Showing posts with label நாஸா. Show all posts
Showing posts with label நாஸா. Show all posts

Mar 26, 2015

விண்கல் பூமி மீது மோத வாய்ப்பில்லை

Share Subscribe
ஒரு விண்கல் மார்ச் 27 ஆம் தேதியன்று பூமியின் மீது மோத வாய்ப்புள்ளதாக வீண் வதந்தி கிளம்பி அது சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.
அப்படியான ஆபத்து எதுவும் கிடையாது.

உண்மையில் 2014 YB35 என்னும் பெயர் கொண்ட ஒரு விண்கல் 27 ஆம் தேதி  இந்திய நேரப்படி இரவு சுமார் 11 மணி அளவில் பூமியைக் கடந்து செல்ல இருக்கிறது.

அப்போது பூமிக்கும் அந்த விண்கல்லுக்கும் இடையே உள்ள தூரம் 44 லட்சம் கிலோ மீட்டராக இருக்கும். இது பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ளதைப் போல 11 மடங்காகும்.  ஆகவே அது பூமியின் மீது மோத சிறிதும் வாய்ப்பில்லை.

பூமியை விண்கற்கள்  கடந்து செல்வது என்பது புதிய விஷயமல்ல. இது அடிக்கடி நிகழ்ந்து வருவதாகும். சொல்லப்போனால் மார்ச் 25 ஆம் தேதி  இரண்டு விண்கற்கள் பூமியைக் கடந்து சென்றன. மார்ச் 26 ஆம் தேதி இரண்டு விண்கற்கள் கடந்து சென்றன. 27 ஆம் தேதி இரண்டு விண்கற்கள் கடந்து செல்லும். 28 ஆம் தேதி இரண்டு விண்கற்கள் இதே போல கடந்து செல்லும்.
விண்கல் 2014 YB 35 சுற்றுப்பாதையின் உத்தேசப் படம்.
1. சூரியன். 2. பூமி. 3. சந்திரன். 4. விண்கல்
பூமியை எண்ணற்ற விண்கற்கள் கடந்து செல்கின்றன. இவற்றுக்கெல்லாம் தனித்தனி சுற்றுப்பாதை உண்டு. இவற்றில் ஓரளவில் பூமியை " அருகில்" கடந்து செல்கின்ற விண்கற்களை நாஸா அடையாளம் கண்டுபிடித்து அவற்றின் பாதையையும் கணக்கிட்டு வைத்துள்ளது.

 இது வரை இவ்விதமான  1563 விண்கற்களை நாஸா அடையாளம் கண்டுவைத்துள்ளது. தவிர, அவற்றின் சுற்றுப்பாதைகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இவற்றில் முப்பது மீட்டர் அல்லது நாற்பது மீட்டர் குறுக்களவு கொண்ட விண்கற்கள் உண்டு. சில கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டவையும் உண்டு.

ஒரு விண்கல் பூமியை நோக்கி வருவதாக  இருந்தால் அதை முன்கூட்டிக் கண்டுபிடித்து விட முடியும்.  அவ்விதமான விண்கல்லின் பாதையை  நாமாக மாற்றவும் வழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பூமியின் சாய்மானம்
பூமியானது தனது அச்சில் சாய்ந்தபடி உள்ளது. அந்த விதமாக இருந்தபடி தான் அது சூரியனைச் சுற்றி வருகிறது. ஆண்டில் எல்லா மாதங்களிலும் சாய்மானம் ஒரே மாதிரியாக இருக்கும். (  பல ஆயிரம் ஆண்டுகளில் சாய்மானம் மாறத்தான் செய்கிறது. அது முற்றிலும் வேறு விஷயம்)
கீழே உள்ள படத்தைக் கவனிக்கவும்
 படம் நன்றி: pa.msu.edu




Jul 28, 2014

செவ்வாய்க்கு அருகே வால் நட்சத்திரம்: நாஸா கவலை

Share Subscribe
செவ்வாய் கிரகத்தை “உரசி“ செல்லும் அளவுக்கு ஒரு வால் நட்சத்திரம் செவ்வாய் கிரகத்தைக் கடந்து செல்ல இருக்கிறது. இது குறித்து அமெரிக்கா நாஸா கவலை கொண்டு செவ்வாயை சுற்றுகிற தனது செயற்கைக்கோள்களையும் காப்பதற்கு நடவடிக்கை எடுக்க இருக்கிறது.

அந்த வால் நட்சத்திரத்தால் செவ்வாய் கிரகத்துக்குப் பெரிய ஆபத்து ஏற்படப் போவதில்லை. சொல்லப் போனால் அந்த வால் நட்சத்திரம் செவ்வாயைக் கடந்து செல்லும் போது செவ்வாய்க்கும் அந்த வால் நட்சத்திரத்துக்கும் இடையே சுமார் ஒரு லட்சத்து 32 ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளி இருக்கும். இருந்தாலும் விண்வெளிக் கணக்குப்படி இது “மிக அருகில்” என்றே கருதப்படுகிறது.

அமெரிக்காவின்  இரு விண்கலங்கள் இப்போது செவ்வாய் கிரகத்தை சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றின் பெயர் மார்ஸ் ரிகன்னைசன்ஸ் ஆர்பிட்டர். மற்றொன்றின் பெயர் மார்ஸ் ஒடிசி. அவற்றுக்கும் வால் நட்சத்திரத்தால் நேரடியாக ஆபத்து ஏற்படப் போவதில்லை. இந்த இரண்டும் சுமார் 500 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்தபடி செவ்வாயின் செயற்கைக்கோள்கள் போல அக்கிரகத்தைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன.
சைடிங் ஸ்பிரிங் வால் நட்சத்திரம் அக்டோபரில் செவ்வாய் கிரகத்தை
 கடந்து செல்ல இருக்கிறது
வால் நட்சத்திரத்தின் வால் காரணமாக இந்த இரு விண்கலங்களுக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்பது தான் நாஸாவின் கவலை. ஒரு வால் நட்சத்திரத்தின் வால் என்பது எண்ணற்ற மிக நுண்ணிய துணுக்குகளால் ஆனது. இவை வால் நட்சத்திரத்திலிருந்து வெளிப்படுபவை. காற்றில் பறக்கும் ஒரு பெண்ணின் கூந்தல் போல வால் நட்சத்திரத்தின்   வாலானது தலையில் தொடங்கி அகன்று விரிந்து அமைந்திருக்கும்..மிக அகன்ற வாலின் ஒரு பகுதி செவ்வாயின் காற்று மண்டலத்தைத் தொடலாம் என்று கருதப்படுகிறது.

ஆகவே வாலில் அடங்கிய துணுக்குகள் நாஸாவின் செயற்கைக்கோளைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது. நுண்ணிய துணுக்குகள் அப்படி என்ன பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றன என்று நீங்கள் நினைக்கலாம். வால் நட்சத்திரம் மணிக்கு சுமார் 2 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும். வாலின் துணுக்குகளும் அதே வேகத்தில் செல்லும். அவ்வித வேகத்தில் வரும் அரை மில்லி மீட்டர் குறுக்களவு கொண்ட துணுக்கு கூட செயற்கைக்கோளில் அடங்கிய கருவிகளுக்கு சேதத்தை உண்டாக்கலாம்.

அந்த வால் நட்சத்திரத்தின் பெயர் சைடிங் ஸ்பிரிங் என்பதாகும். ஆஸ்திரேலியாவில் உள்ள சைடிங் ஸ்பிரிங் வான் ஆராய்ச்சிக்கூடம் கண்டுபிடித்ததால் அதற்கு அப்பெயர். 2013 ஆம்  ஆண்டு ஜனவரியில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த வால் நட்சத்திரம் சூரிய மண்டல வெளி எல்லையிலிருந்து சூரியனை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. 

அது சூரியனை சுற்றி முடித்த பின்னர் வந்த வழியே திரும்பிச் சென்று விடும். சூரியனை நோக்கி வருகின்ற அது செவ்வாயைக் கடந்து வர இருக்கிறது. பொதுவில் வால் நட்சத்திரங்கள் இந்த அளவுக்கு அருகாமையில் கடந்து செல்வது கிடையாது. கி.பி 1770 ஆம் ஆண்டில் ஒரு வால் நட்சத்திரம் பூமியை மிக அருகாமையில் கடந்து சென்றது.
சைடிங் ஸ்பிரிங் வால் நட்சத்திரம்
சைடிங் ஸ்பிரிங் வால் நட்சத்திரம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி செவ்வாயை நெருக்கமாகக் கடந்து செல்ல இருக்கிறது. இந்த வால் நட்சத்திரத்தின் துணுக்குகளால் செயற்கைக்கோள்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்து வாய்ப்பு சுமார் இருபது நிமிஷமே நீடிக்கும். ஆகவே அந்த நேரத்தில் மட்டும் தனது இரு செயற்கைக்கோளையும் பாதுகாப்பான இடத்தில் இருக்கும்படி செய்ய நாஸா திட்டமிட்டுள்ளது.

பூமியைச் சுற்றுகிற அல்லது செவ்வாயைச் சுற்றுகிற ஒரு செயற்கைக்கோளை பறக்காமல் ஓரிடத்தில் நிறுத்தி வைப்பது என்பது சாத்தியமற்றது. செயற்கைக்கோள்கள் பறந்து கொண்டே இருந்தால் தான் வானில் இருக்கும். இல்லாவிடில் கீழே விழுந்து விடும்.
எனவே ஆபத்து வாய்ப்புள்ள நேரத்தில் இரு செயற்கைக்கோள்களும் தமது பாதையில் செவ்வாயின் மறுபுறத்தில் அமைந்திருக்கும்படி செய்ய நாஸா திட்டமிட்டுள்ளது. அதாவது அவை தொடர்ந்து பறந்து கொண்டு தான் இருக்கும். 
சைடிங் ஸ்பிரிங் வால் நட்சத்திரத்தின் தலையும் வாலும்.
(படம் NASA ESA  J.Y.Li Planetary Institute)

ஆனால் அந்த இருபது நிமிஷ நேரத்தில் அவை செவ்வாயின் மறுபுறத்தில் பறந்து கொண்டிருக்கும். இதற்கான வகையில் அவற்றின் பாதையில் திருத்தங்கள் செய்யப்படும்.

நாஸா 2013 ஆம் ஆண்டில் செவ்வாயை நோக்கி செலுத்திய மாவென் என்னும் செயற்கைக்கோள் வருகிற செப்டம்பரில் போய்ச் சேர்ந்து அதுவும் செவ்வாயைச் சுற்ற ஆரம்பிக்கும். அதன் சுற்றுப்பாதையையும் இவ்விதம் தக்கபடி மாற்றியாக வேண்டும்.

 ஐரோப்பிய விண்வெளி அமைப்பு 2003 ஆம் ஆண்டில் செலுத்திய மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலம் செவ்வாயை நீள்வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அனேகமாக ஐரோப்பிய விண்வெளி அமைப்பும் வால் நட்சத்திர ஆபத்தை மனதில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கும் என்று கருதப்படுகிறது.
இந்தியா 2013 நவம்பரில் செவ்வாயை நோக்கிச் செலுத்திய மங்கள்யான் விண்கலம் இந்த ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி போய்ச் சேர்ந்து செவ்வாயை சுற்ற இருக்கிறது. ஆகவே தனது செயற்கைக்கோளுக்கு பாதிப்பு ஏற்படாதபடி பாதுகாக்க இந்தியாவின் இஸ்ரோவும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளலாம்
. வால் நட்சத்திரம் மூலம் தோன்றும் துகள்கள் கீழே இறங்கி செவ்வாயின் தரையில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் கியூரியாசிடி என்னும் நடமாடும் ஆராய்ச்சிக்கூடத்தைப் பாதிக்காதா என்று கேட்கலாம். இத்துகள்கள் செவ்வாயின் காற்று மண்டலம் வழியே கீழ் நோக்கி இறங்கும் போது மிகுந்த சூடேறித் தீப்பிடித்து எரிந்து விடும்.
கியூரியாசிடி சேகரிக்கும் தகவல்கள் நாஸாவுக்குக் கிடைக்கச் செய்வதில் அமெரிக்காவின் இரு செயற்கைக்கோள்களும் முக்கிய பங்காற்றுகின்றன. செவ்வாய் கிரகம் பூமியைப் போலவே தனது அச்சில் சுழல்கிறது. 

ஆகவே கியூரியாசிடி இருக்கின்ற இடம் மறுபக்கத்துக்குச் சென்று விடுகிற நேரத்தில் அது அனுப்பும் தகவல்கள் பூமிக்கு வந்து சேர வாய்ப்பில்லை.
இப்பிரச்சினையைத் தவிர்க்கும் வகையில் செவ்வாய்க்கு மேலே பறக்கின்ற இரு அமெரிக்க செயற்கைக்கோள்களும் கீழிருந்து கியூரியாசிடி அனுப்பும் தகவல்களைச் சேகரித்து நாஸாவுக்கு அனுப்புகின்றன. 

இந்த இரண்டும் செவ்வாயை வடக்கிலிருந்து தெற்காகச் சுற்றுவதால் எப்போதும் பூமியைப் பார்த்த வண்ணம் இருக்கும். இதன் பலனாக நாஸாவுக்குத் தொடர்ந்து தகவல்கள் கிடைத்துக் கொண்டிருக்கும்.

 நாஸாவுக்கு உலகில் ஆங்காங்கு தகவல் சேகரிப்பு கேந்திரங்கள் உள்ளன.  எனவே பூமி சுழன்று கொண்டிருந்தாலும் இந்த தகவல் சேகரிப்புக் கேந்திரங்களில் ஏதாவது ஒன்று செவ்வாயைப் பார்த்தபடி அமைந்து அங்கிருந்து வருகிற தகவல்களைப் பெற்றுக்கொள்ளும்.