சரி, வெயிலை எப்படி அளக்கிறார்கள்? .வெப்பமானி மூலம தான் என்பது எல்லோரும் உடனே சொல்லக் கூடிய விடை.ஆனால் வெப்பமானியை நல்ல வெயில் அடிக்கும் இடமாகப் பார்த்து மாட்டியிருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.
சொல்லப் போனால் வெப்ப்மானியானது காற்று புகும் வசதி உள்ள ஒரு பெட்டியில் தான் வைக்கப்படுகிற்து. தவிர, அது வெயிலை அளப்பதே கிடையாது. த்ரையிலிருந்து சுமார் நான்கு அல்லது ஆறு அடி உயரத்தில் இருக்கின்ற காற்றின் வெப்பத்தைத் தான் அளக்கிறது. ஆகவே உள்ளே காற்று எளிதில் புகும் வகையில் வெப்பமானிப் பெட்டியின் நான்கு புறங்களிலும் சாய்வான திறப்புகள் இருக்கும்.
திற்ந்த வெளியில் வெப்பமானி வைக்கப்பட்டுள்ள பெட்டி.இதன் நான்கு புறங்களிலும் உள்ள சாய்வான திறப்புகள் வழியெ காற்று உள்ளே செல்லும். |
சூரிய ஒளி தரையில் வந்து விழும் போது தரையை சூடாக்குகிறது. தரை சூடாகும் போது தரைக்கு சற்று மேலே உள்ள காற்று சூடாகிறது.இந்தக் காற்றின் வெப்பத்தைத் தான் வெப்பமானி அளக்கிறது. இதைத் தான் நாம் நேற்றைய வெயில் அளவு என்று கூறுகிறோம்.
வெப்பமானி எவ்விதமாக இருக்க வேண்டும். அதை எங்கு நிறுவ வேண்டும் எனபன பற்றி சர்வதேச அளவில் விதி முறைகள் உள்ளன. இவை உலக வானிலை அமைப்பு நிர்ணயித்தவை.
இதன்படி வெப்பமானி ஒரு மரப்பெட்டிக்குள்ளாக இருக்கும். அந்த மரப்பெட்டி திறந்த வெளியில் இருக்க வேண்டும். அருகே கட்டடங்கள் இருத்தல் கூடாது. மரங்கள் இருத்தல் கூடாது.அப்படி மரம் இருந்தால் மரத்தின் உய்ரத்தைப் பொருத்து வெப்பமானிக்கும் மரத்துக்கும் இடையே எவ்வளவு தூரம் இருக்க வேண்டும் என்று கணக்கு உள்ளது.
வெப்பமானி பெட்டியின் உட்புறம் |
ஒரு நகரில் கட்டடங்கள் நிறைய உள்ள இடத்தில் தார் ரோடில் தார் உருகும் அளவுக்கு வெப்பம் இருக்கின்ற அதே நேரத்தில் அருகே ஓரிடத்தில் புல் தரையில் வெறும் காலால் நிற்க இயலும். தோட்டங்களில் மர நிழலில் த்ரை சுடாது.ஆகவே தான் காற்றின் வெப்பத்தை அளக்கிறார்கள். ஆனாலும் ஆற்றின் கரையோரமாக ஜிலு ஜிலு காற்று அடிக்கலாம்.
அந்த அளவில் வெப்பமானி அளவிடுகின்ற -- காற்றின் வெப்பம் கூட ஓரள்வு இடத்துக்கு இடம் சற்றே மாறலாம். ஆகவே நாளிதழில் நீங்கள் படிக்கின்ற வெப்ப அளவு அந்த நகரில் எல்லா இடங்க்ளிலும் ஒரே சீராக உள்ள வெப்பம் அல்ல். வெப்பமானியில் பதிவாகி நாளிதழ்களில் பிரசுரிக்கப்படுவது குத்துமதிப்பான ஒன்றே.
![]() |
கோடைக் காலத்தில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழுவதால் வெயில் அதிகமாக இருக்கும். சூரியனின் கதிர்கள் சாய்வாக விழும் போது குளிர்காலமாக இருக்கும் |
பெரும்பாலும் பிற்பகல் சுமார் இரண்டு அல்லது இரண்டரை மணிக்குத் தான் வெப்பம் அதிகமாக இருக்கும். ஓரிடத்தில் அதிக பட்ச வெப்பமும் அந்த நேரத்தில் தான் வெப்பமானியில் பதிவாகிறது
இதற்குக் காரணம் உண்டு. வெயில் ஏற ஏறத் தரை மேலும் மேலும் சூடாகத் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் சூடேறிய தரையானது அதிக அளவில் வெப்பத்தை வெளியிட ஆரம்பிக்கிறது. பிற்பகல் இரண்டு மணி அளவில் இது ஏற்படுகிறது.
இவையெல்லாம் ஒரு புறம் இருக்க தமிழகத்தில் மே மாதத்தில் அதாவது இரண்டாவது மூன்றாவது வாரங்களில் வெயில் கடுமையாக இருப்பதற்குக் காரணம் உண்டு.சூரியன் அப்போது பூமிக்கு அருகில் இருப்பதாக சிலர் தவறாகக் கருதுவர்.
உண்மையில் சூரியன் ஆண்டுதோறும் ஜனவரி 4 ஆம் தேதி வாக்கில் தான் பூமிக்கு சற்றே அருகில் உள்ள்து.ஆனால் அப்போதோ பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள இடங்களில் குளிர் காலமாக உள்ளது. தமிழகத்திலும் தான்.
பூமியானது 23.5 டிகிரி சாய்வான நிலையில் சூரியனைச் சுற்றி வருகிறது. இதுவே உலகில் கோடைக்காலம் குளிர் காலம் ஏற்படுவதற்கான காரணமாகும்.
சூரியனின் கதிர்கள் எந்த்விடங்களில் எல்லாம் செங்குத்தாக விழுகிறதோ அந்த விடங்களில் எல்லாம் கோடைக்காலம் ஏற்படும்.பூமியின் இந்த சாய்மானம் காரணமாக சூரிய்ன தெற்கே போவது போலவும் வடக்கே போவது போலவும் தோன்றுகிறது.
அந்த வகையில் மார்ச் 23 ஆம் தேதி சூரியன் பூமியின் நடுக்கோட்டுக்கு நேர் மேலே இருந்தது. அதன் பிறகு அது மெல்ல மெல்ல வடக்கே நகர ஆரம்பித்தது.இப்போது சூரியன் தமிழகத்துக்கு நேர் மேலே இருக்கிறது. ஆகவே வெயில் அதிகமாக உள்ளது.
வடக்கு நோக்கி நகர்ந்து செல்லும் சூரியன் ஜூன் 21 ஆம் தேதி வாக்கில் கடக ரேகைக்கு( 23.5 வட்க்கு அட்ச ரேகை) நேர் மேலே இருக்கும்.. சூரியன் பிறகு தெற்கு நோக்கி அதாவது பூமியின் நடுக்கோட்டை நோக்கி நகர ஆரம்பிக்கும். இதன் விளைவாக சூரியன் இரண்டாம் தடவை தமிழகத்துக்கு நேர் மேலே இருக்கும். அப்போது இரண்டாம் தடவையாக ஆவணி-புரட்டாசி மாதங்களில் வெயில் கடுமையாக இருக்கும். அந்த வகையில் தமிழகத்துக்கு இரண்டு கோடை உண்டு
பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள இடங்களில் கோடையாக இருக்கும் போது நடுக்கோட்டுக்கு தெற்கே உள்ள நாடுகளில் குளிர் காலமாக இருக்கும். அங்கு சூரியனின் கதிர்கள் சாய்வாக விழும் என்பதே அதற்குக் காரணம்.
மறுபடி அன்றாட வெயில் விஷய்த்துக்கு வருவோம்.ஓரிடத்தில் தினமும் பதிவாகிற அதிகபட்ச வெயிலை வைத்து மாத மற்றும் வருடாந்திர சராசரி வெப்பம் க்ணக்கிடப்படும். உலகில் பல நூறு இடங்களிலும் இவ்விதம் கணக்கிடப்படுகிற வருடாந்திர சராசரி வெப்பத்தை வைத்து உலக சராசரி வெப்பம் கணக்கிடப்படும். இந்த சராசரி வெப்ப அளவு மனிதனின் பல்வேறு செயல்களால் கடந்த 150 ஆண்டுகளில் மெல்ல உயர்ந்து வருவதாகவும் இதனால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்றும் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.