Dec 17, 2014

இந்தியாவின் சக்திமிக்க புதிய ராக்கெட்

Share Subscribe
இதுவரை இல்லாத அளவில் பெரியதொரு ராக்கெட்டை இந்தியா உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில் இது விண்வெளிக்கு இந்திய விண்வெளி வீர்ர்களை ஏற்றிச் செல்வதாக இருக்கலாம். இந்த ராக்கெட் இன்னும் முழுதாக உருப்பெறவில்லை என்றாலும் இந்த மாதம் 18 ஆம் தேதியன் விண்ணில் செலுத்தி சோதிக்கப்பட இருக்கிறது.

இது கிட்டத்தட்ட 14 மாடிக் கட்டடம் அளவுக்கு உயரமாக இருக்கும். எடை 630 டன். இப்போது நம்மிடம் உள்ள பி.எஸ்.எல்.வி ராக்கெட்டைப் போல இரண்டு மடங்கு பெரியது. புதிய ராக்கெட்டின் பெயர் ஜி..எஸ்.எல்.விமார்க் 3 (GSLV Mark-3) என்பதாகும்.

இதை ஒருமையில் ராக்கெட் என்று சொன்னாலும் உண்மையில் இது (Core) நான்கு ராக்கெட்டுகளின் தொகுப்பு ஆகும்பெரிய வடிவிலான மூல ராக்கெட். அதன் பக்கவாட்டில் இணைந்த இரு துணை ராக்கெட்டுகள்.(Boosters) மூல ராக்கெட்டின் மேற்புறத்தில் இணைந்த ஒரு ராக்கெட் அதை முகப்பு ராக்கெட் என்றும் கூறலாம்.

 தொகுப்பு ராக்கெட்டில் அடங்கிய ராக்கெட்டுகள் அடுத்தடுத்து எரிந்து தனியே கழன்று விழும் போது தொடர்ந்து எடை குறைந்து வரும் என்பதால் கடைசியில் முகப்பு ராக்கெட் அதி வேகத்தில் பாயும். அமெரிக்கா, ரஷியா, சீனா முதலான நாடுகளும் இவ்விதமான தொகுப்பு ராக்கெட்டுகளையே பயன்படுத்துகின்றன.

ராக்கெட் என்பது  ஒரு வாகனமே. அந்த வகையில் ராக்கெட்டானது செயற்கைக்கோளை தேவையான உயரத்துக்குக் கொண்டு செல்கிறது. ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம் மற்றும் எரிபொருளைப் பொருத்து ஒரு ராக்கெட்டானது குறிப்பிட்ட எடையைச் சுமந்து செல்லும். அந்த வகையில் ராக்கெட்டெல்லாம் ஒரே திறன் கொண்டவையல்ல.

இந்தியா 1994 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வெற்றிகரமாகப் பயன்படுத்தி வரும் பி.எஸ்.எல்.வி (PSLV) ராக்கெட் சுமாரான திறன் கொண்டதே. இது ஒரே ஒரு தடவை மிக அதிகபட்சமாக 1860 கிலோ எடையைச் சுமந்து சென்றது.  . மற்றபடி இது சுமார் ஒன்றரை டன் எடையைச் சுமந்து செல்லக்கூடியதே.
மிக நம்பகமான பி.எஸ்.எல்.வி ராக்கெட்
ஆனால் நமக்கு இது போதாது. சுமார் 4 டன் எடையை சுமந்து செல்லக்கூடிய சக்தி மிக்க ராக்கெட் தேவை. இப்படியான ராக்கெட்டை உருவாக்க நாம் பல ஆண்டுகளாகப் பெரும் பாடுபட்டு வருகிறோம். அப்படியான ராக்கெட் ஏன் தேவை என்பதற்குக் காரணம் உண்டு.

நாம் தயாரிக்கின்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களின் எடை மூன்று டன்னுக்கும் அதிகம். இவற்றைச் செலுத்த நம்மிடம் தகுந்த ராக்கெட் இல்லாததால் ஒவ்வொரு தடவையும் அந்த செயற்கைக்கோளை தென் அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்று ஐரோப்பாவின் ஏரியான் ராக்கெட் மூலம் செலுத்தச் செய்கிறோம்

இப்போது ஜி.எஸ்..ல்.வி- மார்க் 3 ராக்கெட் வெற்றி பெற்றால் இவ்வித செயற்கைக்கோள்களையும் இந்திய மண்ணிலிருந்தே செலுத்த முடியும். எதிர்காலத்தில் இந்த ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி வீர்ர்களையும் உயரே அனுப்ப முடியும்.

இங்கு இன்னொரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். எந்த ஒரு ராக்கெட்டுக்கும் எடை சுமக்கும் விஷயத்தில் இரண்டு விதமான திறன் உண்டு. இதை சற்று விளக்க வேண்டும். சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரை செல்வதானால் ஒரு லாரியில் 10 டன் ஏற்றிச் செல்ல முடியும். ஆனால் அது  நாகர்கோவில் வரை செல்வதானால் 4 டன் தான் ஏற்றிச் செல்ல முடியும் என்ற நிலைமை கிடையாது. ஆனால் ராக்கெட் விஷயத்தில் இப்படியான நிலைமை உண்டு.

ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் சுமார் 300 கிலோ மீட்டர் உயரத்தில் செயற்கைக்கோளைச் செலுத்த வேண்டும். அல்லது அந்த உயரத்துக்கு ஒரு விண்கலத்தைச் சுமந்து செல்ல வேண்டும் என்றால் அந்த ராக்கெட்டினால் 10 டன் வரை சுமந்து செல்ல இயலும். ஆனால் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்கு தகவல் தொடர்பு செயற்கைக்கோளை செலுத்த வேண்டுமானால் அந்த ராக்கெட்டினால் சுமார் நான்கு முதல் ஐந்து டன் எடையைத் தான் சுமந்து செல்ல முடியும். எனினும் கிரையோஜெனிக் (Cryogenic) எஞ்சின் இருந்தால் தான் இது சாத்தியம்

நமக்கு ஹைட்ரஜன் வாயு தெரியும். ஆக்சிஜன் வாயு தெரியும். ராக்கெட்டின் பின்புறத்தில் உள்ள எஞ்சினில் இந்த இரண்டு வாயுக்களும் சேர்ந்து எரியும்படி செய்தால் மிக அதிகபட்ச உந்து திறன் கிடைக்கும். எடை மிக்க செயற்கைக்கோள் அல்லது விண்கலத்தை உயரே செலுத்த இவ்வித எஞ்சின் அவசியம் தேவை. பொதுவில் முகப்பில் உள்ள ராக்கெட்டில் இந்த எஞ்சின் பொருத்தப்படும்.
புதிய ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மார்க் 3
இந்த இரண்டு வாயுக்களும் ஏராளமான அளவில் தேவை என்பதால் ராக்கெட்டில் பெரிய சிலிண்டர்களில் வைத்து எடுத்துச் செல்வது சாத்தியமில்லை. ஆனால் இந்த இரண்டு வாயுக்களையும் தனித்தனியே கடுமையான அளவுக்கு குளிர்வித்தால் திரவமாகி விடும். ராக்கெட் எஞ்சினில் ஒன்று சேர்ந்து எரிகின்ற வரையில் இவை தனித்தனி தொட்டிகளில் அதே குளிர் நிலையில் திரவ வடிவில் இருந்தாக வேண்டும்.

இப்படி கடுமையாகக் குளிர்விக்கப்பட்ட திரவ ஆக்சிஜன் திரவ ஹைட்ரஜன் ஆகியவற்றைப் பயன்படுத்தும் எஞ்சினே கிரையோஜெனிக் எஞ்சின் எனப்படுகிறது. (கிரையோ என்றால் கடும் குளிர்விப்பு என்று பொருள்)

இவ்வித எஞ்சினை உருவாக்குவது என்பது மிகவும் சிக்கலானது. உலகில் முதன் முதலில் (1957) செயற்கைக்கோளைச் செலுத்திய அத்துடன் முதல் முதலில் (1961) மனிதனை விண்வெளிக்கு அனுப்பிய ரஷியா 1987 ஆம் ஆண்டில் தான் கிரையோஜெனிக் எஞ்சினை உருவாக்குவதில் வெற்றி கண்டது. இந்தியா சொந்தமாக இந்த வகை எஞ்சினை உருவாக்குவதற்கு நீண்ட காலம் பிடித்ததில் வியப்பில்லை.

எனினும் இந்த மாத பிற்பகுதியில் உயரே செலுத்தப்பட இருக்கும் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டின் முகப்பில் கிரையோஜெனிக் எஞ்சின் இடம் பெறாது. இந்த எஞ்சின் இன்னும் சோதிக்கப்படும் கட்டத்தில் உள்ளது. எனவே  டம்மி தான் பொருத்தப்படும்.  புதிய ராக்கெட்டின் ஸ்திரத்தன்மை, வானில் பாயும் திறன், எடை சுமந்து செல்லும் திறன் ஆகியவற்றை சோதிப்பதே இப்போதைய நோக்கமாகும். ஆகவே இது எந்த செயற்கைக்கோளையும்  உயரே செலுத்தாது.

எனினும் அது சுமார் 4 டன் எடையை சுமந்து செல்கிறதா என்பதை சோதித்தாக வேண்டுமே. முதல் பயணம் என்பதால் பெரும் செலவில் உருவாக்கப்படும் செயற்கைக்கோளை அந்த ராக்கெட்டின் முகப்பில் வைப்பது உசிதமல்ல. அதற்குப் பதில் சுமார் மூன்றரை டன் எடை கொண்ட ஒரு கூடு (Module) வைக்கப்பட இருக்கிறது.இது 2.6 மீட்டர் உயரமும் 3.1 மீட்டர் அகலமும் கொண்டது
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் வைத்து செலுத்தப்ப்ட இருக்கும் கூடு
இந்தக் கூடு எதிர்காலத்தில் இந்திய விண்வெளி வீர்ர்கள் இருவர் ஏறிச் செல்வதற்குப் பயன்படுத்தக்கூடிய விண்கலத்தின் மாடல் போன்றது. இதில் அவசியமான சில கருவிகள் மட்டுமே இருக்கும். ராக்கெட் குறிப்பிட்ட உயரம் வெற்றிகரமாகப் பறந்து சென்ற பின் இந்த கூடு மட்டும் தனியே பிரிந்து வங்கக்கடலில் பாரசூட் மூலம் இறங்கும். கீழே இறங்கும் போது அந்த கூடு தீப்பிடிக்காமல் தடுக்க அதன் வெளிப்புறத்தில் வெப்பத் தடுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அந்த ஏற்பாடு நன்கு செயல்படுகிறதா என்பதும் இப்போது சோதிக்கப்படும்
.

எனினும் இதை வைத்து இந்தியா விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் கட்டத்தை நெருங்கி விட்டதாக  நினைத்தால் தவறு. ராக்கெட்டின் முகப்பில் மூன்றரை டன் எடை கொண்ட எதையாவது வைத்து அனுப்பியாக வேண்டும் என்ற அடிப்படையில் தான் அந்த கூடு வைக்கப்படுகிறது. மற்றபடி இந்திய விண்வெளி வீர்ரை உயரே அனுப்புவதற்கு நாம் பல கட்டங்களைத் தாண்டியாக வேண்டும். அதற்குக் குறைந்தது பத்து ஆண்டுகள் ஆகலாம்.

( என்னுடைய இக்கட்டுரை தி ஹிந்து தமிழ் பதிப்பில் டிசம்பர் 17 ஆம் தேதி வெளியானதாகும்)

UPDATE: 19th Dec. 
GSLV Mark 3  என்று அழைக்க்ப்பட்டு பின்னர் LVM 3  என்று பெயர் மாற்றப்பட்ட இந்தியாவின் சக்தி மிக்க ராக்கெட் வியாழக்கிழமை காலை விண்வெளியில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. அதன் முகப்பில் வைக்கப்பட்டிருந்த மூன்றரை டன் கூடு பின்னர் திட்டமிட்டபடி தனியே பிரிந்து வங்கக் கடலில் விழுந்தது. அது பின்னர் மீட்கப்பட்டது.

6 comments:

ஊமைக்கனவுகள் said...

இன்றைய இந்துவில் தங்களின் கட்டுரையைப் படித்தேன் அய்யா!
உங்களைப் போன்றவர்கள் இணையத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று உண்மையில் நினைத்தேன்.
இதோ உங்களின்பதிவு!
தங்களைத் தொடர்கிறேன் அய்யா!
த ம 1

Anonymous said...

padhivittamaikku nandri, surendran,guntur

kavignar said...

Always you are giving clear picture sir: It will take still many steps to go to send persons ...thanks vanakkam.

என்.ராமதுரை / N.Ramadurai said...

hanigai
உள்ளபடி பல கட்டங்களைத் தாண்டியாக வேண்டும். முதலாவதாக இந்த ராக்கெட்டானது கிரையோஜெனிக் எஞ்சினைக் கொண்டதாக சோதிக்கப்பட வேண்டும். குறைந்தது மூன்று தடவை தொடர்ந்து வெற்றியைக் காட்ட வேண்டும். நான்கு டன் செயற்கைக்கோள்களை உயரே சுமந்து வெற்றியை நிலை நாட்ட வேண்டும். விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்றுவிக்க வேண்டும். விண்வெளி வீரர்கள் செல்வதற்கான விண்கலம் தயாரிக்கப்பட வேண்டும். முதலில் அதில் நாய்களை வைத்து உயரே செலுத்தி விண்கலத்தை சோதிக்க வேண்டு. பிறகு குரங்குகளை வைத்து அனுப்பி சோதிக்க வேண்டும். பிறகு டம்மி - பொம்மை மனிதர்களை வைத்து அனுப்பி சோதிக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு சோதனை என்று வைத்துக் கொண்டால் இவை எல்லாம் முடிய குறைந்தது பத்து ஆண்டுகள் ஆகி விடும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய அரசு குறைந்த பட்சம் 12 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். எனினும் விண்வெளித் துறையில் நாம் முன்னேறி கொண்டிருக்கிறோம் என்ற அளவில் சந்தோஷப்படலாம்.

Anonymous said...

சார், ஏரியான் ராக்கெட்டை ஏன் ஐரோப்பாவிலிருந்து செலுத்தாமல் எப்போதும் தென்னமெரிக்காவில் பிரெஞ்சு கயானா எடுத்துச் சென்று ஏவுகிறார்கள்? ஐரோப்பாவில் எங்குமே பொருத்தமான இடம் இல்லையா?

சரவணன்

என்.ராமதுரை / N.Ramadurai said...

சரவணன்
பூமி தனது அச்சில் சுழல்வதை நாம் அறிவோம். பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் இந்த சுழற்சி வேகம் மணிக்கு சுமார் 1670 கிலோ மீட்டர் அளவில் உள்ளது. பிரெஞ்சு கயானாவில் கூரூ என்னுமிடத்தில் உள்ள ராக்கெட் தளம் பூமியின் நடுக்கோட்டுக்கு அருகில் உள்ளது.ஆகவே பூமியின் சுழற்சி வேகத்தில் பெரும்பகுதி ராக்கெட்டுக்கு கூடுதலாகக் கிடைக்கிறது. ஐரோப்பாவில் ராக்கெட் தளம் அமைத்தால் இந்த கூடுதல் வேகம் கிடைக்காது.

Post a Comment