Jun 9, 2015

மங்கள்யானின் இரண்டு வார மவுனம்

Share Subscribe
செவ்வாய் கிரகத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும் மங்கள்யான் விண்கலத்துடன் இந்த மாதம் 8 ஆம் தேதியிலிருந்து 22 ஆம் தேதி வரை தொடர்பு கொள்ள இயலாது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. அது ஏன்?

பூமியிலிருந்து பார்க்கும் போது மங்கள்யான் சூரியனுக்கு நேர் பின்னால் இருக்கும் என்பதே அதற்குக் காரணம். கீழே உள்ள படத்தைப் பார்த்தால் புரியும்.
1. சூரியன். 2. பூமி. 3 செவ்வாய் ( இப்படத்தில் புதன்,
வெள்ளி ஆகிய கிரகங்களின் சுற்றுப்பாதைகள் காட்டப்படவில்லை)
அதாவது செவ்வாய், சூரியன், பூமி ஆகியவை ஒரே நேர் கோட்டில் உள்ளன. செவ்வாயைச் சுற்றுகின்ற மங்கள்யானிலிருந்து பூமிக்கு சிக்னல்கள் வருவதாக இருந்தாலும் சரி, பூமியிலிருந்து நாம் மங்கள்யானுக்கு சிக்னல்களை அனுப்புவதாக இருந்தாலும் சரி, அவை  நேர்கோட்டில் தான் செல்லும்.

சிக்னல்கள் அவ்விதம் செல்லும் போது  பிரும்மாண்டமான சைஸில் உள்ள சூரியன் அந்த சிக்னல்களைத் தடுத்து விடும். அல்லது சிக்னல்கள் சூரியனை மிக சமீபமாகக் கடந்து சென்றாக வேண்டும். எப்படியாக இருந்தாலும் பிரச்சினைதான். சிக்னல்களோ பலவீனமானவை.சூரியனோ பயங்கர சக்தி கொண்டது.

 சிக்னல்கள் சூரியனை மிக சமீபமாகக் கடந்து செல்லும் போது அவை சிதைக்கப்பட்டு விடும். அந்த அளவில் மங்கள்யானுக்கு இஸ்ரோ அனுப்பும் சிக்னல்கள் உருப்படியாக மங்கள்யானுக்குப் போய்ச் சேராது. மங்கள்யானிலிருந்து வரும் சிக்னல்களின் கதியும் அதே தான். ஆகவே மங்கள்யானுடன் தொடர்பு கொள்ள மேற்படி கால கட்டத்தில் இஸ்ரோ முயற்சி மேற்கொள்ளாது.

 எனினும் மங்கள்யானில் உள்ள கம்ப்யூட்டரில் ஏற்கெனவே ஆணைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பூமியிலிருந்து ஆணைகள் பிறப்பிக்க வேண்டிய அவசியமின்றி மங்கள்யான் பிரச்சினையின்றித் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
மங்கள்யான் விண்கலம்
இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். பூமி, செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களுமே சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்த இரண்டில் பூமியானது செவ்வாயை விட அதிக வேகத்தில் செல்வதாகும்.

ஆகவே ஜூன் 22 ஆம் தேதிக்குப் பின்னர் சிக்னல்கள் சூரியனை மிக அருகில் கடந்து செல்கின்ற நிலைமை இராது. ஆகவே அப்போது சிக்னல்களை அனுப்புவதிலும் பெறுவதிலும் பிரச்சினைகள் ஏற்படாது.

இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் 2013 ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தை நோக்கி செலுத்தப்பட்டது. அது 2014 ஆம் ஆண்டு செப்டம்பரில் செவ்வாய் கிரகத்தை அடைந்து அந்த கிரகத்தை சுற்றி வர ஆரம்பித்தது.

செவ்வாய் கிரகத்தை இப்போது மங்கள்யான் மட்டுமன்றி, நாஸாவின் மார்ஸ் ஒடிசி விண்கலம் மார்ஸ் ரிக்கன்னைசன்ஸ்  ஆர்பிட்டர் விண்கலம், மாவென் விண்கலம் ஆகிய மூன்று விண்கலங்களும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலமும் சுற்றி வருகின்றன. இதல்லாமல் செவ்வாய் கிரக நிலப்பரப்பில் நாஸாவின் கியூரியாசிடி நடமாடும் ஆய்வுக்கூடம் செயல்பட்டு வருகிறது. இவை அனைத்துடனும் தொடர்பு கொள்ள இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

சரி, செவ்வாய்க்கு ஆறு விண்வெளி வீரர்களை --ரஷியாவோ அமெரிக்காவோ--அனுப்புவதாக வைத்துக் கொள்வோம். அவர்கள் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் போது இப்படி செவ்வாய் கிரகம் சூரியனுக்கு நேர் பின்னால் இருக்கும் நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? அந்த 15 நாட்களில் அவர்களுக்குப் பிரச்சினை எதுவும் ஏற்பட்டால் அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டியது தான். ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் 15 நாட்களுக்குப் பிறகுதான் தெரிய வரும்.

ஆனால் இப்பிரச்சினைக்கு ஏட்டளவில் ஒரு தீர்வு உள்ளது. வெள்ளி கிரகத்துக்கு அமெரிக்காவோ ரஷியாவோ விண்வெளி வீரர்களுடன் ஒரு விண்கலத்தை அனுப்பியுள்ளதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். எனவே அவ்வித நிலையில் செவ்வாயிலிருந்து வெள்ளி கிரகத்துடன் தொடர்பு கொள்ள முடியும். செவ்வாயில் உள்ளவர்கள் பற்றிய தகவலை வெள்ளியைச் சுற்றுகின்ற விண்கலம் பெற்றுக் கொண்டு அதை பூமிக்கு அனுப்பி வைக்கும். இதெல்லாம் எதிர்காலத்தில் சாத்தியமாகலாம்.

செவ்வாய் கிரகம் 26 மாதங்களுக்கு ஒரு முறை இவ்விதம் சூரியனுக்கு நேர் பின்னால் அமைந்திருக்கும். ஆகவே சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்விதப் பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டிருக்கும்.

செவ்வாய் கிரகம் இப்போது சூரியனுக்கு நேர் பின்னால் இருக்கும் போது பூமிக்கும் செவ்வாய்க்கும் உள்ள தூரம் சுமார் 37 கோடி கிலோ மீட்டர்.(பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம் மிஞ்சிப் போனால் 4 லட்சம் கிலோ மீட்டர்)

6 comments:

SRINIVASAN J said...

சிக்னல்கள் நேர்கோட்டில் தான் செல்லும் என்றால், சுழன்று கொண்டிருக்கும் பூமியிலிருந்தும், அதைப் போலவே சுழன்று கொண்டிருக்கும் செவ்வாய்க்கும்,
தகவல்கள் எவ்வாறு பரிமாறப்படுகின்றன?

எதெனும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே
அதாவது இரு கிரகங்களின் தகவல் தொடர்பு மையங்களும் ஒரே நேர்கோட்டில் உள்ளபோது மட்டுமே தகவல் தொடர்பு சாத்தியமா?

என்.ராமதுரை / N.Ramadurai said...

SRINIVASAN J
சரியான கேள்வி.செவ்வாய் கிரகத்தில் நடமாடிக் கொண்டிருக்கும் கியூரியாசிடி ஆய்வுக் கலம் நேரடியாக பூமிக்குத் தகவல் அனுப்புவதில்லை. கியூரியாசிடி இருக்கிற இடம் மறுபக்கத்துக்குச் சென்று விட்டால் பூமியுடன் தொட்ர்பு சாத்தியமில்லை. ஆகவே அது செவ்வாயைச் சுற்றுகின்ற அமெரிக்க விண்கலத்துக்கு தகவல் அனுப்பும். அந்த விண்கலம் பூமிக்கு தகவல் அனுப்பும்.
நாஸா உலகில் மூன்று இடங்களில் அமெரிக்கா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா -- மிக நுட்பமான தகவல் தொடர்பு கேந்திரங்களை நிறுவி நிர்வகித்து வருகிறது. பூமி தனது அச்சில் சுழல்வதால் இந்த மூன்று கேந்திரங்களில் ஏதேனும் ஒன்று செவ்வாயைப் பார்த்தப்டி இருக்கும். இப்படியான ஏற்பாடுகள் மூலம் செவ்வாயுடன் தகவல் தொடர்பு சாத்தியாகிறது.

என்.ராமதுரை / N.Ramadurai said...

SRINIVASAN J
ஒரு விஷய்ம் சொல்ல விட்டுப் போச்சு. செவ்வாயை இந்தியாவின் மங்கள்யான் உட்பட நான்கு விண்கல்ங்கள் சுற்றி வருகின்றன. இவை இப்படி செவ்வாயை சுற்றும் போது அவை செவ்வாயின் மறுபுறத்துக்கு சென்று விட்டால் தகவல் தொடர்பு பாதிக்கப்படுமே என்று கேட்கலாம்.
ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை.இந்த நான்குமே செவ்வாயை அதன் வயிற்றுப் பகுதிக்கு மேலாகச் சுற்றி வருவது கிடையாது. இவை செவ்வாயை மேலும் கீழுமாகச் சுற்றி வருகின்றன. அந்த வகையில் அவை எப்போதும் பூமியைப் பார்த்த வண்ண்ம் அமைந்திருக்கும். ஆகவே பூமிக்கும் அந்த விண்கலங்களுக்கும் (இப்போது ஏற்பட்டுள்ளது போன்ற நிலைமை தவிர,) எப்போதும் தகவல் தொடர்பு சாத்தியம்.

என்.ராமதுரை / N.Ramadurai said...

SRINIVASAN J
ஒரு விஷய்ம் சொல்ல விட்டுப் போச்சு. செவ்வாயை இந்தியாவின் மங்கள்யான் உட்பட நான்கு விண்கல்ங்கள் சுற்றி வருகின்றன. இவை இப்படி செவ்வாயை சுற்றும் போது அவை செவ்வாயின் மறுபுறத்துக்கு சென்று விட்டால் தகவல் தொடர்பு பாதிக்கப்படுமே என்று கேட்கலாம்.
ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை.இந்த நான்குமே செவ்வாயை அதன் வயிற்றுப் பகுதிக்கு மேலாகச் சுற்றி வருவது கிடையாது. இவை செவ்வாயை மேலும் கீழுமாகச் சுற்றி வருகின்றன. அந்த வகையில் அவை எப்போதும் பூமியைப் பார்த்த வண்ண்ம் அமைந்திருக்கும். ஆகவே பூமிக்கும் அந்த விண்கலங்களுக்கும் (இப்போது ஏற்பட்டுள்ளது போன்ற நிலைமை தவிர,) எப்போதும் தகவல் தொடர்பு சாத்தியம்.

என்.ராமதுரை / N.Ramadurai said...

SRINIVASAN J
ஒரு விஷய்ம் சொல்ல விட்டுப் போச்சு. செவ்வாயை இந்தியாவின் மங்கள்யான் உட்பட ஐந்து விண்கல்ங்கள் சுற்றி வருகின்றன. இவை இப்படி செவ்வாயை சுற்றும் போது அவை செவ்வாயின் மறுபுறத்துக்கு சென்று விட்டால் தகவல் தொடர்பு பாதிக்கப்படுமே என்று கேட்கலாம்.
ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை.இந்த ஐந்துமே செவ்வாயை அதன் வயிற்றுப் பகுதிக்கு மேலாகச் சுற்றி


SRINIVASAN J said...

பிரமிப்பாக இருக்கிறது! விளக்கத்திற்கு நன்றி ஐயா

Post a Comment