Jan 29, 2015

புயலின் மையத்தில் தோன்றிய மின்னல்

Share Subscribe
புயலின் சீற்றத்தையும் கொடுமையையும் நாம் அறிவோம். ஆனால் புயலின் மையம் எப்படி இருக்கும் என்பதை நம்மால் பார்க்க இயலாது.

ஆனால் புயலை சுமார் 350 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து படம் எடுக்க முடியும். சர்வதேச விண்வெளி நிலையம்(International Space Station) எனப்படும் செயற்கைக்கோள் அந்த அளவு உயரத்திலிருந்து பூமியைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அங்கிருந்து புயலைப் படம் பிடிக்க முடியும். புயலின் உயரம் மிஞ்சிப் போனால் 18 கிலோ மீட்டர் தான். ஆகவே மேலிருந்தபடி புயலைப் படம் பிடிப்பது கஷ்டமான விஷயமல்ல.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் அவ்வளவு உயரத்திலிருந்து இப்போது ஒரு புயலைப் படம் பிடித்து அனுப்பியுள்ளனர்.  இவ்விதம் புயலைப் படம் பிடிப்பது என்பது புதிது அல்ல.

புயலின் மையம் அருகே மின்னல். அந்த மின்னலின் விளைவாக
புயலின் மையம் ஒளிர்ந்து காணப்படுகிறது.உற்றுப்பார்த்தால் புயலின் சுழற்சி தெரியும்.
 படம். நன்றி NASA/Christoforetti
கடந்த பல ஆண்டுகளில் இந்துமாக்கடல், பசிபிக் கடல், அட்லாண்டிக் கடல் ஆகியவற்றில் தோன்றிய பல புயல்கள் விண்வெளியிலிருந்து படம் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் செயற்கைக்கோள்கள் இப்படியான படங்களை பல தடவை அனுப்பியுள்ளன.

ஆனால் புயலின் மையத்தில் மின்னல் ஏற்பட்ட அந்த கணத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது என்பது தான் இப்போது எடுக்கப்பட்டுள்ள படத்தின் தனிச் சிறப்பாகும்.

பொதுவில் புயலின் போது மின்னல்கள் தோன்றுவதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படியே மின்னல் தோன்றினாலும் புயலின் வெளி விளிம்புகளில் மின்னல் தோன்றலாம் என்றும் புயலின் மையத்தில் மின்னல் தோன்றுவது மிக அபூர்வம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மேற்படி புயல் இந்துமாக்கடலில் எங்கே இருந்தது
என்பதை சிவப்பு நிற அம்புக் குறி காட்டுகிறது.
ஆப்பிரிக்கா அருகே  மடகாஸ்கர் தீவுக்குக் கிழக்கே இந்துமாக் கடலில்  ”பான்சி” என்ற புயல் ஜனவரி 13 ஆம் தேதி  இவ்விதம் படமெடுக்கப்பட்டுள்ளது. புயலின் மையம் அருகே மின்னல் தோன்றுவதைப் மேலே உள்ள முதல் படம்  காட்டுகிறது.
அதே புயலின் வேறு ஒரு தோற்றம்.
ஐரோப்பிய விண்வெளி அமைப்பைச் சேர்ந்த பெண் விண்வெளி வீரரான சமந்தா கிறிஸ்டோஃபொரெட்டி இந்தப் படத்தை எடுத்து அனுப்பினார். அவர் இப்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.


இத்தாலியைச் சேர்ந்த சமந்தா (வயது 37) விண்வெளிக்குச் செல்வது இதுவே முதல் தடவையாகும். அந்த முதல் தடவையிலேயே அவர் முத்திரை பதித்துள்ளார்.

3 comments:

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

புது விசயம் .

Unknown said...

ஐயா

அழிவை ஏற்படுத்தும் மனிதர்கள் எவ்வளவோ உயிர் கொள்ளும் ஆயுதங்களை கண்டுபிடித்து விட்டார்கள்

எனது கேள்வி எதிர்காலத்தில் இவர்கள் இயற்கையை ஆயுதமாக பயன் படுத்த முடியுமா அதாவது செயற்கை புயலை உருவாக்குவது போன்ற நிகழ்வுகளை ????

என்.ராமதுரை / N.Ramadurai said...

Siva Ram
செயற்கையாகப் புயலை உண்டாக்க முடியுமா என்பது பற்றி ஒரு சில நாடுகள் ஏற்கெனவே ஆராய்ச்சி செய்து பார்த்து விட்டார்கள். அது நடைமுறையில் சாத்தியமற்றது என்பது ஏற்கெனவே அறியப்பட்டு விட்டது.
புயல் கிடக்கட்டும், செயற்கையாக மழையை உண்டாக்குவதிலும் ஏதோ ஓரளவில் தான் வெற்றி கிடைத்துள்ளது. அதுவும் நிச்சயமான பலன் கிட்டவில்லை. இன்னும் சொல்லப் போனால் மழை பெய்வது எப்படி என்பதை இன்னும் முழுமையாக அறிய முடியவில்லை. அது அப்படியே இருப்பது தான் நல்லது. இல்லாவிடில் ஒரு நாடு மேகங்களை எல்லாம் மடக்கி தங்கள் நாட்டில் மழை பெய்யும்படி செய்து அடுத்த நாட்டில் மழை இல்லாதபடி செய்து விடும்.

Post a Comment