May 25, 2012

இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்

Share Subscribe
பிரான்ஸ் நாட்டின் ஸ்பாட்- 6 என்னும் 800 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் விரைவில் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட இருக்கிறது. பிரான்ஸ் நாட்டிடம் இல்லாத ராக்கெட்டா? பல டன் எடை கொண்ட செயற்கைக்கோளை உயரே எடுத்துச் செல்லக்கூடிய ஏரியான்-5 ராக்கெட்டை பிரான்ஸ் நாட்டின் தயாரிப்பு என்று சொல்லலாம். பிறகு ஏன் ஸ்பாட் செயற்கைக்கோள் இந்தியாவுக்கு வருகிறது?

இந்திய ராக்கெட் மூலம் செலுத்தினால் செலவு குறைவு. ஆகவே தான் பிரான்ஸ் ஏரியான் 5 (Ariane) ராக்கெட்டை நாடாமல் நம்மை அணுகுகிறது. இதற்கு பிரான்ஸ் நமக்குப் பணம் தரும்.

இந்தியாவின் பி.எஸ்.எல். வி. ராக்கெட்
இதற்கு நேர்மாறாக இந்தியாவின் ஜிசாட்-10 செயற்கைக்கோள் (எடை 3435 கிலோ) தென் அமெரிக்காவில் உள்ள் கூரு என்னுமிடத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஜூலை-ஆகஸ்ட் மாத வாக்கில் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் 5 ராக்கெட் மூலம் ஜிசாட்-10 உயரே செலுத்தப்படும். இந்த அளவுக்கு எடை கொண்ட செயற்கைக்கோளை உயரே அனுப்ப இந்தியாவிடம் தகுந்த ராக்கெட் இல்லை. ஆகவே தான் அது கூரூ நிலையத்துக்குச் செல்கிறது. இதற்காக நாம் ஐரோப்பிய விண்வெளி அமைப்புக்கு நிறையவே பணம் தருவோம்.

இந்தியாவின் பி.எஸ்.எல்.வி (PSLV) ராக்கெட் மிக நம்பகமானது தான் - அது கடந்த பல ஆண்டுகளில் 20 தடவை வெற்றி கண்டுள்ளது. ஆனால் அதன் மூலம் அதிகபட்சம் சுமார் 1800 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளைத் தான் உயரே செலுத்த முடியும்.

. ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்
மூன்று டன், நான்கு டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை உயரே செலுத்துவதற்கான சக்திமிக்க ராக்கெட்டுகளை உருவாக்க இந்தியா முயற்சி செய்யாமல் இல்லை. இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி. (GSLV) எனப்படும் புதிய வகை ராக்கெட்டின் நோக்கமே அது தான். ஆனால் அந்த முயற்சிகள் நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றதாகச் சொல்ல முடியாது. அதனால் தான் பிரச்சினை.

சக்திமிக்க ராக்கெட்டை உருவாக்க கிரையோஜெனிக் எஞ்சின் தேவை. இந்தியா சொந்தமாக கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சினை உருவாக்க 1986 ஆம் ஆண்டிலிருந்தே முயன்று வருகிறது. இதற்கிடையே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தொழில் நுட்பத்தை இந்தியாவுக்கு விற்க ரஷியா சம்மதித்து. இதன் விளைவாக அப்போது இந்தியாவின் முயற்சியில் சற்று சுணக்கம் ஏற்பட்டதாகவும் கூறலாம்.

ஆனால் ராக்கெட் துறையில்-- வேறு எந்தத் துறையிலும் -- இந்தியா முன்னேறுவதை அமெரிக்காஅப்போது விரும்பவில்லை. எனவே இந்தியாவுக்கு கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் தொழில் நுட்பத்தை விற்கக்கூடாது என்று ரஷியா மீது அமெரிக்கா பெரும் நிர்பந்தத்தைச் செலுத்தியது. சோவியத் யூனியன் உடைந்து ரஷியாவை அதிபர் யெல்ட்சின் ஆண்டு கொண்டிருந்த காலம் அது.

இந்தியா உருவாக்கிய
கிரையோஜெனிக் எஞ்சின் சோதிக்கப்படுகிறது
அக்கால கட்டத்தில் பல பிரச்சினைகளை எதிர்ப்பட்டிருந்த யெல்ட்சின் எளிதில் அமெரிக்க நிர்பந்தத்துக்குப் பணிந்தார். இந்தியாவுடனான ஒப்பந்தம் 1992 ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக ஏழு கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின்களை மட்டும் இந்தியாவுக்கு அளிக்க ரஷியா முன்வந்தது.

ரஷியா அளித்த கிரையோஜெனிக் எஞ்சின்கள் இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி.   ராக்கெட்டுகளில் பயனப்டுத்தப்பட்டன. ரஷிய எஞ்சினைப் பயன்படுத்தி 2001 ஆம் ஆண்டிலிருந்து ஆறு தடவை உயரே செலுத்தியதில் இரண்டு தடவை மட்டுமே வெற்றி கிட்டியது. இதல்லாமல் இந்தியா சொந்தமாக உருவாக்கிய கிரையோஜெனிக் எஞ்சினை 2010 ஆம் ஆண்டில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் பொருத்தி உய்ரே செலுத்திய போது அது தோல்வியில் முடிந்தது.

பிரச்சினை என்ன என்பது தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது. இந்திய கிரையோஜெனிக் எஞ்சின் மே மாதம் கூட நாகர்கோயில் அருகே மகேந்திரகிரி என்னுமிடத்தில் மறுபடி சோதிக்கப்பட்டது.

ஒரு ராக்கெட்டை உருவாக்குவதில் தோல்விகள் சகஜம். ஐரோப்பிய நாடுகள் ஏரியான் ராக்கெட்டை வெற்றிகரமாக உருவாக்கியதற்கு முன்னர் 1960 களின் பிற்பகுதியில் யுரோப்பா என்னும் ராக்கெட்டை உருவாக்க முயன்ற போது தொடர்ந்து தோல்விகளே கிட்டியது. கடைசியில் அத்திட்டமே கைவிடப்பட்டது.

கிரையோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பத்தை அனேகமாக எல்லா நாடுகளுமே சிரமப்பட்டு தான் உருவாக்கிக் கொண்டன. அமெரிக்கா 1963 ஆம் ஆண்டில் இதில் வெற்றி பெற்றது. ஜப்பான் 1977. பிரான்ஸ் 1979. சீனா 1984. ரஷியா தான் முதன் முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பி சாதனை படைத்தது என்றாலும் 1987 ஆம் ஆண்டில் தான் ரஷியா கிரையோஜெனிக் ராக்கெட் தொழில் நுட்பத்தில் வெற்றி கண்டது.

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் -- அதாவது கிரையோஜெனிக் எஞ்சின் -- முழு வெற்றி காணவில்லை என்பதால் இந்திய விண்வெளித் திட்டத்தில் சில கோணல்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மறுக்க முடியாது. இந்தியாவின் எடை மிக்க செயற்கைக்கோள்கள் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் தான் இனி செலுத்தப்படும் என்ற நம்பிக்கையில் இந்த வகை செயற்கைக்கோள்களுக்கு இதுவரை இருந்துவந்த இன்சாட் என்னும் பெயருக்குப் பதிலாக ஜிசாட் என்று பெயர் வைக்கப்பட்டது.

ஆனால் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் முழு வெற்றி பெறாமல் போனதால் ஜிசாட்-8 கூரூவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஏரியான் மூலம் செலுத்தப்பட்டது. ஏற்கெனவே குறிப்பிட்டபடி ஜிசாட்-10 செயற்கைக்கோளும் ஏரியான் மூலமே செலுத்தப்பட உள்ளது. சந்திரனுக்கு சந்திரயான்-2 என்னும் ஆளில்லா விண்கலத்தைச் செலுத்துவதிலும் தாமதம் ஏற்படும் என்று தோன்றுகிறது. இந்தியாவுக்கு ஏழு கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின்களை அளித்த ரஷியா இப்போது அவ்வகையான எஞ்சின்களின் உற்பத்தியை நிறுத்தி விட்டது. எனவே இந்தியா சொந்தமாக உருவாக்கிய கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சினை எப்படியாவது வெற்றி பெறச் செய்தாக வேண்டும் என்ற நிலையில் உள்ளது.

இந்தியா உருவாக்கிய ராக்கெட்டுகள், இடமிருந்து:
1. எஸ்.எல்.வி 2. ஏ.எஸ்.எல்.வி 3. பி.எஸ்.எல்.வி
4. ஜி.எஸ்.எல்.வி மார்க்-2 5. ஜி.எஸ்.எல்.வி மார்க்-3
(இவற்றில் முதல் இரு வகை ராக்கெட்டுகள்
இப்போது பயனில் இல்லை)
இந்தியா இப்போதைய ஜி.எஸ்.எல்.வி. மார்க்-2 ராக்கெட்டைப் போல இரண்டு மடங்கு திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டைத் தயாரித்து வருகிறது. இது முற்றிலும் புது மாதிரியிலானது. இதில் இரண்டாவது அடுக்கில் இந்தியாவின் கிரையோஜெனிக் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த ராக்கெட் மட்டும் வெற்றி பெற்றால் இந்தியா தனது எடை மிக்க செயற்கைக்கோள்களை இந்திய மண்ணிலிருந்தே செலுத்த இயலும். ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் 5 ராக்கெட்டை நம்பி இருக்க வேண்டியிராது.

3 comments:

பொன்.முத்துக்குமார் said...

ஆக, கிரையோஜெனிக் தொழில்நுட்பம் கொண்டுள்ள நாடுகள் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் முன்பாகவே அதை சாதித்துக்கொண்டுவிட்டன. நாம் மற்றவர்கள் இன்னமும் முக்கிக்கொண்டிருக்கிறோம்.

ஹ்ம்ம்ம்ம்ம் என்னத்தை சொல்ல.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி ஐயா.

Salahudeen said...

நல்ல பதிவு நன்றி ஐயா இந்தியாவுக்காக கிரையோஜெனிக் தொழில்நுட்பம் கொண்டு வர பாடுபடும் நம் அறிவியலாளர்கள் பாராட்டுக்குரியவர்கள் அவர்கள் விரைவில் வெற்றி பெற வாழ்த்துவோம்.
///ஆனால் ராக்கெட் துறையில்-- வேறு எந்தத் துறையிலும் -- இந்தியா முன்னேறுவதை அமெரிக்காஅப்போது விரும்பவில்லை./// ஐயா அப்போது இல்லை எப்ப்போதும் அமெரிக்கா இன்னொரு நாடு முன்னேறுவதை விரும்புவதில்லை.. இருந்தும் இன்னும் நமது அரசு அமெரிக்காவின் காலை நக்கி கொண்டு இருப்பது வெட்ககேடனது.

Post a Comment