Dec 16, 2012

பூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்

Share Subscribe
பூமி நிச்சயம் அழியப் போவதில்லை.

 உலகம் அழியப் போகிறது. பூமியே அழியப் போகிறது என்பதாகப் பல ஊடங்கங்கள் மூலம் பரப்பப்படுகிற வதந்திகளை நம்பாதீர்கள். எல்லாமே கட்டுக்கதை

பூமி அழியப் போகிற்து என்று வதந்தி கிளப்புவோர் தங்களது கூற்றுக்கு ஆத்ரவாகக் கூறுகின்ற ”ஆதாரங்களுக்கு” எந்த அறிவியல் அடிப்படையும்  இல்லை.

உலகம் அழியப் போவதாகப் பல ஆண்டுகளாக அவ்வப்போது கிளம்பி வந்துள்ள அனைத்து வதந்திகளும் பொய்யாகிப் போயின. இப்போதைய வதந்தியும் அப்படி பொய்யாகிப் போகிற வதந்தியே.

தமிழகத்தில் ஒரு குக்கிராமத்தில்அம்மன் கோயிலில் திடீரென விளக்கு அணைந்து விட்டதால ஆண்களுக்கு ஆகாது என்று வதந்தி கிளம்புகிறது. மூன்று நாட்கள் எல்லோர் வீடுகளிலும் பெண்கள்  வீட்டு வாசலில் விளக்கு ஏற்றி வைக்கிறாரக்ள். இப்படியான செய்தி அடிக்கடி தமிழ்ப் பத்திரிகைகளில் வருகிறது. இந்தச் செய்தியைப் படிக்கிறவர்க்ள் இப்படியும் மூட நம்பிக்கையா என வியக்கின்றனர்.

ஆனால் பூமி அழியப் போவதாக இண்டர்னெட்டில் செய்தி வெளியானால் யாரும் அதை மூட நம்பிக்கை என புறக்கணிப்பதில்லை. ஏனெனில் இண்டர்னெட்டில வந்தால் அதற்கு தனி மரியாதை. அது ஆங்கிலத்தில் இருப்பதால் தனி அந்தஸ்து. அமெரிக்காவிலிருந்து வருவதால் அது மதிக்கப்பட வேண்டிய ஒன்று என்று கருதுகிறார்கள்.

உலகம் அழியப் போவதாகக் கிளப்பி விடப்பட்டுள்ள செய்தி இப்படியாகத் தான் சீரியஸாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதை யாரும் ஒதுக்கித் த்ள்ளுவதில்லை.இந்த வதந்திகளுக்கு அறிவியல் சாயம் பூசப்பட்டுள்ளதும் ஒரு காரணமாகும்.

மாயன் காலண்டரில் பூமி அழியும் என்று சொல்லியிருக்கிறதாம். உலகில் மாயன் காலண்டர் அல்ல. வெவ்வேறான பல காலண்டர்களும் இருந்து வந்துள்ள்ன. .பாபிலோனியர், எகிப்தியர், சீனர்கள், பண்டைக்கால இந்தியர்கள் என ஒவ்வொருவரும் தனித்தனி காலண்டர்களைப் பின்பற்றினர். 2012 ஆம் ஆண்டில் பூமி அழியப் போவதாக ஒருமுகமாக  எல்லா காலண்டர்களிலும் கூறப்பட்டுள்ளதா? அப்படி ஒன்றுமில்லை.

இந்தியாவில் பின்பற்றப்பட்டு வந்துள்ள ஹிந்து காலண்டரின்படி கலியுகம் முடியவே இன்னும் 4,26,887 ஆண்டுகள் உள்ளன. கலியுகம் முடிந்த பின்னர் பூமி அழியப் போவதாக சொல்லப்படவில்லை. கலியுகம்முடிந்த பின்னர் மறுபடி சத்திய யுகம், திரேதா யுகம், துவாபர யுகங்கள் வரிசையாக  வரும் என்று தான் கூறப்பட்டுள்ளது.  எல்லாக் காலண்டர்களிலும் இப்படித்தான்.இது ஒவ்வோர் ஆண்டும்  டிசம்பர் மாதம் முடிந்ததும் பழையபடி ஜனவரி மாதம் வருவதைப் போலத்தான்.

தங்களைச் சுற்றி உள்ளவர்கள், அத்துடன்  தங்களைப் பின்பற்றுபவர்கள் ஆகியோர் மீது தங்கள் பிடி இருக்க வேண்டும் என்பதற்காகக்  கடந்த காலத்தில் காட்டுவாசிகளின் தலைவர்கள், பூசாரிகள், மத குருமார்கள், ராஜ குருக்கள் போன்றோர்  சந்திர கிரகணம், சூரிய கிரகணம், வால் நட்சத்திரத்தின் தோற்றம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு மக்களைப் பயமுறுத்தி தங்களுக்கு அடிபணிந்து நடக்கும்படி செய்து வந்தனார்.. மக்களின் அறியாமை இதற்கு வசதியாக இருந்தது

.
ஐரோப்பாவில் 1860 ஆண்டில் பெரிய வால் நட்சத்திரம் தோன்றிய போது விஷயமறியாத மக்கள் உலகம் அழியப் போகிறது என்று பீதியில் ஆழ்ந்தனர். பலர் தங்கள்து சொத்துக்களை மடங்களுக்கு எழுதி வைத்தனர்.

இப்போது அறிவியல் முன்னேற்றம் காரணமாக மக்களை எளிதில் ஏமாற்றி விட முடியாது. ஆகவே மக்களை நம்ப வைப்பதற்குப் புதிதாக ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும். மாயன் காலண்டர் பற்றிய “ கண்டுபிடிப்பு” அப்படிப்பட்டதே.

 உலகம் எப்படி அழியப் போகிறதாம்?  நிபிரு என்ற ஒரு கிரகம்  பூமி மீது மோதப் போகிறதாம். சொல்லப் போனால் நிபிரு என்ற கிரகமே கிடையாது. அது  எங்கிருந்தோ வந்து மோதவும் வாய்ப்பு கிடையாது
.
பூமியை சந்திரன் சுற்றுகிறது. பூமியும் மற்றும் எட்டு கிரகங்களும் சூரியனை சுற்றுகின்றன. இது பல நூறு கோடி ஆண்டுகளாக இயற்கை நியதிகளின்படி நடைபெற்று வருவதாகும். சூரியன்.இந்த கிரகங்களை இழுத்துக் கொண்டு  நமது அண்டத்தின் ( Galaxy) மையத்தைச் சுற்றி வருகிறது. இதுவும் பல கோடி ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது.

சூரிய மண்டலத்துக்குள்ளாகப்  பறக்கும் பாறைகள் என்று சொல்லத் தக்க அஸ்டிராய்டுகள் தங்களது பாதைகளில் சுற்றி வருகின்றன.பூமிக்கு அருகே வந்து செல்கின்ற அஸ்டிராய்டுகள் உண்டு. விஞ்ஞானிகள்  இவற்றின் பட்டியலை ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ளனர். ஐந்து மீட்டர், பத்து மீட்டர் நீளம் கொண்ட பாறைகளின் சுற்றுப்பாதைகளும் அளந்து பதிவு செய்யப்பட்டுள்ளன

 உதாரணமாக டிசம்பர் 14 ஆம் தேதியன்று விஞ்ஞானிகள் எதிர்பார்த்தபடி ஐந்து மீட்டர் நீளமுள்ள பாறை ஒன்று பூமியைக் கடந்து சென்றது. விபரீதமாக எதுவும் நிகழ்ந்து விடவில்லை. இவை அனைத்தும் டெலஸ்கோப்புகள், ராடார்கள், பூமியைச் சுற்றும் செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன

எந்த பறக்கும் பாறை என்றைய தினம் பூமியைக் கடந்து செல்லும் என்பது பற்றிய விவரத்தை விஞ்ஞானிகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.விஞ்ஞானிகள் இப்படியான விஷயங்களை மூடி மறைப்பது இல்லை.

ஒரு வால் நட்சத்திரத்தின் தலையின் சைஸ் பத்து அல்லது இருபது கிலோ மீட்டர்களே. ஒரு வால் நட்சத்திரம் சில லட்சம கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போதே அதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விடுகிறார்கள்.

ஆகவே நிபிரு என்ற கிரகம் பூமியைத் தாக்கப் போகிறது என்றால் இத்தனை நேரத்துக்கு அது பூமியை நெருங்கியிருக்க வேண்டும்.அப்படியானால் அது டெலஸ்கோப், ராடார், செயற்கைக்கோள் ஆகியவற்றில் தென்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இதுவரை தட்டுப்படவில்லை.

நிபிரு பூமியைப் போல நான்கு மடங்கு பெரியதாம். அப்படி  என்றால் அது பல ஆயிரம் கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டதாக இருக்க வேண்டும்.ஐந்து மீட்டர் பறக்கும் பாறையே விஞ்ஞானிகளின் கருவிகளில் சிக்கும் போது அந்த அளவுள்ள நிபிரு  கிரகம் இது வரை ஏன்  தட்டுப்படவில்லை? நிபிரு கற்பனையான கிரகம் என்பதால் தான் அது தட்டுப்படவில்லை.

அமாவாசை இரவில் கருப்புப் போர்வை போர்த்திக் கொண்டு சுவர் ஏறிக் குதிக்கின்ற ஒரு திருடன் போல நிபிரு கிரகம் பூமியை நெருங்கித் தாக்க வாய்ப்பே இல்லை

பூமிக்கு வேறு வகையில் ஆபத்து ஏற்படும் என்றும் விஷமிகள் கதை கட்டி விட்டுள்ளனர். சூரியனில் பயங்கர சீற்றம் ஏற்பட்டு சூரியனிலிருந்து நெருப்பு ஜுவாலைகள் பூமியைத் தாக்கி பூமியை அழிக்கப் போவதாக பீதி கிளப்பிவிட்டு ள்ளனர். இதுவும் அறிவியல் சாயம் பூசப்பட்ட கற்பனையே.

சூரியனில் இப்போது அடிக்கடி சீற்றம் ஏற்படுகிறது என்பது உண்மையே. ப்தினோரு ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் கரும்புள்ளிகள் (Sunspots) அதிகபட்சமாக இருக்கும்.இப்போது அப்படியான நிலைமை உள்ளது. ஆகவே தான் சூரியனில் சீற்றம் காணப்படுகிறது

இது பல கோடி ஆண்டுகளாக நிகழ்ந்து வருவதாகும்.சூரியனில் சீற்றம் ஏற்படும் போது சூரியனிலிருந்து ஆற்றல் மிக்க துகள்கள் அடங்கிய மொத்தை தூக்கி எறியப்படும். இது Coronal Mass Ejection  (CME) எனப்படுவதாகும்.

கடந்த பல மாதங்களில் பல CME க்கள் தோன்றியுள்ளன. இவற்றிலிருந்து   பூமியின் காந்த மண்டலம் நம்மை பாதுகாக்கிறது. தவிர, இந்த CME க்களால் பூமியைச் சுற்றுகின்ற செயற்கைக்கோள்கள், பூமியில் உள்ள மின் இணைப்பு கிரிட்டுகள்,  நிலத்துக்கு  அடியில் உள்ள எண்ணெய், மற்றும் வாயுக் குழாய்களுக்கு சேதம் ஏற்படுமே தவிர, மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை.

சூரியனில் கரும்புள்ளிகள் 2013 ல் உச்சத்தை எட்டிவிட்டுப் பிறகு குறைய ஆரம்பிக்கும். முன்னர் 1980 ஆம் ஆண்டில் சூரியப் புள்ளிகள் மிக அதிகமாகவே இருந்தன. 2000 ஆம் ஆண்டில் அதை விடக் குறைவாக இருந்தது. இப்போது அதை விடவும் குறைவாக உள்ளது.2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு சூரியனில் கரும்புள்ளிகள் குறைய ஆரம்பிக்கும்.

 சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரிப்பதும் குறைவதும் வழக்கமான ஒன்று. கடந்த காலத்தில் சூரியனில் கரும்புள்ளிகள் அதிகமாக இருந்த ஆண்டுகளில் விபரீதம் எதுவும் ஏற்ப்ட்டுவிடவில்லை. ஆகவே சூரியனிலிருந்து நெருப்பு ஜுவாலை பூமியை வந்து தாக்கலாம் என்பது வெறும் கற்பனையே.

பூமி அழியப் போகிற்து. மக்கள் அழியப் போகிறார்கள் என்று பீதி கிளப்பப்படுவது இது முதல் தடவை அல்ல. 1806, 1843, 1891, 1910, 1982, 1997, 1999,  என கடந்த பல ஆண்டுகளில் இப்படி பீதி கிளப்பப்பட்டது. ஆனால்  எதுவும் நிகழ்ந்து விடவில்லை. இந்தத் தடவை இந்த பீதி பரவலாகப் பரவியுள்ளது. இண்டர்னெட், பேஸ்புக் எனற சாதனங்கள் மூலம் எளிதில் எதையும் ப்ரப்ப முடியும் என்பதே இதற்குக் காரணம்.

 இப்படியான பீதி பரவும் போது பல சமூக விரோத செயல்கள் தோன்றும். மன உறுதியற்றவர்கள் தற்கொலை எண்ணத்தைப் பெறுவர். சில நாட்கள் தானே உயிரோடு இருக்கப் போகிறோம், அதற்குள்ளாக எல்லாவற்றையும் அனுபவித்து விட வேண்டும் என முறைகேடான செயல்களுக்கு தூண்டப்படுவோர் இருப்பர்.

சமூகத்தில் சீர்குலைவை ஏற்படுத்தும் வகையில் பீதி கிளப்புவது என்பது கிரிமினல் குற்றமாகும். இதில் ஈடுபடுவோரைக் கைது செய்து சிறையில் அடைக்க உலகில் எல்லா நாடுகளிலும் அரசுக்கு அதிக்ர்ரம் உண்டு.

சீனாவில் ஒரு நகரில் “உலகம் அழியப் போகிறது” என்பதாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்துச் சென்றவர் மற்றும் நோட்டீஸ் வினியோகித்துச் சென்றவர் உடபட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலைமை முற்றினால் மேலும் பல நாடுகளிலும் இவ்வித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.

ஆகவே உலகம் அழியப் போவதாகக் கூறும் பீதியைப் பரப்புவதில் நீங்கள் ஒருவராக இருக்க முற்படாமல் இருப்பது நல்லது.

சீனாவிலும் ரஷியாவிலும் பெரும் பீதி நிலவுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.அமெரிக்காவில் நிலத்துக்கு அடியில் உள்ள பாதாளப் புகலிடங்களில் இடம் பிடிக்கப் பலரும் ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் போய் தங்கினால் அழிவிலிருந்து தப்பிவிடலாம் என்ற வதந்தி கிள்ம்பி பல்ரும் அந்த கிராமத்தை நோக்க்ப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.அதிகாரிகள் இதைச் சமாளிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

நல்ல வேளையாக இந்தியாவில் பெரும் பீதி எதுவும் இல்லை. சென்னை செண்டிரல், அல்லது எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 21 ஆம் தேதி கிளம்பும் ரயில் வண்டிகளில் இடம் இருப்பது சந்தேகமே. அன்றைய தினம் சென்னையில் உள்ள சினிமா தியேட்டர்களில் நீங்கள் விரும்பும் படத்தைக் காண டிக்கெட் கிடைப்பது எளிதாக இராது. சென்னை விமான நிலையத்துக்குப் போனால் வழக்கம் போல கூட்டம் காணப்படும். சாதாரண பொது மக்களுக்கு பூமி அழியும் என்று சொல்லப்படுகிற வதந்தி பற்றியே தெரிந்திராது. அல்லது அதை அவர்கள் பொருட்படுத்தாதவாகள்.

பூமி அழிந்து விடும் என்று சொல்லப்படுகிற வதந்தி பற்றி அதே வேலையாக இண்டர்னெட்டைக் குடைந்து கொண்டிருப்பவர்க்ள் பலரிடம் ஒரு வேளை பீதி  நிலவலாம்.

.எந்த ஆபத்தும் ஏற்படப் போவதில்லை என  நாஸா உட்பட யார்  சொன்னாலும் நம்ப மறுக்கிறவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அவர்களை விட்டு விடுங்கள். நீங்கள் தெளிவாக இருங்கள். வருகிற  டிசம்பர் 21 ஆம் தேதி மற்ற நாட்களைப் போல ஒரு நாள். அவ்வளவு தான். உலகம் அழியாது

(Update: ஜ்னவரி முதல் தேதி 2013--  பூமி நிச்சயம் அழியப் போவதில்லை என்று எழுதி பத்து நாட்கள் கழிந்து விட்டன. ஆனால் இது தொடர்பாக பீதி கிளப்பியவர்கள் தங்களது ஜோசியம் ஏன் பொய்த்தது என்பதற்கான நொண்டிச் சாக்கு எதையும் இதுவரை கூறவில்லை.
     எனினும் இப்படி ஒரு பீதி மறுபடி கிளம்பாது என்று சொல்லி விட முடியாது. இப்போது கிளப்பி விடப்ப்ட்ட பீதி பற்றிய விவகாரம் எளிதில் மறக்கப்பட்டு விடும். ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடி இது மாதிரியான புரளி மீண்டும் கிளம்பும். ஏமாறுவதற்கு ஆட்கள் இருக்கின்ற வரையில் ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பர்)

 (குறிப்பு:  இந்த வலைப் பதிவுக்கு Link  கொடுக்க என்னால் அனுமதிக்கப்பட்டுள்ள ஓரிரு இணைய தளங்கள், வலைப் பதிவுகள் தவிர, வேறு எவரும் கண்டிப்பாக இந்த வலைப்பதிவில் வெளியாகும் கட்டுரைகளை அப்படியே காப்பியடித்து அல்லது அவற்றின் ஒரு பகுதியைத் தங்களது இணைய தள்த்தில்  அல்லது வலைப் பதிவில் போடலாகாது என்று எச்சரிக்கப்படுகிறார்கள்)

19 comments:

நண்பன் said...

உண்மைதான் கணிப்பு காட்டி சொல்ல வேண்டிய விஷயம் இல்லை .விஞ்ஞானிகள் சொல்ல வேண்டிய விஷயம் இது .

ABUBAKKAR K M said...

அய்யா வணக்கம் !
சரியான நேரத்தில் தேவையான பதிவு. மிக்க நன்றி.
இதற்கு மேலும் இன்னமும் நம்புவதும் தவறு , வதந்திகளை பரப்புவதும் தவறு மட்டுமல்ல - குற்றமும் ஆகும்.
>> கோ.மீ.அபுபக்கர்
கல்லிடைக்குறிச்சி.

poornam said...

விரிவான தகவல்களுக்கு நன்றி

K. Srinivasan said...

அருமையான பதிவு. இதைப்பற்றி நானும் நேற்று திரு டி. கே. ஹரி அவர்களிடம் தொலைபேசி மூலம் ஒரு பேட்டி எடுத்தேன். அவர்கள் அறிவியல் பூர்வமாக இதைப்பற்றி பேசியுள்ளார். மயன் காலண்டரில் ஒரு யுகம் வருகிற டிசம்பர் 21ம் தேதி முடிகிறது. அடுத்த யுகம் அடுத்தநாள் துவங்குகிறது. இதை விளக்கியுள்ளார். அவரது பேட்டியை யூடியூபில் கேட்கலாம்.

http://www.youtube.com/watch?v=NZxchXlIobA

ARUN said...

Ulagam ippothum azhinthu konduthan irukkirathu. intha ulagathi iyarkai azhikkathu. manithan than intha ulagai azhivu pathaikku kondu selkiran. ithai ponra vathanthikalai parapugiravanum athil oruvan.

Sudhakar Shanmugam said...

மிகத்தெளிவான உதாரணங்களுடன் கூடிய விளக்கம்

நன்றி ஐயா

சுதாகர்

என்.ராமதுரை / N.Ramadurai said...

ARUN
நீங்கள் சொல்வதும் ஒரு வகையில் சரிதான். கடந்த சுமார் 160 ஆண்டுகளாகக் காற்று மண்டலத்தில் மேலும் மேலும் கார்பனை சேர்த்துக் கொண்டிருக்கிறோம். நிலம் நீர் ஆகியவற்றையும் கெடுத்துக் கொண்டிருக்கிறோம். நாடுகளின் ஒற்றுமையின்மையால் பெரிய கார்ப்பொரேட்டுகளின் பணப் பேராசையால் இவை நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.எனினும் இவை அனைத்தையும் சீர் செய்ய இயலும்.
ஆனால் ஏதோ ஒரு கிரகம் பூமியைத் தாக்கி அழிக்கப்போகிறது என்று பீதி கிளப்புவது ஒரு குற்றமே.இவ்விதம் பீதி கிளப்புவோரின் முகத்திரையை அறிவியல் உலகம் கிழித்தெறிய வேண்டும்

என்.ராமதுரை / N.Ramadurai said...

kassali
மாயன் காலண்டர் என்பது நீங்கள் நினைக்கிற மாதிரி சுவரில் மாட்டுகின்ற காலண்டர் அல்ல.மாயன்கள் உருவாக்கிய காலக்கணக்கைத் தான் காலண்டர் என்கிறார்கள்
நிபிரு பற்றிய புருடாவை உருவாக்கியதில் பலருக்கும் பங்கு உண்டு.

என்.ராமதுரை / N.Ramadurai said...

ABUBAKKAR K M
தாங்கள் கூறுவது சரியே. மக்களிடையே பீதி கிளப்புவது ஒரு கிரிமினல் குற்றமே.அப்பாவி மக்களுக்குப் பல விஷயங்கள் புரியாது. பூமி அழியப் போகிறது என்று அவர்களிடையே பீதியைப் பரப்பினால் எங்கு தப்பி ஓடுவது என்று தான் முதலில் சிந்திப்பார்கள். அன்றாட வாழ்க்கைப் பிரச்சினையே அவர்களுக்குப் பெரிதாக உள்ள போது இந்த பீதியும் சேர்ந்து கொண்டால் என்ன தான் செய்வார்கள்

என்.ராமதுரை / N.Ramadurai said...

K. Srinivasan
தாங்கள் எடுத்த பேட்டியைக் கேட்டேன். மிகச் சுவையாக இருந்தது.மயன்கள் பற்றி அவர் கூறிய கருத்துகள் புதிய கோணத்தில் இருந்தன. உலகம் அழியப் போகிறது என்ற பீதியைப் போக்க அவர் அதிக முக்கியத்துவம் அளித்திருக்கலாம்

Anonymous said...

அருமையான தகவல்கள் பல. நன்றி ஐயா. ஆனால் உலகத்தில் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு பேரழிவு ஏற்படும் (டைனோசார்கள் அழிவு போல) அதற்கு ஒரு கால சுழற்சி முறை இருக்கிறது என்று கூறப்படுகிறதே. அதை பற்றி தங்களின் கருத்து என்ன

கிருஷ்

Unknown said...

ok

Unknown said...

நல்ல தகவல் நன்றி

என்.ராமதுரை / N.Ramadurai said...

Anonymous
முதலாவதாக பேரழிவு ஏற்பட ஒரு கால சுழற்சி உள்ள்தாக நிரூபிக்கப்படவில்லை.
இரண்டாவதாக டைனோசார்கள் ஒரே நாளில் அழிந்து விடவில்லை.பூமிக்கு சூரியனிடமிருந்து வெப்பம் கிடைக்காமல போய் தாவர இனம் அழிந்தது.இப்படி பல விளைவுகள் ஏற்பட்டன. டைனோசார் விலங்குகளால் பாதக விளைவுகளை சமாளிக்க இயலவில்லை. ஆனால் மனிதன் தனது மதி நுட்பத்தால் பாதக நிலைமைகளை சமாளிக்கும் திறன படைத்தவன்.ஆகவே எதிர்காலத்தில் ஏதோ விபரீத நிலைமை எற்பட்டாலும் மனிதனால் ஓரளவு சமாளிக்க முடியலாம். அந்த வகையில் பூமியில் மனித இனம பூண்டோடி அழிந்து விடாமல் ஆங்காங்கு சில பகுதிகளில் மனித இனம் தப்பிப் பிழைக்கலாம்.
டைனோசார் காலத்தில் தாக்கியது போல பெரிய விண்கல பூமியைத் தாக்குவதற்கு முன்னதாக மனிதன் எதிர்கொண்டு சென்று நடுவானிலேயே அந்த விண்கல்லை அழிந்து பேரழிவைத் தடுத்து நிறுத்த முடியலாம்.அறிவியல் தொழில் நுட்பம் மூலம பலவற்றைச் சாதிக்க முடியும்.
இவை ஒரு புறம் இருக்க இப்போதைக்கு மனித குலத்துக்கு ஆபத்து ஏதும் இல்லை

devraj said...

very good post sir thankyou......

Anonymous said...

மதிப்பிற்குரிய ஐயா ராமதுரை அவர்களே !

உலகம் டிசம்பர் ஆம் தேதி அழியாது என்னும் உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். அதற்காக உலகம் அழியவே அழியாது என்று சொல்ல முடியுமா ? ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற விஞ்ஞானிகள் இந்த உலகம் நிச்சயம் ஒருநாள் மொத்தமாக அழியும் என்று கூறுகிறார்களே.... அதை பற்றி கொஞ்சம் விரிவாக கட்டுரை எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி...!

என்.ராமதுரை / N.Ramadurai said...

arafath
உலகின் பிரபல விஞ்ஞானிகளில் ஸ்டீபன் ஹாக்கிங்கும் ஒருவர். எல்லாமே அவர் சொன்னபடி தான் நடக்கும் என்றும் சொல்ல முடியாது.ஏட்டளவில் இப்படி ஏற்படலாம் அப்படி ஏற்படலாம் என்று எவர் வேண்டுமானாலும் கூறலாம்.
உதாரணமாக இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் டோபா எரிமலை சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரமாக வெடித்த போது பூமியில் 10 ஆயிரம் பேர் தான் மிஞ்சினராம். ஆகவே டோபா எரிமலை வெடித்தால் பூமியில் உயிரினமே அழிந்து போகலாம் என்று கூற முடியும். ஆகவே ஏட்டளவில் பார்த்தால் உலகம் அழிய எவ்வள்வோ காரணங்கள் உள்ளதாகக் கூற முடியும்.
ஆனால் ஏதேதோ விஷயங்களை ஒன்றோடு ஒன்று முடிச்சுப் போட்டு அறிவியல் ரீதியில் எந்த அடிப்படையும் இல்லாமல் டிசம்பர் 21 ஆம் தேதி உலகம் அழியும் என்று கூறுவது நிச்சயம் முட்டாள்தனமானதே

Salahudeen said...

இன்று 22 தேதி உலகம் அழியவில்லை உலகை அழிக்க மாயன்,நிபுரு எல்லாம் தேவையில்லை நாமே நமது பேராசையினால் இயற்கை வளங்களை சுரண்டி,நீர் நிலைகளை எல்லாம் பிளாட் போட்டு,மரங்களை வெட்டி கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டு இருக்கிறோம்.அய்யா உங்களுக்கு ஒரு வேண்டுகோள் சுற்று சூழல் விழிப்புணர்வு பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும்.நன்றி

Anonymous said...

இந்த முகவரி நல்ல தெளிவை தரும் .அறிவியலை சுவாசிக்காத மனிதனில்லை .எனவே அறிவியலை படிப்போம் வதந்திகளை அவமதிப்போம் . நன்றி ராம்.

Post a Comment