Aug 6, 2015

மலேசிய விமானப் பகுதி ரியூனியன் தீவில் ஒதுங்கியது எப்படி?

Share Subscribe
கடந்த ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய ஒரு விமானம் நடுவானில் மர்மமான முறையில் மறைந்து போயிற்று.  இந்த நிலையில் இப்போது இந்துமாக் கடலில் உள்ள ரியூனியன்(Reunion) தீவில் கரை ஒதுங்கிய விமானப் பகுதியானது காணாமல் போன அந்த விமானத்தின் ஒரு பகுதியே என அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நடுவானில் காணாமல் போன  MH 370 என்னும் அந்த விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட 239 பேர் பயணித்தனர். அவர்களில் 152 பேர் சீனப் பயணிகள். ஐந்து பேர் இந்தியப் பயணிகள்.
ரியூனியன் தீவில் கரை ஒதுங்கிய விமான இறக்கைப் பகுதி
அந்த விமானம் ஆஸ்திரேலியாவுக்கு மேற்கே கடலில் விழுந்து மூழ்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. விமானம் விழுந்ததாகக் கருதப்பட்ட கடல் பகுதியில் கடந்த பல மாதங்களாகத் தீவிரமாகத் தேடியும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

பொதுவில் ஒரு விமானம் கடலில் விழுந்தால் ஏதாவது சிறு பகுதிகளாவது கடலில் மிதக்கும். ஆனால் மலேசிய விமான விஷயத்தில் அப்படியான எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.

இப்படியான நிலையில் தான் கடந்த ஜூலை 29 ஆம் தேதி ஆப்பிரிக்காவுக்கு கிழக்கே ரியூனியன் தீவில் விமானத்தின் இறக்கையின் ஒரு பகுதி கரை ஒதுங்கியது.
விமான இறக்கைப் பகுதி இன்னொரு காட்சி
இப்படி ஒதுங்கிய பகுதியின் நீளம் சுமார் இரண்டு மீட்டர். முதலில் அந்த இறக்கைப் பகுதி போயிங் நிறுவனம் தயாரித்த 777 விமானத்தின் பகுதியே என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

பிரான்ஸ் நாட்டில் அந்த விமான  இறக்கைப் பகுதியை விசேஷ முறைகளில் ஆராய்ந்த போது அது MH 370  விமானத்தின் பகுதியே என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  அப்பகுதி எப்படி ரியூனியன் தீவில் கரை ஒதுங்கியது என்பது புதிய புதிரைக் கிளப்பியுள்ள்து. ஆனால் இதில் பெரிய மர்மம் எதுவுமில்லை.
காணாமல் போன மலேசிய  MH 370 விமானம்
கடலில் விழுகின்ற பொருள் எதுவும் ஏதாவது ஒரு க்ட்டத்தில் கரை ஒதுங்கும். ஆஸ்திரேலியாவுக்கு மேற்கே கடலில் விழுந்ததாகக் கருதப்படும் அந்த விமானத்தின் பகுதி ரியூனியன் தீவில் கரை ஒதுங்கியதிலும் பெரிய மர்மம் கிடையாது.

இந்துமாக் கடலில் உள்ளபடி இயற்கையாக கடல் நீரோட்டங்கள் உள்ளன. இவற்றில் இந்துமாக் கடல் சுழல் ( Indian Ocean Gyre) தான் பிரதானமானது. இதன் அங்கமாகக் கடல் நீரோட்டங்கள் உள்ளன. பூமி நடுக்கோட்டு தென்  நீரோட்டம் (South Equitorial Current) போன்ற நீரோட்டங்கள் இதில் அடங்கும்.

மலேசிய விமானம் விழுந்ததாகக் கருதப்படும் இடத்துக்கு அருகில் உள்ளது ஆஸ்திரேலியாவின் மேற்குக் கரையாகும். ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மலேசிய விமானப் பகுதி மேற்கு ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்காமல் பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ரியூனியன் தீவில் கரை ஒதுங்கியதற்கு கடல் நீரோட்டமே காரணம்.
இந்து மாக்கடலில் உள்ள நீரோட்டத்தைக்காட்டும் படம்
மலேசிய விமானத்தின் இடிபாடுகளை கடலில் தேட முற்பட்ட நிபுணர்களுக்கு கடல் நீரோட்டங்கள் பற்றி நன்றாகவே தெரியும். ஆனால் இந்த விமானத்தின் இடிபாடுகள் தென்படுகின்றனவா என்று முதலில் தென் சீனக் கடலில் தேடினர். பின்னர் அந்தமான் கடல் பகுதியில் தேடினர். பின்னர் தான் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள கடல் பகுதியில் தேட முற்பட்டனர்.

விமானம் ஒன்று கடலில் விழுந்தால் மிதக்கக்கூடிய இடிபாடுகள் சில நாட்களுக்குத் தான் கடலில் மிதக்கும். பின்னர் அவையும் மூழ்க முற்படும். ஒரு விமானம் கடலில் நிச்சயமாக இந்த இடத்தில் தான் விழுந்தது என்று உடனேயே தெரிய வந்தால் மிதக்கும் இடிபாடுகளைஅவை மூழ்கு முன்னர் கண்டுபிடித்து விட முடியும்.
ரியூனியன் தீவு உள்ள இடத்தைக் காட்டும் படம்
ஆனால் மலேசிய விமானம் கடலில் விழுந்ததா என்பதே ஆரம்பத்தில் நிச்சயமாகத் தெரிய வரவில்லை. சொல்லப் போனால் அந்த விமானம் எங்கோ கடத்திச் செல்லப்பட்டிருக்கலாமோ  என்ற சந்தேகம் எழுந்தது. இந்த சந்தேகத்தின் பேரில் பல புரளிகளும் கிளம்பின. இதனால் தேடுதல் பணியில் பிரச்சினைகள் ஏற்பட்டன.தவிர்க்க முடியாதபடி தாமதங்களும் ஏற்பட்டன.

தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய அரசு அமைப்பானது (Australian Transport Safety Bureau)  ஒரு  கட்டத்தில் கடல் நீரோட்டங்களைக் கவனத்தில் கொண்டு கூறுகையில் மிதக்கக்கூடிய  இடிபாடுகளில் சில முதலில் வடக்கு நோக்கிச் சென்று பின்னர் மேற்கு நோக்கி ரியூனியன் தீவு வரையில் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டது. அந்த அமைப்பு கருதியபடியே விமான இறக்கைப் பகுதி அந்தத் தீவில் கரை ஒதுங்கியுள்ளது.

உலகின் கடல்களில் பல நீரோட்டங்கள் உள்ளன. வெதுவெதுப்பான நீரைக் கொண்டு செல்லும் நீரோட்டங்கள் உள்ளன. குளிர்ச்சியான நீரைக் கொண்டு செல்லும் நீரோட்டங்களும் உள்ளன.


9 comments:

Anonymous said...

excellent article sir

rmn said...

அறிய வேண்டிய தகவல்
பகிர்ந்தமைக்கு நன்றி

VijayaRaghavan said...

Sir,
Live GPS tracking ஏன் விமானங்களில் install செய்யப்படவில்லை?

என்.ராமதுரை / N.Ramadurai said...

VijayaRaghavan
GPS கருவி விமானம் எங்கே இருக்கிறது என்பதை விமானிக்குக் காட்டிக் கொண்டிருக்கும். ஏர் கண்ட்ரோலருக்கு காட்டாது. விமானம் புறப்பட்டதிலிருந்து ஒவ்வொரு நிமிஷமும் அது எங்கே இருக்கிறது என்பதை விமான கண்ட்ரோலருக்குக் காட்டுகிற வேறுவித ஏற்பாடு சாத்தியமே. ஆனால் அதற்குப் பெரும் செலவாகும் என்பதால் அது பின்பற்றப்படுவதில்லை

Iam in Internet said...

சிறப்பான ஏற்றுக்கொள்ளகூடிய விளக்கம் தந்துள்ளீர்கள்.

Ash said...

அருமையான பதிவு. பலருடைய மனங்களிலும் உலவிக் கொண்டிருந்த ஐயங்களுக்கு சரியான விளக்கங்கள் அளித்துள்ளீர்கள். நன்றி.

basheer ahamed said...

நல்ல பதிவு... ஒரு ஐயம்..Indian ocean ஐ ஏன் இந்திய பெருங்கடல் என கூறாமல் இந்துமா கடல் என கூறுகிறீர்கள்?

என்.ராமதுரை / N.Ramadurai said...

basheer ahamed
இரண்டுமே ஒன்று தான். இந்தியப் பெருங்கடல் என்று சொன்னால் தப்பில்லை.

Anonymous said...

ஐயா

கட்டுரைக்கு மிக்க நன்றி.

Ocean currents ஐ பற்றிய விரிவாக தனியாக விளக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

நமது monsoon, weather changes ஆகியவை இந்த ocean current களினால் எப்படி நடக்கிறது, மாற்றம் பெறுகிறது என்று தெரிந்தால் நமது ஊரில் பெய்யும் மழை எப்படி உருவாகின்றது, நமக்கு வந்து சேர்கிறது என்ற புரிதல் உண்டாகும்.

மழை பொய்க்கும் போதும், திடீரென எதிர்பார்ப்புக்கு மீறி அதிகமாக பெய்யும் போதும், ஏன் இப்படி நிகழ்கிறது என்று வானவியல் அறிஞர்கள் கூறும் காரணங்களை திறம்பட புரிந்துகொண்டு தெளிவுற ocean currents (cold currents , warm currents , el nino , la nina ) பற்றிய அறிவும், புரிதலும் வழி வகுக்கும் அல்லவா ?

எனவே ocean currents பற்றிய விரிவான பதிவை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறோம் .

நன்றி,
சிவா

Post a Comment