Jul 30, 2014

ஆகஸ்ட் 10 ஆம் தேதி சூப்பர் நிலா

Share Subscribe
வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி பௌர்ணமி நாள். வழக்கம் போல வருகிற பௌர்ணமிதான். ஆனால் ஒரு வித்தியாசம்.  அன்று இரவு முழு நிலவானது வழக்கத்தை விட சற்றே பெரியதாகத் தெரியும்.ஒப்பு நோக்குகையில் சந்திரன் நமக்கு சற்றே பக்கத்தில் இருக்கும் என்பதே அதற்குக் காரணம்.

அன்றைய தினம் நிலவு வழக்கத்தை விட சுமார் 14 சதவிகித அளவுக்குப் பெரிதாக இருக்கும். நிலவின் பிரகாசம் வழக்கத்தைவிட 30 சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே அன்றைய முழு நிலவை சூப்பர் நிலா என்று வருணிக்கலாம்.

பூமியை சந்திரன் சுற்றிச் சுற்றி வருகிறது. ஆனால் சந்திரனின் சுற்றுப்பாதை மிகச் சரியான வட்டமாக இருப்பது கிடையாது . அதுங்கிய வட்டமாக உள்ளது. ஆகவே சந்திரன் சில சமயங்களில் பூமிக்கு அருகில் இருக்கிறது.வேறு சில சமயங்களில் பூமியிலிருந்து தள்ளி இருகிறது.

ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் 3,56,922 கிலோ மீட்டராக இருக்கும். இத்துடன் ஒப்பிட்டால் ஜூலை 28 ஆம் தேதியன்று  பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் இருந்த தூரம் 4,06,547 கிலோ மீட்டர்.

பூமியை சந்திரன் சுற்றும்  நீள் வட்டப்பாதை
சந்திரன் பூமியை ஒரு தடவை சுற்றி முடிக்க சுமார் 28 நாட்கள் ஆகின்றன. ஆகவே அது பூமிக்கு சற்றே அருகில் இருப்பதும் தள்ளி இருப்பதும் ஒவ்வொரு மாதமும் நிகழ்வதாகும்.

ஆனால் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் குறைவாக இருந்து அன்றைய தினம் பௌர்ணமியாகவும் இருந்தால் அன்று இரவு தெரிகின்ற முழு நிலவை சூப்பர் நிலா (Super Moon)  என்று வருணிக்கிறார்கள்.

எனினும் சூப்பர் நிலா தெரிகிற நாளில் நீங்கள் சந்திரனைக் கவனித்தால் உங்களால் எளிதில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.
2013 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி தெரிந்த சூப்பர் நிலா.
வாஷிங்டனில் எடுத்த படம் ( நன்றி: NASA/ Bill Ingalls)
அமெரிக்காவின் நாஸா விண்வெளி அமைப்பு 1969 ஆம் ஆண்டில் தொடங்கி ஆறு  தடவை சந்திரனுக்கு விண்வெளி வீர்ர்களை அனுப்பியது. பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம் குறைவாக இருக்கிற நாளாகப் பார்த்து அனுப்பியதாகச் சொல்ல முடியாது. அதாவது தூரம் ஒரு அம்சமாகக் கணக்கில் கொள்ளப்படவில்லை.

சந்திரனில் போய் இறங்கினால் சந்திரனில் உச்சி வெயிலாக இல்லாமல் காலை வெயிலாக இருக்க வேண்டும் என்ற அம்சமே முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்பட்டது.  இதையே வேறு விதமாகச் சொன்னால் சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கு அமாவாசை கழிந்த சில நாட்களே தேர்ந்தெடுக்கப்பட்டன.

Jul 28, 2014

செவ்வாய்க்கு அருகே வால் நட்சத்திரம்: நாஸா கவலை

Share Subscribe
செவ்வாய் கிரகத்தை “உரசி“ செல்லும் அளவுக்கு ஒரு வால் நட்சத்திரம் செவ்வாய் கிரகத்தைக் கடந்து செல்ல இருக்கிறது. இது குறித்து அமெரிக்கா நாஸா கவலை கொண்டு செவ்வாயை சுற்றுகிற தனது செயற்கைக்கோள்களையும் காப்பதற்கு நடவடிக்கை எடுக்க இருக்கிறது.

அந்த வால் நட்சத்திரத்தால் செவ்வாய் கிரகத்துக்குப் பெரிய ஆபத்து ஏற்படப் போவதில்லை. சொல்லப் போனால் அந்த வால் நட்சத்திரம் செவ்வாயைக் கடந்து செல்லும் போது செவ்வாய்க்கும் அந்த வால் நட்சத்திரத்துக்கும் இடையே சுமார் ஒரு லட்சத்து 32 ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளி இருக்கும். இருந்தாலும் விண்வெளிக் கணக்குப்படி இது “மிக அருகில்” என்றே கருதப்படுகிறது.

அமெரிக்காவின்  இரு விண்கலங்கள் இப்போது செவ்வாய் கிரகத்தை சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றின் பெயர் மார்ஸ் ரிகன்னைசன்ஸ் ஆர்பிட்டர். மற்றொன்றின் பெயர் மார்ஸ் ஒடிசி. அவற்றுக்கும் வால் நட்சத்திரத்தால் நேரடியாக ஆபத்து ஏற்படப் போவதில்லை. இந்த இரண்டும் சுமார் 500 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்தபடி செவ்வாயின் செயற்கைக்கோள்கள் போல அக்கிரகத்தைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன.
சைடிங் ஸ்பிரிங் வால் நட்சத்திரம் அக்டோபரில் செவ்வாய் கிரகத்தை
 கடந்து செல்ல இருக்கிறது
வால் நட்சத்திரத்தின் வால் காரணமாக இந்த இரு விண்கலங்களுக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்பது தான் நாஸாவின் கவலை. ஒரு வால் நட்சத்திரத்தின் வால் என்பது எண்ணற்ற மிக நுண்ணிய துணுக்குகளால் ஆனது. இவை வால் நட்சத்திரத்திலிருந்து வெளிப்படுபவை. காற்றில் பறக்கும் ஒரு பெண்ணின் கூந்தல் போல வால் நட்சத்திரத்தின்   வாலானது தலையில் தொடங்கி அகன்று விரிந்து அமைந்திருக்கும்..மிக அகன்ற வாலின் ஒரு பகுதி செவ்வாயின் காற்று மண்டலத்தைத் தொடலாம் என்று கருதப்படுகிறது.

ஆகவே வாலில் அடங்கிய துணுக்குகள் நாஸாவின் செயற்கைக்கோளைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது. நுண்ணிய துணுக்குகள் அப்படி என்ன பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றன என்று நீங்கள் நினைக்கலாம். வால் நட்சத்திரம் மணிக்கு சுமார் 2 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும். வாலின் துணுக்குகளும் அதே வேகத்தில் செல்லும். அவ்வித வேகத்தில் வரும் அரை மில்லி மீட்டர் குறுக்களவு கொண்ட துணுக்கு கூட செயற்கைக்கோளில் அடங்கிய கருவிகளுக்கு சேதத்தை உண்டாக்கலாம்.

அந்த வால் நட்சத்திரத்தின் பெயர் சைடிங் ஸ்பிரிங் என்பதாகும். ஆஸ்திரேலியாவில் உள்ள சைடிங் ஸ்பிரிங் வான் ஆராய்ச்சிக்கூடம் கண்டுபிடித்ததால் அதற்கு அப்பெயர். 2013 ஆம்  ஆண்டு ஜனவரியில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த வால் நட்சத்திரம் சூரிய மண்டல வெளி எல்லையிலிருந்து சூரியனை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. 

அது சூரியனை சுற்றி முடித்த பின்னர் வந்த வழியே திரும்பிச் சென்று விடும். சூரியனை நோக்கி வருகின்ற அது செவ்வாயைக் கடந்து வர இருக்கிறது. பொதுவில் வால் நட்சத்திரங்கள் இந்த அளவுக்கு அருகாமையில் கடந்து செல்வது கிடையாது. கி.பி 1770 ஆம் ஆண்டில் ஒரு வால் நட்சத்திரம் பூமியை மிக அருகாமையில் கடந்து சென்றது.
சைடிங் ஸ்பிரிங் வால் நட்சத்திரம்
சைடிங் ஸ்பிரிங் வால் நட்சத்திரம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி செவ்வாயை நெருக்கமாகக் கடந்து செல்ல இருக்கிறது. இந்த வால் நட்சத்திரத்தின் துணுக்குகளால் செயற்கைக்கோள்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்து வாய்ப்பு சுமார் இருபது நிமிஷமே நீடிக்கும். ஆகவே அந்த நேரத்தில் மட்டும் தனது இரு செயற்கைக்கோளையும் பாதுகாப்பான இடத்தில் இருக்கும்படி செய்ய நாஸா திட்டமிட்டுள்ளது.

பூமியைச் சுற்றுகிற அல்லது செவ்வாயைச் சுற்றுகிற ஒரு செயற்கைக்கோளை பறக்காமல் ஓரிடத்தில் நிறுத்தி வைப்பது என்பது சாத்தியமற்றது. செயற்கைக்கோள்கள் பறந்து கொண்டே இருந்தால் தான் வானில் இருக்கும். இல்லாவிடில் கீழே விழுந்து விடும்.
எனவே ஆபத்து வாய்ப்புள்ள நேரத்தில் இரு செயற்கைக்கோள்களும் தமது பாதையில் செவ்வாயின் மறுபுறத்தில் அமைந்திருக்கும்படி செய்ய நாஸா திட்டமிட்டுள்ளது. அதாவது அவை தொடர்ந்து பறந்து கொண்டு தான் இருக்கும். 
சைடிங் ஸ்பிரிங் வால் நட்சத்திரத்தின் தலையும் வாலும்.
(படம் NASA ESA  J.Y.Li Planetary Institute)

ஆனால் அந்த இருபது நிமிஷ நேரத்தில் அவை செவ்வாயின் மறுபுறத்தில் பறந்து கொண்டிருக்கும். இதற்கான வகையில் அவற்றின் பாதையில் திருத்தங்கள் செய்யப்படும்.

நாஸா 2013 ஆம் ஆண்டில் செவ்வாயை நோக்கி செலுத்திய மாவென் என்னும் செயற்கைக்கோள் வருகிற செப்டம்பரில் போய்ச் சேர்ந்து அதுவும் செவ்வாயைச் சுற்ற ஆரம்பிக்கும். அதன் சுற்றுப்பாதையையும் இவ்விதம் தக்கபடி மாற்றியாக வேண்டும்.

 ஐரோப்பிய விண்வெளி அமைப்பு 2003 ஆம் ஆண்டில் செலுத்திய மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலம் செவ்வாயை நீள்வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அனேகமாக ஐரோப்பிய விண்வெளி அமைப்பும் வால் நட்சத்திர ஆபத்தை மனதில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கும் என்று கருதப்படுகிறது.
இந்தியா 2013 நவம்பரில் செவ்வாயை நோக்கிச் செலுத்திய மங்கள்யான் விண்கலம் இந்த ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி போய்ச் சேர்ந்து செவ்வாயை சுற்ற இருக்கிறது. ஆகவே தனது செயற்கைக்கோளுக்கு பாதிப்பு ஏற்படாதபடி பாதுகாக்க இந்தியாவின் இஸ்ரோவும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளலாம்
. வால் நட்சத்திரம் மூலம் தோன்றும் துகள்கள் கீழே இறங்கி செவ்வாயின் தரையில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் கியூரியாசிடி என்னும் நடமாடும் ஆராய்ச்சிக்கூடத்தைப் பாதிக்காதா என்று கேட்கலாம். இத்துகள்கள் செவ்வாயின் காற்று மண்டலம் வழியே கீழ் நோக்கி இறங்கும் போது மிகுந்த சூடேறித் தீப்பிடித்து எரிந்து விடும்.
கியூரியாசிடி சேகரிக்கும் தகவல்கள் நாஸாவுக்குக் கிடைக்கச் செய்வதில் அமெரிக்காவின் இரு செயற்கைக்கோள்களும் முக்கிய பங்காற்றுகின்றன. செவ்வாய் கிரகம் பூமியைப் போலவே தனது அச்சில் சுழல்கிறது. 

ஆகவே கியூரியாசிடி இருக்கின்ற இடம் மறுபக்கத்துக்குச் சென்று விடுகிற நேரத்தில் அது அனுப்பும் தகவல்கள் பூமிக்கு வந்து சேர வாய்ப்பில்லை.
இப்பிரச்சினையைத் தவிர்க்கும் வகையில் செவ்வாய்க்கு மேலே பறக்கின்ற இரு அமெரிக்க செயற்கைக்கோள்களும் கீழிருந்து கியூரியாசிடி அனுப்பும் தகவல்களைச் சேகரித்து நாஸாவுக்கு அனுப்புகின்றன. 

இந்த இரண்டும் செவ்வாயை வடக்கிலிருந்து தெற்காகச் சுற்றுவதால் எப்போதும் பூமியைப் பார்த்த வண்ணம் இருக்கும். இதன் பலனாக நாஸாவுக்குத் தொடர்ந்து தகவல்கள் கிடைத்துக் கொண்டிருக்கும்.

 நாஸாவுக்கு உலகில் ஆங்காங்கு தகவல் சேகரிப்பு கேந்திரங்கள் உள்ளன.  எனவே பூமி சுழன்று கொண்டிருந்தாலும் இந்த தகவல் சேகரிப்புக் கேந்திரங்களில் ஏதாவது ஒன்று செவ்வாயைப் பார்த்தபடி அமைந்து அங்கிருந்து வருகிற தகவல்களைப் பெற்றுக்கொள்ளும்.

Jul 26, 2014

புதன் கிரகமும் மோல்னியா செயற்கைக்கோளும்

Share Subscribe
வானில் கிரகங்களைக் காண்பது குறித்து  இப்பகுதியில் எழுதப்பட்ட கட்டுரையைப் படித்த ஒரு வாசகர் சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கிரகம் சூரியனில் போய் விழாமல் இருப்பது எப்படி என்று கேள்வி கேட்டிருந்தார்.

அவர் கேட்டது நியாயமான கேள்வியே. சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பது புதன் கிரகமே. ராஜ சிநேகிதம் ஆபத்து என்பார்கள். சூரியனுக்குப் பக்கத்தில் இருப்பதால் புதன் கிரகம் படாதபாடு படுகிறது.

புதன் கிரகம் வெயிலில் உலர்த்தப்பட்ட இலந்தைப் பழம் மாதிரி சுருங்கி  வதங்கிக் கிடக்கிறது.  புதனில் வெயில் அடிக்கும் பக்கத்தில் ( புதனின் பகல்) ஆளைக் கொல்லும் வெயில். இரவாக இருக்கின்ற பக்கத்தில் சொல்ல முடியாத குளிர். ஆளில்லா விண்கலம் புதன் கிரகத்தில் போய் இறங்கினால் எவ்வளவு மணி நேரம் தாங்கும் என்பது கேள்விக்குறியே.

புதன் கிரகம் தனது சுற்றுப்பாதையில் அசுர வேகத்தில் செல்கிறது. ஆகவேதான் அது சூரியனின் ஈர்ப்புப் பிடியில் சிக்காமல் இருக்கிறது   புதன் கிரகத்தின் வேகம் அது இருக்கின்ற இடத்தைப் பொருத்து மாறுபடுகிறது.

புதன் கிரகம் சூரியனை சற்றே  நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. ஆகவே ஒரு சமயம் புதன் கிரகத்துக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் 4.6 கோடி கிலோ மீட்டராக உள்ளது. வேறு ஒரு சமயம் மிகவும் தள்ளி இருக்கிறது. அப்போது சூரியனுக்கு உள்ள தூரம் 7 கோடி கிலோ மீட்டர்.

புதன் கிரகத்தின் சுற்றுப்பாதை.
உத்தேசமாக வரையப்பட்ட இப்படத்தில் சூரியன் நடுவே உள்ளது.
வட்டத்தின் மீது உள்ளது புதன் கிரகம்.
A  முதல்  B  வரையிலான தூரத்தை புதன்
மிக வேகமாகக் கடக்கிறது.
சூரியனுக்கு அருகாமையில் வரும் போது காரின் ஆக்சிலேட்டரை அழுத்தியது போல புதன் கிரகத்தின் வேகம் (Orbital velocity) தானாக அதிகரிக்கிறது. அதாவது சூரியனை சுற்றுகிற புதன் சூரியனை நெருங்கும் வேளையில் அதன் வேகம் மணிக்கு சுமார் 2 லட்சம் கிலோ மீட்டர். சூரியனிலிருந்து அப்பால் இருக்கும் போது வேகம் ஒரு லட்சத்து 36 ஆயிரம் கிலோ மீட்டர். மனிதன் உருவாக்கிய எந்த வாகனமும் எந்த விண்கலமும் இவ்வ்ளவு வேகத்தில் செல்வதில்லை.

புதன் கிரகத்தின் வேகம் ஒரு சமயம் குறைவதும் வேறு சமயம் அதிகரிப்பதும் இயற்கை விதிகளின்படி   நடைபெறுவதாகும்.

புதன் கிரகத்துடன் ஒப்பிட்டால் பூமியானது தனது சுற்றுப்பாதையில் மணிக்கு சுமார் ஒரு லட்சத்து 8 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. சூரியனிலிருந்து மிகத் தொலைவில் உள்ள நெப்டியூன் கிரகத்தின் வேகம் மணிக்கு சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர்.

ஒரு கிரகம் சூரியனிலிருந்து எந்த அளவுக்குத் தொலைவில் உள்ளதோ அந்த அளவுக்கு அதன் சுற்றுப்பாதை வேகம் குறைவாக இருக்கும். இதை 1609 ஆம் ஆண்டு வாக்கில்  ஜோஹன்னஸ் கெப்ளர் என்ற ஜெர்மன் விஞ்ஞானி கண்டுபிடித்துக் கூறினார்.

பூமியைச் சுற்றுகின்ற செயற்கைக்கோள்களுக்கும் இது பொருந்தும். பூமியை ஒரு செயற்கைக்கோள் நீள் வட்டப்பாதையில் சுற்றி வருவதாக வைத்துக் கொண்டால் அது பூமிக்கு அருகில் வரும் போது வேகம் அதிகரிக்கும். பூமியிலிருந்து அது விலகிச் செல்லும் போது அதன் வேகம் குறைந்து விடும்.

ரஷியா தனது தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களைப் பறக்க விடுவதில் இந்த இயற்கை விதியை  நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. ரஷியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் ரஷியப் பிராந்தியத்துக்கு மேலே இருந்தால் தான் அவற்றை டிவி ஒளிபரப்பு போன்றவற்றுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் செயற்கைக்கோள்கள் வானில் ஓரிடத்தில் அல்லது ஒரு பிராந்தியத்துக்கு மேலே நிலையாக இருக்க இயலாது. அவை பூமியைச் சுற்றிக் கொண்டே இருந்தாக வேண்டும்.

எனவே ரஷியா அவற்றை  மிக நீள் வட்டப் பாதையில் பறக்கும்படி செலுத்தி வருகிறது. அவை ரஷியப் பிராந்தியத்துக்கு மேலே இருக்கும் போது 40 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும். பூமியின் தென் பாதிக்கு வரும் போது சுமார் 500 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும்.
மோல்னியா செயற்கைக்கோளின் சுற்றுப்பாதை
(படம்: நன்றி விக்கிபிடியா)
பூமிக்கு அருகே இருக்கும் போது வேகமாகச் செல்லும் என்பதால் பூமியின் தென் பாதிக்கு மேலே சுமார் 4 மணி நேரமே இருக்கும். வடபாதிக்கு வரும் போது அதாவது ரஷியப் பிராந்தியத்திற்கு மேலே பறக்கும் போது -- மிகத் தொலைவில் இருப்பதால் மெதுவாகப் பறக்கும். ஆகவே ரஷியப் பிராந்தியத்துக்கு மேலே சுமார் எட்டு மணி நேரம் இருக்கும்.

மொத்தம் மூன்று செயற்கைக்கோள்களை இவ்விதம் பறக்க விடும் போது அவற்றை மாறி மாறிப் பயன்படுத்தித் தொடர்ந்து 24 மணி நேரமும் தொடர்பு இருக்கும்படி பார்த்துக் கொள்ள முடிகிறது.

இவ்வகையான செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதை மோல்னியா (Molniya orbit) சுற்றுப்பாதை என்று அழைக்கப்படுகிறது. இவ்விதப் பாதையில் பறக்கும் செயற்கைக்கோள்களும் அப்பெயர் கொண்டே அழைக்கப்படுகின்றன.

Jul 24, 2014

கிழக்கில் இரண்டு,மேற்கில் இரண்டு கிரகங்களைக் காணலாம்

Share Subscribe
 நமக்கு நன்கு பரிச்சயமான நான்கு கிரகங்களை வெறும் கண்ணால் பார்க்க இது ஏற்ற சமயமாகும். இவற்றில் வெள்ளி, புதன் ஆகிய இரண்டு கிரகங்களை சூரிய உதயத்துக்கு முன்னர் கிழக்கு வானில் காணலாம்.

செவ்வாய், சனி ஆகிய இரண்டு கிரகங்களையும் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கு வானில் காணலாம்.

வானில் நம்மால் மொத்தம் ஐந்து கிரகங்களை மட்டுமே வெறும் கண்ணால் பார்க்க முடியும். மேலே கூறியபடி நான்கு கிரகங்களை மட்டுமே இப்போது நம்மால் காண இயலும். ஐந்தாவதான வியாழன் கிரகம் இப்போது பகலில் சூரியனுக்கு அருகே  அமைந்திருப்பதால் அதைக் காண இயலாது.

அதிகாலையில் கிழக்கு வானை நோக்கினால் வெள்ளி கிரகம் கண்ணில் படாமல் போகாது. அது வைர மூக்குப் பொட்டு போல ஜொலிக்கும்.தமிழில் இதற்கு விடிவெள்ளி என்ற பெயரும் உண்டு

எது நட்சத்திரம்  எது கிரகம் என்று தெரியாத காலத்தில் மேலை நாட்டவர் வெள்ளி கிரகத்துக்கு Morning Star  என்று பெயர் வைத்தனர் ( கிரகங்களுக்கு சுய ஒளி கிடையாது. அவை சூரிய ஒளியைப் பிரதிபலிப்பவை. நட்சத்திரங்கள் சுய ஒளி கொண்டவை.  சூரியனைப் போல பல மடங்கு பெரியவை)

கிழக்கு வானைக் காட்டும் இப்படத்தில்
புதன் ( Mercury), வெள்ளி (Venus) ஆகிய இரு கிரகங்களைக் காணலாம்.
வலது புறத்தில் சிவந்த நிறத்தில்
திருவாதிரை (Betelguese)  நட்சத்திரமும் தென்படும் (Stellarium)
கிழக்கு வானில் நீங்கள் வெள்ளியைக் காணும் போது அதற்குக் கீழே கிட்டதட்ட அடிவானத்துக்கு அருகில் புதன் கிரகம் மிக மங்கலாகத் தெரியும். உங்கள் கண்ணில் புதன் தென்பட்டால் அது அதிருஷ்டமே. புதன் எளிதில் தென்படாத கிரகம். அதை வைத்துத்தான் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற பழமொழி தோன்றியது.( மேலே படம் காண்க)

வெள்ளி கிரகம் சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புதன் 16 கோடி கிலோ மீட்டர். திருவாதிரை நட்சத்திரம் 497 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.(ஒளியாண்டு பற்றிய விள்க்கம் கீழே காண்க)

நீங்கள் மாலையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கே நோக்கினால் சிவந்த நிறத்தில் செவ்வாய் (Mars) தென்படும். இக்கிரகம் தற்போது பூமியிலிருந்து சுமார் 21 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

 அதன் அருகிலேயே அதாவது செவ்வாய்க்கு சற்று கீழே சித்திரை (Spica)  நட்சத்திரமும் தெரியும். இந்த நட்சத்திரம்  சுமார் 24 ஒளியாண்டு தொலைவில் உள்ளது
 மேற்கு வானம்.
செவ்வாய்க்கு கீழே சித்திரை நட்சத்திரம் உள்ளது
இடது மூலையில் சனி கிரகம் காண்க (Stellarium)
வானில் செவ்வாய்க்கு மேலே சனி (Saturn) கிரகம் தெரியும். சூரிய அஸ்தமனத்துக்குப் பல மணி நேரம் கழித்தும் சனி மேற்கு வானில் காட்சி அளிக்கும். சனி கிரகம் வளையங்களைக் கொண்டது. ஆனால் டெலஸ்கோப் மூலம் பார்த்தால் தான் சனி கிரகத்தின் வளையங்களையும் காண இயலும். சனி கிரகம் இப்போது சுமார் 144 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சனி கிரகத்திலிருந்து வலது புறம் தள்ளி பிரகாசமான  நட்சத்திரம் தெரியும். அது தான் சுவாதி (Arcturus)  நட்சத்திரமாகும். அது 36 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.

குறிப்பு: ஒளியானது ஒரு வினாடியில் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவு செல்லக்கூடியது. ஓராண்டில் ஒளி செல்லக்கூடிய தூரமே ஒளியாண்டு ஆகும். இதன்படி ஒளியாண்டு என்பது தூரத்தைக் குறிப்பதாகும். ஓர் ஒளியாண்டு என்பது 9,46,073 கோடி கிலோ மீட்டர் தூரமாகும்.