Feb 17, 2015

செவ்வாய்க்குச் செல்ல மூன்று இந்தியர் தேர்வு

Share Subscribe
செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புவதற்காக மார்ஸ் ஒன் என்னும் தனியார் அமைப்பு தேர்ந்தெடுத்துள்ளவர்களின் பட்டியலில் இப்போதைக்கு மூன்று இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.  இறுதிப் பட்டியல் இனி மேல் தான் முடிவாக இருக்கிறது. (ஆங்கிலத்தில் செவ்வாய் கிரகத்தின் பெயர் Mars  என்பதாகும்.)

இந்த மூன்று இந்தியர்களில் ஒருவர் கேரளத்தைச் சேர்ந்தவர். 19 வயது, பெயர் சாரதா பிரசாத். இன்னோருவர் தரண்ஜித் சிங். வயது 29. அமெரிக்காவில் இருக்கிறார். மூன்றாமவர் கீர்த்திகா சிங். வயது 29. துபையில் இருக்கிறார். சாரதாவும் கீர்த்திகாவும் பெண்கள்.

ஐரோப்பாவில் உள்ள ஹாலந்து நாட்டைச் சேர்ந்த மார்ஸ் ஒன் நிறுவனத்தின் செவ்வாய்ப் பயணத் திட்டம் 2012 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 140 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்தார்கள். மருத்துவ பரிசோதனை, ஆன் லைன் இண்டர்வியூ ஆகியவை உட்பட மூன்று ரவுண்டு வடிகட்டும் தேர்வுகளுக்குப் பிறகு இப்போது 100 மிஞ்சி நிற்கின்றனர். இந்த 100 பேரில் மேற்படி மூன்று இந்தியர்கள் அடங்குவர். இறுதியாக 24 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த 24 பேருக்கும் ஏழு ஆண்டுக்கால பயிற்சி அளிக்கப்படும். அதன் பின்னர் 2025  ஆம் ஆண்டில் தொடங்கி 26 மாதங்களுக்கு ஒரு முறை நான்கு பேர் வீதம்   அனுப்பப்படுவர்.

விண்கலம் மூலம் செவ்வாய்க்குச் செல்ல இந்த 24  பேரில் யாரும் பணம் கொடுக்க வேண்டாம். செவ்வாயில் தங்கியிருக்கும் காலத்தில் பணச் செலவு கிடையாது. ஆனால் மிக முக்கியமான விஷயம், செவ்வாய்க்குச் செல்பவர்கள் திரும்பி வர முடியாது.
செவ்வாயின் நிலப்பரப்பு. செவ்வாயில் தண்ணீர் கிடையாது. செடி, கொடி, மரம் எதுவும் கிடையாது. புழு பூச்சி என எதுவும் இல்லை.
செவ்வாய்க்கு இவர்களை அனுப்பும் நிறுவனம் இவர்களைத் திரும்பி  அழைத்து வர பணம் செலவிடத் தயாராக இல்லை என்று அர்த்தமல்ல. செவ்வாய்க்குப் போனால் திரும்பி வர இப்போதைக்கு வழி இல்லை என்பதே அதற்குக் காரணம்.

 சில நடைமுறைப் பிரச்சினைகள் இருந்தாலும் இப்போதுள்ள தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி விண்கலங்கள் மூலம் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்ப  முடியும். ஆனால் பூமிக்குத் திரும்புவதற்கு செவ்வாயிலிருந்து கிளம்பி மேலே வருவது என்பது அனேகமாக சாத்தியமில்லை என்பது தான் இப்போதுள்ள நிலைமை.

மார்ஸ் ஒன் நிறுவனம் செவ்வாய்க்குப் போனால் யாரும் திரும்பி வர முடியாது என்பதைத் தெளிவாக அறிவித்துள்ளது. ஆகவே தான் இது செவ்வாய்க்கான ஒரு வழிப் பயணம் என்று வருணிக்கப்படுகிறது.

செவ்வாய்க்குச் செல்பவர்கள் கடைசி வரை அங்கு நிரந்தரமாக தங்கியிருந்தாக வேண்டும். அவர்கள் வசிப்பதற்கென குடில்கள் தயாரிக்கப்பட்டு முன்கூட்டி செவ்வாய்க்கு அனுப்பப்படும். அவ்வப்போது பூமியிலிருந்து உணவு மருந்துகள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் விண்கலங்கள் மூலம் அனுப்பப்படும்.

எனினும் செவ்வாயில் சுவாசிக்க ஆக்சிஜன் கிடையாது. விண்வெளியிலிருந்து விண்கற்கள் தாக்கும் ஆபத்தும் உண்டு. குடில்களிலிருந்து வெளியே வருவதானால் விண்வெளி வீரர்கள் அணிவது போன்ற உடைகளில் நடமாட வேண்டியிருக்கும். செவ்வாயில் ஈர்ப்பு சக்தி குறைவு. உடல் அதற்கேற்ப பழகிக்கொண்டாக வேண்டும். இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக மன நலம் பாதிக்கப்படுகின்ற பிரச்சினையும் உண்டு. கண்காணாத இடத்தில் இப்படி வந்து மாட்டிக்கொண்டு விட்டோமே என்ற பகீர் உணர்வு ஏற்படுமானால் விபரீத நிலைமைகள் ஏற்படலாம்.

செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு 600 கோடி டாலர் செலவாகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. செவ்வாய்க்குச் செல்வோர் பெறுகின்ற  பயிற்சியில் தொடங்கி அங்கே போய் இறங்கி   வசிக்கத் தொடங்குவது  வரையிலான  பேட்டிகள் உட்பட அனைத்தையும் டிவி யில் காட்டுவதற்கான உரிமைகளை விற்பதன் மூலம் -- அதாவது விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர்கள் மூலம் திரட்ட முடியும் என்று மார்ஸ் ஒன் நிறுவனம் நம்புகிறது. தங்கள் திட்டம் லாப நோக்கற்றது என்று அது கூறுகிறது.

இவை ஒரு புறம் இருக்க, செவ்வாயிலிருந்து திரும்ப வழியே கிடையாது என்ற நிலையில் - விண்ணப்பதாரர்கள் என்ன தான் தயாராக இருந்தாலும் -- அவர்களை அனுப்புவது தார்மீகச் செயலாகுமா என்று பல தரப்பினரும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கு விரும்பிச் செல்பவர்கள் ஏதேனும் ஒரு கட்டத்தில் பல்வேறான பிரச்சினைகள் காரணமாக அல்லது மன ஏக்கம் காரணமாக பூமிக்குத் திரும்ப விரும்பினால் யாராலும் எதுவும் செய்ய இயலாத நிலையில் அவர்களை சாக விடுவது சரியாக இருக்குமா என்றும் அவர்கள் கேட்கின்றனர்.

செவ்வாய்க்கு ஒருவரை அல்லது சிலரை எவ்வளவு பத்திரமாக அனுப்புகிறோமோ அவ்வளவு பத்திரமாக அவர்களை பூமிக்குக் கூட்டி வருகின்ற நிலைமை ஏற்படாத வரை செவ்வாய்க்கு யாரையும் அனுப்பும் திட்டமில்லை என்பதுதான் அமெரிக்க நாஸா கொண்டுள்ள போக்காகும்.

ஒரு வேளை 2025 ஆம் ஆண்டுக்குள் செவ்வாயிலிருந்து திரும்புவதற்குத் தகுந்த வழி கண்டுபிடிக்கப்படுமானால் மார்ஸ் ஒன் திட்டம் எவ்விதமாக வேண்டுமானாலும் மாறலாம்.

4 comments:

Anonymous said...

இப்போதைக்கு சும்மா தேர்வு, பயிற்சி இப்படித்தானே போய்க்கொண்டிருக்கிறது என்று அரசுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன. கடைசியில் ராக்கெட்டில் ஏற்றும் நேரத்தில் இதற்குத் தடை போட்டு விடுவார்கள் என்று நினைக்கிறேன். மார்ஸ் ஒன் அதை எதிர்த்து கோர்ட்டுக்குப் போகும். வழக்கு இழுத்துக்கொண்டு போகும்.

என்னதான் மருந்துகளை அனுப்பிவைத்தாலும் தீவிரமான வியாதிகள் (இதயக் கோளாறு, கான்சர் போல) வந்துவிட்டால் மருத்துவரும், அவருக்குத் தேவையான வசதிகள், கருவிகள் கொண்ட மருத்துவமனையும் தேவை. இன்னொரு பிரச்னை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது. ஒரு ஆள் மற்றவர்களைக் கொலை செய்ய ஆரம்பித்தால் என்ன செய்வது?

சரவணன்

கிரி said...

சார் அங்கே சென்று உயிரோடு இருப்போமா இல்லையா என்பதை விட.. இவ்வளவு நாள் பயணம் செய்து அங்கு போக மனித உடல் ஒத்துழைக்குமா?

இன்று சரி என்று கூறுபவர்கள் இடைப்பட்ட நாட்களில் மனம் மாறவும் வாய்ப்பு இருக்கிறது... அப்படி மாறினால் ஏற்றுக்கொள்வார்களா? வற்புறுத்தவும் முடியாது.. அதோடு புதியதாக ஒருவருக்கு பயிற்சி அளிக்க கூடுதல் வருடங்கள் ஆகும்.. குழப்பமாக இருக்கிறது.

Arul said...

பூமியை விட பாதிக்கும் குறைவான ஈர்ப்பு சக்தி, நிலவை விட இருமடங்கு ஈர்ப்பு சக்தி கொண்ட செவ்வாயில் ஏன் விண்கலங்கள் மூலம் பூமிக்குத் திரும்ப முடியாது?

என்.ராமதுரை / N.Ramadurai said...

Arul
சந்திரனின் ஈர்ப்பு சக்தி மிகவும் குறைவு. எனவே இறங்கு கலத்தின் ஒரு பகுதியாக உயரே செல்வதற்கான கலம் இணைக்கப்பட்டிருந்தது. ஈர்ப்பு சக்தி குறைவு என்பதால் எரிபொருள் தேவையும் குறைவு. ஆகவே உயரே கிளம்ப சிறிய கலமே போதுமானதாக இருந்தது. செவ்வாயின் கதை வேறு. செவ்வாயை ஏற்கெனவே சுற்றிக்கொண்டிருக்கின்ற விண்கலத்துடன் அதாவது தாய்க் கலத்துடன் இணைந்து கொண்டால் பூமிக்குத் திரும்பி விடலாம். ஆனால் அதற்கு ஓரளவு திறன் கொண்ட ராக்கெட் இருந்தால் தான் மேலே கிளம்பி தாய்க்கலத்தை அடைய முடியும். அதற்குத் தேவையான ராக்கெட்டையும் பூமியிலிருந்து கிளம்பும் போதே எடுத்துச் செல்வது நடைமுறையில் ஒரு பிரச்சினை. செவ்வாயில் ராக்கெட் பகுதிகளை இணைத்து ராக்கெட்டை உருவாக்குவதென்றால் அதை எப்படி சாதிப்பது என்ற பிரச்சினை உள்ளது. அடுததாக அந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் பிரச்சினை. ஒரு ராக்கெட்டை உயரே செலுத்துவதென்றால் அதற்கான மேடை தேவை. பல நிபுணர்களின் உதவி தேவை. இப்படி பல பிரச்சினைகள் உள்ளன. செவ்வாயில் இறங்கி விடலாம். மேலே கிளம்புவதில் தான் பிரச்சினை.
சந்திரனில் காற்று மண்டலம் கிடையாது. செவ்வாயில் காற்று மண்டலம் உண்டு. மேலே கிளம்பும் ராக்கெட் அந்த காற்று மண்டலத்தைக் கிழித்துச் செல்கின்ற போது உண்டாகின்ற பிரச்சினைகளும் சமாளிக்கப்பட்டாக வேண்டும். நாஸா விஞ்ஞானிகள் இப்படியான பல பிரச்சினைகளுக்கு விடை காண முயன்று கொண்டிருக்கின்றனர்.

Post a Comment