Feb 8, 2015

வியாழன் கிரகத்தின் முகத்தில் கரும்புள்ளி?

Share Subscribe
படங்கள்  நன்றி: NASA/ESA
மேலே “பட்டை”களுடன் காணப்படுவது வியாழன் கிரகமாகும். இப்போது அது பூமியிலிருந்து சுமார் 65 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வியாழன் கிரகத்தின் “முகத்தில்” நீங்கள் மூன்று “கரும்புள்ளி”களைக் காணலாம். உண்மையில் அவை கரும்புள்ளிகள் இல்லை.

மூன்று கரும்புள்ளிகளில் ஒன்று வியாழன் கிரகத்தைச் சுற்றி வருகின்ற துணைக்கோள்களில் ( சந்திரன்கள் என்றும் சொல்லலாம்) ஒன்றான காலிஸ்டோ.(Callisto). அதனுடைய நிழல் வியாழன் கிரகத்தின் மீது விழுவதால்  அந்த நிழலானது கரும்புள்ளி போன்று தென்படுகிறது.

யூரோப்பா( Europa) துணைக்கோள் இடது புறத்தில் விளிம்பில் தென்படுகிறது. அதன் நிழல் தனியே கரும்புள்ளியாகக் காணப்படுகிறது.

துணைக்கோள்களில் மற்றொன்றான அயோ (Io) மேற்புறத்தில் தென்படுகிறது. அயோ வியாழனைச் சுற்றுகையில் விளிம்புக்குப் போய்விட்டதால் படத்தில் நிழல் காணப்படவில்லை. ஆனால் கீழே உள்ள படத்தில் அயோவின் நிழல் காணப்படுகிறது.

மேலே உள்ள படம் எடுக்கப்பட்டதற்கு சுமார் முக்கால் மணி நேரத்துக்கு முன்பாக கீழே உள்ள படம் எடுக்கப்பட்டது.


இந்தப் படத்தில் அயோவும் அத்துடன் அதன் நிழலும் காணப்படுகின்றன.யூரோப்பாவின் நிழல் மங்கலாகத் தெரிகிறது. ஆனால் யூரோப்பா துணைக்கோள் தென்படவில்லை.

 இந்த மூன்று துணைக்கோள்களுமே தனித்தனி நிறம் கொண்டவை. காலிஸ்டோ பழுப்பு நிறம் கொண்டது. யூரோப்பா வெண்மை நிறத்தில் காட்சி அளிப்பதாகும். அயோ சற்றே ஆரஞ்சு நிறம் கொண்டது.

ஹப்புள் டெலஸ்கோப்
இப்படங்கள்  சுமார் 550 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கின்ற ஹப்புள் டெலஸ்கோப் ( Hubble Telescope) கடந்த ஜனவரி 24 ஆம் தேதி எடுத்தவை.  பறக்கும் டெலஸ்கோப் எனப்படும் ஹப்புள் டெலஸ்கோப் 1990 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது.

வியாழன் கிரகத்தை 67 துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன. அயோ, யூரோப்பா, காலிஸ்டோ அவற்றில் அடங்கும். அயோ ஒரு தடவை வியாழனை சுற்றி வர சுமார் ஒன்றரை நாட்கள் பிடிக்கிறது. யூரோப்பா சுமார் நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் காலிஸ்டோ 16 நாட்களுக்கு ஒரு முறையும் வியாழனைச் சுற்றி வருகின்றன. ஆகவே இந்த மூன்றும் வியாழன் கிரகத்தின் ‘முகத்தில்’ அருகருகே காணப்படுவது ஓரளவில் அபூர்வமே. அந்த வகையில் இப்படங்களும் அபூர்வமானவை.

படங்கள் குறிப்பிட்ட கோணத்திலிருந்து எடுக்கப்பட்டவை என்பதால் அவற்றின் நிழல் படத்தில் தள்ளி விழக் காணப்படுகிறது.

இப்போது வியாழன் கிரகத்தை இரவு வானில் எளிதில் காணலாம். சூரியன் அஸ்தமித்த பின்னர் கிழக்கு வானில் வியாழன் தென்பட ஆரம்பிக்கும். இரவு 9 மணி வாக்கில் கிழக்கு திசையில் நோக்கினால் சற்று உயரத்தில் வியாழன் தெரியும். அதற்குக் கீழே ஓரளவு பிரகாசமான நட்சத்திரம் தெரியும். அது தான் மக  நட்சத்திரமாகும். ஆங்கிலத்தில் அது Regulus என்று அழைக்கப்படுகிறது.

5 comments:

Anonymous said...

ஐயா வணக்கம்

ஹப்புள் டெலஸ்கோப் விண்வெளியில் தற்போது எங்கே நிலை நிறுத்தப்பட்ட்டுள்ளது, அதன் திறன் எவ்வளவு இருக்கும் அதாவது அதனால் எவ்வளவு தூரத்தில் உள்ளவற்றை படம்பிடிக்க இயலும் பெரும்பாலும் விண்வெளியைப்பற்றி புகைப்படங்கள் மட்டுமே வெளிவருகிறதே வீடியோவாக வெளிவருவதில்லையே ஏன்? ஹப்புள் டெலஸ்கோப் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடம் தொய்வில்லாமல் செயல்படுகிறதே அதன் ஆயுட்காலம் எவ்வளவு


வெங்கடேஷ்

மாணிக்கராஜ் said...

ஐயா,
when ISS captured an eclipse the moon shadow was very weak and blur. How Jupiter's moon shadow very much like circle.

And if IO takes a day to come around the Planet means speed would have been very high. How this is captured by Hubble?
Also can you explain the planets position in perspective of Hubble telescope or earth as we see this shadow are not straight from Hubble's view. நன்றி

என்.ராமதுரை / N.Ramadurai said...

Anonymous
பத்திரிகைகளிலும் டிவிக்களிலும் “செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது” என்று சொல்வது வழக்கமாகி விட்டது. வானில்/விண்வெளியில் எந்தப் பொருளும் ஒரே இடத்தில் நிலையாக நிற்க முடியாது. சுற்றிக் கொண்டே இருந்தாக வேண்டும். ஆகவே “ நிலை நிறுத்தப்பட்டுள்ளது” என்று கூறுவது அடியோடு தவறு.
ஹப்புள் செயற்கைகோள் சுமார் 550 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியை சுற்றி வருகிறது. இது பல கோடி கி.மீ தொலைவில் உள்ள அண்டங்களையும் படம் எடுத்துள்ளது. ஹப்புளில் கண்ணாடி -Mirror- வடிவில் லென்ஸ்கள் உள்ளன. கேமிரா கிடையாது.ஹப்புள் 2032 வரை செயல்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்.ராமதுரை / N.Ramadurai said...

மாணிக்கராஜ்
ISS படம் எடுப்பது வேறு. ஹப்புள் படம் எடுப்பது என்பது வேறு. பூமியின் மீது சந்திரன் நிழல் விழும்போது Umbra penumbra சமாச்சாரங்கள் சம்ப்ந்தப்படுகின்றன.
சரியான நேரத்தில் வினாடி கூட தாமதிக்காமல் படம் எடுக்கும் போது தான் இப்படியான படங்கள் கிடைக்கின்றன.

Anonymous said...

Nandri iya!

Post a Comment