சாதாரண நாட்களில் நீங்கள் இரவு வானில் ‘ நட்சத்திரம் கீழே விழுவதை’ பார்த்திருப்பீர்கள். நுண்ணிய துணுக்கு ஒன்று காற்று மண்டலத்தில் நுழைந்த பின்னர் தீப்பற்றிக் கீழ் நோக்கி இறங்கும் போது ஏதோ ஒரு நட்சத்திரம் விழுவதைப் போலத் தோன்றும். மணல் துணுக்கு போன்ற வெறும் துணுக்கு தான் இப்படி ஆர்ப்பாட்டமான காட்சி காட்டுகிறது..சில சமயங்களில் இது கூழாங்கல் சைஸில் இருக்கலாம்.
![]() |
| வானிலிருந்து இறங்கும் ஒளிக்கீற்று. இது வெறும் துணுக்கு தான்.Credit Via Cumbrian Sky |
இந்தத் துணுக்குகள் எங்கிருந்து வந்தன? சாலை வழியே வலை போட்டு மூடாமல் குப்பை லாரி போனால் அந்த லாரியிலிருந்து வழி நெடுக குப்பை கீழே விழுந்தபடி செல்லும். அல்லது மணல் லாரி போனால் வழி நெடுக மணல் சிந்திக் கிடக்கும்
இந்த மாதிரியில் ஒரு வால் நட்சத்திரம் சூரியனைச் சுற்றி விட்டுச் செல்வதறகாக வரும் போதும் சூரியனைச் சுற்றி விட்டுத் திரும்பிச் செல்லும் போதும் அந்த வால் நட்சத்திரத்திலிருந்து எண்ணற்ற நுண்ணிய துணுக்குகள் வெளிப்படும். ஆகவே வால் நட்சத்திரம் சென்று விட்ட பிறகும் அது சென்ற பாதையில் இந்த துணுக்குகள் மிதந்தபடி இருக்கும். விண்வெளியில் காற்று கிடையாது என்பதால் இவை அடித்துச் செல்லப்படாமல் அதே இடத்தில் இருக்கும்.
பூமியானது சூரியனைச் சுற்றி வருகையில் இவ்விதத் துணுக்குகள் இருக்கும் இடத்தைக் கடந்து செல்லும். அப்போது இந்த்த் துணுக்குகள் பூமியின் காற்று மணடலம் வழியே இறங்கும். அப்போது இந்த ஒளிமழை நிகழும்.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வாக்கில் பெர்சைட் ஒளிமழை (Perseid Meteor Shower ) நிகழும். அதே போல நவம்பரில் Leonid Meteor Shower நிகழும். டிசம்பர் மத்தி வாக்கில் ஜெமினைட் ஒளிமழை.தோன்றும். இந்த மாத மத்தியில் இது காணப்படும் என்றாலும் 13 ஆம் 14 ஆம் தேதிகளில் தான் உச்சத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![]() |
| ஜெமினைட் ஒளிமழைக்குக் காரணமாகக் கருதப்படும் பேயிதான் அஸ்டிராய்டின் சுற்றுப்பாதை |
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பெரும்பாலானவர்கள் கார் வைத்திருப்பர் என்பதால் ஒளிமழைக் காட்சியைக் காண்பதற்கு ஊருக்கு வெளியே -- சுற்றுவட்டாரத்தில் விளக்கு வெளிச்சமே இல்லாத பொருத்தமான திறந்த வெளிக்குப் போய் முகாமிட அவர்களால் இயலும்.ஜெமினைட் ஒளிமழையைக் காண்பதற்கு இரவு ஒரு மணி முதல் மூன்று வரையிலான நேரம் உகந்தது என்று சொல்லப்படுகிறது.
எங்குமே வெளிச்சமில்லாத இடத்துக்கு சென்ற பின் அந்த இருட்டுக்கு உங்கள் கண்கள் பழகிக் கொள்ள சுமார் 20 நிமிஷம் ஆகும. அதன் பின்னரே உங்களால் வானிலிருந்து கீழ் நோக்கி இறங்குகின்ற ஒளிக்கீற்றுகளை நன்கு காண இயலும் என்று இது தொடர்பான நிபுணர்கள் கூறியுள்ளனர். நகரில் வசிப்பவர்கள் நள்ளிரவில் எழுந்து மொட்டை மாடியில் நின்று பார்த்தால் சில ஒளிக்கீற்றுகளைத் தான் காண இயலும் என்று கூறப்படுகிறது.
இந்த ஒளிமழைக்கு ஜெமினைட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதற்குக் காரணம் உண்டு. வானில் மிதுன ராசிக்கு ஆங்கிலத்தில் Gemini என்று பெயர். அந்த ராசி உள்ள வான் பகுதியிலிருந்து இந்த ஒளிமழை வருவது போலத் தோன்றும். ஆகவே தான் இது Geminid என அழைக்கப்படுகிறது
பெர்சைட் ஒளிமழை, லியோனிட் ஒளிமழை ஆகியவை வால் நட்சத்திரங்களிலிருந்து வெளிப்பட்ட துணுக்குகளால் ஆனவை என்று அறியப்பட்டுள்ளது.
![]() |
| வானில் மிதுன Gemini ராசி உள்ள பகுதியிலிருந்து தான் ஒளிகீற்றுகள் கீழ் நோக்கிப் பாயும். |
பொதுவில் ஒளிமழைக்கு வால் நட்சத்திரங்களின் துணுக்குகள் காரணமாக இருந்தாலும் ஜெமினிட் ஒளிமழைக்கு 3200 பேயிதான் என்னும் பெயர் கொண்ட அஸ்டிராய்ட் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதாவது இந்த அஸ்டிராய்ட் சூரியனை நெருங்கும் போது அதிலிருந்து வெளிப்பட்ட துணுக்குகள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த் அஸ்டிராய்ட் அவவப்போது சூரியனை சுற்றிவிட்டுச் செல்கின்றது.


