மங்கள்யான் விண்கலத்தில் இடம் பெற்றுள்ள LAM எஞ்சின் திட்டமிட்டபடி செயல்படுமா என்ற ஐயம் இருந்தது. ஆனால் திங்களன்று மதியம் அந்த எஞ்சினை நான்கு வினாடி நேரம் செயல்படுத்தி சோதித்த போது அந்த எஞ்சின் நன்கு செயல்பட்டது. எனவே புதன்கிழமையன்றும் அது அவ்விதமே நன்கு செயல்படும் என்பது தெரிய வந்துள்ளது.
![]() |
இந்தியாவின் மங்கள்யான் |
கடந்த ஆண்டு டிசம்பர் முதல் தேதிக்குப் பிறகு இந்த எஞ்சினை இயக்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. ஆகவே 300 நாள் இடைவெளிக்குப் பிறகு அது ஒழுங்காக செயல்படுமா என்பதில் சிறிது சந்தேகம் இருந்தது.
அந்த சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளும் நோக்கில் தான் அந்த எஞ்சின் திங்களன்று ( 22 ஆம் தேதி) நான்கு வினாடி இயக்கப்பட்டது. அப்போது அது நன்கு செயல்பட்டது. ஆகவே புதன்கிழமையன்றும் அந்த எஞ்சின் திட்டமிட்டபடி நன்கு செயல்படும் என்பது உறுதியாகி விட்டது. அந்த அளவில் மங்கள்யான் திட்டத்தின் வெற்றி உறுதியாக்கப்பட்டு விட்டதாகவும் சொல்லலாம்.
மங்கள்யான் விண்கலத்தை அனுப்பியதன் நோக்கமே அது செவ்வாயை சுற்ற வேண்டும் என்பதாகும்.
இதற்கிடையே அமெரிக்காவின் மாவென் (MAVEN--Mars Atmosphere and Volatile Evolution spacecraft) விண்கலம் இந்திய நேரப்படி இன்று காலை செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடிக்கு உள்ளாகி செவ்வாய் கிரகத்தைச் சுற்ற ஆரம்பித்தது. செவ்வாய் கிரகத்துக்கு ஏற்கெனவே வெற்றிகரமாக பல விண்கலங்களை அனுப்பியுள்ள அமெரிக்காவுக்கு இது மேலும் ஒரு வெற்றியாகும்.
![]() |
அமெரிக்காவின் நாஸா அனுப்பியுள்ள மாவென் விண்கலம் |