Mar 12, 2015

உலகைச் சுற்றி வரும் சூரிய விமானம்

Share Subscribe
சூரிய ஒளியைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கலாம். அந்த மின்சாரத்தைக் கொண்டு மோட்டார்களை இயக்கலாம். மோட்டார்கள் மூலம் புரோப்பல்லர்களை - விமானத்தின் சுழலிகளை -- இயக்கலாம். சூரிய விமானம் ரெடி.

இப்படியாக உருவாக்கப்பட்ட ஒரு விமானம் உலகைச் சுற்றி வருவதற்காகக் கிளம்பியிருக்கிறது. சூரிய ஒளியால் மட்டுமே இயங்குவதால் இந்த விமானத்தின் பெயர் சோலார் இம்பல்ஸ்.  அபு தாபியில் திங்களன்று கிளம்பிய அந்த விமானம் ஓமான் வழியாக இந்தியாவில் ஆமதாபாத்தில் வந்து இறங்கியது. அடுத்து வாரணாசி.

அரபுக் கடல் மேலாக சோலார் இம்பல்ஸ் விமானம்
 பின்னர்  இந்தியாவிலிருந்து புறப்பட்டு மியான்மார். அடுத்து சீனா. பிறகு பசிபிக் கடலைக் கடந்து வட அமெரிக்கா. அமெரிக்கக் கண்டம் மீதாகப் பறந்து முடித்த பின் அட்லாண்டிக்கைக் கடந்தாக வேண்டும். பிறகு ஐரோப்பா அல்லது வட ஆப்பிரிக்கா வழியே பழையபடி அபு தாபி வந்து சேர்ந்தாக வேண்டும். மொத்தம் 35 ஆயிரம் கிலோ மீட்டர் பறக்க வேண்டும்.

புரொப்பல்லருடன் கூடிய விமானங்கள் விசேஷ பெட்ரோலில் இயங்குகின்றன. பல நூறு பயணிகளுடன் நாடுகளுக்கு இடையே பறக்கும் விமானங்கள் உயர் ரக கெரசினைப் பயன்படுத்துகின்றன. சோலார் இம்பல்ஸ் விமானத்துக்கு இவ்விதமான எரிபொருள் தேவையே இல்லை. அந்த வகையில் இது அபூர்வமான விமானமாகும்.

சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுவதற்கென விமானத்தின் இரு இறக்கைகளிலும் 17 ஆயிரம் சோலார் செல்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆகவே இதன் இறக்கைகள் மிகவும் நீளமானவை (72 மீட்டர்). இவ்வளவு சோலார் செல்கள் இருந்தாலும் இந்த விமானத்தில் இரண்டு பேருக்கு மேல் ஏறிச் செல்ல முடியாது. அதன் திறன் அவ்வளவு தான்.

சோலார் இம்பல்ஸ் பறந்து  செல்லும் பாதை
சோலார் இம்பல்ஸ் விமானம் பொதுவில் மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக்கூடியதாகும். பகலில்   சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரம் விமானத்தில் உள்ள பாட்டரிகளில் சேமிக்கப்படும் என்பதால் இரவிலும் இந்த விமானத்தை ஓட்டிச் செல்ல முடியும்.

ஆண்ட்ரே போர்ஷ்பெக், பெர்ட்ராண்ட் பிக்கார்ட் ஆகிய இருவரும் தான் மாறி மாறி விமானத்தை ஓட்டிச் செல்வர். வேகம் குறைவு என்பதாலும் வழியில் ஆங்காங்கு தங்கிச் செல்வதாலும் உலகைச் சுற்றி வர அவர்களுக்கு ஐந்து மாதம் ஆகும்.  வானில் பறக்கின்ற நேரத்தை மட்டும் கணக்கிட்டால் 25 நாட்கள் பறக்க வேண்டியிருக்கும்.

 உலக சாதனை படைக்கும் ஆண்ட்ரே போர்ஷ்பெக்,  பெர்ட்ராண்ட் பிக்கார்ட்
பசிபிக் கடலைக் கடப்பது தான் பெரிய சவாலாகும். வழியில் எங்கும் இறங்க இயலாது என்பதால் தொடர்ந்து ஐந்து நாட்கள் பறந்தாக வேண்டும். பின்னர் அட்லாண்டிக் கடலைக் கடப்பது  இன்னொரு சவாலாகும்.

கடலைக் கடக்கும் போது விமானத்தில் கோளாறு ஏற்படுமானால் கடலில் குதித்து உயிர் தப்புவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

போர்ஷ்பெக்கும் பிக்கார்டும் சேர்ந்து தான் இந்த விமானத்தை உருவாக்கியுள்ளனர். இவர்களில் பிக்கார்டின் தந்தை ஜாக்கஸ் பிக்கார்ட் 1960 ஆம் ஆண்டில் வால்ஷ் என்பவருடன் சேர்ந்து நீர்மூழ்கு கலம் மூலம் உலகின் கடல்களில் மிக ஆழமான இடத்துக்குச் சென்று சாதனை படைத்தவர்.

பிக்கார்டின் பாட்டனார் ஆகஸ்டே பிக்கார்ட் 1931  வானில் மிக உயரத்துக்குச் சென்று சாதனை படைத்தவர். பேரன் பிக்கார்ட் புதிய வகையில் சாதனை நிகழ்த்த முற்பட்டுள்ளதில் வியப்பில்லை.

சூரிய ஒளியால் விமானத்தை ஓட்ட முடியும் என்றால் எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்ல பயணிகள் இத்தகைய விமானத்தில் செல்ல வழி பிறக்குமா என்ற கேள்வி எழும். இக்கட்டத்தில் இது பற்றி எதுவும் சொல்ல இயலாது.

 சொல்லப் போனால் அமெரிக்காவில் ரைட் சகோதரர்கள் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் விமானத்தை உருவாக்கியதற்குப் பல ஆண்டுகள் கழித்துத் தான் முதலாவது பயணி விமானத்தில் ஏறிச் சென்றார்.

சோலார் இம்பல்ஸ் விமானத்தின் முயற்சியானது ஒரு துணிகர பரிசோதனை. இப்போதைக்கு அது அவ்வளவு தான்.

ஆள் யாரும் இல்லாமல் சூரிய ஒளி மூலம் வானில் தொடர்ந்து ஆறு மாத காலம் பறந்து கொண்டிருக்கக்கூடிய விமானத்தை உருவாக்குவது தங்களது எதிர்காலத் திட்டம்  என்று போர்ஷ்பேக்கும் பிக்கார்டும் கூறியுள்ளனர்.

அவ்வித விமானம் தகவல் போக்குவரத்து, வானிலை, தேடுதல் பணி போன்று பல பணிகளுக்கு உதவியாக இருக்கலாம்.

7 comments:

Iam in Internet said...

பிரமாதம் சார். நிகழ்கால நடப்பான சூரிய விமானத்தைப் பற்றி விலாவாரியாகத் தகவல்களைத் தந்துள்ளீர்கள். உங்களுக்கு ஒரு சபாஷ்.

selvam said...

அய்யா அவர்களுக்கு வணக்கம்,
தங்களுடைய அறிவியபுரம் இணைய நூலகத்தில் எண்ணற்ற அறிவியல் தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி,
தங்களின் இந்த முயற்சியால் என்னைபோன்ற அறிவியல் அறிவை வளர்த்துக்கொள்ள முற்படுவர்களுக்கு மிகவும் பேருதவியாக இருக்கும். கடந்த ஒரு மாதகாலமாக தங்களின் நூலகத்தில் எண்ணற்ற அறிவியலை தெரிந்து கொண்டுள்ளேன். நன்றியுடன் பெ.சோலை செல்வம் / பெரம்பலூர்

ABUBAKKAR K M said...

வணக்கம் அய்யா,
தகவல் “ ஆச்சர்யம் + எதிர்கால நம்பிக்கை + பயனுள்ளது ” ஆகும் .
பரிசோதனை முடிவுகளின் நடைமுறைச் சிக்கல்களை காலப்போக்கில்
நீக்கிவிடுவது சாத்தியம்தான் . மனிதகுல வரலாறும் அதுவே .
<> கோ.மீ.அபுபக்கர்
கல்லிடைக்குறிச்சி 627416
நாள் 13 03 2015

Anonymous said...

ஏன் அவர்கள் ஆமதாபாதில் நான்கைந்து நாட்கள் தங்கி விட்டார்கள்?
சரவணன்

என்.ராமதுரை / N.Ramadurai said...

சரவணன்
குஜராத் வட்டாரத்தில் வானிலை சரியில்லை. நல்ல மழை. ஆகவே ஆமதாபாத்திலிருந்து கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ராஜரத்தினம் said...

அப்ப அதே போல மழை காலம் கடல் மேல் பறக்கும்போது வந்தால் என்ன செய்வது..

என்.ராமதுரை / N.Ramadurai said...

ராஜரத்தினம்
இவ்வித விமானம் பறப்பதற்கு வானிலைத் தகவல்கள் மிக முக்கியம். எனவே தான் இந்த இருவரும் கோடைக்காலத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

Post a Comment