Jul 20, 2013

உத்தரகண்டில் நிகழ்ந்த இமாலயத் தவறு

Share Subscribe

உத்தரகண்ட் மானிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட விபரீதத்துக்கு ‘இமாலய சுனாமிஎன்று யார் பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. உடனே டெலிவிஷன் சேனல்களும் பத்திரிகைகளும் விவரம் தெரியாமல் கெட்டியாக அப்பெயரைப் பற்றிக் கொண்டன. இப்பெயரை வைத்தவர் அதி கெட்டிக்காரராக இருக்க வேண்டும். ஏனெனில் இப்பெய்ரானது இப்போது நிகழ்ந்துள்ள துய்ரம் சுனாமியைப் போல தடுக்க, முடியாத தவிர்க்க முடியாத இயற்கை விபரீதம் என்கின்ற பொருளைத் தருகிறது.. அத்தனை துயரங்களுக்கும் இயற்கை மீது பழி போடுகிறது. இது கொஞ்சமும் உண்மையல்ல.
கடும் சேதத்துக்குள்ளான கேதார்நாத் கோயில்
 சொல்லப்போனால் கடந்த 50 அல்லது 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த வந்துள்ள காடு அழிப்பு, 90 சதவிகிதத்துக்கும் மேலாக மலைப் பிரதேசமாக உள்ள உத்தரகண்டில் ஏற்பட்டு வருகிற  நில்ச்சரிவு, நில அரிப்பு போன்ற ஆபத்துகளைக் கண்டு கொள்ளாமை, ஆண்டு தோறும் உத்த்ரகண்டில் உள்ள யாத்திரைத் தலங்களுக்கு வருகின்ற ஆயிரம் ஆயிரம் பயணிகளின் பாதுகாப்பு பற்றி அவ்வளவாக அலட்டிக்கொள்ளாமை,  பெருமழை, வெள்ளம் ஆகியவை பற்றி முன்னெச்சரிக்கை அளிக்க்த் தகுந்த ஏற்பாடு இல்லாமை போன்று தொடர்ந்து இருந்து வந்துள்ள  பல நிலைமைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இமாலயத் தவறு என்று சொல்கிற அளவுக்கு உருவெடுத்ததன் விளைவாகத் தான் இப்போதைய நிலைமை ஏற்பட்டுள்ளது எனலாம். எனவே இமாலயத் தவறை இமாலய சுனாமி என்ற வருணனை மூலம் மூடி மறைக்க முடியாது.
  மழை வெள்ளத்தால் மலைச் சாலைகளில் வழி நெடுக உடைப்பு ஏற்பட்டு 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் மக்கள்  ஊர் திரும்ப வழியின்றி மலைகளில் ஆங்காங்கு சோறு த்ண்ணீர் இன்றிக் குளிரில் தவித்தனர் என்பது தான் உத்தரகண்ட் மானிலத்தில் ஏற்பட்ட பிரதான பிரச்சினையாகும். இவர்களை மீட்கப் பெரும்பாடுபட வேண்டியிருந்தது.
உத்தரகண்டின் மலைப் பிரதேசங்களில் உள்ள பத்ரினாத், கேதார்னாத்,  கங்கோத்ரி, யமுனோத்ரி என பல புனிதத் தலங்கள் உள்ளன. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னரோ ஆண்டுதோறும் பக்தர்கள் குறிப்பிட்ட சீசனில் தங்கள் பொறுப்பில் உயிருக்குத் துணிந்து மலைக் காடுகள் வழியே நடந்தே சென்று வந்தனர்.
பின்னர் மலைச் சரிவுகளில் பாதைகள் போடப்பட்டன. இப்போது இவர்களை அழைத்துச் செல்ல பஸ் சர்வீசுகள் உள்ளன. பஸ்களை அமர்த்திக் கொண்டு செல்பவர்களும் உண்டு. கோஷ்டியாக வேன்களில் செல்பவர் உண்டு. சொந்தக் கார்களில் அல்லது வாடகைக் கார்களில் செல்பவர்கள் பலர். இப்படியாக செல்பவர்களை அவர்கள் சொந்தப் பொறுப்பில் செல்வதாகச் சொல்ல முடியாது. ஆயிரமாயிரம் பக்தர்களின் வருகையானது பெரிய சுற்றுலாத் தொழிலாக மாறி விட்டது. இவர்களுக்கு வழி நெடுக டீ காபி விற்பவர்கள், ஊதுவத்தி விற்பவர்கள், பலகாரம் விற்பவர்கள் என உள்ளூர் வாசிகளான பல ஆயிரம் பேருக்கு வருமானம் கிடைக்கிறது. இவர்கள் அனைவரின் பாதுகாப்பு விஷயத்தில் மானில அரசுக்குப் பொறுப்பு உள்ளது
 நதிகளின் க்ரை ஓரமாக அமைந்த எண்ணற்ற வீடுகள் நாசமாகின
. இதுவரை இல்லாத பெரு மழை பெய்தது தான் விபரீதத்துக்கான காரண்ம் என்கிறார்கள்.அப்படி ஒன்றுமில்லை. இதற்கு முன்னரும் இந்த மாதிரி மழை பெய்துள்ளது. ஆனால் அப்போது யாத்திரை சீசன் இல்லை என்பதால் பிரச்சினை இப்போதைப் போல விசுவரூபம் எடுக்கவில்லை.
வானிலைத் துறையினர் முன்கூட்டி எச்சரிக்கை விடுத்திருந்தால் யாத்திரீகர்களை  ஏற்றிச் சென்ற பஸ், கார் போன்றவை மேலே சென்றிராது. யாத்திரிகர்கள் மேலே மாட்டிக் கொள்கின்ற பிரச்சினை தவிர்க்கப்பட்டிருக்கும். வானிலைத் துறையினரோ எச்சரிக்கை கொடுக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் விபரீதம் நிகழ்ந்த பிறகு அதே வானிலைத் துறையினர் எங்கெல்லாம் அதிக மழை பொழியும் என்று விவரமாக அறிக்கை விடுத்தனர்.
 இந்தியாவில் வானிலைத் துறை இன்னமும் போன நூற்றாண்டில் தான் இருக்கிறது. அவர்களது அறிவிப்புகளில் நம்பகத்தன்மை மிகவும் குறைவுதான். தவிர, “ தென் மாவட்டங்களில் அங்குமிங்குமாக மழை இருக்கலாம்என்பது போன்ற அறிவிப்புகளால் எந்தப் பயனும் இல்லை. திருனெல்வேலியில் மழை இருக்குமா, தூத்துக்குடியில் மழை பெய்யுமா, தென்காசியில் மழை பொழியுமா என்ற விவரங்கள் தான் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்க முடியும்.
உத்தரகண்டில் கடந்த பல ஆண்டுகளில் ஏராளமான அளவுக்கு காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. அப்படியான நிலையில் நிலச்சரிவும் நில அரிப்பும் அதிகமாகத் தான் இருக்க முடியும்.
 மலைகளில் காடுகள் இருந்தால் நல்ல மழை பொழியும் என்பார்கள். அதே சமயம் அந்த காடுகள் தான் மழை வெள்ள aaaaஆபத்தைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதை சற்று விளக்க வேண்டும்.
  ஓடுகள் வேயப்பட்ட ஒரு வீட்டின் கூரையில் நின்றபடி ஓடுகள் மீது இரண்டு வாளித் தண்ணீரை ஊற்றினால் அத்தனை தண்ணீரும் சில வினாடிகளில் கீழே தரையில் வந்து விழும். ஆனால் அந்த வீட்டின் ஓடுகள் மீது நிறைய பழைய சாக்குகளைப் போட்டு வைத்திருப்பதாக வைத்துக் கொள்வோம். இப்போது தண்ணீரை ஊற்றினால் தண்ணீரில் பெரும் பகுதியை பழைய சாக்குகள் உறிஞ்சிக் கொள்ளும்.கீழே வந்து விழும் தண்ணீரின் அளவு குறைவாகவே இருக்கும்.
மலைப் பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகள் இது போலவே  மழை நீரின் கணிசமான பகுதியை தம்மிடம் இருத்தி வைத்துக் கொள்கின்றன. வெள்ள ஆபத்தையும் குறைக்கின்றன. நில அரிப்பைக் குறைக்கின்றன. காடுகள் அதாவது தாவரங்களே இல்லாமல் வெறும் மண்ணாக இருக்கின்ற மலைச் சரிவில் மழை பெய்யுமானால் பெரிய மழைத் துளிகள் மண்ணைக் கரைத்துக் கொண்டு கீழ் நோக்கி வெள்ளமாக வேகமாகப் பாயும்.
 அதே மலைச் சரிவில் அடர்ந்த காடுகள் உள்ளதாக வைத்துக் கொள்வோம். மிக உயர்ந்த மரங்களின் இலைகள் மீது மழைத் துளிகள் விழும் போது மழைத் துளிகளின் வேகம் குறைக்கப்படுகிறது. இலைகள் மீது விழும் துளிகள் வேகம் குறைந்தவையாக கீழே உள்ள கிளைகளின் இலைகள் மீது விழும். பெரிய மழைத் துளிகள் பல சிறு துளிகளாகக் கீழே தரையில் விழும். காடுகளில் தரை முழுவதிலும் இலைக் குப்பைகள் நிறைய இருக்கும். மரங்களின் இலைகள் வழியாகக் கீழே வந்து விழும் மழைத் தண்ணீர் வேகமாக ஓட விடாமல் இலைக் குப்பைகள் தடுக்கின்றன. இதன் விளைவாக மழை நீரானது நிதானமாக மண்ணுக்குள் இறங்க வழி ஏற்படுகிறது.
இப்படி உள்ளே இறங்கும் நீரானது பாறை இடுக்குகளில் போய் தங்க வழி ஏற்படுகிறது. இத் தண்ணீர் தான் பின்னர் மலைகளில் சுனையாக அமைகிறது.
  நில அரிப்பு காரணமாக சாலைகள் சேதமடைந்தன. பல ஆயிரம் பேர் ஆங்காங்கு மாட்டிக் கொண்டு திண்டாடியதற்கு சாலைகள் சேதமடைந்ததே காரணம்
மலைச் சரிவில் காடுகள் இருக்குமானால் மரங்கள், செடி கொடிகள் ஆகியவற்றின் இலைகளில் கணிசமான நீர் தேக்கி வைத்துக் கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டோம். உங்களுக்கு இது குறித்து சந்தேகமாக இருக்குமானால் நீங்கள் வசிக்கும் பகுதியில் மழை ஓய்ந்த பின்னர் ஒரு மரத்தடியில் நின்று கொண்டு யாரையாவது விட்டு கிளைகளை ஆட்டச் சொல்லுங்கள். இலைகளிலிருந்து விழும் மழைத் தண்ணீர் காரணமாகத் தொப்பலாக நனைந்து விடுவீர்கள்
 தாவரங்களின் வேர்களும் நீரை ஈர்த்து வைத்துக் கொள்கின்றன. அது மட்டுமல்லாமல் இந்த வேர்கள் மண்ணைக் கெட்டியாகப் பிடித்து வைத்துக் கொள்பவை. மலைச் சரிவுகளில் உள்ள தாவரங்களின் வேர்கள் நிலச்சரிவு, மண்ணரிப்பு ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
வீடு கட்டும் போது மாடிக்குத் தளம் அமைக்க குறுக்கும் நெடுக்குமாகக் கம்பிகளை அமைத்து அவற்றின் மீது கான்கிரீட்டைக் கொட்டுகின்றனர். இக்கம்பிகளின் பலத்தில் தான் கான்கிரீட் நிற்கிறது. மலைச் சரிவுகளில் உள்ள மரங்களின் வேர்கள் இப்படியான கம்பிகள் போன்றவை. மலைச் சரிவு ஒன்றில் பெரிய வேர்களிலிருந்து சல்லி வேர் உட்பட எண்ணற்ற வேர்கள் ஊடுருவி நிற்கின்றன. இந்த வேர்களே எளிதில் நிலச் சரிவு, மண்ணரிப்பு நேராமல் தடுக்கின்றன ஆனால் பெரிய அளவில் காடுகள் அழிக்கப்பட்டால்   மண் அரிப்பின் விளைவாக சாலைகள் துண்டிக்கப்படுகின்றன. நிலச் சரிவின் விளைவாகவும் சாலைகள் துண்டிக்கப்படுகின்றன. உத்தரகண்டில் இது தான் நிகழ்ந்தது.
உத்தரகண்ட் மானிலத்தில் அடுக்கடுக்கான மலைகள் உள்ளன. இவற்றின் நடுவே அமைந்த பள்ளத்தாக்குகளில் பல சிறு நதிகள் ஓடுகின்றன. அண்மையில் பெய்த பெரு மழையில் போது இவற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. நதிக்கரையில் அமைந்த வீடுகள், பல மாடிக் கட்டடங்கள் வாகனங்கள் ஆகியவை சரிந்து நதியில் விழுந்ததை தொலைக்காட்சிகளில் காண முடிந்தது. மண்ணரிப்பு எவ்வளவு பயங்கரமானது என்பதை இவை தத்ரூபமாகக் காட்டின. அதே சமயம் நில ஆக்கிரமிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதையும் அவை காட்டின.
உத்தரகண்டில் அலகநந்தா நதி மீது கட்டப்பட்டுள்ள அணை. மின்சார உற்பத்திக்காக இப்படி பல அணைகள் கட்டப்பட்டுள்ளன
உத்தரகண்ட் இயற்கை ஆபத்து அதிகம் உள்ள மலைப் பிரதேசமாகும். இந்த ஆபத்துகளைத் தவிர்க்க எவ்விதமான நடவடிக்கைகள் தேவை என்பது குறித்து நிபுணர்கள் கடந்த பல ஆண்டுகளில் அவ்வப்போது அறிக்கைகளை அளித்துள்ளனர். ஆனால் உத்தரகண்ட் மானிலத்தை ஆண்டு வந்துள்ள அரசுகள் இவற்றைத் தொடர்ந்து புறக்கணித்து வந்துள்ளன . இது போதாதென இம்மானிலத்தில்  இப்போது சுரங்க வேலைத் திட்டங்கள, அணைகளைக் கட்டி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நீர் மின்சாரத் திட்டங்கள்  என பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் காடுகளை அழிக்க இவை வகை செய்துள்ளன. சுண்டைக்காய் திட்டத்துக்கு பல ஆட்சேபங்களை எழுப்பும் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் எப்படி மேற்படி திட்டங்களுக்கு அனுமதி அளித்தது என்பது தெரியவில்லை. உத்தரகண்ட் மானிலத்தில் அவ்வப்போது பூகம்பம் ஏற்படுவது உண்டு என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். 1999 ல் ஏற்பட்ட பூகம்பத்தின் போது சுமார் 100 பேர் உயிரிழந்தனர். ஆகவே அபிவிருத்தி திட்டங்கள் என்ற பெயரில் உத்தரகண்ட்  மானிலத்துக்குப் பொருந்தாத திட்டங்களை மேற்கொள்வது எதிர்காலத்தில் பெரும் பிரச்சினைகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
உத்தரகண்ட் மானிலத்தின் முக்கிய பலம் சுற்றுலாத் தொழிலாகும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத உறுதியான சாலைகளை அமைப்பது போன்று இத்தொழில் தொடர்பான வசதிகளை மேம்படுத்தி சுற்றுலாத் தொழில் மூலம் மானிலத்தின் வருவாயைப்   பெருக்குவது தான் புத்திசாலித்தனமாக வழியாக இருக்கும்..

( என்னுடைய இக்கட்டுரை ஜூன் 29 ஆம் தேதி  தினமணி  நாளிதழில் வெளியானதாகும் )15 comments:

Anonymous said...

thelivaana padhivu, nandri
surendra
surendranath1973@gmail.com

ABUBAKKAR K M said...

வணக்கம் அய்யா.
சிக்கலான பல விசயங்களை இந்த பதிவில் அலசி ,
கருத்துக்களை ஆணித்தரமாக கூறியுள்ளீர்கள்.
” காடுகள் அழிப்பு “ இந்த இரண்டு சொற்களின் தாக்கம் நமது தமிழகத்தையும் பதம்பார்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை ,,என்றே நானும் கருதுகிறேன்- அந்த அளவிற்கு நமது அரசியல்வாதிகளின் போக்கும் , அதற்கு துணை போகிற தமிழக அரசுத்துறை அலுவலர்களும் திருந்த வேண்டும் என்று பிராத்திப்பதைத்தவிர வேறு வழி தெரியவில்லை.
கே.எம்.அபுபக்கர்
கல்லிடைக்குறிச்சி

Salahudeen said...

நல்ல விளக்கமான பதிவு நன்றி ஐயா அடிக்கடி பதிவு எழுதுங்கள் மரம் வளர்ப்போம்!! மழை பெறுவோம் !!மண் மண் வளம் காப்போம்

ganesh said...

nice..

கலியபெருமாள் புதுச்சேரி said...

விளக்கமான பதிவு..மற்ற மாநிலங்களாவது விழித்துக்கொண்டால் சரி.

ரெண்டு said...

ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க அய்யா. சீரான இடைவெளியில் உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.

Ganesh said...

இந்த ஆபத்து தற்போது தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு அதிகம் உண்டு. ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?

Anonymous said...

ஏதாவது பெரிய தவறு செய்யும்போது அதை இமாலயத் தவறுன்னு குறிப்பிடுவார்கள் இங்கே (உத்தர்காண்ட்டில்) மனுஷன் இயற்கையை அழிச்சி இவ்வளவு பெரிய அழிவுக்கு தான் காரணமாகி விட்டு அந்தப் பழியையும் இமாலயத்தின் மீது போட்டு சரியாக பெயருக்கு பொருந்துகிற மாதிரி அதை இமாலயத் தவறுன்னும் சொல்லிட்டாங்க இது கொடுமையிலும் கொடுமை ஐயா இதை தங்களின் பதிவில் அருமையாக தெளிவாகவும் விளக்கமாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள்.

வெங்கடேஷ்

VarahaMihira Gopu said...

எல்லா நதிக்கரையோரங்களிலும் காடுகள் தான் இருந்தன. வயல்களையும் ஊர்களையும் நாகரீகங்களையும் காடுவெட்டி நாடு செய்து தான் மனிதன் உருவாக்கியுள்ளான். உத்தராகண்டிலும் இது தான் நடந்தது.

இமய மலையின் மலைச்சறிவுகளும் வெள்ளப்பெருக்கு நதிகளும் பழைய இலக்கியங்களில் பேசப்பட்டவை. இதில் மக்களும் நிர்வாகமும் பாடம் கற்றால் நல்லது. எதற்கெடுத்தாலும் அரசையும் முன்னேற்ற நடவடிக்கைகளையும் குற்றம் சொல்வதும் பத்திரிகை தர்மமாகிவிட்டது. ஆனால் அது சரியல்ல.

Sudhakar Shanmugam said...

தெளிவான உதாரணங்களுடன் அருமையான பதிவு

நன்றி

S.சுதாகர்

Unknown said...

அய்யா தங்களின் கட்டுரை மிகவும் பயனுடயதாக உள்ளது.மாணவர்களுக்கு பொது அறிவை வளர்க்கவும் அரிவியல் விஷயங்களை தாய் மொழியில் தெரிந்து கொள்வதர்க்கு அருமயான வாய்ப்பு.தங்களின் பணி நீண்ட காலம் தொடர என் வாழ்த்துக்கள்.

Anonymous said...

"மேக வெடிப்பு" நிகழ்ந்ததால் தான் இவ்வளவு சேதம் என்று படித்தேன். அதை பற்றியும் விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
- ராஜாராம்

Vaidheeswaran said...

ஐயா,
மழைநீரை மலையின் பரப்பு தக்கவைத்துக்கொள்ளும் பாங்கிலேயே இயற்கையான மர வகைகள் இமயமலைக்காடுகளில் இருந்து வந்துள்ளது. 3000-5000 அடி உயரத்தில் வளரும் குறிப்பிட்ட பன்ச் ஒக் மரம்(Quercus Ircana). இதன் தனித்தன்மை இலைகளின் அடிப்பகுதியில் ரோமம் போன்றிருக்கும். உதிரும் இலைகள் மலைப்பரப்பில் படர்ந்து நீரை அதிகமாக உறிஞ்சி வைத்துக்கொள்ளும் தன்மை உடையது. மலையிலிருந்த இந்த வகை மரம் அழிக்கப்பட்டதை நீங்கள் மிகவும் எளிமையாக கூரைமேல் போடப்பட்ட சாக்கு என்று எழுதியுள்ளது அருமை.
இந்த உத்தராகாண்ட் வெள்ளம் பற்றி என் கட்டுரையை இங்கே காணவும். http://vaidheeswaran-rightclick.blogspot.in/2013/07/blog-post.html

சுபத்ரா said...

Wonderful sir. Thank u

Anonymous said...

Manmade tragedy. Dudley

Post a Comment