விண்கல் எங்கிருந்து வருகிறது? இக்கேள்வியிலேயே பதில் அடங்கியுள்ளதாகக் கூறலாம். விண்கற்கள் அனைத்துமே விண்ணிலிருந்து தான் வருகின்றன.சொல்லப் போனால் விண்வெளியில் ஒன்றல்ல லட்சக் கணக்கில் விண்கற்கள் இருக்கின்றன. நெல்லிக்காய் சைஸிலான விண்கற்களையும் சேர்த்துக் கொண்டால் கோடானு கோடி விண்கற்கள் உள்ளன.
ஆனால் இவை எதுவும் மரத்தில் மாங்காய தொங்குவதைப் போல பூமிக்கு மேலே வானில் நிலையாக ஓரிடத்தில் இருப்பது கிடையாது. எல்லா விண்கற்களுமே பயங்கர வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகின்றன.
சூரிய மண்டலத்தில் பூமி, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் முதலான கிரகங்கள் தனித்தனிப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. இதே மாதிரியில் விண்கற்களுக்கும். தனிப் பாதை உண்டு.இது செவ்வாய் கிரகத்துக்கும் வியாழன் கிரகத்துக்கும் நடுவே உள்ளது. இது Main Asteroid Belt என்று குறிப்பிடப்படுகிறது.
![]() |
| செவவாய் (Mars) கிரகத்துக்கும் வியாழன் (Jupiter) கிரகத்துக்கும் இடையே உள்ள அஸ்டிராய்டுகள் |
விண்கற்கள் உள்ள் இடத்தில் ஒரு கிரகம் உருவாகியிருக்க வேண்டும் என்றும் அப்படி உருவாமல் போனதால அந்த இடத்தில் விண்கற்களாகக் காணப்படுகின்றன.என்றும் ஒரு கருத்து உண்டு. பெரியதும் சிறியதுமான துண்டுகள் ஒன்று சேர்ந்து தான் கிரகங்கள் உருவாகின .பூமியும் இப்படித்தான் உருவாகியது.
சூரிய மண்டலத்தின் கிரகங்கள் தோன்றிய சில காலத்துக்குப் பின்னர் அதாவது சுமார் 390 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஏதோ ஒரு பயங்கர நிகழ்ச்சியின் விளைவாக விண்கற்கள் கூட்டத்திலிருந்து எண்ணற்ற விண்கற்கள் பூமி, சந்திரன், புதன், வெள்ளி (சுக்கிரன்), செவ்வாய் முதலிய கிரகங்கள் அமைந்த திசையை நோக்கிப் புயல் போல் கிள்ம்பி இந்த கிரகங்களைத் தாக்கின.
![]() |
| விண்கற்கள் தாக்குதலால் சந்திரனில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள். செவ்வாய், புதன் கிரகங்களிலும் இதே போன்ற பள்ளங்கள் உள்ளன |
ஆனால் விண்கற்களால் பூமி உட்பட இந்த நான்கு கிரகங்கள் மீதான தாக்குதல் அடியோடு நின்று விடவில்லை. ஒரு கிரகத்தை அதன் பாதையிலிருந்து வெளியே தள்ள முடியாது. ஆனால் விண்கற்கள் அப்படி அல்ல.செவ்வாய், மற்றும் வியாழன் ஆகியவற்றின் ஈர்ப்பு சக்தியானது விண்கற்கள் கூட்டத்தில் அவ்வப்போது சலனத்தை உண்டாக்குகின்றன. இதன் விளைவாக விண்கற்கள் அவற்றின் பாதையிலிருந்து அவ்வப்போது வெளியே தூக்கி எறியப்படுகின்றன.
![]() |
| இந்த மேப்பில் நீல நிறத்தில் உள்ளது பூமியின் சுற்றுப்பாதை.இதை குறுக்காகக் கடக்கும் அஸ்டிராய்டுகள் சிலவற்றின் நீள்வட்டப்பாதைகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன |
பூமியின் சுற்றுப்பாதையை ஒரு விண்கல் கடக்கும் நேரத்தில் அதற்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் பல ஆயிரம் கிலோ மீட்டராக இருக்குமானால் பிரச்சினை இல்லை. ஆனால் பூமி தனது சுற்றுப்பாதையில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடம் வழியே விண்கல் கடக்க முயன்றால் பிரச்சினைதான்.லெவல்கிராசிங்கில் லாரி மீது ரயில் மோதுவது போன்று பூமியின் மீது விண்கல் மோத நேரிடும். ரஷியாவில் இது மாதிர்த்தான் நிகழ்ந்துள்ளது.
![]() |
| அஸ்டிராய்ட் ஒன்று எவ்விதம் பூமியின் பாதையை க் குறுக்காகக் கடக்கிறது என்பதை விளக்கும் படம். எண்ணற்ற அஸ்டிராய்டுகள் இவ்வித்ம் பூமியின் பாதையைக் கடந்து செல்கின்றன |
மாங்காய் சைஸ் அல்லது கூழாங்கல் அளவுக்கு இருக்கும் விண்கற்களும் விண்வெளியில் நிறையவே உள்ளன.இப்படியான விண்கல் ஒன்று வானிலிருந்து விழுவதை உங்களால் எளிதில் காண முடியும். இது பற்றி அடுத்த பதிவில் கவனிப்போம்.




11 comments:
விளக்கத்துடன் கூறி உள்ளீர்கள்... அடுத்த பகிர்வை எதிர்நோக்கி...
நன்றி...
தெளிவான விளக்கம், மிக்க நன்றி ஐயா
S.சுதாகர்
Thanks
நன்றி
ஐயா வணக்கம்
நம் சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் அனைத்தும் அஸ்டிராய்ட்கள் போல கரடுமுரடாக இல்லாமல் சொல்லி வைத்தாற்போல (செதுக்கி வைத்தாற்போல) அழகான உருண்டை வடிவத்தில் இருக்கிறதே எப்படி ஐயா
வெங்கடேஷ்
வெங்கடேஷ்
பூமி போன்ற கிரகம் உருவானதற்கு முன்னர் பல பெரிய அல்லது சிறு துண்டுகளாகவே இருந்தன. இவை ஒன்று சேர்ந்த போது சுழல ஆரம்பித்தன. மையப் பகுதியில் பெரும் வெப்பம் தோன்றியது.மையப் பகுதி உருகியது.
சுழலும் எந்தப் பொருளும் உருண்டை வடிவம் பெறும்.இதை இயல்பு. இவ்விதமாகத் தான் பூமியும் மற்ற கிரகங்களும் உருண்டை வடிவம் பெற்றன
ஐயா தகவலுக்கு நன்றி வின்கல்லில் புற்றுநோயை உண்டாக்கும் கதிர்கள் உண்டாமே உண்மையா?
Salahudeen
தரையில் வந்து விழும் விண்கற்களில் சில வகை வாயுக்கள் இருக்கலாம். அதுவும் சிறிதளவுக்கே இருக்கும். விண்கற்களில் புற்று நோயை உண்டாக்கும் வாயுக்கள் இருப்பதாக இதுவ்ரை கண்டறியப்படவில்லை.
எல்லாக்கோள்களுமே ஒழுங்கற்ற நீள்வட்டப்பாதையில் சுற்றுவதாக படிச்சமாதிரி ஞாபகம்..ஆனா இந்தப்படத்துல ரவுண்டா இருக்கு..?
விஜயன்
எல்லா கிரகங்களும் சூரியனை சற்றே அதுங்கிய வட்ட வடிவப் பாதையில் தான் சுற்றுகின்றன. இப் பதிவில் அடங்கிய படங்களை Not to Scale என்று வருணிக்கலாம்.குறிப்பிட்ட அம்சத்தை வலியுறுத்திக் காட்டுவதே இம்மாதிரியான படங்களின் நோக்கம்.
தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா.
Post a Comment