Mar 24, 2013

வானிலிருந்து விழும் “ நட்சத்திரம்”

Share Subscribe
 நிலவற்ற நாட்களில் இரவு வானைக் கவனித்தால் திடீரென்று பிரகாசமான ஒளிக் கீற்று வேகமாக் கீழ் நோக்கி இறங்கும். சில கணங்களில் அது மறைந்து விடும். கிராமப் புறங்களில் இக்காட்சியை நன்கு காண முடியும்.

“ ந்டசத்திரம் கீழே விழுகிறது” என்று பலரும் இதைத் தவறாக வருணிப்பர். இதைப் பார்க்க நேரிட்டால் உடனே “ ப்ச்சை மரத்தைப் பாரு” என்றும் கூறுவார்கள்.
காற்று மண்டல்ம் வழியே கீழே இறங்குவது நட்சத்திரம் அல்ல 
வான மண்டலம் வழியே இவ்விதம் கீழே இறங்கும் ஒளிக் கீற்றானது  நட்சத்திரமே அல்ல.விண்வெளியிலிருந்து மிளகு சைஸிலான சிறிய கல் துணுக்கு அல்லது அதை விடச் சிறிய மணல் துணுக்கு ஒன்று காற்று மண்டலத்தில் நுழைய நேரிட்டால் இவ்விதம் தீப்பற்றி கீழ் நோக்கி இறங்கும். இவ்விதத் துணுக்குகள் முற்றிலுமாக எரிந்து பொடியாகி அந்தப் பொடி காற்றோடு கலந்து பூமியில் வந்து சேரலாம். ஆக, சிறிய துணுக்கு தான் இவ்விதம் ஷோ காட்டுகிறது.

  நட்சத்திரம் ஒன்று பூமியை விட பல ஆயிரம் அல்லது பல லட்சம் மடங்கு பெரியது. அத்துடன் நட்சத்திரங்க்ள் பூமியிலிருந்து பல நூறு கோடி கிலோ மீட்டர் அப்பால் உள்ளவை. சொல்லப் போனால் பெரும்பாலான நட்சத்திரங்கள்  பயங்கர வேகத்தில் பூமியிலிருந்து மேலும் மேலும் அப்பால் விலகிச் சென்று கொண்டிருக்கின்றன. ஆகவே எந்த நட்சத்திரமும் பூமியை நெருங்க் வாய்ப்பே கிடையாது.ஆகவே “ நட்சத்திரம் விழுகிறது “ என்பது முற்றிலும் தவறான விளக்கம்.
ஆப்பிரிக்காவில் இப்போதைய நமீபியா நாட்டில் வந்து விழுந்த விண்கல். இதன் எடை 60 டன் 
விண்வெளியில் எண்ணற்ற விண்கற்கள் ( Asteroids)  உள்ளதாக முந்தைய பதிவில் குறிப்பிட்டோம். பறக்கும் மலை என்று சொல்லத்தக்க விண்கல்லிலிருந்து  நம் வீட்டு அம்மிக்கல் வரை வெவ்வேறு சைஸ்களில் விண்கற்கள் உள்ளன. இவை அல்லாமல்   ரோடு போடுவதற்குப் பயன்படும் ஜல்லி சைஸிலும் கூழாங்கல் சைஸிலும் விண்கற்கள் உள்ளன. தவிர மணல் துணுக்குகள், தூசு முதலியவையும் விண்வெளியில் உள்ளன.இவை தோன்றியது எப்படி?

செவ்வாய் கிரகத்துக்கும் வியாழன் கிரகத்துக்கும் இடையே Main Asteroid Belt  உள்ளது பற்றி முந்தைய பதிவில் கூறினோம். சூரியனைச் சுற்றி வரும் இந்த பல லட்சம் அஸ்டிராய்டுகள் அணிவகுத்துச் செல்கையில் ஒன்றோடு ஒன்று மோதி உடைகின்றன். இவ்வித மோதல்களின் போது தோன்றும் துண்டு துணுக்குகள், மணல். தூசு ஆகியவையும் பூமி இருக்கின்ற வட்டாரத்துக்கு வந்து சேர்ந்து பூமியின் காற்று மண்டலம் வழியே கீழே இறங்குகின்றன. அப்போது தான் “ நட்சத்திரம் விழுவது போன்ற காட்சி” தோன்றுகிறது

.வால் நட்சத்திரங்கள் உடைவதால் ஏற்படுகின்ற தூசு, இயல்பாக விண்வெளியில் உள்ள தூசு முதலியவையும் இவ்விதம் பூமிக்குள் வந்து இறங்குகின்றன. ஓர் ஆண்டில் சுமார் 10   ஆயிரம் டன் எடை அளவுக்கு இவை பூமியில் வந்து விழுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.(  அண்டவெளித் தூசு என தனி சமாச்சாரமும் உள்ளது)

வால் நட்சத்திரங்கள்  வந்து செல்லும் போது ஏராளமான நுண்ணிய துகள்களை விட்டுச் செல்லும்.  அவற்றை அடித்துச் செல்ல விண்வெளியில் காற்று கிடையாது என்பதால் அத்துகள்கள் விண்வெளியில் பரவி நிற்கும். பூமி தனது பாதையில் அத்துகள்களின் ஊடே செல்லும் போது அத்துகள்கள் வான் மண்டலம் வழியே கீழே இறங்கும்.அப்போது எண்ணற்ற ஒளிக்கீற்றுகள் தென்படும். இதை ஒளிமழை (Meteor Shower) என்று கூறுவார்கள். இது கண்கொள்ளாக் காட்சியாக் இருக்கும்
ஆண்டில் சில மாதங்களில் இவ்விதம் ஒளிமழையைக் காணலாம் 
ஆண்டில் குறிப்பிட்ட மாதங்களில் இந்த ஒளிமழை தென்படும். மேலை நாடுகளில் ஆர்வலர்கள் இரவில் ஊருக்கு வெளியே வாய்ப்பான இடங்களில் கூடி இதைக் காண்பர்.

இது ஒருபுறம் இருக்க கால்பந்து அல்லது அதை விட சற்றே பெரியதான விண்கற்கள் அவ்வப்போது பூமியில் வந்து விழுகின்றன. இவை முற்றிலுமாக எரிந்து போவது கிடையாது. இவை நெருப்புப் பந்து போல வானிலிருந்து கீழே இறங்கும். அக்கட்டத்தில் இவை பல துண்டுகளாக வெடித்து அத் துண்டுகள் பூமியில் வந்து விழும்.ஆங்கிலத்தில் இதை Meteorite என்கிறார்கள்,.
பாலைவண மணலில் கிடக்கும்    விண்கற்கள்
விஞ்ஞானிகளைப் பொருத்த வரையில் இவை மிக அரிய கற்கள். இந்த விண்கற்கள் சூரிய மண்டலம் தோன்றிய போது உருவானவை என்று கருதப்படுகிறது. ஆகவே புதிதாக விண்கல் கிடைத்தால் விஞ்ஞானிகள் அதை ஆராய்கிறார்கள்.

 இது ஒருபுறம் இருக்க, அரும் பொருட்களைச் சேகரிக்கிறவரகள் விண்கற்களை விலைக்கு வாங்கி சேகரிக்கின்றனர். இவற்றுக்கு நல்ல விலை உண்டு. பாலைவனங்கள், மற்றும் அண்டார்டிகா போன்று பனிக்கட்டியால் மூடப்பட்ட  பிராந்தியங்கள் ஆகிய இடங்களில் வானிலிருந்து கீழே வந்து விழுந்த விண்கற்களை எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது. உங்கள் வீட்டுத் தோட்டத்தில் கூட விண்கல் வந்து விழலாம். ஆனால் எது விண்கல் என்று கண்டுபிடிக்கத் தனித் திறன் தேவை.

ஒரு சமயம் அமெரிக்காவில் சிறிய சைஸ் விண்கல் ஒன்று  ( மரப் பலகையால் ஆன)  கூரையைப் பொத்துக் கொண்டு விட்டுக்குள் வந்து விழுந்தது. ஜெர்மனியில் சாலையில்  சென்று கொண்டிருந்த சிறுவன் மீது மிகச் சிறிய விண்கல் விழுந்தது.

பூமியில் கண்டுபிடிக்கப்பட்ட விண்கற்களிலேயே மிகப் பெரியது இப்போதைய   நமீபியா நாட்டில் வந்து விழுந்த  ஹோபா (Hoba Meteorite) விண்கல்லாகும். இதன் நீளம் 3 மீட்டர். அகலம் சுமார் மூன்று மீட்டர்.உயரம் சுமார் ஒன்றரை மீட்டர். எடை சுமார் 60 டன். இது சுமார் 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் விழுந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.. எனினும் 1920 ஆம் ஆண்டில் தான் இது கண்டுபிடிக்கப்பட்டது .  விழுந்த இடத்திலேயே அப்படியே  பாதுகாக்கப்பட்டு வரும் இந்த விண்கல் சுற்றுலாப் பயணிகளைக் கவருவதாக உள்ளது.

அபூர்வமாக பல மீட்டர் நீளமுள்ள விண்கல் பூமியின் காற்று மண்டலத்தில் நுழைவது உண்டு.ரஷியாவில் இந்த ஆண்டு பிப்ரவரியில் செலியாபின்ஸ்க் நக்ருக்கு அருகே சுமார் 15 மீட்டர் நீளமுள்ள விண்கல் (அஸ்டிராய்ட்) காற்று மணடலத்தில் நுழைந்து வெடித்து சுக்கு நூறாக உடைந்து சிதறியது. அப்போது தோன்றிய அதிர்ச்சி அலைகள் காரணமாகவே எண்ணற்ற கட்டடங்களில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

 வானில் ஒரு விண்கல் வெடிப்பது என்பது மிக அபூர்வமாகவே நிகழ்வதாகும். இதற்கு முன்னர் 1908 ஆம் ஆண்டில் ரஷியாவின் சைபீரியா பிராந்தியத்தில் துங்குஸ்கா என்னுமிடத்தில் இது போன்று ஏற்பட்டது. அது மனித நடமாட்டமற்றது ஆனால் ஊசியிலைக் காடுகள் நிறைந்தது.வானில் ஏற்பட்ட பெரும் வெடிப்பின் விளைவாகக் கடும் அதிர்ச்சி அலைகள் தோன்றின்.அதன் காரணமாக  எண்ணற்ற மரங்கள் ஒரேயடியாகச் சாய்ந்தன.
துங்குஸ்காவில் சரிந்து கிடந்த மரங்கள் 
அங்கு வானில் வெடித்தது விண்கல்லா அல்லது பூமியை நோக்கி இறங்கிய வால் நட்சத்திரமா என்பது தெரியவில்லை.

மிக மிகப் பெரிய விண்கல் ஒன்று பூமியில் வந்து விழுந்து பெரு நாசத்தை ஏற்படுத்துவது என்பது மிக அபூர்வமானது.சுமார் 65 மிலியன் ஆண்டுகளுக்கு முன்னர்  வட அமெரிக்க கணட்த்தின் தென் புறத்தில் சுமார் 10 கிலோ மீட்டர் குறுக்களவு கொண்ட விண்கல் வந்து விழுந்ததாகக் கருதப்படுகிறது. இந்த விண்கல் வந்து விழுந்ததால் ஏற்பட்ட விளைவுகள் காரணமாகவே டைனோசார் வகை விலங்குகள் அழிந்து போனதாகவும் கருதப்படுகிறது.

அந்த விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட பெரிய பள்ளம் இப்போது கடலுக்கு அடியில் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் டைனோசார் விலங்குகள் இனம் அழிந்ததற்கு பெரிய விண்கல் விழுந்தது தான் காரணமா என்பது குறித்து இன்னமும் சர்ச்சை உள்ளது. விழுந்தது விண்கல்லாக இல்லாமல்  ஒரு வால் நட்சத்திர்மாக இருக்கலாம் என இப்போது ஒரு புதுக் கருத்து கூறப்பட்டுள்ளது.

விழுந்தது எதுவாக இருந்தாலும் சரி, எதிர்காலத்தில் இப்படியான பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பது தான் இப்போதுள்ள கேள்வி.


16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

60 டன்...!!!

பல தகவல்களுக்கும் விளக்கங்களுக்கும் நன்றி சார்...

Sudhakar Shanmugam said...

சூரியனை சுற்றி வரும் வால் நட்சத்திரங்கள், இதுவரை பூமியில் இறங்கியதாக அதிகாரபூர்வ தகவல்கள் இருக்கிறதா

நன்றி

S.சுதாகர்

ABUBAKKAR K M said...

அய்யா வணக்கம்.
வான்வெளி பற்றிய தகவல்கள் , மிகவும் அருமை.
பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ள தகவல்.
நன்றி.
>>> கோ.மீ.அபுபக்கர்
கல்லிடைக்குறிச்சி .

என்.ராமதுரை / N.Ramadurai said...

Sudhakar Shanmugam
சரியான கேள்வி. வால் நட்சத்திரங்கள் பெரும்பாலும் பனிக்கட்டி உருண்டைகள். சில பெரிய பாறைகளும் வால் நட்ச்த்திரங்களில் உண்டு. பூமியில் கடந்த காலத்தில் எண்ணற்ற வால் நட்சத்திரங்கள் வந்து விழுந்துள்ளன.
ரஷியாவில் 1908 ல் துங்குஸ்காவில் நடு வானில் வெடித்தது வால் நட்சத்திரமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தவிர, பூமியில் கடல்கள் உருவானதில் அதாவ்து பூமியில் இவ்வளவு தண்ணீர் இருப்பதற்கு வால் நட்சத்திரங்கள் காரணமாக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் -- பெரிதும் பனிக்கட்டி உருண்டைகளான எண்ணற்ற வால் நட்சத்திரங்கள் பூமியில் வந்து விழுந்திருக்க வேண்டும் என்றும் கடல்களில் இந்த அளவுக்கு தண்ணீர் இருப்ப்தற்கு வால் நட்சத்திரங்களும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகளிடையே ஒரு கருத்து உள்ளது

Anonymous said...

ஐயா வணக்க்ம்

சூரியனின் ஈர்ப்புவிசையால் வால் நட்சத்திரங்கள் பல லட்சம் கிலோமீட்டர் தொலைவிலிருந்து வந்து சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றிவிட்டுப் போகின்றன. அப்படியென்றால் சூரியனின் மிக அருகில் வால் நட்சத்திரங்கள் வரும்போது சூரியனின் ஈர்ப்புவிசை இன்னும் அதிகமாக இருக்காதா அப்போது வால் நட்சத்திரங்கள் முழுவதுமாக சூரியனுக்குள் விழுந்து விட வாய்ப்பில்லையா அப்படி ஏதேனும் இதற்கு முன்பு நடந்துள்ளதா ஐயா

வெங்கடேஷ்

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

அருமயான ஆழமான தேடல் பதிவு .அறியாத விசயத்தை படிக்கும்போது பதிந்தவரை நன்றி சொல்லும் மனதுக்கு நன்றி .

என்.ராமதுரை / N.Ramadurai said...

வெங்கடேஷ்
சூரியனை எட்ட இருந்து சுற்றுகின்ற வால் நட்சத்திரங்கள் தப்பித்துக் கொள்கின்றன.தவிர, சூரியனை நெருங்கும் போது வால் நட்சத்திரத்தின் வேகம் மிக அதிகமாக இருக்கும். ஆகவே பல வால் நட்சத்திரங்கள் தப்பித்துக் கொள்கின்றன.
ஆனாலும் பல வால் நட்சத்திரங்கள் சூரியனில் விழுந்து மடிகின்றன. அல்லது பல துண்டுகளாக உடைகின்றன.
அண்மையில் C/2011 N 3 எனப்படும் வால் நட்சத்திரம் சூரியனில் விழுந்து மடிந்ததை அமெரிக்க செயற்கைக்கோள் பதிவு செய்தது

Anonymous said...

Ayya,

Yenakku oru sandhegam. Vinveli veerargal Vinvelkappalil Nilavuku selgirargal allava. Avargal boomiku thirumbumpozhuthu, antha vinveli kappal kattru mandalathai thodumbozhuthu vinkarkal pola yerinthu vidataha?

-Ezhilarasan

என்.ராமதுரை / N.Ramadurai said...

-Ezhilarasan
சரியான சந்தேகமே. அமெரிக்க விண்வெளி வீரர்கள் சந்திரனிலிருந்து திரும்புகையில் முழு விண்கலமும் பூமிக்குத் திரும்பவில்லை. விண்வெளி வீரர்கள் நல்ல வெப்பத் தடுப்பு ஏற்பாடு கொண்ட சிறிய பகுதிக்கு மாறினர். அதன் வெளிப்புறமானது பயங்க்ர வெப்பத்தைத் தாங்கக்கூடியது. அதன் மீது விசேஷப் பூச்சு இருந்தது. கீழே இறங்குகையில் அப்பகுதி தீப்பிடித்தது.ஆனாக் விசேஷப் பூச்சுப் பொருட்கள் மட்டும் தீப்பிடித்து வழிந்து தனியே பறந்தன. அந்த விசேஷப் பூச்சுப் பொருட்கள் பூசப்பட்ட ‘சுவருக்கு” பின்னால் ஒண்டிக்கொண்டிருந்த அமெரிக்க விண்வெளி வீரர்களை வெப்பம் சிறிது கூடத் தாக்கவில்லை.
பின்ன்ர் விண்வெளிக்கு மட்டும் சென்று விட்டுத் திரும்புவதற்கு அமெரிக்கா உருவாக்கிய ஷட்டில் வாகனத்தின் வெளிப்புற்ம் முழுவதிலும் தீப்பிடிக்காத ஓடுகள் பதிக்கப்பட்டிருந்தன. இந்த ஓட்டின் ஒருபுறம் பயங்கரமாகச் சூடேறினாலும் அதன் மறுபுறத்தில் கையை வைத்தால் சூடே தெரியாது. ஷட்டில் வாகனத்தின் வெளிப்புறத்தில் பல ஆயிரம் ஓடுகள் ப்திக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொரு தடவையும் ஷட்டில் பூமிக்குத் திரும்புகையில் அது தீக்குளித்தது.
ஆனால் கொலம்பியா என்ற் பெயர் கொண்ட ஷட்டில் 2003 ஜனவரி 16 ஆம் தேதி உயரே சென்ற போது வெளிப்புறத்தில் இருந்த சில ஓடுகள் எப்படியோ கழன்று விழுந்து விட்டன. பின்னர் கொலம்பியா 2003 பிப்ரவரி முதல் தேதி பூமிக்குத் திரும்புகையில் ஓடுகள் இழக்கப்பட்ட பகுதி வழியே பயங்கர வெப்ப்ம் உள்ளே தாக்கியதால் கொலம்பியா தீப்பற்றி நடுவானில் வெடித்து அழிந்தது. இந்திய வம்சா வழியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா உட்பட ஏழு விண்வெளி வீரர்கள் உயிரிழந்தனர்.ஆகவே விண்வெளிக்குச் சென்று விட்டுத் திரும்புவது என்பது மிக ஆபத்தான பயணம்.

Natarajan said...

வணக்கம்,
ஒவ்வொரு வால் நட்சத்திரமும் பல கோடி கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து எங்கிருந்தோ வந்து சூரியனை சுற்றிவிட்டு செல்கிறது. அவ்வாறு சூரியனுக்கு அருகில் வந்து சுற்றி செல்லும்போது இளைத்துவிடும் என்று இதற்க்கு முன் கட்டுரையில் கூறியிருந்தீர்கள். அப்படியானால் பூமி ஒவ்வொரு முறையும் சூரியனை சுற்றும் போது இளைத்துக்கொண்டே இருக்கிறதா? அப்படி இல்லை என்றால் ஏன் வால் நட்சத்திரத்திற்கு மட்டும் அப்படி ஏற்படுகிறது?

"ஓமலூர்" நடராஜன்.

balaspakkam said...

அருமையான பதிவி சார்... வின்வெளிக்கு போகும் வீரர்கள் எப்படி பாதுகாப்பாக தரையிறங்குகிறார்கள் ? புவியீர்ப்பு விசைக்கு எப்படி திரும்ப வருகிறார்கள்.. அவர்கள் தரையிறங்கும் வாகனம் விமானம் போல இருக்குமா ? அல்லது பாராசூட்டில் இறங்குவார்களா ?

balaspakkam said...

அருமையான பதிவி சார்... வின்வெளிக்கு போகும் வீரர்கள் எப்படி பாதுகாப்பாக தரையிறங்குகிறார்கள் ? புவியீர்ப்பு விசைக்கு எப்படி திரும்ப வருகிறார்கள்.. அவர்கள் தரையிறங்கும் வாகனம் விமானம் போல இருக்குமா ? அல்லது பாராசூட்டில் இறங்குவார்களா ?

என்.ராமதுரை / N.Ramadurai said...

"ஓமலூர்" நடராஜன்.
பூமியானது சூரியனிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலவில் உள்ளது. தவிர பூமி அனேகமாக எப்போதும் அதே தொலைவில் உள்ளது. அதாவது சூரியனை பூமி வட்ட வடிவப் பாதையில் உள்ளது. எனவே அது சூரியனை நெருங்க வாய்ப்பு இல்லை. இத்துடன ஒப்பிட்டால் வால் ந்ட்சத்திரம் சூரியனுக்கு மிக அருகாமையில் சென்று விட்டுத் திரும்புகிறது.வால் நட்சத்திரம் பெரிதும் பனிக்கட்டி உருண்டை என்பதால் சூரியன் காரணமாக அது பாதிக்கப்படுகிறது.

என்.ராமதுரை / N.Ramadurai said...

balaspakkam
விண்வெளி வீரர்கள் உயரே இருந்து பூமியைச் சுற்றும் போது பூமியின் ஈர்ப்புப் பிடியில் தான் அவர்களது வாகனம் (சர்வதேச விண்வெளி நிலையம்) உள்ளது. அவர்கள் பூமிக்குத் திரும்புகையில் கடும் வெப்பத்தைத் தாங்கி நிற்கிற ஒரு சிறிய கூட்டுக்குள் ஒடுங்கி அமர்ந்தபடி கீழே இறங்குகிறார்கள். ஒரு கட்டத்தில் ஒரு கட்டத்தில் அக்கூடு பாரசூட் மூலம் இறங்க ஆரம்பிக்கிறது.அந்த பாரசூட் மெல்லத் தரையில் இறங்குகிறது.

Unknown said...

இதே போல் பல விஷயங்கள் பதிவிறக்குங்கள் நன்றி

Anonymous said...

நான் இன்று பார்த்தேன்

Post a Comment