அமெரிக்கா
1969 ஆம் ஆண்டில் தொடங்கி தனது அப்போலோ விண்கலம் மூலம் சந்திரனுக்கு ஆறு தடவை விண்வெளி
வீர்ர்களை அனுப்பி சாதனை படைத்தது. ஆனால் இன்றோ உயரே செல்ல அமெரிக்காவிடம் எந்த விண்கலமும்
இல்லை.
ரஷியாவுடன் உறவு சரியில்லை என்றாலும் வேறு வழியின்றி ரஷிய விண்கலம் மூலம் தான்
அமெரிக்க விண்வெளி வீர்ர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று வருகிறார்கள்.
இப்பின்னணியில் தான் அமெரிக்காவின் ஓரையன் (Orion) என்னும் புதிய விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது.
.
அமெரிக்கா உருவாக்கியுள்ள
ஓரையன் விண்கலத்தில் இப்போதைக்கு அமெரிக்க விண்வெளி வீர்ர்கள் ஏறிச் செல்ல முடியாது.
மேலும் சில சோதனைகளுக்குப் பிறகே அது சாத்தியமாகும்.
இந்த சோதனைகள் முடிவதற்கு குறைந்தது ஆறு ஆண்டுகள் ஆகும். எதிர்காலத்தில் இந்த விண்கலம்
செவ்வாய்க்கு விண்வெளி வீர்ர்களை அனுப்புவதற்குப் பயன்படுத்தப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
அமெரிக்காவின்
கிழக்குக் கரை ஓரமாக அமைந்துள்ள கேப் கெனவரல் விண்வெளி நிலையத்திலிருந்து டிசம்பர்
5 ஆம் தேதி உயரே செலுத்தப்பட்ட ஓரையன் பூமியை இருமுறை சுற்றி விட்டு சுமார் நாலரை மணி
நேரத்துக்குப் பிறகு அமெரிக்காவின் மேற்குக் கரைக்கு அப்பால் பசிபிக் கடலில் திட்டமிட்டபடி
வந்திறங்கியது. அந்த அளவில் அது முதல் கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளது.
![]() |
சோதனைக் கூடத்தில் ஓரையன் விண்கலம். வெண்மையாகக் காணப்படும் அடிப்புறப் பகுதி தான் கடும் வெப்பத்தைத் தாங்கி நிற்பதாகும். |
ஓரையன் பூமியிலிருந்து 5800 கிலோ மீட்டர் உயரம் வரை சென்றது.(இத்துடன் ஒப்பிட்டால் சர்வதேச விண்வெளி நிலையம் சுமார் 430 கிலோமீட்டர் உயரத்தில் பறக்கிறது). ஓரையன் அவ்வளவு உயரம் சென்று விட்டு பூமிக்குத் திரும்புகையில் மணிக்கு 32 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் கீழ் நோக்கி இறங்கியது.
அது காற்று மண்டலத்தில் நுழைந்த போது ஓரையன் விண்கலத்தின் வெளிப்புறம் 2200 டிகிரி செல்சியஸ் அளவுக்குச் சூடேறி நெருப்புப் பிழம்பாக மாறியது. விண்கலத்தின் வெளிப்புறத்தில் வெப்பத் தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடு இருந்ததால் விண்கலத்துக்குப் பாதிப்பு ஏற்படவில்லை. கடைசியில் அது பாரசூட்டுகள் உதவியுடன் கடலில் வந்து விழுந்தது.
ஓரையன் விண்ணில்
செலுத்தப்படுவது இதுவே முதல் தடவை என்பதால் இதில் யாரும் ஏறிச் செல்லவில்லை. வெறும்
கருவிகள் மட்டுமே இதில் இடம் பெற்றிருந்தன. அடுத்து இப்புதிய விண்கலம் 2017 ஆம் ஆண்டில்
இதே போல ஆளில்லாமல் செலுத்தப்பட்டு சந்திரனை சுற்றி விட்டு பூமிக்குத் திரும்பும்.
2021 ஆம் ஆண்டு வாக்கில் தான் அமெரிக்க விண்வெளி வீர்ர்கள் இந்த விண்கலம் மூலம் உயரே
செல்வர். ஓரையன் விண்கலம் கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்கா தயாரிக்கின்ற நான்காவது வகை
விண்கலமாகும்.
அமெரிக்காவின்
முதலாவது விண்கலமான மெர்க்குரி (Mercury) 1961 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்டது. அதில்
அமெரிக்காவின் முதல் விண்வெளி வீர்ர் ஏறிச் சென்றார். அக்கால கட்டத்தில் அமெரிக்கா
ரஷியா (அப்போதைய சோவியத் யூனியன்) ஆகிய இரண்டு
மட்டுமே விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தின.
விண்வெளித் துறையில் இந்த இரண்டுக்கும் இடையில்
கடும் போட்டா போட்டி நிலவியது. இரு நாடுகளுக்கும் இடையே விரோதப் போக்கும் நிலவி வந்தது.
ரஷியாவின் யூரி
ககாரின் 1961 ஏப்ரலில் வோஸ்டாக் (Vostok) விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்று உலக சாதனை படைத்தார்.
அதைத் தொடர்ந்து தான் அமெரிக்காவின் மெர்க்குரி உயரே செலுத்தப்பட்டது.
மெர்க்குரி விண்கலத்தில்
ஒருவர் தான் செல்ல முடியும். இதையடுத்து அமெரிக்கா தயாரித்த ஜெமினி (Gemini) விண்கலம்
இரண்டு பேர் செல்லக்கூடியதாக இருந்தது. அதைத் தொடர்ந்து அப்போலோ (Apollo) விண்கலம்
உருவாக்கப்பட்டது. அது மூவர் ஏறிச் செல்லக்கூடியதாகும். இந்த அப்போலோ விண்கலம் மூலம்
தான் அமெரிக்கா சந்திரனுக்கு விண்வெளி வீர்ர்களை அனுப்பியது.
மெர்க்குரி, ஜெமினி,
அப்போலோ ஆகிய மூன்று விண்கலங்களுக்கும் இடையே சில ஒற்றுமைகள் உண்டு. இந்த மூன்றுமே
ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட்டன. விண்வெளியில் பணி முடிந்த பின்னர் இந்த மூன்றுமே
(சரியாக சொல்வதானால் விண்கலத்தின் ஒரு பகுதி) பாராசூட் மூலம் பசிபிக் கடலில் வந்து
இறங்கின. இந்த மூன்றுமே கூம்பு வடிவத்தில் அமைந்தவை. இப்போது உருவாக்கப்பட்டுள்ள ஓரையனும்
இதே போல கூம்பு வடிவத்தைக் கொண்டது. இதுவும் கடலில் வந்து இறங்குவதே.
ஆனால் ஓரையன் அமெரிக்காவின்
முந்தைய மூன்று விண்கலங்களை விட வடிவில் பெரியது. மேலும் பல நுட்பமான வசதிகளைக் கொண்டது.
இதில் ஆறு பேர் ஏறிச் செல்ல முடியும்.
![]() |
சந்திரனுக்கு அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஏறிச் சென்ற அப்போலோ விண்கலம் |
ஆனால் இது இன்னும் முழுமை பெற்றதாகச் சொல்ல முடியாது.
எந்த ஒரு விண்கலத்திலும் விண்வெளி வீர்ர்களுக்குத் தேவையான ஆக்சிஜனை அளிக்கும் வசதி,
மின்சாரத்தை அளிக்கும் வசதி என பல வசதிகள் தேவை. ஆகவே விண்கலத்துடன் சரக்குப் பகுதி
என ஒன்று இணைக்கப்படும். ஓரையனுக்குத்
தேவையான சரக்குப் பகுதியை (Service Module) ஐரோப்பிய விண்வெளி அமைப்பு தயாரித்து அளிக்க
இருக்கிறது.
ஓரையன் விண்கலம்
இப்போது அமெரிக்காவிடம் ஏற்கனவே உள்ள டெல்டா (Delta) ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது. எனினும்
ஓரையனை செலுத்துவதற்கென்றே புதிதாக சக்திமிக்க ராக்கெட் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.
அது தயாராவற்கு நான்கு ஆண்டுகள் ஆகும். அந்த அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அமெரிக்க வீர்ர்கள்
செல்வதற்கு அமெரிக்கா இன்னும் பல ஆண்டுகளுக்கு ரஷிய விண்கலத்தைத் தான் நம்பி நின்றாக வேண்டும்.
இப்படியான நிலை
ஏற்பட்டதற்குக் காரணம் உண்டு. எந்த விண்கலமானாலும் அதை ஒரு தடவைக்கு மேல் பயன்படுத்த
முடியாது. ஆகவே திரும்பத் திரும்ப பயன்படுத்தும் வகையில் அமெரிக்கா 1981 ஆம் ஆண்டில்
ஷட்டில் வாகனத்தை (Space Shuttle) உருவாக்கியது. அவ்விதம் உருவாக்கப்பட்ட ஐந்து ஷட்டில்
வாகனங்கள் அவ்வப்போது விண்ணில் செலுத்தப்பட்டன. அவை பல சாதனைகளைப் புரிந்தன.
பூமியிலிருந்து
சுமார் 430 கிலோ மீட்டர் உயரத்தில் பூமியைப் பல ஆண்டுகளாகச் சுற்றிக் கொண்டிருக்கும்
சர்வதேச விண்வெளி நிலையத்தை (International Space Station) உருவாக்கியதில் ஷட்டில்
வாகனங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. இந்த விண்வெளி நிலையத்துக்கான பகுதிகளை அவ்வப்போது
உயரே தூக்கிச் சென்றவை இந்த ஷட்டில் வாகனங்களே. ஷட்டில் மூலம் தான் அமெரிக்க விண்வெளி
வீர்ர்கள் அவ்வப்போது சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று வந்தனர்.
![]() |
ஷட்டில் வாகனம் ராக்கெட் போல செங்குத்தாக உயரே செலுத்தப்பட்டு வந்தது. உயரே செல்ல ஆயத்த நிலையில் கொலம்பியா ஷட்டில் (1981) |
பார்வைக்கு விமானம்
போலவே இருந்த ஷட்டில் வாகனம் ராக்கெட் போல செங்குத்தாக உயரே சென்றது. பூமியைப் பல தடவை
சுற்றிப் பணிகளை முடித்த பின்னர் அது கிளைடர் விமானம் போல மெல்லத் தரை இறங்கியது.
ஆனால் ஷட்டில்
வாகனம் நிறையச் செலவு பிடிப்பதாக இருந்தது. ஒவ்வொரு தடவையும் பழுது பார்க்க நிறைய நேரம்
பிடித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அது பாதுகாப்பானதுதானா என்ற கேள்வியும் எழுந்தது.
கொலம்பியா (Colombia) என்னும் ஷட்டில் வாகனம் 2003 ஆம் ஆண்டு பிப்ரவரியில் விண்வெளியிலிருந்து
கீழே இறங்கும் போது தீப்பிடித்து நடு வானில் அழிந்ததைத் தொடர்ந்து ஷட்டில் மீதான நம்பிக்கை
தகர்ந்தது. அந்த விபத்தில் இந்திய வம்சாவளியைச்
சேர்ந்த கல்பனா சாவ்லா உட்பட 7 அமெரிக்க விண்வெளி வீர்ர்கள் உயிரிழந்தனர். ஆகவே
2011 ஆம் ஆண்டில் ஷட்டில் வாகனங்களை உயரே செலுத்துவது நிறுத்தப்பட்டது.
![]() |
விண்வெளிக்குச் சென்று விட்டு முழுதாகத் திரும்பி வந்த ஷட்டில் வாகனம். தரையிறங்குகையில் பின்புறம் உள்ள பாரசூட் வேகத்தைக் குறைக்கிறது. |
விண்வெளி ஷட்டில்கள்
கைவிடப்பட்டதன் விளைவாக விண்வெளிக்குச் செல்ல அமெரிக்காவிடம் விண்கலம் ஏதும் இல்லை
என்ற நிலைமை ஏற்பட்டது. மறுபடி ஷட்டில் மாதிரி வாகனத்தைத் தயாரிப்பதற்குப் பதிலாக பழையபடி அப்போலோ பாணியிலான
விண்கலத்தை உருவாக்குவதே சரி என அமெரிக்கா முடிவு எடுத்து அதன் பலனாக ஓரையன் உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன்
ஒப்பிட்டால் ரஷியா 1967 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சோயுஸ் (Soyuz) விண்கலத்தையே தொடர்ந்து
பயன்படுத்தி வருகிறது. கடந்த பல ஆண்டுகளில் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டுள்ள இந்த விண்கலத்தில்
மூன்று பேர் ஏறிச் செல்ல முடியும். இப்போது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அமெரிக்கா
ரஷியா உட்பட பல நாடுகளையும் சேர்ந்த விண்வெளி வீர்ர்கள் சோயுஸ் மூலம் தான் உயரே செல்கின்றனர்.
செலவு குறைவு என்பதுடன்
மிக நம்பகமானது என சோயுஸ் விண்கலம் கடந்த சுமார்
50 ஆண்டுகளில் நிரூபித்துள்ளது. ஆனால் சோயுஸ் விண்கலத்தின் மூலம் சந்திரனுக்கோ
செவ்வாய்க்கோ செல்ல இயலாது.
![]() |
ரஷிய சோயுஸ் விண்கலம். மிக நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. |
.
செவ்வாய்க்கு மனிதனை
அனுப்ப அமெரிக்காவிடம் இப்போது உறுதியான திட்டம் எதுவும் இல்லை தான். செவ்வாய்க்குச்
செல்வதற்கு ஆகக்கூடிய செலவை தனி ஒரு நாட்டினால் சுமக்க முடியாது. பல நாடுகளும் ஒன்று
சேர்ந்தால் தான் அது சாத்தியம் என்ற நிலைமை உள்ளது. செவ்வாய்க்கு விண்வெளி வீர்ர்களை அனுப்புவது என ஒரு
கட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டால் ஓரையன் விண்கலம் தான் கைகொடுக்கும்.