செவ்வாய், சனி ஆகிய இரண்டு கிரகங்களையும் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கு வானில் காணலாம்.
வானில் நம்மால் மொத்தம் ஐந்து கிரகங்களை மட்டுமே வெறும் கண்ணால் பார்க்க முடியும். மேலே கூறியபடி நான்கு கிரகங்களை மட்டுமே இப்போது நம்மால் காண இயலும். ஐந்தாவதான வியாழன் கிரகம் இப்போது பகலில் சூரியனுக்கு அருகே அமைந்திருப்பதால் அதைக் காண இயலாது.
அதிகாலையில் கிழக்கு வானை நோக்கினால் வெள்ளி கிரகம் கண்ணில் படாமல் போகாது. அது வைர மூக்குப் பொட்டு போல ஜொலிக்கும்.தமிழில் இதற்கு விடிவெள்ளி என்ற பெயரும் உண்டு
எது நட்சத்திரம் எது கிரகம் என்று தெரியாத காலத்தில் மேலை நாட்டவர் வெள்ளி கிரகத்துக்கு Morning Star என்று பெயர் வைத்தனர் ( கிரகங்களுக்கு சுய ஒளி கிடையாது. அவை சூரிய ஒளியைப் பிரதிபலிப்பவை. நட்சத்திரங்கள் சுய ஒளி கொண்டவை. சூரியனைப் போல பல மடங்கு பெரியவை)
![]() |
| கிழக்கு வானைக் காட்டும் இப்படத்தில் புதன் ( Mercury), வெள்ளி (Venus) ஆகிய இரு கிரகங்களைக் காணலாம். வலது புறத்தில் சிவந்த நிறத்தில் திருவாதிரை (Betelguese) நட்சத்திரமும் தென்படும் (Stellarium) |
வெள்ளி கிரகம் சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புதன் 16 கோடி கிலோ மீட்டர். திருவாதிரை நட்சத்திரம் 497 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.(ஒளியாண்டு பற்றிய விள்க்கம் கீழே காண்க)
நீங்கள் மாலையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கே நோக்கினால் சிவந்த நிறத்தில் செவ்வாய் (Mars) தென்படும். இக்கிரகம் தற்போது பூமியிலிருந்து சுமார் 21 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
அதன் அருகிலேயே அதாவது செவ்வாய்க்கு சற்று கீழே சித்திரை (Spica) நட்சத்திரமும் தெரியும். இந்த நட்சத்திரம் சுமார் 24 ஒளியாண்டு தொலைவில் உள்ளது
![]() |
| மேற்கு வானம். செவ்வாய்க்கு கீழே சித்திரை நட்சத்திரம் உள்ளது இடது மூலையில் சனி கிரகம் காண்க (Stellarium) |
சனி கிரகத்திலிருந்து வலது புறம் தள்ளி பிரகாசமான நட்சத்திரம் தெரியும். அது தான் சுவாதி (Arcturus) நட்சத்திரமாகும். அது 36 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.
குறிப்பு: ஒளியானது ஒரு வினாடியில் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவு செல்லக்கூடியது. ஓராண்டில் ஒளி செல்லக்கூடிய தூரமே ஒளியாண்டு ஆகும். இதன்படி ஒளியாண்டு என்பது தூரத்தைக் குறிப்பதாகும். ஓர் ஒளியாண்டு என்பது 9,46,073 கோடி கிலோ மீட்டர் தூரமாகும்.

