Aug 3, 2014

வால் நட்சத்திரத்தை நெருங்குகிறது ரோசட்டா விண்கலம்

Share Subscribe
ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அனுப்பிய ரோசட்டா (Rosetta) என்னும் பெயர் கொண்ட விண்கலம் இப்போது ஒரு வால் நட்சத்திரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.  இந்த விண்கலம் 67/P  என்று சுருக்கமாகக் குறிப்பிடும்  வால் நட்சத்திரத்தை  நோக்கி 2004 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்டதாகும். இவ்வளவு ஆண்டுகள் கழித்து இப்போது தான் அந்த விண்கலம் வால் நட்சத்திரத்தை நெருங்கியுள்ளது.
இது 67 P வால் நட்சத்திரத்தின் படம்.
ரோசட்டா ஆகஸ்ட் 2 ஆம் தேதி இப்படத்தை  எடுத்தது.
சூரியனை இன்னும் நெருங்காததால் வால் முளைக்கவில்லை
Credit: ESA/Rosetta /NAVCAM
இந்த மாதம் 6 ஆம் தேதி ரோசட்டா அந்த வால் நட்சத்திரத்தை வட்டமிட ஆரம்பிக்கும். இப்படி வட்டமிட்டபடியே அது வால் நட்சத்திரத்துடன் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும்.

அந்த வால் நட்சத்திரம் பல கோடி கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து   சூரியனை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இப்போது அது செவ்வாய் கிரகத்துக்கும் வியாழன் கிரகத்துக்கும் இடையில் சுமார் 54 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.

வால் நட்சத்திரத்தை தொடந்து சுற்றவிருக்கும்  ரோசட்டாவிலிருந்து ஒரு சிறிய கலம் நவம்பர் 11 ஆம் தேதி வாக்கில் வால் நட்சத்திரத்தில் இறங்கும். துளையிடும் கருவி, குட்டி அடுப்புகள், மோப்பக் கருவி முதலியவற்றுடன் கூடிய அச்சிறிய விண்கலம் ( எடை 27 கிலோ) வால் நட்சத்திரத்தில் இறங்கி துளை போட்டு ஆராயும். இதன் மூலம் கிடைக்கும் தகவல்கள் பூமிக்கு அனுப்பப்படும்.

ஒரு வால்  நட்சத்திரம் இவ்விதம் ஆராயப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
 வால் நட்சத்திரத்தின் சுற்றுப்பாதையை விளக்கும் படம்.
S - சூரியன்.
1. பூமியின் சுற்றுப்பாதை
2. செவ்வாயின் சுற்றுப்பாதை.
3. வியாழனின் சுற்றுப்பாதை
4. வால் நட்சத்திரத்தின்  நீள் வட்ட சுற்றுப்பாதை
வால் நட்சத்திரம் சூரியனை மேலும் மேலும் நெருங்கும் போது அதை சூரியனின் வெப்பம் தாக்கும். இதன் விளைவாக வால் நட்சத்திரத்தில் உறைந்த நிலையில் உள்ள பனிக்கட்டி மற்றும் வாயுக்கள் -- திரவமாக மாறாமலேயே-- ஆவியாகும்.  இவற்றின் துணுக்குகள் சூரியனிலிருந்து வெளிப்படும் துகள்களால் பின்னுக்குத் தள்ளப்படும்.

இவ்விதமாக வால் நட்சத்திரத்துக்கு வால் முளைக்க ஆரம்பிக்கும். வாயுத் துணுக்குள் ஒரு வாலாகவும் தூசு ஒரு வாலாகவும் தோன்றும். வால் நட்சத்திரம் அக்கட்டத்தில் இரண்டு வால்களைப் பெற்றதாக விளங்கும்.

67?P  வால் நட்சத்திரம் சூரியனை ரவுண்ட்  அடித்து விட்டு வந்த வழியே சென்று விடும். இந்த வால் நட்சத்திரம் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்விதம் தலை காட்டிச் செல்கிறது. இது சுமார் 4 கிலோ மீட்டர் நீளமும் மூன்றரை கிலோ மீட்டர் அகலமும் கொண்டது.

எல்லா வால் நட்சத்திரங்களும் நீள் வட்டப் பாதையைக் கொண்டவை. எங்கிருந்தோ வந்து தலைகாட்டி விட்டு மீண்டும் வந்த வழியே செல்பவை

இப்போது ரோசட்டா நெருங்கியுள்ள வால் நட்சத்திரத்தின் முழுப் பெயர்  67 P /சுரியுமோவ் - ஜெராசிமெங்கோ என்பதாகும் . அதாவது 1969 ஆம் ஆண்டில் இந்த வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்த இருவரின் பெயர் இதற்கு வைக்கப்பட்டுள்ளது.

ரோசட்டா  விண்கலம் அந்த வால் நட்சத்திரம் சூரியனை சுற்றி முடிக்கிற வரை அதை வட்டமிட்டபடி உடன் சென்று கொண்டிருக்கும். வால் நட்சத்திரம்  அடுத்த ஆண்டு ஆகஸ்டில் சூரியனை நெருங்கும் என்று கருதப்படுகிறது.

UPDATE:  67 P  வால் நட்சத்திரத்துக்கு ஈர்ப்பு சக்தி கிடையாது. எனவே வால் நட்சத்திரத்தின் பிடியில் சிக்கி அதை ரோசட்டா சுற்றுவதற்கு வாய்ப்பே இல்லை. ஆகவே ரோசட்டாவில் உள்ள சிறிய உந்திகள் செயல்பட்டு வால் நட்சத்திரத்தை ரோசட்டா தொடர்ந்து பின்பற்றிச் செல்ல உதவும். அது எவ்விதம் என்பதை இங்கே காண்க

ரோசட்டா பற்றி முன்னரே இந்த வலைப்பதிவில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. காண்க: வால் நட்சத்திரத்தைத் துரத்திச் செல்லும் விண்கலம்

7 comments:

Unknown said...

"வாயுத் துணுக்குள் ஒரு வாலாகவும் தூசு ஒரு வாலாகவும் தோன்றும்."
வால் நட்சத்திரத்தில் இருந்து வாய்வும் தூசும் வாலாக பிரிவதால் அதன் அளவு மாறுமா?
அப்படியென்றால் அதன் ஆயுள் என்ன?
கிரகங்கள் போல் இந்த வால் நட்சத்திரமும் தன்னை தானே சுற்றுமா?
அப்படி சுற்றினால் அதன் வாலும் நட்சத்திரத்தை சுற்றி spirical வடிவில் இருக்குமா?
தவறாக கேட்டு இருந்தால் மன்னிக்கவும்.

ராஜேந்திரன்

என்.ராமதுரை / N.Ramadurai said...

ராஜேந்திரன்
நீங்கள் ஊகித்தது சரி. வால் நட்சத்திரம் ஒவ்வொரு தடவையும் சூரியனை நோக்கி வரும் போது நிறையப் பொருளை இழக்கிறது. திரும்பத் திரும்ப வருகிற வால் நட்சத்திரங்கள் நாளா வட்டத்தில் இளைத்துப் போய் விடுகின்றன்.
வால் நட்சத்திரம் சூரியனை நோக்கி வருகையில் தமது அச்சில் சுழல்கின்றன.

Anonymous said...

ஐயா வணக்கம்

இப்பிரபஞ்சத்தில் நட்சத்திரத்தை (சூரியன்) சுற்றாமல் ஏதேனும் கிரகமோ, வால்நட்சத்திரமோ தனித்து இருக்கிறதா அதற்கு ஏதேனும் வாய்ப்புள்ளதா. எல்லா கிரகங்களும் சூரியனைச் சுற்றுவதற்கு ஈர்ப்புவிசை மட்டும்தான் காரணமா இல்லை வேறேதேனும் பிரபஞ்ச விதி இருக்கிறதா

இக்கேள்விகள் சரியா ? தவறா ? என்று தெரியவில்லை ஆனாலும் எனக்குள் இருக்கும் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள இக்கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்

வெங்கடேஷ்

என்.ராமதுரை / N.Ramadurai said...

வெங்கடேஷ்
நட்சத்திரம் எதையும் சுற்றாமல் தனியாகத் திரியும் கிரகங்கள் ஒன்றிரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வால் நட்சத்திரம் பற்றித் தகவல் இல்லை

மாணிக்கராஜ் said...

அய்யா, இயற்பியல் விதிப்படி ஈர்ப்பு விசை உள்ள ஒரு பொருளைத்தான் மற்றதொரு பொருள் சுற்றும். இங்கே 67P க்கு எவ்வளவு ஈர்ப்பு விசை உள்ளது. ஈர்ப்பு விசை குறைவென்றால் அதற்க்கு rosetta விண்கலம் சரியான முறையில் சுற்ற என்ன செய்யும்?

நன்றி,
மாணிக்கராஜ்

என்.ராமதுரை / N.Ramadurai said...

மாணிக்கராஜ்
தாங்கள் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் சரி. அந்த வால் நட்சத்திரத்துக்கு ஈர்ப்பு சக்தி கிடையாது. ஆகவே ரோசட்டா எரிபொருளைப் பயன்படுத்தியாக வேண்டும்.
செவ்வாய்க்கு அனுப்பப்படுகிற விண்கலம் செவ்வாயின் ஈர்ப்புப் பிடியில் சிக்கிய பின் எரிபொருள் செலவில்லாமல் இயற்கை நியதிப்படி சுற்றிச் சுற்றி வரும்.
ரோசட்டா அப்படி செய்ய முடியாது. உண்மையில் ரோசட்டா அந்த வால் நட்சத்திரத்தை வட்ட வடிவப் பாதையில் சுற்றாது. ஒரு மாதிரி zigzag பாணியில் அந்த வால் நட்சத்திரத்துடன் கூடவே செல்லும்.ரோசட்டாவில் உள்ள சிறிய உந்திகள் செயல்பட்டு வால் நட்சத்திரத்துடன் அது தொடர்ந்து செல்வதற்கு உதவும்

என்.ராமதுரை / N.Ramadurai said...

மாணிக்கராஜ்
ரோசட்டா எப்படி வால் நட்சத்திரத்தைப் பின்பற்றிச் செல்லும் என்பதை பட வடிவில் அறிந்து கொள்ள UPDATE பாராவுக்குச் செல்லவும்

Post a Comment