்டும். பூமியை வட்ட வடிவப் பாதையில் சுற்ற வேண்டும்.

 இந்த உயரத்தில் அமைந்தபடி ஒரு செயற்கைக்கோள் பூமியை வட்ட வடிவப் பாதையில் சுற்றும்படி செய்யும்போது அது எந்த வேகத்தில் சுற்றுகிறது என்பது பற்றி நமக்குக் கவலையில்லை. அது எடுத்துக் கொள்கின்ற நேரம் தான் முக்கியம். ஆகவே அந்த செயற்கைக்கோள் அதே உயரத்தில் இருக்கும்படி பார்த்துக் கொண்டால் போதும். இதற்குப் பல வழிகள் உள்ளன.

உயரே செல்லக் காத்திருக்கும்
ஜிசாட்- 10 செயற்கைக்கோள்
இந்தியாவுக்கு மேலே 35,786 கிலோ மீட்டர் உயரத்தில் இப்படியான பல இணைசுற்று செயற்கைக்கோள்கள் உள்ளன. இந்தியாவின் உபயோகத்துக்கென மேலும் பல இணைசுற்று செயற்கைக்கோள்களை செலுத்தத் திட்டம் உள்ளது. இவற்றில் இன்சாட் 3D, ஜிசாட் 6, ஜிசாட் 7, ஜிசாட் 9, ஜிசாட் 10 முதலான செயற்கைக்கோள்கள் அடங்கும்.

இந்தியா இப்படி எடை மிக்க செயற்கைக்கோள்களை அடிக்கடி செலுத்த வேண்டியுள்ளது ஏன் என்று கேட்கலாம். இந்தியா ஒரு பெரிய நாடு. மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு. டிவி ஒளிபரப்பு, தகவல் தொடர்பு, வானிலைத் தகவல் சேகரிப்பு என பல பணிகளுக்கும் நாம் செயற்கைக்கோள்களை நம்பி இருக்கிறோம். உள்ளபடி தமிழில் மட்டும் பல டிவி சேனல்கள் உள்ளன. இந்தியாவின் பிற மொழிகளையும் கணக்கில் கொண்டால் பல நூறு டிவி சேனல்கள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. எல்லாமே இணைசுற்று செயற்கைக்கோள்களை நம்பி நிற்பவை.

பல்வேறு நிறுவனங்களின் அன்றாடப் பணிகள் இணைசுற்று செயற்கைக்கோள்கள் மூலமே நடைபெறுகின்றன.  நாட்டின் பங்கு மார்க்கெட் வர்த்தகம் செயற்கைக்கோள் மூலமாகவே நடைபெறுகிறது. மணியார்டர் அனுப்புவது கூட செயற்கைக்கோள் மூலம் நடக்கிறது. இப்படியாக இவ்வித செயற்கைக்கோள்கள் பல பணிகளைச் செய்து வருகின்றன. ரயில் பயணத்தின் போது இண்டெர்னட் இணைப்பு பெறவும் இணைசுற்று செயற்கைகோள் மூலம் ஏற்பாடு செய்யத் திட்டம் உள்ளது. செயற்கைக்கோள்கள் இல்லை என்றால் நாடே ஸ்தம்பித்து விடும் என்ற நிலை உள்ளது.

இப்போது நம் தலைக்கு மேலே இந்தியாவை நோக்கியபடி 13 இணை சுற்று செயற்கைக்கோள்கள் உள்ளன. இவை அனைத்தும் பூமியின் நடுக்கோட்டுக்கு (Equator)  நேர் மேலே உள்ளன. அதே சமயத்தில்அவை வெவ்வேறான  தீர்க்க ரேகைக்கு மேலே உள்ளன. அவை வருமாறு:-

.        ஜிசாட்- 2  செயற்கைக்கோள்-- 48 கிழக்கு தீர்க்க ரேகை
         இன்சாட் 3E, ஜிசாட் 8 --- 55 கிழக்குத் தீர்க்க ரேகை
         இன்சாட் 3C இன்சாட் -- 4CR, கல்பனா, எடுசாட்-- 74 கிழக்குத் தீர்க்க ரேகை
         இன்சாட் 2E, இன்சாட் 3B, இன்சாட் 4A, ஜிசாட் 12 -- 83 கிழக்குத் தீர்க்க ரேகை
         இன்சாட் 4B, இன்சாட் 3A -- 93 கிழக்குத் தீர்க்க ரேகை

இவற்றில் கல்பனா செயற்கைக்கோள் வானிலை தகவல்களை அளிப்பதற்கானது. எடுசாட் செயற்கைக்கோள் கல்வி ஒளிபரப்புக்கானது. மற்ற 11 செயற்கைக்கோள்களும் தக்வல் தொடர்பு உட்பட மேலே குறிப்பிட்ட பணிகளுக்கானவை. இவை போதாது. இந்தியாவுக்கு இவை போன்று மேலும் பல இணை சுற்று செயற்கைக்கோள்கள் தேவைப்படுகின்றன.

இந்தியாவுக்கு மேலே 35,786  கிலோ மீட்டர் உயரத்தில்
அமைந்துள்ள 13 இணைசுற்று செயற்கைக்கோள்களைக்
காட்டும் வரைபடம்
இவை ஒவ்வொன்றின் ஆயுள் 10 முதல் 15 ஆண்டுகள். ஆகவே அவ்வப்போது மாற்று செயற்கைக்கோளை அனுப்பிக் கொண்டிருக்க வேண்டும். எடைமிக்க இந்த செயற்கைக்கோளை உயரே செலுத்த நம்மிடம் சக்திமிக்க ராக்கெட் இப்போது இல்லை. ஆகவே ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் ராக்கெட்டை நம்பி இருக்கிறோம். பல சமயங்களிலும் முன்கூட்டி இடம் பதிவு செய்து காத்திருக்க வேண்டியுள்ளது. ஏரியானின் திட்டத்திலேயே பிரச்சினை ஏற்பட்டால் மேலும் காத்திருந்தாக வேண்டும்.

உதாரணமாக் இந்தியாவின் ஜிசாட்-10 செயறகைக்கோளை இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே உயரே செலுத்தியிருக்க வேண்டும். அது தாமதப்பட்டதால் இந்தியாவில் டிஷ் மூலம் டிவி நிகழ்ச்சிகளை அளிக்கும் ஓர் இந்திய நிறுவனம தனது சேவையை மேற்கொண்டு விஸ்தரிக்க முடியாமல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது

இந்தியா போலவே உலகில் பல நாடுகள் சொந்தமாக இணைசுற்று செயற்கைக்கோள்களைப் பெற்றுள்ளன. ஆனால் பல சிறிய நாடுகளின் தேவைக்காக இண்டல்சாட் என்னும் சர்வதேச நிறுவனம் உயரே இணைசுற்று செயற்கைக்கோள்களைச் செலுத்தியுள்ளது. இவற்றைப் பயன்படுத்தும் சிறிய நாடுகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அட்லாண்டிக் கடலுக்கு மேலே உள்ள
செயற்கைக்கோள்களைக் காட்டும் படம்.
வளைவு கோட்டுக்கு கீழே உள்ள எண்கள் கிழக்கு
அல்லது மேற்கு தீர்க்க ரேகையைக் குறிப்பவை.
2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி பூமியைச் சுற்றி பூமியின்  நடுக்கோட்டுக்கு மேலே மொத்தம் சுமார் 401 இணைசுற்று செயற்கைக்கோள்கள் செயல்பட்டு வருகின்றன. மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால் வானில் அமெரிக்க செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை தான் அதிகம்.

நாம் இப்பதிவில் முக்கியமாக இணைசுற்று செயற்கைக்கோள்கள் பற்றியே கவனித்தோம். பூமியை வடக்கு தெற்காகச் சுற்றும் செயற்கைக்கோள்கள் நிறையவே உள்ளன. இவை வட தென் துருவங்களுக்கு மேலாக அமைந்துள்ளதால் துருவ செயற்கைக்கோள்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன. இந்தியாவின் இணைசுற்று செயற்கைக்கோள்களைச் சேர்க்காமல் இந்தியாவின் 11 துருவ செயற்கைக்கோள்கள் வடக்கு தெற்காக பூமியை சுற்றி வருகின்றன். இவை பிரதானமாகப் படம் எடுக்கும் செயற்கைக்கோள்களாகும். சுமார் 600 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கின்ற இந்த செயற்கைக்கோள்களின் எடை குறைவு என்பதால் இவை இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்படுகின்றன.
 துருவ செயற்கைக்கோள் பூமியை
வடக்கு தெற்காகச் சுற்றுவதைக் காட்டும் படம்.
ஆனால் இன்சாட், ஜிசாட் போன்ற எடை மிக்க இணை சுற்று செயற்கைக்கோள்களை நாமே உயரே செலுத்திக் கொள்ளும் நிலையை எட்டுவதற்கு ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றி பெறுவது மிக அவசியம். அவ்விதம் வெற்றி கிட்டினால் அடுத்ததாக நாம் பிற நாடுகளின் செயற்கைக்கோள்களை செலுத்தித் தருவதிலும் ஈடுபட்டு நிறைய டாலர் சம்பாதிக்கலாம். உள்ளபடி நாம் பிற நாடுகளின் செயற்கைக்கோள்களை, அதாவது சுமார் இரண்டு டன்னுக்கும் குறைவான செயற்கைக்கோள்களை, நமது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் செலுத்திக் கொடுத்து ஓரளவில் பணம் சம்பாதித்து வருகிறோம்.

பிற நாடுகளின் தேவைக்கேற்ப நம்மால் செயற்கைக்கோள்களை தயாரித்து அளிக்க இயலும். பல்வேறு வகையான செயற்கைக்கோள்களைத் தயாரிப்பதில் நமக்கு நிறைய அனுபவம் உள்ளது. அவற்றைச் செலுத்தித் தருவதிலும் நாம் ஈடுபட்டால் இத்துறையில் நாம் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ முடியும்.  நாமாக உருவாக்கியுள்ள கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் வெற்றி பெறுவதைப் பொருத்து தான் எல்லாமே உள்ளது.

28 comments:

NAGARAJAN said...

தகவலுக்கு மிக்க நன்றி.

ஒரு விளக்கம் தேவை.

ஒரு செயற்கைக் கோளின் foot print , மற்றொரு செயற்கைக் கோளின் foot print லிருந்து எவ்வாறு மாறுபடுகிறது ?

நீங்கள் கூறிய படி, ஒரே நேர் கோட்டில் இருக்கும் இரு செயற்கைக் கோள்களின் foot print களின் வெவ்வேறாக இருக்க முடியுமா?

DTH operatorகள் எவ்வாறு இயங்குகிறார்கள் ?

(foot print - தமிழாக்கம் என்ன ?)

Anonymous said...

இப்ப எதுக்கு இந்த நாலாம் வகுப்புப் பாடம்?!

Unknown said...

சார்
நல்ல தகவல். செயற்கை கோள் எவ்வாறு பூமிய சுற்றுகின்றன. எரிபொருள்கள் துணை கொண்டா அல்லது வேறு ஈதேனும் பௌதீக விதிகள் உள்ளதா?

Unknown said...

நன்றி சார்

JAYARAJ MATHS TEACHER said...

Sir I am a Maths teacher from Ariyalur Dt. When I started my career I happened read your articles in 'Thinamani'. I used to share the same with my students. Students got inspiration towards science and I earned a good name as well. When I get to know you are writing this blog I was really happy. Now I can share lot of science matters with my students. More over I used to advise my students to pay visit to this site.

Salahudeen said...

நல்ல பதிவு நன்றி ஐயா. அனானி இது உங்களுக்கு நாலாம் வகுப்பு பாடமா? ‘’கற்றது கையளவு கல்லாதது கடலளவு’’ நினைவில் கொள்ளுங்கள் கீழே உள்ள ஆசிரியரின் பின்னூட்டத்தை படித்து பார்க்கவும். சகோ நாகராஜன் எனக்கு தெரிந்த வரை செயற்கைக்கோள் Rechargeable Battery மூலம் இயங்குகின்றன சூரிய வெப்பத்தின் மூலம் அவை recharge செய்து கொள்கின்றன.மேலதிக தகவல்களுக்கு http://www.gma.org/surfing/sats.html இங்கு சென்று பார்க்கவும்.

என்.ராமதுரை / N.Ramadurai said...

ஒரு செயற்கைக்கோளளின் சிக்னல்கள் கிடைக்க்கூடிய ஏரியாவே அதன் footprint ஆகும்.அந்த அளவில் அதை செயற்கைக்கோள் தடம் என்று கூறலாம். ஒரே ஏரியா பல செயற்கைக்கோள்களின் தடமாக இருக்க இயலும்.

Unknown said...

ஒரு உளவு செயற்கைக்கோள சில ஆங்கல படங்களில் வருவது போல் ஒரு தனி மனிதனை கண்காணிக்க முடியமா? புகைப்படங்கள் எடுத்து அனுப்ப முடிமா?

பூரணி எமிலி said...

அய்யா அருமையான தகவல்கள்....

நாலாம் வகுப்புன்னு நினைக்கும் நண்பரே தயவு செய்து நீங்க இந்தப்பக்கம் வரவேண்டாம.

//JAYARAJ MATHS TEACHER// அவர்களின் மகிழ்ச்சி அவர்களின் எழுத்தைப் படிக்கும் போதே தெரிகின்றது. உண்மையில் அவரிடம் படிக்கும் மாணவர்கள் பாக்கியசாலிகள்.தொடரட்டும் அவரது பணி!

என்.ராமதுரை / N.Ramadurai said...

தமிழ்செல்வன்
வேவு செயற்கைக்கோளிலிருந்து ஒரு தனி மனிதனை படம் பிடிக்க முடியும். ஆனால் மேலிருந்து ப்டம் எடுக்கப்படுவதால் முகம் தெரியாது.ஒரு கட்டடத்துக்குள் குறிப்பிட்ட பாணியில் உடை அணிந்த ஒருவர் தினமும் சென்று வருகிறார் என்றால் அதைப் படமாக்க முடியும். நீங்களாக அந்த நபருக்கு பாபு என்று பெயர் வைத்து பாபு எந்தெந்த நாளில் அக்கட்டடத்துக்குச் சென்றார் என்பதைப் பதிவு செய்து கொள்ள முடியும்.
ஓசாமா பின் லாடனின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க அமெரிக்க வேவு செயற்கைக்கோள்கள் இவ்விதமாக வானிலிருந்து படம் எடுத்தன.

என்.ராமதுரை / N.Ramadurai said...

கசாலி:
ஒரு செயற்கைக்கோள் 35,786 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்குமானால் பூமி சுற்றச் சுற்ற அதுவும் சுற்றும். ஆகவே கீழிருந்து பார்த்தால் அது நிலையாக இருப்பது போலத் தோன்றும்.
ஆனால் அது பூமியையும் சுற்றிக் கொண்டிருக்கும்.அது பூமியைச் சுற்றினாலும் வேறு எந்த நாட்டின் வான் பகுதியிலும் தென்படாது. இந்தியாவின் வான் பகுதியிலேயே இருந்து வரும்.

வானில் இந்த உயரத்தில் இருக்கின்ற செயற்கைக்கோள்கள் இணசுற்று செயற்கைகோள் geo-stationary satellite வகையைச் சேர்ந்தவை.இந்தியாவின் அந்த 13 செயற்கைக்கோள்களும் அந்த வகையைச் சேர்ந்தவை. வேறு உயரத்தில் இருக்கும் செயற்கைக்கோள்கள் பற்றி இங்கு விவரிக்க இயலாது.

கரிகாலன் said...

நல்ல தகவல்கள்.

என்.ராமதுரை / N.Ramadurai said...

திரு ஜெயராஜ்
தாங்கள் என்னுடைய பழைய வாசகர் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.தங்களைப் போல உள்ள பழைய வாசகர்கள் பலர் அண்மைக் காலமாக என்னுடன் தொடர்பு கொண்டுள்ள்னர்.

கோவி.கண்ணன் said...

நல்ல எளிய விளக்கம், கல்லூரியில் படித்த சார்டிலைட் கம்யூனிகேசனை மீண்டும் நினைவுபடுத்துகிறது உங்கள் பதிவு.

Unknown said...

sir,
தற்போது மத்திய அரசு DTH கட்டாயம் என்று அறிவித்து காலக்கெடுவும் அறிவித்து உள்ளது, அதனால் நாம் என்ன செய்ய வேண்டும், நாம் எல்லாரும் கண்டிப்பாக
set top box வாங்க வேண்டுமா? இதன் நன்மை தீமை என்ன?

IT Manager. said...

//Anonymous said...
இப்ப எதுக்கு இந்த நாலாம் வகுப்புப் பாடம்?!
//

Please ask this question to a final year ECE guy in campus interview. I did and hardly got a satisfactory answer.

My professor took vector algebra (that is taught in +2) class for 3 days before starting "Computer Graphics" course in MCA.

This is all due to the existing ROTE system of education.

There is a difference between learning to feed stomach and learning to feed brain.

Mr Ramadurai, yours is a fantabulous service. Keep it up!

Kudos to the teacher who is using this website to improve the knowledge of his students.

நம்பள்கி said...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள்! எனக்கும் இது மாதிர் எழுத ஆசை. ஆசை இருக்கு தாசில் பண்ண, ஆனால் தமிழில் இப்படி அழகாக என்னால் எழுத முடியாது!

இருந்தாலும் நான், "உலகத்தில் நம்ம தலைக்கு" மேல் சுற்றும் செயற்கைக் கோள்கள பற்றி எழுதியுள்ளேன். முட்னிதல் அதைப் பார்க்கவும்....

அரையாய் நிறை said...

sir,
im also very happy to see your blog..i like dinamani newspaper..because by the words of persons like you..the correct way is because of persons like you dinamani can give such good information...after reading ennai patri only i came to know you are the person worked for dinamani..from this im sure read ur blog updates..i request you to make more posts in your blog..very thanks sir

gnanaguru

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் தளத்தில் அறியாத பல தகவல்கள் உள்ளது சார் ! நன்றி !

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை !

இனி தொடர்வேன். நன்றி !

SIV said...

ஒரு செயற்கை கோள் புவியின் மைய்யபுள்ளி ஆதாரமாக வைத்து சுற்றுகிறது என்றால் அது எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் புவியுடன் தானே சுற்றும். பிறகு ஏன் அந்த குறிபிட்ட உயரத்தில்(35,786 ) சுற்ற வேண்டும் எனக்கூறுகிறீர்கள். செயற்கைகோளின் வேகத்தை variable ஆக கொண்டு நாம் விரும்பும் உயரத்தில் சுற்ற வைக்க இயலாதா?

என்.ராமதுரை / N.Ramadurai said...

SIV
எல்லா செயற்கைக்கோள்களும் பூமியை சுற்றுகின்றன.ஆனால் ஒரு செயற்கைக்கோள் அது அமைந்த உயரத்தைப் பொருத்து மெதுவாக அல்லது வேகமாகச் சுற்றும்.குறைந்த உயரத்தில் அமைந்த ஒரு செயற்கைக்கோள் வேகமாகச் சுற்றும். அதாவது பூமியை அது விரைவாகச் சுற்றி முடிக்கும். சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்த சர்வதேச விண்வெளி நிலையம் பூமியை ஒரு தடவை சுற்றி முடிக்க 92 நிமிஷம் ஆகிறது.ஆனால் 20,200 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்த ஒரு செயற்கைக்கோள் பூமியை ஒரு முறை சுற்றி முடிக்க 12 மணி நேரம் ஆகிறது.மேலும் மேலும் உயரத்தில் அமைந்த செயற்கைக்கோள் மேலும் மேலும் மெதுவாகச் சுற்றுகின்றன.35, 786 கிலோ மீட்டர் உய்ரத்தில் அமைந்த செயற்கைக்கோள் பூமியை ஒரு முறை சுற்றி முடிக்க 23 மணி 56 நிமிஷம் 4 வினாடி ஆகிற்து. பூமி தனது அச்சில் ஒரு தடவை சுற்றி முடிக்க அதே நேரம் தான் ஆகிறது. இதெல்லாம் பூமியை வட்ட வடிவப் பாதையில் சுற்றுகின்ற செய்ற்கைக்கோள்கள் விஷயத்திலான கணக்கு.
பூமியை நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்ற செயற்கைக்கோளின் வேகம் ஒரே சீராக இராது. பூமியிலிருந்து அது 400 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும் போது அதன் வேகம் அதிகமாக இருக்கும். பூமீயிலிருந்து 40 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும் போது அதன் வேகம் மிகக் குறைவாக இருக்கும்.
ஓடிப் பிடித்து விளையாடுகையில் பிடிப்பவருக்கு அருகே இருக்க நேர்ந்தால் ஒருவர் வேகமாக ஓடுவார்.பிடிபடாமல் இருக்க அவர் வேகமாகத் தான் ஓடியாக வேண்டும். சற்றே தொலைவில் இருப்பவரும் ஓடிக் கொண்டிருப்பார் என்றாலும் அவர் மெதுவாகவே ஓடிக் கொண்டிருப்பார். செயற்கைக்கோள் விஷயமும் அப்படித்தான்.

R. Jagannathan said...

உங்கள் பதிவுலகத்திற்கு என் முதல் வருகை. தொடர்ந்து வருவேன். கற்றுக் கொள்ள எத்தனையோ விஷயங்கள் இன்னும் இருக்கின்றன. மேலெழுந்தவாரியாகவாவது நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆவல். (கற்றுக் கொள்ள வயது என்ன?). நீங்கள் எழுதும் விஷயத்தில் கரை கண்டவர்கள் இருப்பார்கள், இருக்கட்டும். நீங்களும் குறைந்த பக்‌ஷ தேவையானதைமட்டும் தான் எழுத முடியும். மிக்க அறிவாளிகளை விட, விஷயம் தெரியாதவர்களை கொஞ்ஜமாவது அறிவுள்ளவெர் ஆக்கும் உங்கள் முயற்சிக்கு நன்றி. - ஜெ.

SIV said...

தங்களின் விரிவான விளக்கத்திற்கு நன்றி.

pfinellai said...

5,786 கிலோ மீட்டரில் வட்ட வடிவில் சுற்றுகிறதா இல்லை நீள் வட்ட பாதையில் சுற்றுகிறதா?35,786 கிலோ மீட்டர் நிலையாக இருக்குமா?அலல்து தூரம் மாறி கொண்டே இருக்குமா?அப்படி மாறி கொண்டே இருந்தால் டிவி சேனல்களில் இருந்து வரும் சிக்னல் ஆனது சரியாக கிடைக்கும?
செல்போன் 2G ,3G ,4G எவ்வாறு செயல்படுகிறது?வானொலி எப்படி செயற்கைக்கோள் வழியாக இயங்கும்?காரணம் அது ஆல் இந்தியா ரேடியோ ஆண்டனா வழியாக இயங்குகிறது?எப்படி பிறகு எப்படி அது செயற்கைக்கோள் வழியாக இயங்கும்?அதை யார் யார் செயல் உபயோகிக்க முடியும் அதருக்கும் TRAI இடம் அனுமதி வாங்க வேண்டும?அலைவரிசை உண்டா?

ப்படி ஒன்றோடு ஒன்று மோதாமல் பயணம் செய்கிறது?மற்றும் உலகம் முழுவதும் துருவ செயற்கைக்கோள்கள் எத்தனை செயபடுகிறது?

pfinellai said...

//ஜிசாட்-10 செயறகைக்கோளை இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே உயரே செலுத்தியிருக்க வேண்டும். அது தாமதப்பட்டதால் இந்தியாவில் டிஷ் மூலம் டிவி நிகழ்ச்சிகளை அளிக்கும் ஓர் இந்திய நிறுவனம தனது சேவையை மேற்கொண்டு//

ஒரு டிஷ் செயல்பட ஒரு ஜிசாட் 10 வேண்டுமா?இல்லை இது போக வேற எதாவது வேலை செய்யுமா?அதன் frquency range என்ன?வேலை செய்வது S BANDயா ?அல்லது V BANDயா ?வேறு என்ன BAND உண்டு ?அதற்குகுறிய FREQUENCY என்ன?பிறகு இந்தியா ஒரு இன்சாட் அல்லது ஜிசாட் விண்வெளியில் செலுத்தினால் அதனுடைய RANGE இந்தியாவில் மட்டும் வேலை செய்யுமா ?அல்லது உலகம் முழுவதும் வேலை செய்யுமா?

ஒரு இணைசுற்று செயற்கைகோளில் எத்தனை டிவி சேனல் வேலை செய்யும்?

ஒரு டிவி சேனல் அப் லிங்க் செய்யும் போது அது டவுன் லிங்க் செய்யும் போது கேபிள் டிவி ,ஆண்டனா ,டிஷ் மூன்றுக்கும் ஒரே friquency போதுமா?

என்.ராமதுரை / N.Ramadurai said...

pfinellai
தாங்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் ப்தில் அனுப்புவதால் தனி நூல் எழுத வேண்டியிருக்கும்.
இணை சுற்று செயற்கைக்கோள் ஒன்று 35786 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி வட்ட வடிவப் பாதையில் பூமியைச் சுற்றுகிற்து. அதன் உயரம் நிலைப்பாடு ஆகியவை அவ்வப்போது சிறு அளவுக்கு மாறுபடும். இதை சரி செய்வதற்கென அந்த வகை செயற்கைகோளில் எரிபொருள் இருக்கும். பீச்சு கருவிகளும் இருக்கும். பீச்சு கருவிகள் மூலம் அதன் பாதை அவ்வப்போது சரியான நிலைக்குக் கொண்டு வரப்படும். இந்த எரிபொருள் பொதுவில் 15 ஆண்டுகளுக்குப் போதுமானதாக இருக்கும். இந்த எரிபொருள் தீர்ந்து விட்டால் பின்னர் செயற்கைக்கோளின் மற்ற எல்லா கருவிகளும் நல்ல நிலையில் இருந்தாலும் செயற்கைக்கோள் பயனற்றதாகி விடும். சுற்றுப்பாதையில் திருத்தம் செய்ய முடியாத நிலையில் அது இடம் நகர்ந்து விடும் என்பதே அதற்குக் காரணம்.

Unknown said...

தங்களிடம் பாடம் கற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும். கட்டிட வேலை செய்பவன்

Unknown said...

நன்றி அய்யா --

ரொம்பநாள் தேடிய பதிவு இது தகவல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி

Post a Comment