Sep 4, 2012

ஒரு நதி பின்னோக்கி ஓடுமா?

Share Subscribe
ஆகஸ்ட் மாதக் கடைசி வாக்கில் அமெரிக்காவின் தென் பகுதியை ஐசக் என்று பெயரிடப்பட்ட புயல் தாக்கிய போது மிஸ்ஸிஸிபி  நதியானது  சுமார் 24 மணி நேரத்துக்குப் பின்னோக்கி ஓடியது. இதற்குப் புயலே காரணம்.

மிஸ்ஸிஸிபி நதியானது அமெரிக்காவின் மிகப் பெரிய நதியாகும். இந்த நதி கடலில் கலக்கும் இடத்தைத் தான் புயல் தாக்கியது. மணிக்கு சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசிய போது கடும் காற்று கடல் நீரை கரையை நோக்கியும் நதியின் முகத்துவாரத்தையும் நோக்கித் தள்ளியது.அதே நேரத்தில் காற்றினால் கடலில் ஏற்பட்ட அலைகளும் கடல் நீரை நதி முகத்துவாரத்தை நோக்கித் தள்ளின.
ஐசக் புயலினால் ஏற்பட்ட வெள்ளம்
இதன் விளைவாக கடல் நீர் பெரும் பிரவாகமென நதிக்குள் புகுந்தது. இதன் விளைவாக நதி நீரும் கடல் நீரும் சேர்ந்து பின்னோக்கிச் சென்றன.இது நதியின் போக்கையே மாற்றியது. சாதாரண நாட்களில் மிஸ்ஸிஸிபி நதியில் கடலை நோக்கி வினாடிக்கு1,25,00 கன அடி வீதம் நீர் பாயந்து கொண்டிருக்கும்.ஆனால் புயல் தாக்கிய போது கடலிலிருந்து நதிக்குள் வினாடிக்கு 1,82,000 கன அடி வீதம் வெள்ள நீர் பாய்ந்தது. இது நதியை பின்னோக்கி ஓடும் விளைவை ஏற்படுத்தியது.
கடல் நீர் வெள்ள்மென உள்ளே பாய்கிறது
புயல் வெள்ளம்  நதிக்குள் பாய்ந்ததன் விளைவாக நதியின் நீர் மட்டம் வழக்கத்தை விட 10 அடிக்கும் அதிகமாக  உயர்ந்தது.  நதியில் பெல்லி சாஸே என்னுமிடத்தில் உள்ள அளவுமானிகள் இவை அனைத்தையும் பதிவு செய்து  காட்டின.
புயலினால் மிஸ்ஸிஸிபி நதியின் நீர் மட்டம் ஆக்ஸ்ட் 28 ஆம் தேதி எந்த அளவுக்கு உயர்ந்தது என்பதைக் காட்டும் வரிவடிவப் படம். நன்றி :USGS
பொதுவில் நதி முகத்துவாரப் பகுதியில் புயல் தாக்கினால் தற்காலிக அளவில் நதி பின்னோக்கி ஓடுவது சகஜமே

.கடந்த 2005 ஆம் ஆண்டில் இதே வட்டாரத்தை கட்ரினா என்னும் பெயர் கொண்ட பயங்க்ரப் புயல் தாக்கிய போது இதே போல மிஸ்ஸிஸிபி நதி பின்னோக்கி ஓடியது. அப்போது நதி நீர் மட்டம் வழக்கத்தை விட 14 அடி அதிகமாக இருந்தது.

மிஸ்ஸிஸிபி நதி கடலில் கடக்கும் இடத்தில் அமைந்த நியூ ஆர்லியன்ஸ் நகர மக்களுக்கு புயல் என்றாலே பெரும் பீதி தான். காரணம் இந்த நகரமும் சுற்று வட்டாரப் பகுதிகளும் கடல் மட்டத்தை விடத் தாழ்வாக உள்ளன. கடல் பொங்கினால் கடல் நீர் நகருக்குள் புகுந்து விடாமல் தடுக்க மிக விரிவான அள்வில் ஏரிக்க்ரை போல நெடுக நல்ல உயரமான தடுப்புக் கரைகள் அமைக்கப்பட்டுள்ளன. புயல் தாக்கி கடல் நீர் வெள்ளமெனப் பாயும் போது இந்த தடுப்புக் கரைகளையும் தாண்டி நகருக்குள் வெள்ளம் புகுந்தால் பெரும் பிரச்சினை தான். கட்ரினா  புயல் தாக்கிய போது நகரம் வெள்ள்க்காடாகி பல வார காலம் தண்ணீரில் மிதந்தது..

நதி ஒன்று பின்னோக்கி ஓடுவதற்கு புயல் ஒன்று தான் காரணம் என்று சொல்ல முடியாது. அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்த மிசவுரி மாகாணத்தில்  மிஸ்ஸிஸிபி  நதிக் கரையில் நியூ மாட்ரிட் என்ற நகரம் அமைந்துள்ளது. அந்த நகரம் அமைந்த வட்டாரத்தில் 1812 ஆம் ஆண்டில் கடும் பூகம்பம் நிகழ்ந்தது. அப்போதும் மிஸ்ஸிஸிபி நதி பின்னோக்கி ஓடியது.


5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வியப்பாக இருக்குது சார்... இன்னும் இயற்கை என்னவெல்லாம் செய்யப்போகிறதோ...

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

வியப்பான பகிர்வு...
அறிய வைத்ததற்கு நன்றி..

Salahudeen said...

வியப்பனா தகவல்கள் நன்றி ஐயா! நதி பின்னோக்கி ஓடுவதால் அந்த நதி மூலம் பலன் பெரும் நில பகுதிகள் உப்பு நீரால் பாதிக்காதா? தயவு செயது விளக்கவும்.

என்.ராமதுரை / N.Ramadurai said...

Salahudeen
புயலின் விளைவாக ஒரு நதி பின்னோக்கி ஓடும் போது மிக அதிக தூரம் செல்லாது. தவிர, ஓரிரு நாட்களில் நிலைமை சரியாகி விடும்.ஆகவே நதியான் பலன் பெறும் பகுதிகள் உப்பு நீரால் பாதிக்கப்படுகின்ற பிரச்சினை அனேகமாக இராது.

Rathnavel Natarajan said...

அரிய தகவல்.
நன்றி ஐயா.

Post a Comment