Jan 3, 2012

எல்லாப் புயல்களும் ஒரே மாதிரி சுழலுமா?

Share Subscribe
வங்கக் கடலில் பொதுவில் நவம்பர் மாதத்தில் புயல்கள் உருவாகும். டிசம்பர் இரண்டாவது வாரம் வரையிலும் புயல் சீசன் தான். இந்த ஆண்டில் அசாதாரண்மான வகையில் வங்கக் கடலில் நவம்பரில் ஒரு புயல் கூடத் தோன்றவில்லை. இதற்குப் பரிகாரமாக டிசம்பர் கடைசியில் - 30 ஆம் தேதியன்று - ஒரு புயல் தமிழகத்தைத் தாக்கிக் கடும் சேதத்தை விளைவித்தது.

கம்ப்யூட்டர் வசதி கொண்டவர்களில் பலரும் இந்திய வானிலை இலாகாவின் வலைத் தளத்துக்குச் சென்று கல்பனா செயற்கைக்கோள் அவ்வப்போது அனுப்பிய படங்களைப் பார்த்து புயல் எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொண்டிருப்பர். ஆனால் அவர்களும் சரி, புயல் சுழலும் பாணியை உன்னிப்பாகக் கவனிக்கத் தவறியிருக்கலாம்.

1. வலமிருந்து இடம் 2. இடமிருந்து வலம்
கல்பனா (Kalpana) செயற்கைக்கோள் அனுப்பும் படங்கள் சில பத்திரிகைகளிலும் வெளியாவதுண்டு. அப்படங்களைப் பார்க்கின்றவர்களும் சரி, புயல் சுழலும் பாணியைக் கவனிக்காமல் இருக்கலாம்.

வங்கக் கடலில் உருவாகின்ற புயல்கள அனைத்துமே வலப்புறத்திலிருந்து இடப்புறமாக சுழல்வதாக (Anti Clockwise) இருக்கும்.

வலமிருந்து இடமாகச் சுழலும்
வட கோளார்த்தப் புயல் 
அட்லாண்டிக் கடலிலும் இவ்விதம் புயல்கள் தோன்றி அமெரிக்காவின் தென் கிழக்குப் பகுதியைத் தாக்குகின்றன. ஜப்பானை யொட்டிய கடல் புகுதியிலும் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அருகில் உள்ள கடலிலும் இது போன்று புயல்கள் உருவாகின்றன. சீனாவின் கிழக்குக் கரையை ஒட்டிய கடலிலும் புயல்கள் தோன்றுகின்றன.

சொல்லி வைத்தாற் போல இந்த அத்தனை புயல்களும் வலமிருந்து இடமாகத் தான் சுழலும். பூமியின் நடுக்கோட்டுக்கு(Equator) வடக்கே எந்தப் புயலும் இப்படியாகத் தான் சுழலும்.

டிசம்பர் 2011, "தானே”(Thane) புயல்.
வலமிருந்து இடமாகச் சுழல்கிறது.
நன்றி: IMD
இதற்கு நேர் மாறாக நடுக்கோட்டுக்கு தெற்கே தோன்றும் புயல்கள் அனைத்தும் இடமிருந்து வலப்புறமாகச் சுழலும். கீழே உள்ள படத்தில் புயல் இடமிருந்து வலப்புறமாக (Clockwise) சுழல்வதைக் கவனிக்கவும். இப்புயல் தென் கோளார்த்தத்தில் உருவானதாகும்.தென் கோளார்த்தத்தில் புயல்கள் அனைத்தும் இவ்விதமாகத் தான் சுழலும்.

இடமிருந்து வலமாகச் சுழலும்
தென் கோளார்த்தப் புயல்

குஸ்டாவ் கொரியாலிஸ்
வட கோளார்த்தப் புயல்கள் ஒரு விதமாகவும் தென் கோளார்த்தப் புயல்கள் வேறு விதமாகவும் சுழல்வதற்கு கொரியாலிஸ் விளைவு(Coriolis Effect) காரணம். பிரெஞ்சு விஞ்ஞானியும் கணித நிபுணருமான குஸ்டாவ் கொரியாலிஸ் (Gaspard-Gustave de Coriolis) 1835 ஆம் ஆண்டில் அறிவித்த கொள்கை புயல்களின் இப்போக்குக்கான அடிப்படையை விளக்கியது. ஆகவே இதற்கு அவரது பெயர் வைக்கப்பட்டது.

பூமியானது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சுழல்கிறது. ஆகவே வட கோளார்த்தத்தில் புயல் உருவாகி மேகக் கூட்டங்கள் சுழல ஆரம்பிக்கும் போது வட திசையிலிருந்து தெற்கு நோக்கி வீசும் காற்றும் அத்துடன் மேகங்களும் பூமி சுழலும் திசையை நோக்கி அதாவது வலப் புறமாக சற்று திருப்பப்படுகின்றன. ஆகவே அவை வலப்புறத்திலிருந்து இடப்புறமாகச் சுழல ஆரம்பிக்கின்றன.

தென் கோளார்த்ததில் இதற்கு நேர் மாறான விளைவு ஏற்பட்டு புயல் மேகங்கள் இடமிருந்து வலப்புறமாகச் சுழல முற்படுகின்றன.

கொரியாலிஸ் விளைவு புயல்கள் சுழலும் பாணியை மட்டுமன்றி பீரங்கிக் குண்டுகள் செல்லும் பாதையிலும் விளைவை உண்டாக்குகின்றன. தரைப் படை மற்றும் போர்க்கப்பல்களில் உள்ள பீரங்கிகளின் குண்டுகள் பல கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடியவை.

பூமியின் வட கோளார்த்தத்தில் வடக்கு நோக்கி பீரங்கிக் குண்டுகளைச் செலுத்தும் போது கொரியாலிஸ் விளைவு காரணமாக சற்றே வலப்புறம் விலகும். ராணுவத்தினர் பீரங்கித் தாக்குதல் நடத்தும் போது இதனை மனதில் கொண்டு குண்டுகளைச் செலுத்துவர். அப்போது தான் அவை இலக்கை சரியாகத் தாக்கும்.

ஆனால் முதல் உலகப் போரின் போது பிரிட்டிஷ் படைக்கும் ஜெர்மன் படைக்கும் பூமியின் நடுக்கோட்டுக்குத் தெற்கே கடற் போர் நடந்தது. போரின் ஆரம்பக் கட்டத்தில் பிரிட்டிஷ் கடற் படையின் பீரங்கிக் குண்டுகள் மிகவும் தள்ளிப் போய் விழுந்தன. அவர்கள் கொரியாலிஸ் விளைவை (வட கோளார்த்தத்தில் ஏற்படுகின்ற விளைவை)  மனதில் கொண்டு அத்ற்கேற்பத் தாக்கினர். ஆனால் தென் கோளார்த்தத்தில் பீரங்கிக் குண்டுகள் இடது புறம் விலகும் என்பதை உணரவில்லை. இதை உணர்ந்த பின்னர் பிரச்சினை எதுவும் இருக்கவில்லை.

3 comments:

Anonymous said...

வியாழன் கிரகத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக வீசிவரும் புயல் இதற்கு நேர்மாறான திசையில் சுழல்கிறதே, எப்படி? வியாழனின் சுழல்திசை பூமிக்கு மாறானதா?

என்.ராமதுரை / N.Ramadurai said...

To Anonymous
சரியான கேள்வி. பூமியில் காற்றழுத்தம் மிகக் குறைவாக உள்ள பகுதி உண்டு. காற்றழுத்தம் மிக அதிகமாக உள்ள பகுதியும் உண்டு. காற்றழுத்தம் மிகக் குறைவாக உள்ள பகுதியை மையமாக் கொண்டவை தான் cyclones. காற்றழுத்தம் மிகுதியாக உள்ள இடத்தை மையமாகக் கொண்டவை Anticyclones( எதிர்புயல் என்றும் சொல்ல்லாம்) இந்த Anticyclones வடகோளார்த்தத்தில் இடமிருந்து வலமாக -Clockwise சுழலும். தென் கோளார்த்ததில் வலமிருந்து இடமாக சுழலும். antaicyclones நல்ல வானிலையைக் கொண்டு வருபவை
வியாழன் கிரகத்தில் உள்ள Great Red Spot மேற்கூறிய Anticyclone வகையிலானது. ஆகவே தான் அது வலமிருந்து இடமாக -- நீங்கள் குறிப்பிட்டது போல நேர்மாறான திசையில் சுழல்கிறது.

Saravanan Murugan said...

அருமையான கட்டுரை!

Post a Comment