Mar 10, 2013

மேற்கு வானில் ஒரு வால் நட்சத்திரம்

Share Subscribe


வருகிற 12 ஆம் தேதி மாலை சூரியன் அஸ்தமித்த பின்னர் மேற்கே  அடிவானத்துக்கு சற்று மேலே வால் நட்சத்திரம் ஒன்று தென்படும் என்று வானவியல் நிபுணர்கள் அறிவித்துள்ளனர் (மேலே படம் காண்க). அனேகமாக இது வெறும் கண்ணால் பார்த்தாலே தெரியலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

 பான்ஸ்டார்ஸ் என்னும் பெயர் கொண்ட இந்த வால் நட்சத்திரம் சில வாரங்களுக்கு முன்ன்ர் தென்னாப்பிரிக்கா, அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் வெறும் கண்ணால் பார்த்தால் நன்றாகவே தெரிந்திருக்கிறது. அப்படியிருக்க வருகிற 12 ஆம் தேதி வெறும் கண்ணால் பார்த்தால் பார்த்தால் தெரியாமல் போக வாய்ப்பு இருக்கிறதா? ஆம.

அர்ஜெண்டினாவில் மார்ச் 2 ஆம் தேதி தெரிந்த பான்ஸ்டார்ஸ் வால் நடசத்திரம் 
ஒரு பெரிய “தாதா” வின் அறைக்குள் ஒருவர் அழைத்துச் செல்லப்படுகிறார். சிறிது நேரத்துக்குப் பிறகு அவர் வெளியே வரும் போது சட்டை கிழிந்து, முடி கலைந்து, ஊமைக் காயங்களுடன் தலைகுனிந்து தள்ளாடியப்டி வெளியே வருகிறார்.

சூரிய மண்டலத்தின் தாதா சூரியனே. எங்கிருந்தோ வருகின்ற வால் நட்சத்திரங்கள் அனைத்தும் சூரியனை சுற்றி விட்டுத் தான் திரும்பிச் செல்கின்றன..சூரியனைச் சுற்றுகையில் அவை சூரியனுக்கு’ அருகாமையில்’ இருக்க நேரிடுகிறது. சூரியனின் மிகுந்த ஈர்ப்பு சக்தியும் கடும் வெப்பமும் வால் நட்சத்திரத்தை  ஒரு கை பார்த்து விடுகின்றன. இப்படியாக ஒரு வால் நட்சத்திரம் சூரியனின் வெப்பம் காரணமாக பெரும் பொருளை இழந்து ‘ இளைத்து’ விடலாம். சில வால் நட்சத்திரங்கள் இரண்டாக பிளந்துவிடுவது உண்டு.
தென் கோளார்த்தத்தின் வானில் வான்ஸ்டார்ஸ்
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரீக்கா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில்  உள்ளவர்கள் சூரியனை சுற்றுவதற்காகப் போய்க் கொண்டிருந்த நல்ல பொலிவுடன் இருந்த வால் நட்சத்திரத்தைக் கண்டனர். நாமோ  சூரியனை சுற்றிவிட்டு  மீண்டு   வருகின்ற, வால் நட்சத்திரத்தைக் காணப் போகிறோம். சூரியனை 10 ஆம் தேதி கடக்கும் போது அதிக சேதம் ஏற்படாமல் இருந்தால் அந்த வால் நட்சத்திரத்தை வெறும் கண்ணால் காண இயலும்.

கடந்த 2011 ஆம் ஆண்டில் லவ்ஜாய் என்ற ஒரு வால் நட்சத்திரம் சூரியனை மிக நெருக்கமாகக் கடந்தும் கூட சேதமின்றி தப்பி வந்து காட்சி அளித்தது. இப்போதைய நட்சத்திரம் அதை விடப் பெரியது. ஆகவே அது எதிர்பார்க்கப்படுகிற பிரகாசத்துடன் தென்படலாம்.

இந்த வால் நட்சத்திரம் சில நாட்களே வானில் தென்ப்டும்.. அது புறப்பட்ட இடத்தை நோக்கிச் செல்வதால் நம்மிடமிருந்து மேலும் மேலும் விலகிச செல்லும்.ஆகவே பெரிய டெலஸ்கோப் மூலம் பார்த்தால் தான் தெரியும். பின்னர் டெலஸ்கோப்பிலும் சிக்காது.

ஆங்கிலத்தில் அந்த வால் நட்சத்திரத்தின் பெயர்  Pan-STARRS என்ப்தாகும். ஹவாய் தீவுகளில் அமைந்த Panoramic Survey Telescope and Rapid Response System  என்ற அமைப்பின் டெலஸ்கோப் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த அமைப்பின் பெயரைச் சுருக்கி அதற்கு வைத்துள்ளனர். அந்த வால் நட்சத்திரம் 2011 ல் கண்டுபிடிக்கப்பட்டதால் அதற்கு C/2011 L 4  என்ற பெயரும் உண்டு.இதுவே அதிகாரபூர்வ பெயர்.

இந்த வால் நட்சத்திரம் இதுவரை பூமியின் நடுக்கோட்டுக்குத் தெற்கே அதாவது தென் கோளார்த்தத்தில் உள்ள நாடுகளில் மட்டுமே தெரிந்து வந்தது. மார்ச் 7 ஆம் தேதிக்குப் பிறகு தான்  பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே ( வட கோளார்த்தம்) உள்ள பகுதிகளில் தெரிய ஆரம்பித்துள்ளது. இதற்கு இந்த வால் நட்சத்திரத்தின் பாதையும் பூமியின் வளைவும் காரணமாகும்.

வால் நட்சத்திரங்களில் பலவும், சூரியனிலிருந்து  சுமார்  எட்டு லட்சம் கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஊர்ட் முகில் ( Oort's Cloud) என்ற பகுதியிலிருந்து வருகின்றன. C/2011 L 4 வால் நட்சத்திரம் அப்படிப்பட்டதே.

ஊர்ட் முகில் கூட்டத்திலிருந்து கிளம்புகிற கட்டத்தில் ஒரு வால் நட்சத்திரம் மணிக்கு சுமார் 500 கிலோ மீட்டர வேகம் கொண்டதாக இருக்கலாம். சூரியனை நெருங்க நெருங்க அதன் வேகம் அதிகரிக்கும். சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ள க்ட்டத்தில் அதன் வேகம் மணிக்கு சுமார்  இரண்டு லட்சம் கிலோ மீட்டர் அளவுக்கு இருக்கும்.

பல வால் நட்சத்திரங்கள் திரும்பத் திரும்ப தலை காட்டிச் செல்லும். Halley's Comet என்ற வால் நட்சத்திரம் அதற்கு ஓர் உதாரணம்.. அது 75 ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து செல்வதாகும். இப்போதைய வால் நட்சத்திரம் சூரியனை நோக்கி வருவது இதுவே முதல் த்டவையாகும்.இது மறுபடி தலைகாட்ட பத்து லட்சம் ஆண்டுகள் ஆகலாம்.

பெயர் தான் வால் நட்சத்திரமே தவிர அது நட்சத்திரமே அல்ல., வால் நட்சத்திரங்கள்  கிரகங்களைப் போன்றவை. பூமி, செவ்வாய், வெள்ளி, வியாழன், சனி போன்ற கிரகங்கள் சூரியனை சற்றே அதுங்கிய வட்டவடிவப் பாதையில் சுற்றுகின்றன.சூரியனுக்கும் ஒரு கிரகத்துக்கும் உள்ள தொலைவு ஓரளவில் நிலையானவை.. ஆகவே  இரவு வானில் இவற்றைக் காண இயலும்.
பூமியும் மற்ற கிரகங்களும் சூரியனை வட்ட வடிவப் பாதையில் சுற்றுகின்றன. வால் நட்சத்திரம் நீள் வட்டப் பாதையில் சுற்றுகிறது
ஆனால் வால் நட்சத்திரங்கள் நீள் வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றுகின்றன். கிரகங்களுக்கு சுய ஒளி இல்லை என்பது போலவே வால் நட்சத்திரங்களுக்கும் சுய ஒளி கிடையாது.வால் நட்சத்திரங்களும் சரி, கிரகங்களும் சரி, அவற்றின் மீது சூரிய ஒளி படுவதால் நம் கண்ணுக்குத் தெரிகின்றன.

கிரகங்களுடன் ஒப்பிடுகையில் வால் நட்சத்திரங்கள் வடிவில் சிறியவை.     ஒரு வால் நட்சத்திரம் என்பது சிறிய குன்றுகள்  என்று சொல்லத்தக்க அளவிலான  பெரிய பெரிய பாறாங்கற்கள், சிறு கற்கள், மணல்,,உறைந்த பனிக்கட்டி உருண்டைகள், சில வகை வாயுக்கள் ஆகியவற்றால் ஆனதே.

ஒரு வால் நட்சத்திரத்தின் குறுக்களவு சில நூறு மீட்டர் அளவில் இருக்கலாம். பல கிலோ மீட்டர் அளவிலும் இருக்கும். இதுவே வால் நட்சத்திரத்தின் தலைப்பகுதியாகும் ( Nucleus).இந்த தலைப் பகுதியைச் சுற்றி சிகை (Coma) அமைந்திருக்கும், இது பஞ்சு மிட்டாய் மாதிரி. நுண்ணிய தூசு, வாயுக்கள் ஆகியவை அடங்கியதாக இருக்கும். இதன் குறுக்களவு பல லட்சம் கிலோ மீட்டர் அளவுக்கு இருக்கும். சூரியனை நெருங்கிய கட்டத்தில் தான் சிகை உருவாகிறது. இதன் மீது சூரிய ஒளி படும் போது தான் வால் நட்சத்திரம் பெரிய வடிவைக் கொண்டது போன்று காட்சி  அளிக்கிறது.

 வால் நட்சத்திரத்துக்கு நிரந்தர வால் கிடையாது.பல நூறு கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் போது அது பெரிதும் பனிக்கட்டி உருண்டைதான். சூரியனை நோக்கிக் கிளம்பி பெரும்பாலான தூரம் வந்ததற்குப் பிறகு தான் வால் நட்சத்திரத்தின் வால் தோன்ற ஆரம்பிக்கிறது.

சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க துகள்களின் விளைவாகவே வால்  நட்சத்திரத்துக்கு வால் முளைக்கிறது. சூரியனின் இத் துகள்கள் Solar Wind  என்று அழைக்கப்படுகின்றன். இவை கிரகங்களையும் தாக்குகின்றன. வால் நட்சத்திரங்களையும் தாக்குகின்றன.
வால் நட்சத்திரத்தின் வால்கள் எப்போதும் சூரியனுக்கு எதிர்ப்புறமாக இருக்கும். Solar wind இதற்குக் காரணம் 
சூரியனின் இத் துகள்களின் தாக்குதலால் வால் நட்சத்திரத்திலிருந்து வாயுக்களும், மிக நுண்ணிய துகள்களும் டன் கணக்கில்  வெளிப்பட்டு பின் நோக்கித் தள்ளப்படுகின்றன. இதுவே வால் போல அமைகிறது. சூரிய ஒளி பட்டு இது நீண்ட வால் போல் காட்சி அளிக்கிறது. வால் நட்சத்திரத்தின் வால் பகுதி பல கோடி கிலோ மீட்டர்   நீளத்துக்கு  இருக்கலாம்.சொல்லப் போனால் வால் நட்சத்திரத்துக்கு இரண்டு வால்கள் உண்டு. ஒன்று தூசு அடங்கிய வால். மற்றொன்று வாயுக்களால் ஆன வால்.

.ஒரு சமயம் பூமியானது தனது சுற்றுப்பாதையில் இந்த வால் வழியே சென்றது.இது ஒரு சாலை ஓரமாக   குப்பை எரிவதால் தோன்றும்  புகை மண்டலம் வழியே கார் செல்வதைப் போன்றதே.

வால் நட்சத்திரங்கள் ஒவ்வொரு தடவையும் சூரியனை நோக்கி வருகையில் சூரியத் துகள்களின் தாக்குதலால் கணிசமான அளவில் பொருளை இழக்கின்றன. . ஆகவே பல தடவை வந்து சென்ற ஒரு  வால் நட்சத்திரம் இளைத்துக் காணப்படும்.  

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை வால் நட்சத்திரங்கள் மன்னர்களையும் மக்களையும் பயமுறுத்தின. வானில் வால் நட்சத்திரம் தோன்றினால் மன்னரின் உயிருக்கும் பதவிக்கும் ஆபத்து நேரும் என்ற மூட நம்பிக்கை நிலவியது. வால் நட்சத்திரம் தோன்றினால் உலகமே அழிந்து விடலாம் என மக்களும் அஞ்சினர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த மூட நம்பிக்கை நிலவியது.

 வருகிற 12 ஆம் தேதியன்று பான்ஸ்டார்ஸ் வால் நட்சத்திரத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியாமல் போனால் வருந்த வேண்டாம்.  நவம்பர் மாத வாக்கில் ISON எனப்படும்  வால் நட்சத்திரம் வரப் போகிறது. யார் கண்ணிலும் படாமல் தப்பாது என்கிற அளவுக்கு அது பெரியதாக இருக்கும் என்பதுடன் தொடர்ந்து பல நாட்களுக்கு அது காட்சி தரும்.

9 comments:

Sudhakar Shanmugam said...

பூமி, ஒரு சமயம் வால் நட்சத்திரத்தின் வால் பகுதி வழியே சென்றது என்றும், சாலை ஓரமாக குப்பை எரிவதால் தோன்றும் புகை மண்டலம் வழியே கார் செல்வதைப் போன்றதே என்றும் குறிபிட்டிருக்கிறீர்கள். அது எப்போது நிகழ்ந்தது? அச்சம்பவம் நிகழ்த போது பூமி முழுதும் புகையால் சூழப்பட்டது போல் இருந்ததா?

நன்றி

S.சுதாகர்

என்.ராமதுரை / N.Ramadurai said...

எஸ். சுதாக்ர்
1910 ஆம் ஆண்டில் Halley's comet வந்தது. அந்த ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி பூமியானது அந்த வால் நட்சத்திரத்தின் வால் வழியே சென்றது. ஏதாவது விபரீதம் நிகழுமே என்று மக்கள் பயந்தனர். ஆனால் எதுவும் நிகழவில்லை.
அந்த வால் நட்ச்த்திரத்தின் வான் 38 மிலியன் கிலோ மீட்டர் அளவுக்கு இருந்தது. இந்த வால் பூமியின் சுற்றுப்பாதையைக் கட்ப்பதாக அமைந்திருந்தது. ஆகவே தான் அந்த வால் வழியே பூமி செல்ல நேரிட்டது.
வால் என்பது மிக மிக நுண்ணிய துணுக்குகளைக் கொண்டது. மறுபுறம் என்ன உள்ளது என்று பார்க்க முடிகிற அளவுக்கு மிக மெல்லியது.
அந்த வால் நட்சத்திரத்தின் வாலில் அடங்கிய பொருட்கள் பூமியின் காற்று மண்டலத்தைத் தாண்டித் தான் பூமிக்கு வந்து சேர முடியும் என்பதை மறந்துவிடலாகாது.
எனினும் பிரிட்டனைச் சேர்ந்த பிரெட் ஹாயில் இலங்கையைச் சேர்ந்த சந்திரா விக்கிரமசிங்கே ஆகிய இரு நிபுணர்கள் புளூ போன்ற ஜுரங்களின் கிருமிகள் வால் நட்சத்திரங்கள் மூலம் பூமியில் பரவுவதாகப் பல ஆண்டுகளுக்கு முன்னர் கருத்து கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Unknown said...

super......

Nandhini said...

Thank you sir :) I was keen to ask you about this Pan star, but surprised after seeing your article :)Is there any possibility in future for the earth to pass through the starts like this.

என்.ராமதுரை / N.Ramadurai said...

நந்தினி
தங்களது கேள்வி தெளிவாக இல்லை. பான்ஸ்டார்ஸ் வால் நட்சத்திரத்தின் வால் வழியே பூமி செல்ல வாய்ப்பு உள்ளதா என்பது தங்களது கேள்வியானால் அந்த வால் நட்சத்திரத்தின் வால் எவ்விதமாக அமைந்துள்ளது என்பதைப் பொருத்தது.
Solar Wind காரணமாக எல்லா வால் நட்சத்திரங்களும் தங்கள் வந்து சென்ற பாதையில் எண்ணற்ற நுண்ணிய துகள்களை விட்டுச் செல்கின்றன. விண்வெளியில் காற்று இல்லை என்பதால் அத் துகள்கள் அடித்துச் செல்லப்படாமல் அப்படியே மிதக்கும். பூமி சூரியனைச் சுற்று வருகையில் அத் துகள்கள் மிதக்கும் இடத்தைக் கடப்பது உண்டு. அப்போது பூமியின் காற்று மண்டலத்தில் இவை நுழைந்து எண்ணற்ற ஒளிக் கீற்றுகள் வானில் தென்படும். இது Meteor Shower என வருணிக்கப்படுகிறது.

Anonymous said...

ஐயா வணக்கம்

வால் நட்சத்திரங்களில் பலவும், சூரியனிலிருந்து சுமார் எட்டு லட்சம் கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து சூரியனை சுற்றிவருகிறது என்று குறிப்பிட்டுள்ளீர்கள் அப்படியெனில் அவைகளும் நம் சூரிய மண்டலத்தை சார்ந்தவைகளா மேலும் அவ்வளவு தூரத்திலிருந்து வால் நட்சத்திரங்கள் சூரியனை சுற்றி வருவதற்கு சூரியனின் ஈர்ப்பு சக்திதான் காரணமா அப்படியென்றால் சூரியனின் ஈர்ப்பு சக்தியின் எல்லை எவ்வளவு தூரத்திற்கு இருக்கும் ஐயா.

வெங்கடேஷ்

என்.ராமதுரை / N.Ramadurai said...

வெங்கடேஷ்
வால் நட்சத்திரங்களும் கிரகங்களைப் போல சூரிய குடும்பத்தைச் சேர்ந்தவையே. கிரகங்கள் கிட்டத்தடட வட்ட வடிவப் பாதையில் சூரியனை சுற்றுகின்றன.வால் நட்சத்திரங்கள் நீள் வட்டப்பாதையில் சுற்றுகின்றன. சூரியனின் ஈர்ப்பு சக்தி காரணமாகவே அவை சூரியனைச் சுற்றி விட்டுத் திரும்பச் செல்கின்றன.
சூரியனின் ஈர்ப்பு சக்தி எல்லை என திட்டவட்டமாகக் கூற முடியாது.சூரியனிலிருந்து மேலும் மேலும் தொலைவுக்குச் செல்லும் போது ஈர்ப்பு சக்தி அளவு மெல்லக் குறைகிறது.
சூரியனிலிருந்து 2000 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும் சூரியனின் ஈர்ப்பு சக்தி காணப்படுகிறது.

Praveen said...

"வால் நட்சத்திரத்தின் வால்கள் எப்போதும் சூரியனுக்கு எதிர்ப்புறமாக இருக்கும். Solar wind இதற்குக் காரணம்"

Sir,
தயவு செய்து இக்கூற்றை விளக்கவும்.

மிக்க நன்றி,
பிரவீன்

என்.ராமதுரை / N.Ramadurai said...

Praveen
வால் நட்சத்திரத்திலிருந்து மிக நுண்ணிய தூசு மற்றும் வாயுக்கள் வெளிப்படுகின்றன. இவை தான் வால் போல் அமைகின்றன. சூரிய ஒளி பட்டு சந்திரன் பிரகாசிப்பது போல இந்த தூசு, வாயு ஆகியவற்றின் மீது சூரிய ஒளி படும் போது நீண்ட வாலாகக் காட்சி அளிக்கிறது
சூரியனிலிருந்து ஆற்றல் மிக்க துகள்கள் solar wind எப்போதும் நாலா புறங்களிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நீங்கள் மூன்றாவது மாடியிலிருந்து மாவைக் கொட்டினால் காற்று அதை அடித்துச் செல்லும். அது போல சூரியத் துகள்கள் வால் நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் தூசையும் வாயுக்களையும் தள்ளுகிறது.
வால் நட்சத்திரம் சூரியனை நோக்கி வரும் போது அவை பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. அதாவது சூரியனுக்கு எதிர்ப்புறம் தள்ளப்படுகின்றன. சூரியனை சுற்றி விட்டுத் திரும்பும் போதும் அதே போல அவை சூரியனுக்கு எதிர்ப்புறம் தள்ளப்படுகின்றன. ஆகவே வால் முன்னே செல்ல வால் நட்சத்திரத்தின் தலை பின்னே அமைந்திருக்கும்.

Post a Comment