Dec 13, 2014

ஜிசாட் 16 மூலம் இஸ்ரோவின் பிரச்சினை தீருமா?

Share Subscribe
இந்தியாவின் ஜிசாட்-16 (GSAT-16) தகவல் தொடர்பு செயற்கைக்கோள் தென் அமெரிக்காவிலிருந்து ஏரியான் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவில் குறிப்பாக டிவி ஒளிபரப்பு வசதிகளை மேலும் அதிகரிக்க உதவும்.

இஸ்ரோ (ISRO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புக்கு எந்த விதத்தில் இப்போது பிரச்சினை நிலவுகிறது? ஏன் அப்படி பிரச்சினை நிலவுகிறது என்று கேட்கலாம். மிக சுருக்கமாகச் சொன்னால் ஜிசாட் மாதிரியில் இன்னும் நிறைய செயற்கைக்கோள்கள் பறக்கவிடப்படவேண்டும். இப்போதுள்ள செயற்கைக்கோள்கள் போதாது. அது தான் பிரச்சினை.

இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் அடிக்கடி செயற்கைக்கோள்களைப் பறக்கவிடுகிறதே, அப்படியிருக்கும் போது செயற்கைக்கோள்கள் போதாது என்று எப்படிச் சொல்ல முடியும்?

இந்தியா தயாரித்துப் பயன்படுத்துகின்ற செயற்கைக்கோள்கள் பொதுவில் இரு வகைப்பட்டவை. முதல் வகை செயற்கைக்கோள்கள் தொலை உணர்வு செயற்கைக்கோள்கள் என்று வருணிக்கப்படுகின்றன. வானிலிருந்து படம் எடுப்பது, நிலவள ஆய்வு, மேப் தயாரிப்பு, பயிர்கள் கண்காணிப்பு, வனவள ஆய்வு, மீன் வள ஆய்வு, வானிலிருந்து கண்காணிப்பு என பல வகையான பணிகளுக்கான செயற்கைக்கோள்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.

இவ்வித செயற்கைக்கோள்கள் அனைத்தும் பூமியை வடக்கிலிருந்து தெற்காக சுற்றுபவை. அதாவது இவை தமது சுற்றுப்பாதையில் தென் துருவத்தையும் வட துருவத்தையும் கடந்து செல்பவை. இந்த வகை செயற்கைக்கோள்களின் நோக்கம் பூர்த்தியாக வேண்டுமென்றால் அவை அவ்விதமாகத் தான் பூமியைச் சுற்றி வந்தாக வேண்டும். பொதுவில் இவை சுமார் 800 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்தவையாக பூமியைச் சுற்றி வரும்.

இந்த வகையான செயற்கைக்கோள்கள் பொதுவில் எடை குறைந்தவை. இவற்றைச் செலுத்தும் நோக்கில் தான் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட்  உருவாக்கப்பட்டது. வடக்கு- தெற்காக பூமியை சுற்றுவதற்கான செயற்கைக்கோள்களை செலுத்துவதற்கான வாகனம் என்ற பொருளில் இந்த ராக்கெட்டுக்கு ஆங்கிலத்தில் Polar Satellite Launch Vehicle (PSLV) என்று பெயரிடப்பட்டது.

வடக்கிலிருந்து தெற்காக சுற்றும் செயற்கைகோள்களின் சுற்றுப்பாதையையும்
கிழக்கு-மேற்காக சுற்றும் செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதையையும் விளக்கும் படம்.
courtesy: scijnks.jpl.nasa
ஆனால் இந்த ராக்கெட் வடக்கிலிருந்து தெற்கு நோக்கித் தான் பாயும். கிழக்கு நோக்கிப் பாயாது என்று அர்த்தமல்ல. ஒரு ராக்கெட்டை எந்த திசையிலும் செலுத்த முடியும். ஆனால் ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்த வகை ராக்கெட்டுக்கு அப்படி ஒரு பெயரை வைத்து விட்டார்கள்.

பி.எஸ்.எல்.வி ராக்கெட்டானது 1993 ஆம் ஆண்டில் முதல் முயற்சியில் தோல்வி கண்டது என்றாலும் அப்போதிலிருந்து இதுவரை 25 க்கும் அதிகமான தடவைகளில் தொடர்ச்சியாக வெற்றி கண்டுள்ளது. இந்த ராக்கெட் பொதுவில் சுமார் ஒன்றரை டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. வேறு வகையில் சொல்வதானால் முதல் வகை செயற்கைகோள்கள் அனைத்தையும் உயரே செலுத்த பி.எஸ்.எல்.வி ராக்கெட் நமக்கு உதவுகிறது.

பி.எஸ்.எல்.வி. ராக்கெட்
டிவி ஒளிபரப்பு, இண்டர்னெட் வசதி, டெலிபோன் தொடர்பு, தகவல் தொடர்பு, வானிலத் தகவல் சேகரிப்பு போன்றவற்றுக்கான செயற்கைக்கோள்கள் முற்றிலும் வேறு ரகம். இவை இரண்டாவது வகை செயற்கைக்கோள்களில் அடங்கும். இந்த செயற்கைக்கோள்கள் பூமியிலிருந்து மிகச் சரியாக 35,786 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்தபடி பூமியை  கிழக்கு மேற்காக சுற்றி வருபவை.

அவை அந்த உயரத்தில் இருந்தால் தான் டிவி ஒளிபரப்பு சாத்தியமாகும். மற்ற பணிகளும் சாத்தியமாகும். பொதுவில் இந்த வகை செயற்கைக்கோள்களின் எடை அதிகம். உதாரணமாக இப்போது உயரே சென்றுள்ள ஜிசாட்-16 செயற்கைக்கோளின் எடை 3180 கிலோ ஆகும். இதில் 48 டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன.

சுமார் மூன்று டன் எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் உட்பட இந்தியாவுக்குத் தேவையான எல்லா வகை செயற்கைக்கோள்களையும் நாமே தயாரிக்கிறோம். சொல்லப்போனால் செயற்கைக்கோள் தொழில் நுட்பத்தில் நாம் பெருமைப்படுகின்ற அளவுக்கு நன்கு முன்னேறியிருக்கிறோம்.

ஆனால் மூன்று டன் அளவுக்கு எடை கொண்ட செயற்கைக்கோள்களை மேலே கூறிய அளவு உயரத்துக்குச் செலுத்தும் திறன் கொண்ட ராக்கெட் தற்போது இந்தியாவிடம் இல்லை. செயற்கைக்கோள் தொழில் நுட்பத்தில் நாம் எந்த அளவுக்கு வேகமாக முன்னேறினோமோ அந்த அளவுக்கு ராக்கெட் தொழில் நுட்பத்தில் முன்னேறவில்லை.

ஆகவே தான் மூன்று டன் அளவுக்கு எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை விமான மூலம் தென் அமெரிக்காவில் கூரூ என்னுமிடத்துக்கு எடுத்துச் சென்று ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் (Ariane) ராக்கெட் மூலம் அதைச் செலுத்தச் செய்கிறோம். எடுத்துச் செல்லும் செலவு, செலுத்தித் தருவதற்கான கட்டணம் போன்ற வகையில் ஒவ்வொரு தடவையும் ரூ 450 கோடிக்கும் அதிகமாகச் செலவாகிறது.

ஏரியான் ராக்கெட்
இதுவரை  ஏரியான் மூலம் 18 தடவை இந்திய தகவல் தொடர்பு செயற்க்கோள்கள் உயரே செலுத்தப்பட்டுள்ளன.

பிறர் கையை எதிர்பார்க்காமல் நான்கு டன் எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களையும்  இந்திய மண்ணிலிருந்தே செலுத்தும் நோக்கில் தான் ஜி.எஸ்.எல்.வி- மார்க் 3 (GSLV Mark-3) என்னும் சக்தி மிக்க ராக்கெட்டை உருவாக்குவதில் கடந்த பல ஆண்டுகளாக இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இப்போது இந்த வகை ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாத பிற்பாதியில் இது முதல் தடவையாக வானில் செலுத்தப்பட இருக்கிறது. முதல் பரிசோதனை வெற்றியாக அமைந்தாலும் இது பயனுக்கு வர இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகலாம்.

ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3  ராக்கெட் மாடல்
இப்போது டிரான்ஸ்பாண்டர் சமாச்சாரத்துக்கு வருவோம். டிரான்ஸ்பாண்டர் என்பது தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் அனைத்திலும் இருக்கிற கருவிகளாகும். நீங்கள் டிவியில் தினமும் பார்க்கின்ற நிகழ்ச்சிகள் உட்பட இந்தியாவில் உள்ள பல நூறு சேனல்காரர்களும் மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் (பங்கு மார்க்கெட் நிறுவனங்களும் இதில் அடங்கும்) தங்களது சிக்னல்களை  மேலே உள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோளின் டிரான்ஸ்பாண்டர்களை நோக்கி அனுப்புகின்றனர்.

அவை அந்த சிக்னல்களைப் பெற்று இந்தியா முழுவதும் அந்த சிக்னல்கள் கிடைக்கும் வகையில் கீழ் நோக்கி அனுப்புகின்றன
  
இந்தியாவுக்குத் தெற்கே பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே இந்தியாவைப் பார்த்தபடி இப்போது 10 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் செயல்பட்டு வ்ருகின்றன. இவை அனைத்திலும் உள்ள மொத்த டிரான்ஸ்பாண்டர்களின் எண்ணிக்கை 200 கூட இல்லை. செயற்கைக்கோளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இது போதவில்லை. தேவை அதிகரித்த அளவுக்கு டிரான்ஸ்பாண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

வீட்டு மாடியில் டிஷ் ஆண்டெனாவை நிறுவி அதன் மூலம் டிவி நிகழ்ச்சிகளைப் பெறுகின்ற போக்கு அதிகரித்து வருகிறது. இந்த வசதியை அளிக்கும் பல்வேறு தனியார் நிறுவனங்களும் தங்களுக்கு குறிப்பிட்ட அலைவரிசையில் மேலும் டிரான்ஸ்பாண்டர்களை ஒதுக்கும்படி கோரி வருகின்றன
   
பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை இஸ்ரோ  நிறைவேற்ற முடியாத காரணத்தால் பிற நாடுகளின் செயற்கைக்கோள்களில் சுமார் 100 டிரான்ஸ்பாண்டர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் நிலை உள்ளது. இது நல்லதல்ல என்று சுட்டிக்காட்டப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு கடைசி வாக்கில் இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் 500 டிரான்ஸ்பாண்டர்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் பாதி கூட எட்டப்படாத நிலை தான் உள்ளது.

மொத்தத்தில் செயற்கைக்கோள் டிரான்பாண்டர்கள் விஷயத்தில் கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த நிலைமை நீடிக்கும் என்றே தோன்றுகிறது. 

(இக்கட்டுரை தமிழ் ஹிந்து டிசம்பர் 12 ஆம் தேதி இதழில் வெளியானது. இங்கு படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது)

8 comments:

சரண் said...

தமிழில் அறிவியல் சார்ந்து எழுதுபவர்கள் யாரேனும் இருக்கிறார்களா?. என தேடி உங்கள் வலைப்பதிவை கண்டறிந்தேன்.

மிகவும் நல்ல முயற்சி, தகவல்களுக்கு நன்றி!

கவியாழி said...

நல்லத் தகவலைத் தந்தமைக்கு நன்றி

Anonymous said...

விண்வெளி பொறியியல் படிக்கும் எனக்கே இந்த நுணுக்கங்களும் காரணங்களும் தெரியவில்லை. அருமையான கட்டுரை! இதை ஆங்கிலத்தில் நான் மொழிபெயர்த்து என் வலைபகுதியில் சேர்க்க எனுமதி கிடைக்குமா?

மிக்க நன்றி!

Muthu said...

மிக எளிமையாக நன்கு புரியும்படி உள்ளது! நன்றி அய்யா

Anonymous said...

இந்த மாதிரி டிரான்பாண்டர்கள் பிரச்சனையை வருங்காலத்தில் தீர்கத்தான் "ஸ்மால் சாடெல்லைட்" (small satellite) என்ற ஒரு துறை இப்போது சூடு பிடிக்கிறது. இதில் என்ன விஷயம் என்றால், யார் வேண்டுமென்றாலும் தங்கள் விருப்பத்திற்கும் தேவைகளுக்கும் ஏற்றவாறு சிறிய சாடெல்லைட் ஒன்றை செய்து பறக்கவிடலாம். இதற்காக இப்பொழுது பல Small Satellite உருவாக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ளது. இதில் என்ன நன்மை என்றால்.. இஸ்ரோ அந்த சிறிய செயற்கைக்கோள்களை தனது ராக்கெட்டில் செலுத்தினால் மட்டும் போதும்.. அவற்றை கண்ட்ரோல் செய்வது முதல் தகவல் பரிமாற்றம் வரை செயற்கைக்கோளின் உரிமையாளர் பொறுப்பாகும். இதனால் இஸ்ரோ தனது பல முக்கியமான ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபடலாம்.

என் கனவு என்னவென்றால், இறைவன் நாடினால், நான் இந்தியாவில் ஒரு தனியார் செயற்கைக்கோள் செலுத்தும் ராக்கெட் நிறுவனத்தை வருங்காலத்தில் நிறுவுவதுதான். :-)

என்.ராமதுரை / N.Ramadurai said...

Mohamed Peer
தாராளமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பிரசுரிக்கலாம். ஒரே நிபந்தனை மூலக்கட்டுரையைத் தமிழில் படிக்க.. என்று குறிப்பிட்டு என் வலைப்பதிவுக்கு லிங்க் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்
ராமதுரை

N.Ramamurthy said...

மதிப்பிற்குரிய என்.ராமதுரை அய்யா அவர்களுக்கு:
நல்ல கட்டுரை. ஒரே ஒரு சந்தேகம். பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி தானே சுழல்கிறது. அப்போது புவிநிலை செயற்கைக்கோளும் (GSLV) அவ்வாறுதானே சுழல வேண்டும். ஆனால் உங்கள் கட்டுரையில் புவிநிலை செயற்கைகோள்கள் கிழக்கிலிருந்து மேற்காக சுழல்வதாக(படத்தில் அல்ல கட்டுரையின் வார்த்தைகளில்) உள்ளதே. இது எப்படி? கொஞ்சம் தெளிவுபடுத்துங்களேன்.

என்.ராமதுரை / N.Ramadurai said...

N.Ramamurthy
. பூமியைச் சுற்றுகின்ற பெரும்பாலான செயற்கைக்கோள்கள் கிழக்கு மேற்காகத்தான் சுற்றுகின்றன. இவை கிழக்குத் திசையில் செலுத்தப்படுகின்றன. . ஆகவே கிழக்கே சென்று மேற்கிலிருந்து வருபவை என்ற பொருளில் அவ்விதம் எழுதப்பட்டுள்ளது.மேற்குத் திசையிலிருந்து கிழக்கு நோக்கி சுற்றுகின்றன என்று எழுதியிருந்தால் குழப்பத்துக்கு இடம் ஏற்பட்டிருக்காது

Post a Comment