Showing posts with label செயற்கைக்கோள். Show all posts
Showing posts with label செயற்கைக்கோள். Show all posts

Dec 31, 2014

ஜனவரி 4 ஆம் தேதி பூமியின் ஈர்ப்பு சக்தி குறையுமா?

Share Subscribe
2015 ஜனவரி 4 ஆம் தேதியன்று குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சுமார் ஐந்து நிமிஷம் பூமி முழுவதிலும் ஈர்ப்பு சக்தி மிகவும் குறைந்து காணப்படுமாம். அப்போது உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் சரி, உயரே எம்பிக் குதித்தால் சற்று நேரம் அந்தரத்தில் மிதக்கின்ற உணர்வு இருக்குமாம். இப்படியான கட்டுக்கதை இப்போது உலகெங்கிலும் உலவி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அது எந்த நேரம் என்று அறிந்து கொள்ளப் பலரும் விரும்புவர். அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சலிஸ் போன்ற மேற்குக் கரைப் பகுதியிலான நேரப்படி காலை சரியாக 9-47 மணிக்கு இவ்வித எடையற்ற நிலை அதாவது அந்தரத்தில் மிதக்கும் நிலை இருக்குமாம். அது இந்திய நேரப்படி ஜனவரி 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11-15 மணி ஆகும். வதந்தியைக் கிளப்பியவர்களின் கூற்றுப்படி இந்தியாவில் அந்த நேரத்தில் இவ்விதமான நிலை இருக்க வேண்டும்.

இது நிஜம் தானா? அல்லது பொய் தானா என்று உறுதிப்படுத்திக் கொள்ள  இந்தியாவில் உள்ளவர்கள் விரும்பினால் இரவில் தூக்கத்திலிருந்து எழுந்து குதித்துப் பார்க்கலாம். நீங்கள் வசிப்பது மாடியாக இருந்தால் கீழ் தளத்தில் உள்ளவர்கள் விழித்துக் கொண்டு ’யார் இந்தப் பைத்தியம், நடு ராத்திரியில் இப்படிக் குதிக்கிறது ’ என்று திட்டுவார்கள். சரி, கீழே இறங்கி வந்து வீட்டருகே குதித்தால் நடு ராத்திரியில்  ஏதோ சுவர் ஏறிக் குதிக்கிற திருடனோ என்று சந்தேகித்து  போலீசார் மடக்கலாம்.

யாரும் சோதித்துப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. பூமியின் ஈர்ப்பு சக்தி அன்றைய தினம் அன்றைய சமயத்தில் சிறிதும் மாறாது.

இது ஒரு புறம் இருக்க,பூமியின் மேற்புறத்தில் ஈர்ப்பு சக்தி அளவு எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லைதான். இடத்துக்கு இடம் சிறு அளவில் வித்தியாசப்படுகிறது.  உலகிலேயே கன்னியாகுமரி  மற்றும் அதற்குத் தெற்கே உள்ள கடல் பகுதியிலும் ஈர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. இலங்கையில் உள்ள கண்டி நகரில் தான் இது உலகிலேயே மிகக் குறைவான அளவில் உள்ளது.

கீழே உள்ள படங்களில் நீல நிறமானது ஈர்ப்பு சக்தி குறைவாக உள்ள இடங்களையும், சிவப்பு நிறமானது ஈர்ப்பு சக்தி ஒப்பு நோக்குகையில் அதிகமாக உள்ள இடங்களையும் குறிக்கிறது.

இதே போல கனடாவின் ஹட்சன் வளைகுடாப் பகுதியிலும் ஈர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. எனவே ஒருவரின் எடை அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் ஒரு விதமாகவும் ( மில்லிகிராம் சுத்தமாகக் கணக்கிட்டால்) ஹட்சன் வளைகுடாவில் ஒருவிதமாகவும் இருக்கும். அதே போல ஒருவரின் எடை டில்லியில் ஒருவிதமாகவும் கன்னியாகுமரியில் வேறு விதமாகவும் இருக்கும். ஆகவே ஒருவரைப் பார்த்து டில்லியில் உங்கள் எடை என்ன என்று கேட்டால் அது அசட்டுத்தனமான கேள்வியாக இராது.

பூமியில் வெவ்வேறு இடங்களிலும் உள்ள ஈர்ப்பு சக்தியை அளவிட்டறிவதற்காக அமெரிக்காவின் நாஸாவும் ஜெர்மன் விண்வெளி அமைப்பும் சேர்ந்து GRACE  என்னும் பெயர் கொண்ட இரு செயற்கைக்கோள்களை  உயரே செலுத்தியது. அவை பல தகவல்களை அனுப்பின..
செயற்கைக்கோள் அளித்த தகவலின்படியான உலகப் படம்.
இந்தோனேசியா பகுதியில் ஈர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதைக் கவனிக்கவும்.
பின்னர் இதே நோக்கத்தில் ஐரோப்பிய விண்வெளி அமைப்பு 2009 ஆம் ஆண்டில் GOCE  என்னும் பெயர் கொண்ட செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது. அந்த செயற்கைக்கோளும் ஏராளமான தகவல்களை அனுப்பியது.

பூமியின் ஈர்ப்பு சக்தி இடத்துக்கு இடம் மாறுபடுவதானது மேலே பல நூறு கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றுகின்ற  செயற்கைக்கோள்களைப் பாதிக்கிறது .

பூமி  ஈர்ப்பு சக்தி விஷயத்தில் பூமியின் மேற்புறத்தில் உள்ள வேறுபாடுகளை வைத்து பூமிக்கு நாமாக ஒரு உருவம் கொடுப்பதென்றால் பூமியானது கீழே உள்ளது மாதிரியில் இருக்கும்


இது ஒரு புறம் இருக்க மேலே சொல்லபட்ட கட்டுகதைக்கு மறுபடி வருவோம். பூமியின் ஈர்ப்பு சக்தி ஒரு போதும் ஒரேயடியாகக் குறைவது கிடையாது.

ஆகவே யாரோ கிளப்பி விட்ட கதையை நம்புவது அசட்டுத்தனம். சிலர் வேண்டுமென்றே இப்படியான வதந்திகள் அவ்வப்போது கிளப்பி விடுகின்றனர்.

பூமியின் ஈர்ப்பு சக்தி குறிப்பிட்ட ஐந்து நிமிஷ நேரம் ஒரேயடியாகக் குறைந்து விடும் என்ற வதந்தியானது ஒரு வகையில் சர் ஐசக் நியூட்டனை அவமதிப்பதாகும். பூமியின் ஈர்ப்பு சக்தி பற்றிய கொள்கையை அவர் தான் எடுத்துரைத்தார்.  நியூட்டனின் பிறந்த நாள் ஜனவரி 4 ஆம் தேதியாகும் (ஆண்டு 1643)

சூரியனுக்கு அருகே பூமி

ஜனவரி 4 ஆம் தேதி இன்னொரு வகையில் குறிப்பிடத்தக்கது. அன்றைய தினம் தான் பூமியானது சூரியனுக்கு மிக அருகில் இருக்கும். அதாவது  அன்று சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் 14 கோடியே 70 லட்சம் கிலோ மீட்டராக இருக்கும்.

ஜூலை 6 ஆம் தேதியன்று இந்த தூரம் மிக அதிகபட்சமாக 15 கோடியே 20 லட்சம் கிலோ மீட்டராக இருக்கும்.

ஜனவரி 4 ஆம் தேதி பூமியானது ஒப்புனோக்குகையில் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் என்று கூறுகிறீர்களே, கடும் குளிர் வீசுகிறதே, அது எப்படி என்று கேட்கலாம். ( பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள இடங்களில் தான் குளிர். நடுக்கோட்டுக்கு தெற்கே உள்ள தென் அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் இப்போது நல்ல கோடைக்காலம்)

பூமியில் குளிர்காலமும் கோடைக்காலமும் ஏற்படுவதற்கும் சூரியன் - பூமி இடையிலான தூரத்துக்கும் தொடர்பு கிடையாது. பூமி தனது அச்சில் சுமார் 23 டிகிரி சாய்வாக இருப்பதால் தான் குளிர்காலமும் கோடைக்காலமும் ஏற்படுகின்றன.

Dec 13, 2014

ஜிசாட் 16 மூலம் இஸ்ரோவின் பிரச்சினை தீருமா?

Share Subscribe
இந்தியாவின் ஜிசாட்-16 (GSAT-16) தகவல் தொடர்பு செயற்கைக்கோள் தென் அமெரிக்காவிலிருந்து ஏரியான் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவில் குறிப்பாக டிவி ஒளிபரப்பு வசதிகளை மேலும் அதிகரிக்க உதவும்.

இஸ்ரோ (ISRO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புக்கு எந்த விதத்தில் இப்போது பிரச்சினை நிலவுகிறது? ஏன் அப்படி பிரச்சினை நிலவுகிறது என்று கேட்கலாம். மிக சுருக்கமாகச் சொன்னால் ஜிசாட் மாதிரியில் இன்னும் நிறைய செயற்கைக்கோள்கள் பறக்கவிடப்படவேண்டும். இப்போதுள்ள செயற்கைக்கோள்கள் போதாது. அது தான் பிரச்சினை.

இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் அடிக்கடி செயற்கைக்கோள்களைப் பறக்கவிடுகிறதே, அப்படியிருக்கும் போது செயற்கைக்கோள்கள் போதாது என்று எப்படிச் சொல்ல முடியும்?

இந்தியா தயாரித்துப் பயன்படுத்துகின்ற செயற்கைக்கோள்கள் பொதுவில் இரு வகைப்பட்டவை. முதல் வகை செயற்கைக்கோள்கள் தொலை உணர்வு செயற்கைக்கோள்கள் என்று வருணிக்கப்படுகின்றன. வானிலிருந்து படம் எடுப்பது, நிலவள ஆய்வு, மேப் தயாரிப்பு, பயிர்கள் கண்காணிப்பு, வனவள ஆய்வு, மீன் வள ஆய்வு, வானிலிருந்து கண்காணிப்பு என பல வகையான பணிகளுக்கான செயற்கைக்கோள்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.

இவ்வித செயற்கைக்கோள்கள் அனைத்தும் பூமியை வடக்கிலிருந்து தெற்காக சுற்றுபவை. அதாவது இவை தமது சுற்றுப்பாதையில் தென் துருவத்தையும் வட துருவத்தையும் கடந்து செல்பவை. இந்த வகை செயற்கைக்கோள்களின் நோக்கம் பூர்த்தியாக வேண்டுமென்றால் அவை அவ்விதமாகத் தான் பூமியைச் சுற்றி வந்தாக வேண்டும். பொதுவில் இவை சுமார் 800 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்தவையாக பூமியைச் சுற்றி வரும்.

இந்த வகையான செயற்கைக்கோள்கள் பொதுவில் எடை குறைந்தவை. இவற்றைச் செலுத்தும் நோக்கில் தான் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட்  உருவாக்கப்பட்டது. வடக்கு- தெற்காக பூமியை சுற்றுவதற்கான செயற்கைக்கோள்களை செலுத்துவதற்கான வாகனம் என்ற பொருளில் இந்த ராக்கெட்டுக்கு ஆங்கிலத்தில் Polar Satellite Launch Vehicle (PSLV) என்று பெயரிடப்பட்டது.

வடக்கிலிருந்து தெற்காக சுற்றும் செயற்கைகோள்களின் சுற்றுப்பாதையையும்
கிழக்கு-மேற்காக சுற்றும் செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதையையும் விளக்கும் படம்.
courtesy: scijnks.jpl.nasa
ஆனால் இந்த ராக்கெட் வடக்கிலிருந்து தெற்கு நோக்கித் தான் பாயும். கிழக்கு நோக்கிப் பாயாது என்று அர்த்தமல்ல. ஒரு ராக்கெட்டை எந்த திசையிலும் செலுத்த முடியும். ஆனால் ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்த வகை ராக்கெட்டுக்கு அப்படி ஒரு பெயரை வைத்து விட்டார்கள்.

பி.எஸ்.எல்.வி ராக்கெட்டானது 1993 ஆம் ஆண்டில் முதல் முயற்சியில் தோல்வி கண்டது என்றாலும் அப்போதிலிருந்து இதுவரை 25 க்கும் அதிகமான தடவைகளில் தொடர்ச்சியாக வெற்றி கண்டுள்ளது. இந்த ராக்கெட் பொதுவில் சுமார் ஒன்றரை டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. வேறு வகையில் சொல்வதானால் முதல் வகை செயற்கைகோள்கள் அனைத்தையும் உயரே செலுத்த பி.எஸ்.எல்.வி ராக்கெட் நமக்கு உதவுகிறது.

பி.எஸ்.எல்.வி. ராக்கெட்
டிவி ஒளிபரப்பு, இண்டர்னெட் வசதி, டெலிபோன் தொடர்பு, தகவல் தொடர்பு, வானிலத் தகவல் சேகரிப்பு போன்றவற்றுக்கான செயற்கைக்கோள்கள் முற்றிலும் வேறு ரகம். இவை இரண்டாவது வகை செயற்கைக்கோள்களில் அடங்கும். இந்த செயற்கைக்கோள்கள் பூமியிலிருந்து மிகச் சரியாக 35,786 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்தபடி பூமியை  கிழக்கு மேற்காக சுற்றி வருபவை.

அவை அந்த உயரத்தில் இருந்தால் தான் டிவி ஒளிபரப்பு சாத்தியமாகும். மற்ற பணிகளும் சாத்தியமாகும். பொதுவில் இந்த வகை செயற்கைக்கோள்களின் எடை அதிகம். உதாரணமாக இப்போது உயரே சென்றுள்ள ஜிசாட்-16 செயற்கைக்கோளின் எடை 3180 கிலோ ஆகும். இதில் 48 டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன.

சுமார் மூன்று டன் எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் உட்பட இந்தியாவுக்குத் தேவையான எல்லா வகை செயற்கைக்கோள்களையும் நாமே தயாரிக்கிறோம். சொல்லப்போனால் செயற்கைக்கோள் தொழில் நுட்பத்தில் நாம் பெருமைப்படுகின்ற அளவுக்கு நன்கு முன்னேறியிருக்கிறோம்.

ஆனால் மூன்று டன் அளவுக்கு எடை கொண்ட செயற்கைக்கோள்களை மேலே கூறிய அளவு உயரத்துக்குச் செலுத்தும் திறன் கொண்ட ராக்கெட் தற்போது இந்தியாவிடம் இல்லை. செயற்கைக்கோள் தொழில் நுட்பத்தில் நாம் எந்த அளவுக்கு வேகமாக முன்னேறினோமோ அந்த அளவுக்கு ராக்கெட் தொழில் நுட்பத்தில் முன்னேறவில்லை.

ஆகவே தான் மூன்று டன் அளவுக்கு எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை விமான மூலம் தென் அமெரிக்காவில் கூரூ என்னுமிடத்துக்கு எடுத்துச் சென்று ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் (Ariane) ராக்கெட் மூலம் அதைச் செலுத்தச் செய்கிறோம். எடுத்துச் செல்லும் செலவு, செலுத்தித் தருவதற்கான கட்டணம் போன்ற வகையில் ஒவ்வொரு தடவையும் ரூ 450 கோடிக்கும் அதிகமாகச் செலவாகிறது.

ஏரியான் ராக்கெட்
இதுவரை  ஏரியான் மூலம் 18 தடவை இந்திய தகவல் தொடர்பு செயற்க்கோள்கள் உயரே செலுத்தப்பட்டுள்ளன.

பிறர் கையை எதிர்பார்க்காமல் நான்கு டன் எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களையும்  இந்திய மண்ணிலிருந்தே செலுத்தும் நோக்கில் தான் ஜி.எஸ்.எல்.வி- மார்க் 3 (GSLV Mark-3) என்னும் சக்தி மிக்க ராக்கெட்டை உருவாக்குவதில் கடந்த பல ஆண்டுகளாக இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இப்போது இந்த வகை ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாத பிற்பாதியில் இது முதல் தடவையாக வானில் செலுத்தப்பட இருக்கிறது. முதல் பரிசோதனை வெற்றியாக அமைந்தாலும் இது பயனுக்கு வர இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகலாம்.

ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3  ராக்கெட் மாடல்
இப்போது டிரான்ஸ்பாண்டர் சமாச்சாரத்துக்கு வருவோம். டிரான்ஸ்பாண்டர் என்பது தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் அனைத்திலும் இருக்கிற கருவிகளாகும். நீங்கள் டிவியில் தினமும் பார்க்கின்ற நிகழ்ச்சிகள் உட்பட இந்தியாவில் உள்ள பல நூறு சேனல்காரர்களும் மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் (பங்கு மார்க்கெட் நிறுவனங்களும் இதில் அடங்கும்) தங்களது சிக்னல்களை  மேலே உள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோளின் டிரான்ஸ்பாண்டர்களை நோக்கி அனுப்புகின்றனர்.

அவை அந்த சிக்னல்களைப் பெற்று இந்தியா முழுவதும் அந்த சிக்னல்கள் கிடைக்கும் வகையில் கீழ் நோக்கி அனுப்புகின்றன
  
இந்தியாவுக்குத் தெற்கே பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே இந்தியாவைப் பார்த்தபடி இப்போது 10 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் செயல்பட்டு வ்ருகின்றன. இவை அனைத்திலும் உள்ள மொத்த டிரான்ஸ்பாண்டர்களின் எண்ணிக்கை 200 கூட இல்லை. செயற்கைக்கோளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இது போதவில்லை. தேவை அதிகரித்த அளவுக்கு டிரான்ஸ்பாண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

வீட்டு மாடியில் டிஷ் ஆண்டெனாவை நிறுவி அதன் மூலம் டிவி நிகழ்ச்சிகளைப் பெறுகின்ற போக்கு அதிகரித்து வருகிறது. இந்த வசதியை அளிக்கும் பல்வேறு தனியார் நிறுவனங்களும் தங்களுக்கு குறிப்பிட்ட அலைவரிசையில் மேலும் டிரான்ஸ்பாண்டர்களை ஒதுக்கும்படி கோரி வருகின்றன
   
பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை இஸ்ரோ  நிறைவேற்ற முடியாத காரணத்தால் பிற நாடுகளின் செயற்கைக்கோள்களில் சுமார் 100 டிரான்ஸ்பாண்டர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் நிலை உள்ளது. இது நல்லதல்ல என்று சுட்டிக்காட்டப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு கடைசி வாக்கில் இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் 500 டிரான்ஸ்பாண்டர்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் பாதி கூட எட்டப்படாத நிலை தான் உள்ளது.

மொத்தத்தில் செயற்கைக்கோள் டிரான்பாண்டர்கள் விஷயத்தில் கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த நிலைமை நீடிக்கும் என்றே தோன்றுகிறது. 

(இக்கட்டுரை தமிழ் ஹிந்து டிசம்பர் 12 ஆம் தேதி இதழில் வெளியானது. இங்கு படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது)