Jan 2, 2014

கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் ஜி.எஸ்.எல் வி ராக்கெட்

Share Subscribe
வருகிற ஜனவரி 5 ஆம் தேதியன்று இந்தியாவின் ஜி. எஸ்.எல்.வி ராக்கெட் (GSLV)  உயரே செலுத்தப்பட இருக்கிறது. இது சுமார் 2 டன் எடை கொண்ட ஜிசாட் -14 என்னும் செயறகைக்கோளை சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரே செலுத்தும் திறன் கொண்டது.

 இந்த ராக்கெட் வெற்றி பெற்றாக வேண்டுமே என இந்தியாவின் விண்வெளித் துறையினர் கவலை கொண்டிருந்தால அதில் வியப்பில்லை. ஏனெனில் இதுவரை இந்த வகை ராக்கெட்டை ஏழு தடவை உயரே செலுத்தியதில் மூன்று தடவைகளில் தான் வெற்றி கிடைத்தது.
  விண்வெளித் துறையில் நாம்  அடுத்து வேகமாக முன்னேற வேண்டுமானால் இந்த ராக்கெட் வெற்றி பெற்றாக வேண்டும். என்ற இக்கட்டான நிலை உள்ளது.

உள்ளபடி நம்மிடம் இரண்டு வகை ராக்கெட்டுகள் உள்ளன.ஒன்று பி.எஸ்.எல்.வி ராக்கெட் (PSLV).இது பொதுவில் சுமார் 400 அல்லது 600 கிலோ மீட்டர் உயரத்தில் 2 டன்னுக்கும் குறைவான செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

 1993 ஆம் ஆண்டில் தொடங்கி இதுவரை ஒரே ஒரு தோல்வியை மட்டுமே கண்டுள்ளது. 24 தடவைகளில் வெற்றி கண்டுள்ளது. வெற்றி மேல் வெற்றியைக் குவித்துள்ள இந்த வகை ராக்கெட் மிக நம்பகமானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே தான் சில வெளி நாடுகளும் தங்களது செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் மூலம் செலுத்தச் செய்துள்ளன.

ஆனால் ஒன்று. இதன் திறன் 2 டன் என்றாலும் கடந்த பல ஆண்டுகளில் இது அதிகபட்சமாக சுமந்து சென்ற எடை 1850 கிலோ கிராம் தான். அந்த வகையில் சுமாரான திறன் கொண்ட ராக்கெட் என்றே சொல்ல வேண்டும்.
ஆனால் இந்தியா சிறிய செயற்கைக்கோள்களை மட்டுமன்றி எடை மிக்க செயற்கைக்கோள்களையும் தயாரித்து வருகிறது. இவை தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களாகும்.

 இவை எடைமிக்கவை  உதாரணமாக இந்தியா தயாரித்த ஜிசாட் -8 செயற்கைக்கோளின் எடை 3 டன். இவை பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் இருக்க வேண்டியவை. இந்த வகை செயற்கைக்கோள்களை அந்த அளவு உயரத்துக்குக் கொண்டு செல்ல இந்தியாவிடம் இப்போதைக்கு சக்திமிக்க ராக்கெட் கிடையாது.

ஆகவே தான் நாம் தயாரித்து வருகின்ற எடை மிக்க செயற்கைக்கோள்கள் அனைத்தும் தென் அமெரிக்காவில் பிரெஞ்சு குயானாவில் உள்ள கூரூ விண்வெளிக் கேந்திரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் ராக்கெட் மூலமே உயரே செலுத்தப்பட்டு வருகின்றன. இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இந்தியாவின் அவ்வகை செயற்கைக்கோள்களை கூரூவுக்கு எடுத்துச் செல்லும் செலவு,, உயரே செலுத்தித் தருவதற்கு நாம் அளிக்கும் கட்டணம் ஆகிய வகையில் செலவு அதிகம் தான்..ஆகவே சக்திமிக்க ராக்கெட்டுகளை உருவாக்கும் திட்டத்தில் இந்தியா ஈடுபட்டது.
பி.எஸ்.எல்.வி ராக்கெட்டையே பெரிய அளவில் செய்தால் அது சக்திமிக்கதாகி விடாதா என்று கேட்கலாம். அது சாத்தியமானதல்ல. ஒரு ராக்கெட்டில் அதிக உந்து திறனை அளிக்கின்ற எஞ்சினைப் பொருத்தினால் தான் அது அதிக சக்தி பெறும். அந்த வகை எஞ்சின் கிரையோஜெனிக் எஞ்சின் எனப்படுகிறது.
ஜி.எஸ்.எல்வி.  ராக்கெட்  படம்:இஸ்ரோ
ஆக்சிஜன், ஹைட்ரஜன் வாயுக்களை நமக்குத் தெரியும். இந்த இரு வாயுக்களையும் தனித்தனியே திரவமாக்கி அந்த இரண்டும் சேர்ந்து எரியும்படி செய்தால் அது அதிக உந்து திறனை அளிக்கும்.ஆக்சிஜன் வாயுவை மைனஸ் 223 டிகிரி அளவுக்குக் குளிர்வித்தால் அது திரவமாகிவிடும். ஹைட்ரஜன் வாயுவை இதே போல மைனஸ் 253 டிகிரி அளவுக்குக் குளிர்வித்தால் அது திரவமாகி விடும்

.இந்த வாயுக்களை இவ்விதம் குளிர்விப்பது பெரிய பிரச்சினை அல்ல. கடும் குளிர் நிலையில் இருக்கிற இந்த திரவங்களைப் பயன்படுத்தும் ராக்கெட் எஞ்சினை உருவாக்குவதில் தான் பல பிரச்சினைகள் உள்ளன.இந்த இரண்டையும் பயன்படுத்துகிற ராக்கெட் எஞ்சின் கிரையோஜெனிக் (கடும் குளிர்விப்பு நிலை) ராக்கெட் எஞ்சின் எனப்படுகிறது.

ராக்கெட் என்பது ஒன்றின் மீது ஒன்று பொருத்தப்பட்ட மூன்று அடுக்கு ராக்கெட்டாக அல்லது இரண்டு அடுக்கு ராக்கெட்டாக இருக்கும். ராக்கெட்டின் முனையில் இடம் பெறுகின்ற அடுக்கானது இவ்விதம் கிரையோஜெனிக் எஞ்சின் பொருத்தப்பட்டதாக இருக்கும்.
உலகில் நான்கு டன் அல்லது ஐந்து டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் செலுத்து சக்திமிக்க ராக்கெட்டுகள் அனைத்திலும் கிரையோஜெனிக் எஞ்சின்களே பயன்படுத்தப்படுகின்றன

. இந்த வகை எஞ்சின்களை உருவாக்குவதற்கான தொழில் நுட்பத்தை காசு கொடுத்து ரஷியாவிடமிருந்து வாங்குவதற்கு இந்தியா 1990 களில் முயன்றது. ஆனால் அமெரிக்கா குறுக்கிட்டு ரஷியாவிடமிருந்து இத் தொழில் நுட்பம் கிடைக்காதபடி தடுத்து விட்டது.

இவ்வித நிலையில் இந்தியா கடந்த பல ஆண்டுகளாகப் பாடுபட்டு சொந்தமாக கிரையோஜெனிக் எஞ்சின்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் பெருமளவு வெற்றியும் கண்டுள்ளது. இவ்வித எஞ்சின்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தவும் மற்றும் இவற்றை செயல்படுத்தி சோதிப்பதற்காகவும் ஒரு கேந்திரம் தமிழகத்தில் மகேந்திரகிரி என்னுமிடத்தில் உள்ளது.

கிரையோஜெனிக் எஞ்சின்களை உருவாக்குவதில் பல பிரச்சினைகள் உள்ளன. ராக்கெட் எஞ்சினில் இந்த இரு திரவங்களையும் தனித்தனித் தொட்டிகளில் அதே குளிர் நிலையில் வைத்திருக்க வேண்டும். கொஞ்சம் விட்டால் இரண்டும் ஆவியாகி விடும். ஆகவே ராக்கெட் கிளம்புதற்கு சற்று முன்னர் தான் இந்த இரு திரவங்களையும் நிரப்புவர். ராக்கெட் கிளம்புவதற்குள் எப்படியும் கொஞ்சம் ஆவியாகி விடும் என்பதால் சற்று அதிகமாகவே நிரப்புவர்.

 இந்த இரு தொட்டிகளிலிருந்தும் திரவ ஆக்சிஜனும் திரவ ஹைட்ரஜனும் குறிப்பிட்ட விகிதத்தில் எஞ்சின் அறைக்கு வர வேண்டும். தொட்டிகளிலிருந்து எஞ்சின் அறைக்கு இவற்றை செலுத்துவதற்கான பம்புகள், வால்வுகள், மோட்டார்கள் ஆகியவை கடும் குளிர் நிலையைத் தாங்கும் திறன் கொண்ட விசேஷ உலோகங்களால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.கடும் குளிர் நிலையில் சாதாரண உலோகங்கள் பொடிப் பொடியாகி விடும்.அல்லது உருக்குலைந்து விடும்.

எஞ்சின் அறையில் இரண்டும் கலந்து எரியும் போது பயங்கர வெப்பம் தோன்றும். அந்த வெப்பத்தினால் எஞ்சின் அறையின் உலோகத்தால் ஆன சுவர்கள் உருகி விடக்கூடாது. இப்படிப் பல பிரச்சினைகள்.. இவற்றையெல்லாம் சமாளித்து இந்தியா உருவாக்கிய கிரையோஜெனிக் எஞ்சினை தரையில் நிலையாக வைத்து நடத்திய பரிசோதனைகளில் பல தடவை வெற்றி காணப்பட்டுள்ளது..

எடை மிக்க செயற்கைக்கோள்களைச் செலுத்துவதற்குப் பொதுவில் மூன்றடுக்கு ராக்கெட் பயன்படுத்தப்படும்.. சில நாடுகள் இரண்டு அடுக்கு ராக்கெட்டுகளைப் பயன்படுத்துகின்றன.. இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி .ராக்கெட் மூன்று அடுக்கு ராக்கெட் ஆகும். இதில் மூன்றாவது அடுக்கில் பொருத்துவதற்காகத் தான் கிரையோஜெனிக் எஞ்சின் உருவாக்கப்பட்டது. நம்மிடம் ஏற்கெனவே உள்ள பி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் கிரையோஜெனிக் எஞ்சின் கிடையாது.
.
இந்தியா சொந்தமாகத் தயாரித்த கிரையோஜெனிக் எஞ்சினை (மூன்றாவது அடுக்கில்) பொருத்தி 2010 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து உயரே செலுத்தப்பட்டது. அந்த ராக்கெட்டின் முகப்பில் 2220 கிலோ எடை கொண்ட ஜிசாட்-4 செயற்கைக்கோள் வைக்கப்பட்டிருந்தது.

 ஆனால் அந்த ராக்கெட் தோல்வியில் முடிந்தது..மூன்றாவது அடுக்கிலான கிரையோஜெனிக் எஞ்சின் செயல்படாமல் போனதே தோல்விக்குக் காரணம்.

இதன் பிறகு அதே ஆண்டு டிசம்பரில் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் உயரே செலுத்தப்பட்டது. அப்போது வேறு காரணங்களால் அது திசை மாறிய போது கடலுக்கு மேலாக நடு வானில் அழிக்கப்பட்டது.

 பிறகு 2013 ஆகஸ்டில் மறுபடி ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டை செலுத்த எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ராக்கெட் உயரே செலுத்துவதற்கு சுமார் ஒரு மணி நேரம் இருந்த சமயத்தில் ராக்கெட்டிலிருந்து ஏதோ ஒழுக்கு கண்டுபிடிக்கப்பட்டு ராக்கெட்டை செலுத்துவது ரத்து செய்யப்பட்டது.

இப்படியான பின்னணியில் தான் வருகிற ஜனவரி 5 ஆம் தேதி ஜி.எஸ்..எல்.வி ராக்கெட் உயரே செலுத்தப்பட இருக்கிறது. ராக்கெட்டின் வெற்றி பெரிதும் கிரையோஜெனிக் எஞ்சினின் செயல்பாட்டைப் பொருத்தது எனலாம்
.
தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை ஏன் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்குச் செலுத்த வேண்டும் என்று கேட்கலாம்.பல வீடுகளில் மாடியில் டிவி நிகழ்ச்சிகளைப் பெறுவதற்காக கிண்ணவடிவ ஆண்டெனா பொருத்தப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். பெரும்பாலும் இவை வானை தென்கிழக்கு அல்லது தென்மேற்கு திசையை நோக்கி அமைந்திருக்கும். 

இந்த ஆண்டெனா ஒன்றின் மையத்திலிருந்து அது நோக்கி இருக்கும் திசையை நோக்கி கற்பனையாகக் கோடு கிழித்தால் அது உயரே இருக்கின்ற ஒரு செயற்கைக்கோளில் போய் முடியும்.

அந்த குறிப்பிட்ட செயறகைக்கோளிலிருந்து தான் அந்த ஆண்டெனா சிக்னல்களைப் பெறுகிறது. சிக்னல்கள் எப்போதும் நேர் கோட்டில் செல்பவை. ஆகவே ஆண்டெனாவும் செயற்கைக்கோளும் எப்போதும் ஒன்றை ஒன்று பார்த்தபடியே இருந்தாக வேண்டும். ஆணியடித்து நிறுவப்பட்ட ஆண்டெனா போலவே வானில் அந்த செயற்கைக்கோளும் ஒரே இடத்தில் “ நிலையாக” இருக்க வேண்டும்..

ஆனால் எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியைச் சுற்றிக் கொண்டு தான் இருக்கும். நிலையாக இருக்க முடியாது.ஆனால் அது நிலையாக இருப்பது போன்று செய்ய முடியும்.

பூமி தன்னைத் தானே ஒரு முறை சுற்றிக் கொள்ள ஒரு நாள் ஆகிறது. சரியாகச் சொன்னால் 23 மணி 56 நிமிஷம் 4 வினாடி ஆகிறது. ஆகவே பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே இருக்கின்ற ஒரு செயற்கைகோள் ஒன்று பூமியைச் சுற்ற மிகச் சரியாக அதே நேரத்தை எடுத்துக் கொண்டால் அது பூமியைச் சுற்றவும் செய்யும். ஒரே இடத்தில் இருப்பது போலவும் ஆகிவிடும். 

அந்த அளவில் ஒரு செயற்கைக்கோள் மிகச் சரியாக 35,786 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும்படி செய்தால் அது பூமியை ஒரு முறை சுற்றி முடிக்க மிகச் சரியாக மேலே குறிப்பிட்ட நேரத்தை எடுத்துக் கொள்ளும். இது இய்ற்கையின் நியதி ஆகவே தான் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் அந்த அளவு உயரத்துக்கு செலுத்தப்படுகின்றன.

பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஜிசாட் 14 போன்ற செயற்கைக்கோள்களை 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்குச் செலுத்த முடியாதா என்று கேட்கலாம். ஏற்கெனவே கூறியபடி அதன் திறன் சுமாரானது.  . மேலும் அதிக உயரத்துக்கு அது செல்ல வேண்டுமானால் அது ஏற்றிச் செல்லும் சுமையைக் குறைத்தாக வேண்டும்.

 கடந்த பல ஆண்டுகளில் அந்த வகை ராக்கெட் இரண்டு முறை தான் 35 ஆயிரம் உயரத்துக்கு செலுத்தப்பட்டது. அதாவது 2002 ஆம் ஆண்டில் அது மெட்சாட் ( அதன் பெயர் பின்னர் கலபனா என்று மாற்றப்பட்டது) எனப்பட்ட செயற்கைக்கோளை 35 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்கு கொண்டு சென்று செலுத்தியது. அதன் எடை 1060 கிலோ. கல்பனா செயற்கைக்கோளுடன் ஒப்பிடுகையில் ஜிசாட்-14 செயற்கைக்கோளின் எடை சுமார் இரண்டு டன். பின்ன்ர் 2011 ஆம் ஆண்டில் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஜிசாட் 12 செயற்கைக்கோள் அந்த உயரத்துக்குச் செலுத்தப்பட்டது. அதன் எடை 1400 கிலோ கிராம்.


பி.எஸ்.எல்.வி  ராக்கெட் மூலம் 2008 ஆம் ஆண்டில் சந்திரனுக்கு சந்திரயான் விண்கலத்தை அனுப்பினோமே.அதே ராக்கெட் மூலம் அண்மையில் செவ்வாய்க்கு மங்கள்யானை அனுப்பி சாதனை புரிந்தோமே என்றும் கேட்கலாம்.

 இந்த இரண்டுமே 1400 கிலோ கிராம் எடைக்குக் குறைவு. இந்த இரண்டையும் பி.எஸ்எல்.வி ராக்கெட் சுமார் 250 கிலோ மீட்டர் உயரத்துக்குக் கொண்டு சென்று பூமியை நீள் வட்டப் பாதையில் சுற்றும்படி செய்தது. இது அந்த ராக்கெட்டின் திறனுக்கு உட்பட்டதே.
இவை உயரே சென்ற பின்னர் விசேஷ உத்திகளைப் பின்பற்றி – இயற்கையின் சக்தியைப் பயன்படுத்தி—சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் அனுப்பி வைத்தோம். 

.வேறு விதமாகச் சொன்னால் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டானது அவற்றை நேரடியாக சந்திரனுக்கோ செவ்வாய்க்கோ அனுப்பி விடவில்லை. சக்திமிக்க ராக்கெட் அப்போது நம்மிடம் இருந்திருக்குமானால் அவற்றை நேரடியாக சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் அனுப்பியிருக்க முடியும். எனினும் சுமாரான திறன் கொண்ட ராக்கெட்டைப் பயன்படுத்தி விசேஷ உத்திகளைக் கையாண்டு நாம் சாதனை படைத்தோம் என்பது பெருமைக்குரிய விஷயமே.

ஒரு ராக்கெட் அதிகத் திறன் கொண்டதாக இருந்தால் தான் அது அதிக உயரத்துக்குச் செல்லும்.அதிக வேகத்துடன் பாயும். அத்துடன் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை வெற்றிகரமாகச் செலுத்தும்.  
இப்போது செலுத்தப்பட உள்ள ஜி.எச்.எல்.வி (மார்க் 2 ) ராக்கெட் கூட நமக்குப் போதாது.

 ஆகவே தான் இதை விட இன்னும் திறன் கொண்டஜி.எஸ்.எல்.வி - மார்க் 3 ராக்கெட் உருவாக்கப்பட்டு வருகிறது. இது இன்னும் சோதித்துப் பார்க்கும் கட்டத்தை எட்டவில்லை. இது நான்கு முதல் ஐந்து டன் எடை கொண்ட செயற்கைக்கோளை 35 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்கு செலுத்தும் திறன் கொண்டது. நமக்கு இப்போது அந்த அளவு எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை உயரே செலுத்தியாக வேண்டிய அவசியம் உள்ளது.

தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் நமது அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகின்றன. முதலாவதாக  நாம் டிவியில் பார்க்கிற நிகழ்ச்சிகள் செயற்கைக்கோள் மூலமாகத்தான் நம்மை வந்தடைகின்றன. பலருக்கும் இது தெரிந்திருக்கலாம். ஆனால் இவ்வித செயற்கைக்கோள்கள் மேலும் பல பணிகளைச் செய்கின்றன.பங்கு மார்க்கெட் வர்த்தகம் இவை மூலம் தான் நடைபெறுகின்றன.

 பல தனியார் நிறுவனங்களின் தகவல் தொடர்புப் பணிகள் இவற்றின் மூலமாகத் தான் நடபெறுகின்றன. ஒரு மருந்த்துவமனையில் நடக்கின்ற அபூர்வமான அறுவை சிகிச்சையை வேறு மருத்துவமனைகளில் நேரடியாகக் காண உதவுகின்றன. கல்வித் துறையிலும் இவற்றின் பங்கு உள்ளது. தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இல்லாவிடில் நாட்டில் பல முக்கிய பணிகள் ஸ்தம்பித்து விடும் என்ற நிலை உள்ளது.

நாட்டில் தகவல் தொடர்புத் தேவைகள் அதிகரித்து வருகின்றன.. பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.ஆகவே தான் கடந்த பல ஆண்டுகளில் மேலும் மேலும் இவ்வித செயற்கைக்கோள்கள் உயரே செலுத்தப்படுகின்றன.

 இப்போது பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே இந்தியாவைப் பார்த்த மாதிரியில் நம் தலைக்கு மேலே 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் 13 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் செயல்பட்டு வருகின்றன. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஆனாலும் இது போதவில்லை.

இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலாவதாக ஒரு தகவல் தொடர்பு செயற்கைக்கோளின் ஆயுள் சுமார 12 ஆண்டுகள். ஆகவே ஏற்கெனவே உயரே உள்ள ஒரு செயற்கைக்கோளின் ஆயுள் முடிந்து விட்டால் அந்த இடத்தை நிரப்ப புதிதாக ஒன்றைக் காலாகாலத்தில் செலுத்தியாக வேண்டும். இரண்டாவதாக நாட்டில் புதிது புதிதாக டிவி சேனல்கள் தோன்றி வருகின்றன.

 அத்துடன் கிண்ண வடிவ ஆண்டெனாக்கள் மூலம்  டிவி சேனல்களை அளிக்கும் தனியார் நிறுவனங்கள் அதிகரித்து விட்டன.  . இவை தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களில் தங்களுக்கு மேலும் டிரான்ஸ்பாண்டர்களை ஒதுக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன. வேறு தரப்பினரும் இவ்விதம் கோருகின்றனர.

தகவல் தொடர்பு செயற்கைகோள்களில் உள்ள டிரான்ஸ்பாண்டர் என்னும் கருவிகளே கீழிருந்து டிவி நிறுவனங்கள் போன்றவை அனுப்பும் சிக்னல்களைப் பெற்று அவை இந்தியா முழுவதிலும் கிடைக்கும்படி செய்கின்றன.

இப்பிரச்சினையை சமாளிக்கும் நோக்கில் தான் இஸ்ரோ நிறுவனம் மேலும் அதிக எடை கொண்ட மேலும் அதிக டிரான்ஸ்பாண்டர்களைக் கொண்ட செயற்கைக்கோள்களைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது. உதாரணமாக 1995 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட இன்சாட் 2 சி செயற்கைக்கோளின் எடை 2106 கிலோ கிராம். 2003 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட 3 ஏ செயற்கைக்கோளின் எடை 2950 கிலோ கிராம்

. இத்துடன் ஒப்பிட்டால் 2012 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட ஜிசாட் -10 செயற்கைக்கோளின் எடை 3455 கிலோ கிராம். இவற்றில் இடம் பெற்ற டிரான்ஸ்பாண்டர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது .இன்சாட் 2 சி செயற்கைக்கோளில் 20 டிரான்பாண்டர்களே இடம் பெற்றிருந்தன. ஆனால் ஜிசாட்- 10 செயற்கைக்கோளில் 30 டிரான்ஸ்பாண்டர்கள் இடம் பெற்றிருந்தன.  இவை அனைத்தும் ஏரியான் ராக்கெட் மூலமே செலுத்தப்பட்டவை.

அடுத்த சில ஆண்டுகளில் செலுத்தப்பட இருக்கும் ஜிசாட் 11 செயற்கைக்கோள் நாலரை டன் எடை கொண்டதாகவும் 40 டிரான்ஸ்பாண்டர்களைக் கொண்டதாகவும் விளங்கும். ஒரு வேளை இது இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்படலாம்.

    எடை மிக்க செயற்கைக்கோள்களைத் தயாரிக்கும் திறன் இஸ்ரோவிடம் உள்ளது.இது விஷயத்தில் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும்.சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட இஸ்ரோ ஆரம்ப முதல் ஒரு தெளிவான கொள்கையைப் பின்பற்றி வந்துள்ளது. அதாவது செயற்கைக்கோள் தயாரிப்பையும் ராக்கெட்டுகளை உருவாக்குவதையும் ஒன்றோடு ஒன்று முடிச்சுப் போடவில்லை.

 சக்திமிக்க ராக்கெட்டுகளை உருவாக்கிய பின்னரே பெரிய செயற்கைக்கோள்களைத் தயாரிப்பது என்ற கொள்கையைப் பின்பற்றவில்லை. இஸ்ரோ உருவாக்கிய ஆர்யபட்டா என்னும் முதல் செயற்கைக்கோளின் எடை 360 கிலோ கிராம். அதைச் செலுத்த அப்போது இந்தியாவிடம் ராக்கெட் கிடையாது. 1975 ஆம் ஆண்டில் ஆர்யபட்டா ரஷியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ரஷ்ய ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட்டது. அதற்கு ஐந்து ஆண்டுகள் கழித்து 1980 ஆம் ஆண்டில் இந்தியா உருவாக்கிய எஸ்.எல்.வி என்னும் எளிய ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ரோகிணி செயறகைக்கோளின் எடை 30 கிலோ கிராம்.

செயற்கைக்கோள் தயாரிப்பில் காணப்பட்ட வேகமான முன்னேற்றத்தை நம்மால் ராக்கெட் தயாரிப்பில் காண முடியாமல் போய் விட்டது. இப்போது செலுத்தப்பட இருக்கும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் இந்திய கிரையோஜெனிக் எஞ்சினின் திறன் உறுதிப்படுத்தப்படுமானால் ராக்கெட் துறையில் இனி வேகமான முன்னேற்றத்தைக் காண இயலும்.

  (இக்கட்டுரை தி ஹிந்து தமிழ் பதிப்பின் ஜனவரி 2ம் தேதி இதழில் வெளியாகியது. அது இங்கே அளிக்கப்பட்டுள்ளது)

14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கத்திற்கு நன்றி ஐயா... அனைத்தும் நல்லபடியாக நடக்கட்டும்...

Sudhakar Shanmugam said...

மிகத்தெளிவான, அருமையான கட்டுரை. எங்கள் அனைவருக்கும் புத்தாண்டு பரிசாக நீங்கள் கொடுத்த பதிவுக்கு நன்றி

S.சுதாகர்

Anonymous said...

GSLVவெற்றி பெறும்.
அறிவியல் படிப்பவர்களின் பிதாமகனாக ISRO தொடரவேண்டும்

ABUBAKKAR K M said...

வணக்கம்.
இந்த பதிவில் , அதிகமான விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இஸ்ரோவின் உழைப்பு வீண் போகாது.
வெற்றி பெறும்.
<> கே.எம்.அபுபக்கர்
கல்லிடைக்குறிச்சி .

Felix Raj said...

thanks for sharing... ....

Anandakumar Muthusamy said...

GSLV is going to create a new history in our space research...

Anandakumar Muthusamy said...

GSLV is going to create a new history in our space research...

kaathal said...

உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன், நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன். அருமை.

Anonymous said...

Thanks for sharing...

Anonymous said...

வெற்றிகரமாக ஏவப்பட்டது ஜிஎஸ்எல்வி டி 5..
Feeling Proud..
Wishes for GSLV Mark 3..

என்.ராமதுரை / N.Ramadurai said...

Anonymous
இந்த வெற்றி இந்தியர் அனைவரும் பெருமைப்படக்கூடிய வெற்றி. இது பல வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Anonymous said...

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி-டி5-செய்தி

இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவிற்கு வாழ்த்துக்கள்,,
இந்த மாதிரி மக்களுக்கு உபயோகமான ஆராய்ச்சிக்காக ராக்கெட் செலுத்துவதில் பயன் உள்ளது,
அதைவிடுத்து செவ்வாய் கிரகணத்தை ஆராய்ச்சி பண்றேன்னு மக்களின் வரிபணத்தை வீண் விரயம் செய்வதை
நிறுத்தினால் நாட்டுக்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கும் நல்லது என்றே தோன்றுகிறது !!!

Anonymous said...

செவ்வாய் ஆராய்சியில் வரிப்பணம் வீணாகுது என்கிற புலம்பல் எல்லாம் அர்த்தம் அற்றவை.

தொடர்ந்து ISRO செயல்திட்டங்களில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

என்.ராமதுரை / N.Ramadurai said...

Anonymous
செவ்வாய் கிரகத்துக்கு ( கிரகணத்துக்கு அல்ல) ஒரு விண்கலத்தை அனுப்புவது வீண் செலவு என்று சொல்ல முடியாது.இப்படி வாதிக்க முயன்றால் எவ்வளவோஆராய்ச்சிகளை வீண் செலவு என்று வருணிப்பதில் போய் முடியும்.சந்திரனுக்கு ம்னிதனை அல்லது ஆளில்லா விண்கலத்தை அனுப்புவதும் வீண் செலவு என்று தான் சொனனார்கள்.
சந்திரனில் கிடைக்கிற ஹீலியம்-3 வாயுவை சேகரித்துக் கொண்டு வந்தால் மின்சாரப் பற்றாக்குறைப் பிரச்சினையை எளிதில் தீர்த்து விடலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது இப்போதைக்கு சாத்தியமாகுமா என்பது வேறு பிரச்சினை.பின்னர் ஒரு காலகட்டத்தில் ஏதேனும் ஒரு நாடு சந்திரனிலிருந்து ஹீலியத்தை அள்ளிக் கொண்டு வரும் நிலை ஏற்பட்டால் நாம் முந்திக்கொள்ளாமல் போய் விட்டோமே என்று தோன்றும்.

Post a Comment