Jan 11, 2015

காஸ்மிக் ஆண்டு என்றால் என்ன?

Share Subscribe
நாம் 2014 ஆம் ஆண்டைக் கடந்து  2015 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறோம். பூமியானது தனது பாதையில்  சூரியனை ஒரு முறை சுற்றி முடித்தால் அதை ஓர் ஆண்டு என்று கணக்கு வைத்திருக்கிறோம்.

இது சாதாரண ஆண்டுகளில் 365 நாட்கள். லீப் ஆண்டு என்றால் 366 நாட்கள். என்றும் வைத்துக் கொண்டுள்ளோம்.  உண்மையில் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க பூமியானது 365. 242199  நாட்களை எடுத்துக் கொள்கிறது.

சூரியன் ஏதோ நிலையாக ஒரே இடத்தில் இருப்பதாகவும் பூமி உட்பட கிரகங்கள் சூரியனை சுற்றி வருவதாகவும் சிலர் நினைக்கலாம். அது அப்படி அல்ல. சூரியன் எல்லா கிரகங்களையும் அந்த கிரகங்களை சுற்றுகின்ற துணைக்கோள்களையும் இழுத்துக் கொண்டு நமது அண்டத்தின் (Galaxy)  மையத்தைச் சுற்றி வருகிறது. விண்வெளியில் எதுவுமே நிலையாக ஓரிடத்தில் இருப்பது கிடையாது.

ஆகாய கங்கை எனப்படும் நமது அண்டத்தில் தான் சூரியன் அடங்கியுள்ளது. இந்த அண்டத்தில்  10 ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் அடங்கியுள்ளதாக நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.(சூரியனும் ஒரு நட்சத்திரமே).

 நமது அண்டத்தில் நட்சத்திரங்கள் மட்டுமன்றி நட்சத்திரங்களுக்கு இடையில் வாயு, அண்டவெளித் தூசு ஆகியவையும் அடங்கியுள்ளன.

ஆகாய கங்கை எனப்படும் நமது அண்டம்.
ஓவியர் வரைந்தது  (மேலிருந்து பார்த்தால்).
இப்படத்தில் அம்பு குறியிடப்பட்ட இடத்தில் சூரியன் உள்ளது.
படம்: நன்றி, விக்கிபிடியா
மாட்டு வண்டிச் சக்கரம் ஒன்றைத் தரையில் படுக்க வைத்து மேலிருந்தபடி பார்த்தால் எப்படி இருக்கும்? நமது அண்டம் கிட்டத்தட்ட அந்த மாதிரியில் இருக்கிறது.  நமது சூரியன் கிட்டத்தட்ட நமது அண்டத்தின் விளிம்பில் உள்ளது.  அண்டத்துக்கு மையப் பகுதி உள்ளது. இந்த மையப் பகுதியை சூரியன் தனது பரிவாரங்களுடன் அதி வேகத்தில் சுற்றி வருகிறது. சூரியனின் வேகம் குறித்து வெவ்வேறு மதிப்பீடுகள் உள்ளன. எனினும் சூரியன் மணிக்கு சுமார் 90 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருப்பதாகக் கூறலாம்.

சூரியன் நமது அண்டத்தை ஒரு முறை சுற்றி முடிக்க சுமார் 24 கோடி ஆண்டுகள் ஆவதாக ஒரு மதிப்பீடு கூறுகிறது. சூரியன் இவ்விதம் ஒரு முறை சுற்றி முடிப்பதைத் தான் ”காஸ்மிக் ஆண்டு” (Cosmic Year) என்கிறார்கள். சூரியன் தோன்றி 500 கோடி ஆண்டுகள் ஆவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் அண்டத்தின் மையத்தை சூரியன் இதுவரை சுமார் 20 தடவை சுற்றி முடித்துள்ளது.

16 comments:

Anonymous said...

வணக்கம் சகோதரரே!
இந்நாள் வரையில் சூரியன் நிலையாக ஒரிடைத்திலேயே நிலையாக உள்ளதாகத் தான் நான் நினைத்திருந்தேன், காரணம் அப்படியான படிப்பு சிந்திக்க முடியாத வகையில் இருந்தது.
உங்கள் கட்டுரையை படித்த பின் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
சிந்திக்க தூண்டிய வகையில் உள்ளது உங்கள் எழுத்து.
மிக்க நன்றி!

haipuppy said...

romba nandri

Rajasekar said...

Sir,

Seeing this photo, it looks like things are not rotating around the center. It looks like they are spiraling towards the center which will go and fall on the center by some time. Is it possible that SUN will move towards the center?

Also the Aagaya gangai is also revolving around something?

என்.ராமதுரை / N.Ramadurai said...

Rajasekar
நமது அண்டமான ஆகாய கங்கை தனது அச்சில் சுழன்று கொண்டு தான் இருக்கிறது. நடுவே தண்டு உள்ளது. ஆரம் போன்ற கைகள் உள்ளன. ஆகவே இது sparred spiral galaxy என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆகாயகங்கை வினாடிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

kavignar said...

very clear .thanks sir.

Unknown said...

வணக்கம் சகோதரரே!
இந்நாள் வரையில் சூரியன் நிலையாக ஒரிடைத்திலேயே நிலையாக உள்ளதாகத் தான் நான் நினைத்திருந்தேன், காரணம் அப்படியான படிப்பு சிந்திக்க முடியாத வகையில் இருந்தது.
உங்கள் கட்டுரையை படித்த பின் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
சிந்திக்க தூண்டிய வகையில் உள்ளது உங்கள் எழுத்து.
மிக்க நன்றி!

மாணிக்கராஜ் said...

ஐயா,
Our planet goes round sun in an elliptical manner.

I have read in a space article saying earth maintains the elliptical path but changes the path maintaining the same distance. If that's true our sun also may be doing the same as per physics law!!!. In this case how scientist actually decides the cosmic year...

நன்றி

என்.ராமதுரை / N.Ramadurai said...

மாணிக்கராஜ்
சூரியனை பூமி சுற்றும் பாதையானது சற்றே அதுங்கிய வட்டமாக (சற்றே elliptical) உள்ளது.அந்த அளவில் பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் அவ்வப்போது மாறுபடுகிறது. உதாரணமாக ஜனவரி முதல் வாரத்தில் எப்போதும் --ஒப்புனோக்குகையில்-- சூரியனுக்கு சற்றே அருகில் இருக்கும்.

Unknown said...

வணக்கம் ஐயா,

தகவலுக்கு நன்றி.

விண்வெளியில் உள்ள அனைத்தும் (சூரிய குடும்பம் உட்பட) பால்வீதியின் மையத்திலிருந்து விரிவடைந்து செல்வதாக அறிந்திருக்கின்றேன். ஆனால், அவை மையம் பற்றி சுழல்கிறன என்பது புதுத்தகவல்.

அந்த அடிப்படையில் நோக்கும்போது, எமது அண்டத்தில் இருந்து வெகு தூரத்தில் இருகின்ற Andromeda galaxy போன்றவையும் எமது பால்வீதியின் மையம் பற்றித்தான் சுழல்கின்றனவா?

அல்லது, அண்டங்கள் தங்களுக்குள் சுழன்று கொண்டு, பிரபஞ்சத்தின் ஏதேனும் ஒரு புள்ளியை மையமாகக் கொண்டும் சுழல்கின்றனவா?

நன்றி.

என்.ராமதுரை / N.Ramadurai said...

Carunairuban
ஆகாய கங்கை (Milky Way) அண்டம், அண்ட்ரோமீடா அண்டம் என சுமார் 50 அண்டங்கள் ஒரு குரூப்பாக அமைந்துள்ளன. இது Local Group என அழைக்கப்படுகிறது.இந்த சுமார் 50 அண்டங்களுக்கும் ஒரு பொது மையம் உள்ளதாகக் கருதப்படுகிறது. இவை அதைச் சுற்றி வருவதாகவும் கருதப்படுகிறது. இந்த மையமானது ஆகாய கங்கைக்கும் அண்ட்ரோமீடா அண்டத்துக்கும் இடையே அமைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Unknown said...

நன்றி ஐயா.

Home Queen Tamil said...

வணக்கம் ஐயா,
உங்களின் அனைத்துப் பதிவுகளையும் படித்துளேன், மிக நன்றாக உள்ளது.

எனக்கு சில கேள்விகள் உள்ளது ஐயா,

1. சூரியன் தனைத்தனே சுற்றிக்கொள்கிறத?
2. அண்டத்தின் மையப் பகுதியில் என்ன உள்ளது?
3. பல அண்டங்கள் உள்ளன எனவே அண்டங்கள் ஏதோ ஒன்றை மையமாகக் கொண்ண்டு அதைச் சுற்றி வருகின்றனவா?

என்.ராமதுரை / N.Ramadurai said...

Edward J
சூரியனும் சரி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது. அண்டங்களுக்கெல்லாம் ஒரு மையம் இருப்பதாக நிபுணர்கள் கருதவில்லை.
ஆகாய கங்கை அண்டத்தின் மையத்தில் கருந்துளை எனப்படும் ஒரு Black Hole இருக்கலாம் என்று கருதப்படுகிறது

Home Queen Tamil said...

நன்றி ஐயா

Home Queen Tamil said...

Black hole-ல் காலம் மாறுப்படுகின்றது என்கிறார்கள். அங்கு நம்மால் செல்ல முடியாது என்று எனக்குத் தெரியும், உதாரணத்திற்காக அங்கு நாம் 5 ஆண்டு காலம் இருந்தால் பூமியில் 10 ஆண்டு காலம் கடந்திருக்கும் என்கிறார்கள், இதைப் பற்றிய விளக்கம் ஐயா?

என்.ராமதுரை / N.Ramadurai said...

Edward J
இதற்கு time dilation என்று பெயர். இதற்கு மிக நீண்ட விளக்கம் தேவை. ஆகவே அதை இங்கு விவரிக்க இயலாது. தவிர, Black hole பற்றி அறிவியல் அடிப்படையிலான கற்பனை சமாச்சாரங்கள் மிக நிறைய உள்ளன. ஒரு சிலர் Black hole பற்றி புத்தகங்கள் எழுதியே நிறைய சம்பாதித்துள்ளனர்.

Post a Comment