Jan 5, 2012

நாம் இப்போ சூரியனுக்கு ரொம்ப பக்கம்

Share Subscribe
இன்று ஜனவரி 5 ஆம் தேதி. நாம் மற்ற எந்த நாளையும் விட சூரியனுக்கு மிகவும அருகில் இருக்கிறோம். ”இப்போ ரொம்ப குளிருது.  நீங்க ஏதோ தப்பா சொல்றாப்லே இருக்கு” என்று கேட்கலாம்.

நியாயமான சந்தேகம்தான். தமிழகத்தில் இந்த ஆண்டு குளிரானது வழக்கத்தை விட சற்று அதிகமாக உள்ளதாகவே தோன்றுகிறது. பாஸ்டன், லண்டன், மாஸ்கோ ஆகிய நகரங்களில் குளிரின் கடுமை பற்றிச் சொல்லவே வேண்டாம். நிலைமை இப்படி இருக்க சூரியனுக்கு அருகாமையில் இருக்கிறோம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இதை சற்று விளக்கியாக வேண்டும்.

சூரியனை பூமி சுற்றி வருவதை நாம் அறிவோம். பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள சராசரி தூரம் 15 கோடி கிலோ மீட்டர். பூமியின் சுற்றுப்பாதை மட்டும் மிகச சரியான வட்டமாக இருந்தால் தூரம் எப்போதும் ஒரே அளவில் இருக்கும். ஆனால் பூமியின் சுற்றுப்பாதை சற்றே அதுங்கிப் போன வட்டமாக உள்ளது. ஆங்கிலத்தில் இதை Ellipse  என்பார்கள்.தமிழில் இதை நீள் வட்டம் என்பதை விட அதுங்கிய வட்டம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

ஜனவரி 5: பூமி சூரியனுக்கு அருகாமையில் உள்ளது.
ஜுலை 5: பூமி சூரியனிலிருந்து மிகவும் அப்பால் உள்ளது.
பூமியின் சுற்றுப்பாதை இவ்விதம் அதுங்கிய வட்டமாக இருப்பதால் பூமியிலிருந்து சூரியன் ஒரு சமயம் 15.21கோடி கிலோ மீட்டரில் உள்ளது. இதைத் தொலைவு நிலை(Aphelion) என்கிறார்கள். வேறு சமயத்தில் இந்த தூரம் 14.71 கோடி கிலோ மீட்டராக உள்ளது. இதை அண்மை நிலை (Perhelion) என்கிறார்கள். ஆண்டில் குறிப்பிட்ட தேதிகளில் அண்மை நிலையும், தொலைவு நிலையும் ஏற்படுகின்றன.

இந்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி சூரியன் அண்மை நிலையில் இருக்கும். அதாவது ஆண்டின் மற்ற நாட்களை விட அன்றைய தினம் தான் நாம் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கிறோம். அப்படியானால் ஜனவரி மாதம் தானே வெயில் கடுமையாக இருக்க வேண்டும்? அப்படி இல்லையே என்று கேட்கலாம்.

அப்படி இல்லாததற்கு முக்கிய காரணம் பூமியின் சாய்மானம். பூமியின் சாய்மானம் காரணமாகத் தான் பூமியில் கோடைக்காலம், மழைக்காலம், குளிர்காலம் போன்ற பருவங்கள் ஏற்படுகின்றன. பூமியின் நடுக் கோட்டுக்கு (Equator) வடக்கே உள்ள இடங்களில்-- வட கோளார்த்தம் -- இப்போது குளிர்காலம்.

பூமியானது தனது அச்சில் சுமார் 23.5 டிகிரி அளவுக்கு சாயந்தபடி உள்ளது. அவ்விதம் சாய்ந்த நிலையில் தான் அது சூரியனைச் சுற்றி வருகின்றது. ஜனவரி மாதத்தில் சூரியன் பூமிக்கு எதிர்ப்புறமாக சாயந்த நிலையில் உள்ளது.
சூரிய கிரணங்கள் சாய்வாக விழும் போது வெயில் உறைக்காது. செப்டம்பருக்குப் பிறகு பிப்ரவரி வரை வட கோளார்த்தத்தில் சூரிய கிரணங்கள் சாய்வாக விழுகின்றன

நீங்கள் இரவில் விளக்குகளை அணைத்து விட்டு சுவர் அருகே நின்றபடி  டார்ச் லைட்டை சுவர் மீது வெளிச்சம் விழும் படி ஆன் செய்யுங்கள்.வட்டமாக பிரகாசமான  ஒளி விழும். பின்னர் டார்ச் லைட்டை தரையில் கிடத்தி ஆன் செய்யுங்கள்.

ஒளி இப்போது பரந்த பரப்பில் விழும். ஆனால் தரையில் விழும் ஒளி மங்கலாக இருக்கும். அதிகப் பரப்பில் விழுவதால் இப்படி ஏற்படுகிறது. குளிர் கால்த்தில் வட கோளார்த்ததில் இப்படியாகத் தான் வெயில் விழுகிறது.

கோடையில் ஒரு சதுர கிலோ மீட்டரில் விழுகின்ற அதே வெயில் குளிர் காலத்தில் பத்து சதுர கிலோ மீட்டரில் விழுவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். அப்போது நிச்சயம் வெயில் உறைக்காது. ஆகவே குளிர் தான் வீசும்.

ஆகவே கோடையா, குளிர் காலமா, வெயில் உறைக்குமா, குளிர் நடுக்குமா என்பது சூரியன் பூமிக்கு அருகில் உள்ளதா இல்லையா என்பதுடன் சம்பந்தப்பட்டது அல்ல.

இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். தமிழகம் மாதிரி பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே உள்ள பகுதிகளை விட 23 ஆம் டிகிரி வடக்கு அட்சரேகைக்கு வடக்கே உள்ள பகுதிகளில் -- வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவின் வட பகுதிகள் ஆகியவற்றில் சூரிய கிரணங்கள் மிகவும் சாய்வாக விழும். ஆகவே தான் குளிர் காலத்தில் அப்பகுதிகளில் குளிர் அதிகமாக உள்ளது.

இடது புறம்: ஜூலையில் சின்ன சூரியன்.
வலது புறம்: ஜனவரியில் பெரிய சூரியன்.
 இது 2005 ஆம் ஆண்டில் அந்தந்த மாதங்களில்
எடுக்கப்பட்டுப் பிறகு ஒன்று சேர்க்கப்பட்ட படம்
இன்னொரு விஷயம். எதுவாக இருந்தாலும் அருகில் இருக்கும் போது சற்று பெரிதாகத் தெரியும். சூரியனுக்கும் இது பொருந்தும். ஜனவரி 5 ஆம் தேதி சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் மற்ற நாட்களில் இருப்பதை விடக் குறைவு என்பதால் ஜனவரியில் சூரியன் சற்று பெரிதாகத் தெரியும். ஜூலையில் சற்று சிறியதாகத் தெரியும் (சூரியன் பெரியதாகத் தெரிகிறதா என்று தெரிந்து கொள்ள சூரியனைப் பார்க்க முயல வேண்டாம். கண் பார்வை பறி போய் விடலாம்).

7 comments:

சமுத்ரா said...

thank you

Anonymous said...

Really really interesting.thanks

Anonymous said...

வணக்கம் ஐயா.

ஒரு சிறிய ஐயம பூமி உருண்டையானது எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் உருண்டையாகத் தான் தெரியும் என்று நினைக்கிறேன் அப்படியிருக்க பூமி 23.5 டிகிரி சாய்வாக சுற்றுகிறது என்று எப்படி கணக்கிட முடிகிறது. இது சரியான கேள்வியா என்று தெரியவில்லை ஆனாலும் ஐயத்தை தீர்த்துக்கொள்ளலாம் என்று கேட்கிறேன் தவறிருந்தால் மன்னிக்கவும் ஐயா.

வெங்கடேஷ்

என்.ராமதுரை / N.Ramadurai said...

வெங்கடேஷ்
பூமி 23.5 டிகிரி சாய்வாக அமைந்திருக்கிறது என்ப்தை நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தபடி அளந்து உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். உங்கள் வீட்டில் கிழக்குப் பார்த்த ஜன்னல் இருக்கலாம்.அந்த ஜன்னல் வழியே சூரிய ஒளி ஏதோ ஓர் அறையின் சுவரில் விழுவதாக வைத்துக் கொள்வோம். வருகிற டிசம்பர் 21 ஆம் தேதி காலை 8 மணி வாக்கில் சூரிய ஒளி சுவரில் விழுகின்ற இடத்தைக் கோடிட்டுக் குறித்துக் கொளளவும். பிறகு மார்ச் 21 ஆம் தேதி இப்படி குறித்துக் கொள்ளவும். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட கோணத்தை கணக்கிட்டால் 23.5 டிகிரி வரும்.
வானில் சூரியன் ஒரே இடத்தில் தான் இருக்கிறது. பூமியின் சாய்மானம் காரணமாக வானில் சூரியன் இடம் மாறுவதாகத் தோன்றுகிறது. பூமி சாய்ந்தப்டி சுற்றுவதால்தான் சுவரில் விழும் ஒலி இடம் மாறித் தெரியும்

Anonymous said...

விளக்கத்திற்கு மிகவும் நன்றி ஐயா தாங்கள் கூறியதுபோல் செய்து பார்க்கிறேன்.

வெங்கடேஷ்.

ramji said...

thank for the information

Anonymous said...

Please clarify why December 21 & march 21 is taken as reference to measure the 23.5 degree??
Renganathan , Chennai.

Post a Comment