Aug 24, 2013

எதிரியை நிர்மூலமாக்க வல்ல இந்தியாவின் அணுசக்தி சப்மரீன்

Share Subscribe

  புராணக் கதைகளின்படி ஒரு சமயம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே   போர் மூண்ட போது அசுரர்கள் அனைவரும் கடல்களுக்குள் போய் ஒளிந்து கொணடனராம். இதனால் தேவர்கள் குழப்பமடைந்தனராம். இது தப்பி ஓடி ஒளிந்து கொள்வதற்கு கடல்கள் நல்ல இடம் என்பதைக் காட்டுகிறது
.
 இதையே வேறு கோணத்திலிருந்து பார்ப்போம். நாம் கடல்களுக்குள் ஒளிந்தபடி  எதிரி நாட்டுக்கு அருகே சென்று எதிரி எதிர்பாராத நேரத்தில் எதிரி எதிர்பாராத திசையிலிருந்து தாக்கலாம். இதற்கான படை தான் அணுசக்தி சப்மரீன்கள். அதாவது அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலகள்.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஹிட்லரின் ஜெர்மானிய சப்மரீன்கள் அட்லாண்டிக் கடலில் பிரிட்டிஷ் போர்க் கப்பல்களைத் தாக்கிப் பெரும் சேதம் விளைவித்தன. அதே போரின் போது ஜப்பான், ராட்சத சப்மரீன்களை உருவாக்கி அந்த சப்மரீன்களுக்குள் விமானங்களை வைத்து அமெரிக்காவின் மேற்குக் கரை வரை அனுப்பியது. இவையெல்லாம் அணுகுண்டுகளும் நீண்ட தொலைவு செல்லும் ஏவுகணைகளும் உருவாக்கப்பட்டதற்கு முன் நடந்தவை அப்போதைய சப்மரீன்கள் டீசலினால் இயங்கியவை.
ஹிட்லர் காலத்து ஜெர்மானிய சப்மரீன்.மிதக்கும் நிலையில்
சப்மரீன்களில் டீசல் எஞ்சின்களைப் பயன்படுத்துவதில் பெரிய பிரச்சினை உண்டு. கடலில் மூழ்கியபடி அதிக தொலைவு செல்வதானால் மிக நிறைய டீசல் எண்ணெயைக் கையோடு கொண்டு சென்றாக வேண்டும். ஆகவே இவற்றினால் அதிகத் தொலைவு செல்ல இயலாது. தவிர, டீசல் எஞ்சின்கள் சத்தம் மற்றும் புகையை எழுப்புபவை. கடலுக்கு அடியில் எழும் ஒலிகளைப் பதிவு செய்ய நுட்பமான கருவிகள் உள்ளன. ஆகவே டீசலினால் இயங்கும் சப்மரீன்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

ஆகவே மின்சார பாட்டரிகளால் இயங்கும் சப்மரீன்கள் உருவாக்கப்பட்டன. சப்மரீன் கடல் மட்டத்துக்கு வந்து மிதக்கும். அப்போது டீசல் எஞ்சின்களைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு பாட்டரிகள் சார்ஜ் செய்யப்படும். பின்னர் சபமரீன் நீருக்குள் மூழ்கி விடும். இதில் உள்ள பெரிய பிரச்சினை சப்மரீன் அடிக்கடி மேலே வந்தாக வேண்டும். இதன் மூலம் அந்த சப்மரீன் தான் இருக்கின்ற இடத்தைக் காட்டிக் கொள்ளும் நிலைமை உண்டு
.
   இரண்டாம் உலகப் போர் முடியும் கட்டத்தில் முதல் தடவையாக அமெரிக்கா அணுகுண்டை உருவாக்கி அதை 1945 ஆம் ஆண்டில் வெடித்து சோதனை நடத்தியது.. இதைத் தொடர்ந்து சப்மரீன்களை இயக்க அணுசக்தியைப் பயன்படுத்தலாமே என்று அமெரிக்கா சிந்தித்து அவ்விதம் அணுசக்தியால் இயங்கும் சப்மரீன்களைத் தயாரிக்கலாயிற்று. சப்மரீன்களில் அணுசக்தியைப் பய்ன்படுத்துவதில் பல வசதிகள் உள்ளன.
இக்காலத்திய அமெரிக்க அணுசக்தி சப்மரீன்
சப்ம்ரீனில் இருக்கும் அணு உலையானது தொடர்ந்து 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு செயல்படக்கூடியது. ஆகவே போதுமான உணவுக் கையிருப்பு இருக்குமானால் அணுசக்தி சப்மரீன் தொடர்ந்து பல மாத காலம்  நீருக்குள் இருக்க முடியும். உலகின் கடல்களில் எந்த மூலைக்கும் செல்ல முடியும். அங்கிருந்தப்டி எதிரி நாட்டைத் தாக்க முடியும்.

அணுசக்தி சப்மரீன்கள் பொதுவில் 800 அடி ஆழம் வரை தான் செல்கின்றன.அதற்கு அதிகமான ஆழத்துக்குச் செல்வதில்லை.தங்களது அணுசக்தி சப்மரீன்கள் எந்த ஆழம் வரை செல்லக்கூடியவை என்பதை அணுசக்தி சப்மரீன் வைத்துள்ள நாடுகள் ரகசியமாக வைத்துக் கொண்டுள்ள்ன.
  
அணுசக்தியால் இயங்கும் சப்மரீன்கள் வடிவில் பெரியவை. அவற்றினுள் பல ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கவல்ல ஏவுகணைகளைப் பொருத்தலாம்.   ஏவுகணைகளின் முகப்பில் பல அணுகுண்டுகளைப் பொருத்தலாம்.  . நீருக்குள் மூழ்கியிருந்தபடியே இந்த ஏவுகணைகளைச் செலுத்த முடியும்.

அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் ( ரஷியா தலைமையில் ஒன்றிணைந்திருந்த கூட்டமைப்பு) இடையே 1990 வரை கடும் விரோதப் போக்கு நிலவிய காலகட்டத்தில் இரு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு பல நவீன அணுசக்தி சப்மரீன்களைத் தயாரித்தன.
   
இன்னமும் சரி, அமெரிக்காவிடமும் ரஷியாவிடமும் தான் நிறைய அணுசக்தி சப்மரீனகள் உள்ளன. பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் உள்ள அணுசக்தி சப்மரீன்களின் எண்ணிக்கை அதிகமில்லை. சீனாவிடமும் அணுசக்தி சப்மரீன்கள் உள்ளன. இப்போது இந்தியாவும் சொந்தமாக அணுசக்தி சப்மரீனை உருவாக்கியுள்ளது. உலகில் அணுசக்தி சப்மரீனைப் பெற்றுள்ள ஆறாவது நாடு என்ற அந்தஸ்தை இந்தியா பெற்றுள்ளது.

இந்தியா  தயாரித்துள்ள அணுசக்தி சப்மரீனின் பெயர் அரிஹந்த் என்பதாகும். எதிரியை நிர்மூலமாக்குபவன் என்பது இதன் பொருள். இந்த சப்மரீன் ஆகஸ்ட் முதல் வாரத்தில் செயல் நிலையை எட்டியது. அதாவது இந்த சப்மரீனில் இடம் பெற்றுள்ள அணு உலை தொடர்ந்து செயல்பட ஆரம்பித்தது. இனி இது கடலுக்குள் இருந்தபடி பல சோதனைகளை நடத்தும். எல்லாம் முடிந்து அரிஹந்த் இந்தியக் கடற்படையில் இடம் பெற இரண்டு ஆண்டுகள் ஆகலாம்.

அரிஹந்துக்கான அணு உலை கல்பாக்கத்தில் விசேஷமாக வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டதாகும். இது இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளில் நிறுவப்பட்ட அணுமின் நிலையங்களில் இடம் பெற்றுள்ள அணு உலைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
..
இந்தியாவின் அரிஹந்த் அணுசக்தி சப்மரீன்
இந்திய அணுமின் நிலையங்களில் இடம் பெற்றுள்ள ( தாராப்பூர் அணுமின் நிலைய முதல் யூனிட், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவை நீங்கலாக்) அணு உலைகள் அனைத்தும் இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தைப் பயன்படுத்துபவை.

இயற்கை யுரேனியத்தால் அவ்வளவாகப் பயன் இல்லை. யுரேனிய உலோகத்தில் அடங்கிய அணுக்களில் யுரேனியம்- 235 எனப்படும் அணுக்களும் உள்ளன்.  அவை  தான் முக்கியமாகத் தேவை. இந்த வகை அணுக்களே பிளவு பட்டு தொடர்ந்து ஆற்றலை அளிக்கும். வெப்பத்தை அளிக்கும். அதைக் கொண்டு  நீராவியை உண்டாக்கி மின்சாரம் தயாரிக்கலாம்.

 . இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் யு-235 அணுக்கள் 0.7 சத விகித அளவுக்கே உள்ளன. மீதி அணுக்கள் யு-238 வகையைச் சேர்ந்தவை. எனினும் பெரும் செலவு பிடிக்கிற, அத்துடன் மிகவும் சிக்கலான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி யுரேனியக் கட்டியில் யு-235 அணுக்களின் அளவை அதிகரிக்கலாம். இதை செறிவேற்றுதல் (enrichment) என்று கூறுவார்கள்.

 கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் யுரேனியத்தில் யு-235 அணுக்களின் அளவு அதாவது செறிவேற்றப்பட்ட யுரேனியம் சுமார் 4.5 சதவிகித அளவுக்கு உள்ளது. ஆனால் அணுசக்தி சப்மரீனில் இடம் பெறுகிற அணு உலையில் யு-235 அளவு குறைந்தது 25 சதவிகித அளவுக்கு இருந்தாக வேண்டும். அரிஹந்த் சப்மரீனில் இத்தகைய அணு உலை இடம் பெற்றுள்ளது. இது கல்பாக்கத்தில் கட்டப்பட்டதாகும்.

 இந்த அளவுக்கு செறிவேற்றப்பட்ட யுரேனியத்தைப்  பயன்படுத்தும் அணு உலை இந்தியாவில் தயாரிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். செறிவேற்றப்பட்ட யுரேனியத்தைத் தயாரிபபதில் இந்தியா காலம் தாழ்ந்து ஈடுபட்டது என்பதைக் கவனிக்கும் போது இது பெரிய சாதனையே.
அரிஹந்த் இன்னொரு காட்சி courtesy;fas org
  சப்மரீனுக்காக அணு உலையைத் தயாரிப்பது சிக்கலானது. அது நிறைய இடத்தை அடைத்துக்கு கொள்ளக்கூடாது. வடிவில் சிறியதாக இருக்க வேண்டும். தவிர, சபமரீன் நீருக்குள் செல்லும் போது மேலும் கீழுமாக அசையும். சில சமயம் திடீரென வேகம் அதிகரிக்கும். ஆகவே சப்மரீனில் இடம் பெறுகின்ற அணு உலையானது எல்லாவித ஆட்டங்களுக்கும் அசைவுகளுக்கும் ஈடு கொடுக்க வேண்டும்.

இது ஒரு புறம் இருக்க, சப்மரீன் என்பது விசேஷ கலப்பு உருக்கினால் தயாரிக்கப்படுவதாகும். அமெரிக்கா ஒரு கால கட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக விதித்த தடை காரணமாக எந்த நாடும் இப்படியான விசேஷ உருக்கை இந்தியாவுக்கு விற்க முன் வரவில்லை. இந்திய நிபுணர்கள் பெரும் பாடுபட்டு இவ்வித விசேஷ கலப்பு உருக்கைத் தயாரிப்பதில் வெற்றி க்ண்டனர். அதைத் தொடர்ந்தே அரிஹந்த் சப்மரீனை உருவாக்குவது சாத்தியமாகியது.

அரிஹந்துக்கான அணு உலையை கல்பாக்கத்தில் வைத்து பல பரிசோதனைகளுக்கு ஈடுபடுத்தி அதன் செயல்பாடு குறித்து நிபுணர்கள் திருப்தி அடைந்த பிறகே அது விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்தில் கட்டி முடிக்கப்பட்டிருந்த அரிஹந்த் சப்மரீனில் இடம் பெற்றது.


அணு உலை என்பது கதிரியக்கத்தைத் தோற்றுவிப்பதாகும். அந்த கதிரியக்கம் சப்மரீனில் பணியாற்றும் மாலுமிகளைப் பாதிக்காதபடி விசேஷ ஏற்பாடுகள் உள்ளன. சில கார்களில் எஞ்சின் பின்புறம் அமைந்திருக்கும். அது போல அரிஹந்தின் பின்புறத்தில் தான் அணு உலை இடம் பெற்றுள்ளது. அதை அடுத்து ஏவுகணைகள் இடம் பெறுகின்றன. சப்மரீனில் செங்குத்தாக அமைந்த நீண்ட குழல்களில் இந்த ஏவுகணைகள் தயாராக நிறுத்தப்பட்டிருக்கும். ஏவுகணைகள் சுமார் மூன்று மாடி உயரம் கொண்டவை. இவற்றின் முகப்பில் அணுகுண்டுகள் இடம் பெற்றிருக்கும். அரிஹந்த் மூழ்கிய நிலையில் இருந்தாலும் ஏவுகணைகளை எதிரி இலக்கை நோக்கிச் செலுத்த முடியும்.

 ஆரம்ப கட்டத்தில் அரிஹந்த் சப்மரீனில் சில நூறு கிலோ மீட்டர் தொலைவு சென்று தாக்கக்கூடிய அணு ஆயுத ஏவுகணைகள் இடம் பெற்றிருக்கும். பின்னர் 3500 கிலோ மீட்டரில் உள்ள எதிரி இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்ட  அணு ஆயுத ஏவுகணைகள் இடம் பெறும். விசாகப்பட்டினத்தில் அரிஹந்த் மாதிரியில் மேலும் மூன்று அணுசக்தி சப்மரீன்களைக் கட்டும் வேலை ஏற்கெனவே ந்டந்து வருகிறது.

இந்தியா 1998 ஆம் ஆண்டில் நிலத்துக்கு அடியில் அணுகுண்டுகளை வெடித்து சோதனை நடத்திய போதே அது அணு ஆயுத வல்லரசு என்ற அந்தஸ்தைப் பெற்றதாகியது. ஆனால் ஒரு நாடு அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் திறனைப் பெற்றால் மட்டும் போதாது.
போர் ஒத்திகையின் போது அமெரிக்க அணுசக்தி சப்மரீனிலிருந்து   ஏவுகணை உயரே கிளம்புகிறது
அணுகுண்டுகளை நிலத்திலிருந்து (ஏவுகணைகள் மூலம்)  வான வழியாக (விமானங்கள் மூலம்), கடல் மார்க்கமாக (அணுசக்தி சப்மரீன்கள் மூலம்)  என   மூன்று வழிகளிலும் எதிரி நாட்டை நோக்கிச் செலுத்தும் திறனைப் பெற்றிருக்க வேண்டும். இது அணு ஆயுத முத்திறன் (Nuclear Triad)  எனப்படும்.

 இப்போதுள்ள அளவில் அமெரிக்காவும் ரஷியாவும் இத்திறனைப் பெற்றுள்ளன. சீனாவுக்கும் இத்திறன் உண்டு. அணுசக்தி சப்மரீனை உருவாக்கியுள்ளதன் மூலம் இந்தியாவும் இத்திறனைப் பெற்று விட்டது. அணுகுண்டுகளைச் செலுத்துவதற்கு நீண்ட தூர ஏவுகணைகளைத் தயாரிக்கும் திட்டத்தை பிரான்ஸும் பிரிட்டனும் பல ஆண்டுகளுக்கு முன்பே கைவிட்டு விட்டன. ஆகவே இந்த இரு நாடுகளுக்கும் அணு ஆயுத முத்திறன் கிடையாது. பாகிஸ்தானுக்கும் கிடையாது.

சீனாவும் சரி, பாகிஸ்தானும் சரி, இந்தியாவிடம் நட்புறவு காட்டுவதாகச் சொல்ல முடியாது. பாகிஸ்தான் நான்கு முறை இந்தியா மீது ஆக்கிரமிப்பு நடத்திய நாடு. சீனா ஒரு தடவை தாக்கியுள்ளது. இந்த இரண்டுமே அணுகுண்டுகளை வைத்துள்ளவை. இப்படியான சூழ் நிலையில் தான் செலவைப் பாராமல் இந்தியா அணு ஆயுத முத்திறனைப் பெறுவதில் முயன்று அதில் வெற்றியும் கண்டுள்ளது.

( எனது இக்கட்டுரை தினமணி ஆகஸ்ட் 22 ஆம் தேதி இதழில் வெளியானது)9 comments:

drogba said...

சப்மரீன் என்பதிற்கு பதிலாக நீர் மூழ்கிக் கப்பல்என்ற பதத்தை பாவித்திருக்கலாம்

Anonymous said...

"அரிஹந்த் சப்மரீனில் இத்தகைய அணு உலை இடம் பெற்றுள்ளது. இது கல்பாக்கத்தில் கட்டப்பட்டதாகும்"--it proves that the statement from the people who are against the nuclear plant and their statement is that nuc plant is to build atomic accelerated or atomic weapons...i just want to know your opinion as a tamilmanam reader , ayya.

என்.ராமதுரை / N.Ramadurai said...

பெயர் குறிப்பிடாமல் கருத்தைத் தெரிவிப்பவர்களுக்கு நான் பொதுவில் பதில் எழுதுவதில்லை.
இம்மாதிரியான விஷயங்களில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் பல உருக்காலைகள் உள்ளன.இவற்றில் உருக்குத் தகடு, குழாய்கள், கம்பிகள் போன்றவை உற்பத்தியாகின்றன. இவை துப்பாக்கி,பீரங்கி, போர்க்கப்பல் என பல வகையான போர் ஆயுதங்களைத் தயாரிப்பதற்கும் பயனாகின்றன. அதே நேரத்தில் அவை வீடுகளைக் கட்டவும் தொழிற்சாலைகளை அமைக்கவும் விவசாயக் கருவிகளைத் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
ஆயுதங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதால் உருக்காலைகளே கூடாது என்று வாதிப்பது சரியாக இராது.அணுசக்தி சமாச்சாரமும் அப்படிப்பட்டதே.
கூடங்குளம் உட்பட நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களைப் பயன்படுத்தி அணுகுண்டு செய்ய முடியாது.அது ஒரு போதும் சாத்தியமில்லை.அமெரிக்கா-இந்தியா இடையே ஏற்பட்ட உடன்பாட்டுக்குப் பின்னர் இந்த அணு மின் நிலையங்கள் அனைத்தும் சர்வதேச கண்காணிப்பின் கீழ் வந்துள்ளன.கல்பாக்கத்திலும் மும்பையிலும் உள்ள சில அணுசக்தி அமைப்புகளுக்கு மட்டும் விதி விலக்கு உள்ளது.
தவிர, எந்தத் தொழில் நுட்பத்தையும் மக்கள் நலனுக்காகவும் பயன்படுத்த முடியும். ஆயுதம் தயாரிக்கவும் பயன்படுத்த முடியும். ஆகவே ஒரு தொழில் நுட்பமே கூடாது என்று எதிர்ப்பது அறிவுடைமை ஆகாது.
எப்படியாவது இந்தியாவை துண்டு துண்டாக்க வேண்டும் என் பாகிஸ்தானும் சீனாவும் முனைந்து நிற்கிற நிலையில் அணுசக்தி சப்மரீன் போன்ற போர் ஆயுதங்களைத் தயாரிக்க அணுச்கதியைப் பயன்படுத்துவ்தில் தவறே இல்லை
விவரம் தெரியாதவர்களின் வாதங்களைக் கேட்டு ஏமாந்து விடாதீர்கள்

Salahudeen said...

நல்ல பதிவு ஐயா நன்றி இன்றைய சூழ்நிலையில் நமது நாட்டின் எதிரிகளை சமாளிக்க இது போன்ற ஆயுதங்கள் காட்ட்ய தேவை.

Sudhakar Shanmugam said...

மிக்க நன்றி ஐயா,

உங்களின் இந்தப்பதிவு மனரீதியாக வலிமையை அளிப்பதாக உள்ளது

S.சுதாகர்

Sudhakar Shanmugam said...
This comment has been removed by a blog administrator.
Physioteach said...

வணக்கம் இந்தியன் என்பதில் பெருமையாக இருக்கிறது இந்த கட்டூரை நம் விஞ்ஞானிகள் பற்றியும் அவர்களின் திறமையும் அயராத உழைப்பையும் காட்டுவதாக இருப்பது மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள். தொழில்நுட்பம் முன்னேற்றம் நம்மை அடுத்த அடுத்த நிலைகளுக்கு எடுத்து சொல்வதில்
மகிழ்ச்சி

arunccgt said...

Diesel Engine ஐ run பன்றதுக்குகாற்றும் மிக முக்கியம் ஆயிற்றே அப்படியிருக்க submarine நீரில் மூழ்கிவிட்டால் காற்றுக்கு என்ன செய்வார்கள்???

I am Swa said...

arunccgt

மின்கலனில் மின்சாரம் சேமிக்க பட்டபின் மின் உற்பத்தி சாதனத்தை இயக்க மாட்டார்கள் . மின் சக்தி தீரும் போது மீண்டும் இயக்கப்படும்

Post a Comment