Jan 24, 2012

பூமியுடன் ஒத்துப் போவதா வேண்டாமா?

Share Subscribe
நமக்கு லீப் வருஷம் தெரியும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாளை சேர்த்துக் கொள்கிறோம். ஆனால் நாம் அவ்வப்போது ஒரு நாளுடன் ஒரு வினாடியை சேர்த்துக் கொண்டு வந்திருக்கிறோம் என்பது பலருக்கும் தெரியாது. இப்படிச் சேர்க்கப்படும் வினாடியானது லீப் வினாடி என்று குறிப்பிடப்படுகிறது.

இப்படி ஒரு வினாடியை தொடர்ந்து சேர்த்துக் கொள்வதா வேண்டாமா என்பது உலக அளவில் பிரச்சினையாகியிருக்கிறது. சேர்த்துக் கொள்வதால் பிரச்சினை ஏற்படுகிறது. ஆகவே "கூடாது, இதை நிறுத்த வேண்டும்" என்று அமெரிக்கா தலைமையிலான நாடுகள் எதிர்க்கின்றன. ஒரு வினாடியை சேர்த்துக் கொள்வதை நீடிக்க வேண்டும் என்று பிரிட்டன் தலைமையிலான நாடுகள் வற்புறுத்துகின்றன.
” நான் இப்போ கொஞ்சம் ஸ்லோ”
அண்மையில் ஐரோப்பாவில் ஜெனீவா நகரில் சர்வதேச தகவல் தொடர்பு யூனியன்(ITU) கூட்டத்தில் இப்பிரச்சினை விவாதிக்கப்பட்டது. இப்பிரச்சினையில் முடிவு எடுக்கும் அதிகாரம் இந்த அமைப்புக்கு உள்ளது. இந்த அமைப்பில் இந்தியா உட்பட 191 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. எனினும் இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவில்லை. 2015 ஆம் கூட்டத்தில் பார்த்துக் கொள்ளலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த ஒரு வினாடிப் பிரச்சினையானது ஒரு நாள் என்பதுடன் சம்பந்தப்பட்டது. பூமி தனது அச்சில் ஒரு தடவை சுற்றி முடிப்பதையே நாம் ஒரு நாள் என்று வைத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு 24 மணி நேரம் ஆவதாகவும் வைத்துக் கொண்டிருக்கிறோம். 24 மணி நேரம் என்பதை வினாடிகளாக மாற்றுவோம். அப்படிச் செய்தால் ஒரு நாள் என்பது 86,400 வினாடிகளுக்குச் சமம்.

ITU தலைமையகம்
பூமி மட்டும் தனது அச்சில் ஒரு தடவை சுற்றி முடிக்க மிகச் சரியாக 86,400 வினாடிகளை எடுத்துக் கொண்டால் பிரச்சினை இராது. ஆனால் பூமி இப்போது சராசரியாக 86,400.002 வினாடிகளை எடுத்துக் கொள்கிறது. அதாவது பூமியின் சுழற்சி வேகம் சற்றே குறைந்துள்ளது. பூகம்பங்கள், சூரியனின் ஈர்ப்பு சக்தி, சந்திரனின்  ஈர்ப்பு சக்தி என பல காரணங்கள் இதற்கு உண்டு. பூமியின் அச்சில் ஏற்படும் நடுக்கமும் ஒரு காரணம்.

இந்த வித்தியாசத்தை அவ்வப்போது சரிக்கட்டாவிட்டால் பிரச்சினை ஏற்படும். ஒருவரின் கடிகாரம் தினமும் 2 வினாடி மெதுவாக ஓடுவதாக வைத்துக் கொள்வோம். ஒரு மாதம் கழித்துப் பார்த்தால் அந்த கடிகாரம் காட்டும் நேரம் ஒரு நிமிஷம் குறைவானதாக இருக்கும். ஆகவே அவர் மாதக் கடைசியில் தனது கடிகாரத்தில் நிமிஷம் காட்டும் முள்ளை ஒரு நிமிஷம் முன்னே தள்ளி வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.  இப்போதுள்ள பிரச்சினை இப்படியாகத் தான் உள்ளது.

உலகம் முழுவதற்கும் இப்போது மிகச் சரியான நேரம் என்பது ஒன்று உண்டு. அது அணுக் கடிகாரம் ஆகும். நாம் பின்பற்றுகின்ற அந்த நேரம் Civil  Time என்று குறிப்பிடப்படுகிறது. பல அணுக்கடிகாரங்களின் அடிப்படையில் அது நிர்ணயிக்கப்படுகிறது. அந்த நேரமும் பூமியின் சுழற்சிப்படியான நேரமும் ஒத்துப் போக வேண்டும் என்பதற்காகவே அவ்வப்போது ஒரு வினாடி சேர்த்துக் கொள்ளப்படுகிறது. அதாவது நாம் பூமியுடன் ஒத்துப் போகிறோம். பூமியுடன் இப்படி ஒத்துப் போவதா வேண்டாமா என்பது தான் இப்போதுள்ள கேள்வி.

அமெரிக்காவைப் பொருத்தவரையில் அவ்வப்போது ஒரு வினாடியை சேர்த்துக் கொள்வதானது நடைமுறையில் பல பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் கருதுகிறது. ஒரு வினாடியை அவ்வப்போது சேர்ப்பதால் விமான சர்வீஸ் நேர ஏற்பாடு, பங்கு மார்க்கெட்டுகளின் இயக்கம், தகவல் தொடர்பு ஏற்பாடுகள் கம்ப்யூட்டர் சிஸ்டம் முதலியவற்றில் பிரச்சினை உண்டாவதாக அது கூறுகிறது.

ஆகவே அவ்வப்போது ஒரு வினாடியைச் சேர்த்துக் கொள்கின்ற ஏற்பாடு கூடாது என்று அது கூறுகிறது. அமெரிக்காவின் கருத்தை பிரான்ஸ், ஜப்பான், மெக்சிகோ ஆகிய நாடுகள் ஆதரிக்கின்றன. இந்தியாவும் லீப் வினாடி ஏற்பாடு தேவையில்லை என்று கூறுகிறது. லீப் வினாடி ஏற்பாடு தொடர்ந்து இருக்க வேண்டும் என பிரிட்டன், சீனா, ரஷியா முதலான நாடுகள் கூறுகின்றன.

லீப் வினாடியைக் கைவிட்டு விட வேண்டும் என்ற யோசனை இப்போது கிளம்பியது அல்ல. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இது விவாதிக்கப்பட்டு வருகிறது.

லீப் வினாடியைச் சேர்க்கும் ஏற்பாடு இல்லாமல் போனால் கால வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே போகும். 500 ஆண்டுகளில் இது ஒரு மணி நேரமாக அதிகரித்து விடும். பல ஆயிரம் ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் அணுக்கடிகாரங்கள் காலை என்று காடடும். ஆனால் அப்போது சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருக்கும்.

1972 ஆம் ஆண்டிலிருந்து நாம் இவ்விதம் அவ்வப்போது ஒரு வினாடியைச் சேர்த்துக் கொள்ளும் முறையைப் பின்பற்றி வருகிறோம். பொதுவில் டிசம்பர் 31 ஆம் தேதி அல்லது ஜூன் 30 ஆம் தேதி இவ்விதம் ஒரு வினாடி சேர்த்துக் கொள்ளப்படுகிறது. 1972 ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு தேதிகளிலும் இது சேர்த்துக் கொள்ளப்பட்டது . கடந்த 40 ஆண்டுகளில் இவ்விதம் 24 தடவை ஒரு வினாடி சேர்த்துக் கொள்ளப்பட்டது.

 அமெரிக்காவில் உள்ள அணுக் கடிகாரம்
பூமி சில சமயம் விசித்திரமாகச் செயல்பட்டு அதன் சுழற்சி வேகம் தற்காலிகமாக சில மில்லி செகண்ட் அதிகரிப்பது உண்டு. உதாரணமாக 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானுக்கு கிழக்கே கடலுக்கு அடியில் கடும் பூகம்பம் ஏற்பட்ட போது பூமியின் சுழற்சி வேகம் 1.8 மில்லி செகண்ட் அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது (இந்த கடலடி பூகம்பம் காரணமாகவே கடும் சுனாமி ஏற்பட்டு புகுஷிமா அணுமின் நிலையம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது).

1999 ஆம் ஆண்டிலிருந்து 2011 வரையிலான காலத்தில், 2005 மற்றும் 2008 ஆண்டுகளில் மட்டுமே ஒரு வினாடி சேர்த்துக் கொள்ளப்பட்டது.

சர்வதேச தகவல் தொடர்பு யூனியன் கூட்டத்தில் இப்போதைக்கு முடிவு எதுவும் எடுக்க வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டதால் வருகிற ஜூன் 30 ஆம் தேதி வழக்கம் போல ஒரு வினாடி சேர்த்துக் கொள்ளப்படும்.

7 comments:

மதுரை சரவணன் said...

nalla ariviyal thakaval...valththukkal

Siraju said...

வரலாற்று ஆர்வம் உள்ள எனக்கு எப்போதும் அறிவியல் சூத்திரங்கள் கொண்ட ஒவ்வாத மாத்திரைதான். ஆனால், உங்கள் எளிய தமிழில் விளக்கங்கள் இப்போது எனக்கு அறிவியல் மீது ஒரு சொல்லிட முடியா ஆர்வம் ஏற்பட்டுள்ளது. நன்றி ராமதுரை ஐயாவிற்கு.

இரமேஷ் இராமலிங்கம் said...

Superb article sir.

Anonymous said...

Good one sir.

A.sivanesan said...

nalla ariviyal thakaval...Superb article...Good...thank you.sir...valththukkal.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

Kandipa liep varudam irrukanum oru vinnadi serkanum illaina earth la prachanai varum

Post a Comment