வெள்ளி (சுக்கிரன்) கிரகத்தையும், வியாழன் கிரகத்தையும் வானில் ஒரே சமயத்தில் அருகருகே பார்க்க ஆசையா? சூரிய உதயத்துக்கு முன்னால் இருட்டாக இருக்கும் போதே எழுந்து கிழக்கு திசையில் நோக்கினால் இந்த இரு கிரகங்களையும் காணலாம். ஜூலை மாதம் முழுவதும் இவற்றைக் காண முடியும்.
எனினும் வருகிற 7 ஆம் தேதியன்று சூரிய உதயத்துக்கு முன் எழுந்து பார்ப்பது உசிதம். அன்றைய தினம் வெள்ளி,வியாழன் ஆகிய கிரகங்களை மட்டுமன்றி ரோகிணி நட்சத்திரத்தையும் பார்க்கலாம். இவை மூன்றும் மேலிருந்து கீழாக ஒரே நேர் கோட்டில் காணப்படும்.
 |
சூரிய உதயத்துக்கு முன் கிழக்கு வானில் வெள்ளி, வியாழன், ரோகிணி நட்சத்திரம் ஆகியவை அந்த வரிசையில் மேலிருந்து கீழாக இவ்விதம் காணப்படும்.இது ஒரு வரைபடம்.
|
இந்த மூன்றில் வெள்ளி (Venus) மிகப் பிரகாசமாகத் தெரியும். அதற்குக் கீழே வியாழன் (Jupiter) கிரகம் பிரகாசம் குறைந்ததாகத் தென்படும். அதற்குக் கீழே ரோகிணி நட்சத்திரம் ஒளிப்புள்ளியாகத் தெரியும்.
 |
வியாழன் சுமார் 62 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது |
இவை ஒன்ற்ன் கீழ் ஒன்றாக நேர் கோட்டில் காட்சி அளித்தாலும் வெள்ளி கிரகம் பூமியிலிருந்து சுமார் 4 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வியாழன் கிரகமோ 62 கோடி கிலோ மீட்டரில் உள்ளது. ரோகிணி நட்சத்திரம் 65 கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ளது.( ஒளி ஓராண்டுக்காலத்தில் செல்லக்கூடிய தூரமே ஒளியாண்டு தூரமாகும்)
மேலே உள்ள படத்தில் வெள்ளி கிரகம் வட்டமாக வரையப்பட்டுள்ள போதிலும் உண்மையில் அது பிறை வடிவில் தான் தெரியும். சக்தி வாய்ந்த பைனாகுலர்ஸ் மூலம் பார்த்தால் அக்கிரகம் பிறை வடிவில் இருப்பதைக் காணலாம்.
 |
பிறை வடிவில் வெள்ளி கிரகம் |
வெள்ளி கிரகத்தை ஒரு போதும் நம்மால் முழு நிலவு போல வட்ட வடிவில் காண இயலாது. வெள்ளி முழு வட்டமாக இருக்கின்ற சமயத்தில் அது சூரியனுக்குப் பின்னால் அமைந்திருக்கும் பெட்ரோமாக்ஸ் விளக்கிற்குப் பின்னால் வைக்கப்பட்ட மெழுகுவர்த்தி நம் கண்ணில் படாது என்பது போல சூரியனுக்குப் பின்னால் அமைந்த வெள்ளி நம் பார்வையில் தென்படாது.
வானத்தை நிபுணர்கள் 12 ராசிகளாகப் பிரித்துள்ளனர். இதனபடி வெள்ளி கிரகமும், வியாழன் கிரகமும் இப்போதைக்கு ரிஷப ராசியில் உள்ளன. இப்போதைக்கு என்று சொல்வதற்குக் காரணம் உள்ளது. வெள்ளி, வியாழன் உட்பட கிரகங்கள் அனைத்தும் சூரியனை சுற்றிக் கொண்டிருக்கின்றன. ஆகையால் அவை ராசி மாறிக் கொண்டிருக்கும்.அதாவது வானில் இடம் மாறிக் கொண்டிருக்கும்.
 |
கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்துக்கு அருகே ரோகிணி |
ஆனால் நட்சத்திரங்கள் இடம் மாறுவதில்லை. அந்த வகையில் ரோகிணி நட்சத்திரம் எப்போதும் ரிஷப ராசியில் இருந்து வருவதாகும்.இந்த நட்சத்திரம் வானில் கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்துக்கு (Pleiades) அருகே உள்ளது ரோகிணி நட்சத்திரத்துக்கு மேற்கத்திய வானவியலில் Aldebaran என்று பெயர்.இது அரபுக்கள் வைத்த பெயர்.