Jul 30, 2014

ஆகஸ்ட் 10 ஆம் தேதி சூப்பர் நிலா

Share Subscribe
வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி பௌர்ணமி நாள். வழக்கம் போல வருகிற பௌர்ணமிதான். ஆனால் ஒரு வித்தியாசம்.  அன்று இரவு முழு நிலவானது வழக்கத்தை விட சற்றே பெரியதாகத் தெரியும்.ஒப்பு நோக்குகையில் சந்திரன் நமக்கு சற்றே பக்கத்தில் இருக்கும் என்பதே அதற்குக் காரணம்.

அன்றைய தினம் நிலவு வழக்கத்தை விட சுமார் 14 சதவிகித அளவுக்குப் பெரிதாக இருக்கும். நிலவின் பிரகாசம் வழக்கத்தைவிட 30 சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே அன்றைய முழு நிலவை சூப்பர் நிலா என்று வருணிக்கலாம்.

பூமியை சந்திரன் சுற்றிச் சுற்றி வருகிறது. ஆனால் சந்திரனின் சுற்றுப்பாதை மிகச் சரியான வட்டமாக இருப்பது கிடையாது . அதுங்கிய வட்டமாக உள்ளது. ஆகவே சந்திரன் சில சமயங்களில் பூமிக்கு அருகில் இருக்கிறது.வேறு சில சமயங்களில் பூமியிலிருந்து தள்ளி இருகிறது.

ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் 3,56,922 கிலோ மீட்டராக இருக்கும். இத்துடன் ஒப்பிட்டால் ஜூலை 28 ஆம் தேதியன்று  பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் இருந்த தூரம் 4,06,547 கிலோ மீட்டர்.

பூமியை சந்திரன் சுற்றும்  நீள் வட்டப்பாதை
சந்திரன் பூமியை ஒரு தடவை சுற்றி முடிக்க சுமார் 28 நாட்கள் ஆகின்றன. ஆகவே அது பூமிக்கு சற்றே அருகில் இருப்பதும் தள்ளி இருப்பதும் ஒவ்வொரு மாதமும் நிகழ்வதாகும்.

ஆனால் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் குறைவாக இருந்து அன்றைய தினம் பௌர்ணமியாகவும் இருந்தால் அன்று இரவு தெரிகின்ற முழு நிலவை சூப்பர் நிலா (Super Moon)  என்று வருணிக்கிறார்கள்.

எனினும் சூப்பர் நிலா தெரிகிற நாளில் நீங்கள் சந்திரனைக் கவனித்தால் உங்களால் எளிதில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.
2013 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி தெரிந்த சூப்பர் நிலா.
வாஷிங்டனில் எடுத்த படம் ( நன்றி: NASA/ Bill Ingalls)
அமெரிக்காவின் நாஸா விண்வெளி அமைப்பு 1969 ஆம் ஆண்டில் தொடங்கி ஆறு  தடவை சந்திரனுக்கு விண்வெளி வீர்ர்களை அனுப்பியது. பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம் குறைவாக இருக்கிற நாளாகப் பார்த்து அனுப்பியதாகச் சொல்ல முடியாது. அதாவது தூரம் ஒரு அம்சமாகக் கணக்கில் கொள்ளப்படவில்லை.

சந்திரனில் போய் இறங்கினால் சந்திரனில் உச்சி வெயிலாக இல்லாமல் காலை வெயிலாக இருக்க வேண்டும் என்ற அம்சமே முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்பட்டது.  இதையே வேறு விதமாகச் சொன்னால் சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கு அமாவாசை கழிந்த சில நாட்களே தேர்ந்தெடுக்கப்பட்டன.

5 comments:

Anonymous said...

ஐயா வணக்க்ம்

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வது போல நிலவும் தன்னைத்தானே சுற்றுகிறதா?. ஏனென்றால் நிலவின் மறுபக்கத்தை எப்போதும் ஒரு ஆச்சரியமூட்டும் விஷயமாகவே சொல்கிறார்களே

வெங்கடேஷ்

என்.ராமதுரை / N.Ramadurai said...

வெங்கடேஷ்,
சந்திரனும் தன்னைத் தானே சுற்றிக் கொள்ளத்தான் செய்கிறது. ஆனால் அது பூமியை ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு ஆகும் காலமும் தன்னைத் தானே அச்சில் ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு ஆகும் காலமும் சரி சமமாக உள்ளது. ஆகவே அது தனது முதுகுப் புறத்தை பூமிக்குக் காட்டுவதே கிடையாது.
நீங்கள் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் வெறும் கண்ணால் அல்லது பைனாகுலர்ஸ் மூலம் முழு நிலவை கவனித்து வந்தால் எல்லாப் பௌர்ணமிகளிலும் சந்திரனின் அதே முகத்தைத் தான் பார்க்கிறீர்கள் என்பது தெரிய வரும்
சந்திரன் இப்படி தனது முதுகைக் காட்டாமல் அச்சில் சுழல்வதற்கு பூமியின் ஈர்ப்பு சக்தி தான் காரணம். சந்திரன் இஷடப்படி சுழலாமல் பூமியின் ஈர்ப்பு சக்தி தான் தடுக்கிறது.
எனினும் 1959 ஆம் ஆண்டில் ரஷியா ( அப்போதைய சோவியத் யூனியன்) அனுப்பிய லூனா 3 விண்கலம் சந்திரனை அடைந்து சந்திரனின் மறுபக்கத்தைப் படம் எடுத்து அனுப்பியது. அப்போது தான் மனிதன் சந்திரனின் மறுபுறத்தை முதல் முறையாகக் கண்டான் அதன் பிறகு சோவியத் மற்றும் அமெரிக்க விண்கலங்கள் மேலும் செம்மையான படங்களை அனுப்பின

Anonymous said...

Thanks for the information sir. I think we had similar occurrence in 2011 or 2012. I still remember my memorable country side travel on that day.

Keep going!

Anonymous said...

ஐயா வணக்கம்

விரிவான விளக்கத்திற்கு நன்றி

வெங்கடேஷ்

Sathyan.R said...

Thanks for the explination. If possible please that picture back side of MOON.

Post a Comment