கடந்த (ஜூலை) 6 ஆம் தேதி சென்னையில் வெயில் மிகவும் கடுமையாக இருந்தது. அன்றைய தினம் வெயில் 40.7 டிகிரி செல்சியஸ்.கடந்த 10 ஆண்டுகளில் இதுவே மிக அதிகபட்சம் என்று சொல்லப்படுகிறது. திருச்சியிலும் தமிழகத்தின் வேறு நகரங்களிலும் வெயில் கடுமையாக இருந்தது.
ஆனால் வேடிக்கையான வகையில் இந்த ஆண்டில் ஜூலை 6 ஆம் தேதியன்று - மிகச் சரியாகச் சொல்வதானால் அன்றைய தினம் நள்ளிரவு சூரியன் பூமியிலிருந்து மிகத் தொலைவில் இருந்தது. அன்றைய தினம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இருந்த தூரம் 15, 20,93,480 கிலோ மீட்டர். எளிதுபடுத்திச் சொல்வதானால் 15 கோடியே 20 லட்சம் கிலோ மீட்டர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி அதாவது நல்ல குளிர் வீசிக் கொண்டிருந்த போது சூரியன் பூமிக்கு வழக்கத்தை விட சற்று அருகே இருந்தது. அன்றைய தினம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே இருந்த தூரம் 14,70,96,204 கிலோ மீட்டர்.
ஜனவரி மாதம் 4 ஆம் தேதி இருந்த தூரத்துக்கும் ஜூலை 6 ஆம் தேதி இருந்த தூரத்துக்கும் இடையிலான வித்தியாசம் சுமார் 49 லட்சம் கிலோ மீட்டர். இதையே வேறுவிதமாகச் சொல்வதானால் சூரியன் ஜனவரியில் இருந்ததை விட இப்போது 49 லட்சம் கிலோ மீட்டர் தள்ளிி இருக்கிறது
முதல் கேள்வி: பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் எப்போதும் ஒரே மாதிரியாக இல்லாமல் வித்தியாசப்படுவது ஏன்? சூரியனை பூமி சுற்று வருகின்ற பாதை வட்ட வடிவமாக இல்லாமல் சற்றே அதுங்கிய வட்டமாக உள்ளது. எனவே தான் தூரம் வித்தியாசப்படுகிறது.
அடுத்த கேள்வி:.சூரியன் பூமிக்கு அருகில் இருக்கும் போது அதிக வெயிலாகவும் தொலைவில் இருக்கும் போது குளிராகவும் இல்லாமல் நேர் எதிராக இருப்பது ஏன்? பூமி சுமார் 23 டிகிரி அளவுக்கு சாய்வான நிலையில் இருந்தபடி சூரியனை சுற்றுவதே இதற்குக் காரணம்.
பூமியின் இந்த சாய்மானம் காரணமாக மார்ச் மாதம் தொடங்கி சூரியனின் கதிர்கள் இந்தியா உட்பட பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள பகுதிகளில் செங்குத்தாக விழுகின்றன. ஆகவே நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள பகுதிகளில் கோடைக்காலமாக உள்ளது.
 |
பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள பகுதியில் சூரியனின் கதிர்கள்
செங்குத்தாக விழுகின்றன |
அதே காலகட்டத்தில் சூரியன் கதிர்கள் பூமியின் நடுக்கோட்டுக்குத் தெற்கே உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலந்து, அர்ஜென்டினா போன்ற நாடுகளில் சாய்வாக விழுகின்றன. ஆகவே நடுக்கோட்டுக்கு வடக்கே கோடையாக இருக்கின்ற காலத்தில் அக்கோட்டுக்கு தெற்கே உள்ள நாடுகளில் குளிர் காலமாக உள்ளது.
பிற்சேர்க்கை:
வாசக அன்பர் ஒருவர் பூமியானது எப்போதும் ஒரே பக்கமாக சாய்ந்து இருக்குமா என்று கேட்டிருந்தார். அது நல்ல கேள்வி. பூமி ஒரே பக்கமாகத்தான் சாய்ந்திருக்கிறது. அதன் விளைவாகத் தான் கோடையும் குளிர் காலமும் மாறி மாறி வருகின்றன
.
 |
மேலே உள்ள படம் பூமி ஜூன் மாத வாக்கில் உள்ள நிலையை ( இடது புறம்) காட்டுகிறது. அப்போது சூரியனின் கதிர்கள் வட கோளார்த்தத்தில் செங்குத்தாக விழும்..வலது புறத்தில் பூமி டிசம்பரில் உள்ள நிலையைக் காட்டுகிறது. அப்போது வட கோளார்த்தத்தில் சூரிய கதிர்கள் சாய்வாக விழும். எனவே வட கோளார்த்தத்தில் குளிர் காலமாக இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட அக்டோபர் முதல் மார்ச் வரை சூரியனின் கதிர்கள் தென் கோளார்த்தத்தில் உள்ள நாடுகளில் செங்குத்தாக விழும். ஆகவே அந்த நாடுகளில் அப்போது கோடைக் காலமாக இருக்கும்.
மேலே உள்ள படமானது தென் கோளார்த்தத்தில் எவ்விதம் கோடைக்காலம் நிகழ்கிறது என்பதை விளக்குகிறது.
ஆனால் இன்னும் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியின் சாய்மானம் நேர் எதிராக அமையும். அப்போது ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்தியா உட்பட வட கோளார்த்த நாடுகளில் கோடைக்குப் பதில் குளிர் காலம் ஏற்படும். அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களில் கோடைக்காலம் நிலவும். அதாவது பருவங்கள் தலைகீழாக மாறிவிடும். பூமியின் சாய்மான மாற்றம் அதற்கு காரணமாக இருக்கும். இவ்விதம் ஏற்படும் என மிலுடின் மிலன்கோவிச் (1879--1958) என்ற நிபுணர் கண்டுபிடித்துக் கூறினார். இது தனி சமாச்சாரம்.
|