Jan 13, 2015

சூரியனைச் சுற்றி அற்புத அரை வளையங்கள்

Share Subscribe
பகலில் சூரியனைச் சுற்றி அல்லது இரவில் முழு நிலவைச் சுற்றி வளையம் காட்சி அளிப்பதைப் பலரும் எப்போதாவது ஒரு முறை பார்த்திருக்கலாம். இது வியப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்.

ஆனால் அமெரிக்காவில் நியூ மெக்சிகோ மாகாணத்தில் சூரிய உதயத்தின் போது தென்பட்ட காட்சி உண்மையில் மிக அபூர்வமானதே. கீழே உள்ள படத்தைப் பார்த்தால் புரியும்.

தலைப்பில் இவற்றை ’வானவில்’ என்று குறிப்பிடாமல் ’அரை வளையங்கள்’ என்று குறிப்பிட்டதற்குக் காரணம் உண்டு. கீழே உள்ள படத்தில் இவை வானவில் போன்று காட்சி அளிக்கின்றன. ஆனால் அவை வானவில் அல்ல.

வானவில் என்பது காலையில் அல்லது மாலையில் சூரியன் இருக்கின்ற திசைக்கு நேர் எதிரே மழைத்தூறல் இருந்தால் மட்டுமே தோன்றுவது. அதாவது சூரியனுக்கு எதிர்ப்புறத்தில் தான் வானவில் தோன்றும். ஆகவே தான் அரை வளையங்கள் என்று வருணிக்கப்பட்டுள்ளது.

சூரியனைச் சுற்றி  வானவில் மாதிரியில் பல அரை வளையங்கள் அமைந்துள்ளன.
2015 ஜனவரி 9 ஆம் தேதி  அமெரிக்காவில் நியூ மெக்சிகோ மாநிலத்தில்
எடுக்கப்பட்ட படம். நன்றி : Earthsky, Joshua Thomas.
இப்படத்தை எடுத்தவர் ஜோஷுவா தாமஸ். டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள அமெரிக்க வானிலை சர்வீஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் இப்படத்தை வெளியிட்டுள்ளது.

முதலில் ஒரு விளக்கம். பூமியிலிருந்து சூரியன் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் சூரியனை அல்லது சந்திரனைச் சுற்றிக் காணப்படும் வளையமானது நமது காற்று மண்டலத்துக்குள் உள்ள நிலைமைகள் காரணமாக ஏற்படுவதாகும். எனவே ஒருவர் காற்று மண்டலத்துக்கு மேலே போய் சூரியனைப் பார்ப்பதாக வைத்துக் கொண்டால் இவ்விதக் காட்சி தெரியாது.

2013 மே 14 ஆம் தேதி அமெரிக்காவில்
நியூ ஜெர்சி மாநிலத்தில் எடுக்கப்பட்ட படம்.
படம் நன்றி  Earthsky, Stacey Baker-Bruno
காற்று மண்டலத்தின் உயர் அடுக்கில், அதாவது சுமார் ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர் உயரத்தில், மிக மெல்லிய மேகங்கள் அமைந்திருக்கும். இந்த மேகங்களில் நுண்ணிய ஐஸ் படிகங்கள் இருக்கும்.

அவ்வித மேகங்களுக்கு மேலே சூரியன் இருக்கும் சமயத்தில் இந்த மேகங்கள் ஊடே வரும் சூரிய ஒளியை பல லட்சம் ஐஸ் படிகங்கள் சிதறச் செய்கின்றன. அத்துடன் சூரிய ஒளியை பிரதிபலிக்கவும் செய்கின்றன.

இவ்வித நிலைமைகளில் தான் சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றுகிறது. இதில் ஒரு முக்கிய அம்சமும் உள்ளது. நீங்கள் அந்த ஒளி வட்டத்தைக் காணும் அதே சமயத்தில் 10 மீட்டர் தொலைவில் வேறு ஒருவர் நிற்பதாக வைத்துக் கொள்வோம்.

அவரது பார்வையில் தென்படும்  ஒளி வட்டத்தை வேறு ஐஸ் படிகங்கள் ஏற்படுத்துபவையாக இருக்கும்.

2012 ஆம் ஆண்டு டிசம்பரில் அமெரிக்காவில் மிசவுரி மாகாணத்தில்
சந்திரனைச் சுற்றித் தெரிந்த ஒளி வட்டம்.
படம்: நன்றி Earthsky, Danny Brocer Jensen
தவிர, ஒளி வட்டத்தின் உட்புறத்தில் சிவப்பு நிறம் சற்று அழுத்தமாகக் காணப்படும். வட்டத்தின் வெளிப்புறத்தில் நீல நிறம் வெளிறிக் காணப்படும்.

இரவில் சந்திரனின் ஒளி மங்கலானது என்பதால் ஒளி வட்டம் மங்கலாகவே தென்படும்.

1 comment:

துளசி கோபால் said...

வாவ்! அற்புதம்!

எங்களுக்கு சிலநாட்களா சூரியன் தரிசனமே இல்லை. இத்தனைக்கும் இது எங்கள் சம்மர்:( வெறும் 15 டிகிரி:(

Post a Comment