Feb 22, 2015

எல்லாமே அதே நிலா

Share Subscribe
கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதியும் 21 ஆம் தேதியும் சூரியன் மறைந்த பின்னர் மேற்கு வானில் பிறைச் சந்திரனும் அதே சமயத்தில் செவ்வாய் (Mars) வெள்ளி  (Venus) ஆகிய கிரகங்களும் ஒரே சமயத்தில் தெரிந்தன. பார்ப்பதற்கு இது ரம்மியமாக இருந்தது.

இது ஒன்றும் பெரிய அதிசயமல்ல, என்றாலும் இது அடிக்கடி நிகழ்வதல்ல. காரணம் வெள்ளி, செவ்வாய் ஆகியவை வானில் தொடர்ந்து இடம் மாறிக் கொண்டிருப்பவை. சந்திரன் தினமும் இடம் மாறிக் கொண்டிருப்பதாகும்.  .

அன்றைய தினம் மேற்கு வானைக் கவனித்த பலர் தாங்கள் எடுத்த புகைப்படங்களை Earthsky.org என்னும் இணைய தளத்துக்கு அனுப்பி வைத்தனர். அந்த இணைய தளம் அவற்றில் பல படங்களை வெளியிட்டது.

கீழே நீங்கள் காணும் புகைப்படங்கள் அந்த இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டவையே. அப்படங்களில் நான் கவனித்த விஷயம் அந்தப் படங்களில் சந்திரன் வெவ்வேறு கோணத்தில் காட்சி அளித்தது என்பதாகும். அந்த அளவில் படங்கள் மேற்படி இணையம் வெளியிட்டவையாகும். ஆனால் அவை வெவ்வேறு கோணங்களில் தெரிவது பற்றிய விளக்கம் என்னுடையதாகும்.

பௌர்ணமியன்று நீங்கள் உலகில் எங்கிருந்து பார்த்தாலும்-- பூமியின் நடுகோட்டுக்கு வடக்கே இருந்து பார்த்தாலும் சரி, தெற்கிலிருந்து பார்த்தாலும் சரி --- முழு நிலவாகத் தெரியும். ஆனால் பிறைச் சந்திரன் மட்டும் பூமியில் எங்கிருந்து பார்க்கிறீர்கள் என்பதைப் பொருத்து வித்தியாசமாகத் தெரியும்.

நடுக்கோட்டுக்கு வடக்கே இருந்து பார்த்தால் ஒரு விதமாகவும் தெற்கே இருந்து பார்த்தால் வேறு விதமாகவும் இருக்கும். கீழே உள்ள படங்களில் பிரேஜிலில் எடுக்கப்பட்ட படம் நடுக்கோட்டுக்கு தெற்கே இருந்து எடுக்கப்பட்டதாகும்.

நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள இடங்களிலும் சரி இந்தியா போன்ற இடங்களிலிருந்து பார்த்தால் பிறைச் சந்திரன்  மிதக்கும் படகு போன்று இருக்கும். வடக்கே போகப் போக சாய்வு தெரியும்.

நீங்கள் கீழே உள்ள படங்களைப் பார்த்தால் இது விளங்கும்.

பிப்ரவரி 20 .இடம் ரியோடி ஜெனிரோ, பிரேஜில்
படம் எடுத்தவர்:ஹெல்லோ டி கார்வால்ஹோ விடால். படங்கள்: நன்றி Earthsky.0rg
பிப்ரவரி 20. இடம் அமெரிக்காவில் பிளாரிடா.
படம் எடுத்தவர் கிங் எங்கல்வுட்

பிப்ரவரி 20 . இடம் ஹங்கேரி
படம் எடுத்தவர் ஜிசா பார்கோனில்

பிப்ரவரி 20.  இடம் இந்தியா ராஜஸ்தான்
படம் எடுத்தவர் ரஜீப் மாஜி

பிப்ரவரி 20.  இடம் கலிபோர்னியா, அமெரிக்கா
படம் எடுத்தவர் எரிக் ஸ்மித்.
இந்த படங்கள் அனைத்தும் ஒரே தேதியில் எடுக்கப்பட்டவை.  ஆனால் சந்திரன் மட்டும் வெவ்வேறு கோணங்களில் காட்சி அளிக்கின்றன என்பதைக் கவனிக்கவும்.

அன்றைய தினம் மட்டும் வட துருவத்துக்கு அருகே உள்ள இடத்திலிருந்து பிறைச் சந்திரன் படம் எடுக்கப்பட்டிருக்குமானால் அது  )   அதாவது நிற்பது  போலத்     தெரிந்திருக்கும். தென் துருவத்துக்கு அருகிலிருந்து படம் எடுத்திருந்தால் அது ( மாதிரியில் தெரிந்திருக்கும்,

காண்க: அமெரிக்காவில் பார்த்த நிலா

4 comments:

Anonymous said...

வணக்கம் ஐயா

சந்திரன் பூமியை சுற்றிவரும் பாதை எப்போதும் ஒரேமாதிரி இருக்க்குமா அல்லது மேலும், கீழும், கீழும்,மேலும் என்று வெவ்வேறு விதமாக இருக்க்குமா, ஐயா மேலும் ஒரு ஐயம் பிறை சந்திரனில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் சூரிய ஒளி படுகிறது எனவே அந்த இடம் மட்டும் ஒளிர்கிறது சூரிய ஒளி படாத இடங்கள் மங்கலாக தெரிகிறது அப்படி சூரிய ஒளி படாத இடங்களில் தெரிவது பூமியின் நிழலா

வெங்கடேஷ்

என்.ராமதுரை / N.Ramadurai said...

வெங்கடேஷ்
சந்திரனின் பாதை சில சமயம் இடது பக்கம் சாய்வாகவும் வேறு சமயம் வலது பக்கம் சாய்வாகவும் இருக்கும். சந்திரனின் பாதை மட்டும் கிடைமட்டமாக ஒரே மாதிரியாக இருக்குமானால் ஒவ்வொரு அமாவாசையிலும் சூரிய கிரகணமும் ஒவ்வொரு பௌர்ணமியிலும் சந்திர கிரகணமும் நிகழ்ந்து கொண்டு இருக்கும்.
சந்திரனில் சூரிய ஒளி படாத இடம் கருப்பாக இருக்கும். இருட்டான பகுதி பூமியின் நிழல் அல்ல.

நல்ல இருட்டாக இருக்கும் அறையில் பிளாஷ் மூலம் போட்டோ எடுத்தால் முகத்தில் ஒளி படும் பகுதி மட்டும் படத்தில் விழும். முகத்தில் ஒளி படாத பகுதியானது படத்தில் கருப்பாக இருக்கும். அது மாதிரித்தான் இதுவும்.

CHINNA RAJA said...

My science teacher once said stars glitter and planet doesn't. Is that true sir? I don't believe since I feel glittering effect is due to the motion of clouds. It may be true that stars release energy due to formation particles like helium in sun. If that is true does sun glitters ? Quite confused

என்.ராமதுரை / N.Ramadurai said...

chinna
உங்களுடைய சயன்ஸ் டீச்சர் சொன்னதை சந்தேகிக்க இடமில்லை. நட்சத்திரங்கள் மிக மிகத் தொலைவில் உள்ளன்.அவற்றின் ஒளியானது கம்பி போல மெல்லி ஒளிக்கீற்றாக வருகின்றன.காற்று மண்டலத்தில் உள்ள தூசு, அந்த ஒளிக்கீற்றைப் பாதிக்கிறது. இப்படியும் அப்படியுமாக தள்ளப்படுகிறது.ஆகவே நட்சத்திர ஒளி நமக்கு மின்னுவதாகத் தெரிகிறது.
கிரகங்கள் -Planets-- சூரிய ஒளியைப் பிரதிபலிப்பவை. கிரகங்கள் நமக்கு அருகில் இருப்பதால் சிறிய ஒளித்தட்டுகளாகத்தெரிகின்றன. ஒளித்தட்டுகளிலிருந்து எண்ணற்ற ஒளிக்கீற்றுகள் வருவதால் அவை அலைக்கழிக்க்ப்படுவது நமக்குப் புலப்படுவதில்லை. ஆகவே அவை மினுக்குவதில்லை.
பூமியின் காற்று மண்டலத்துக்கு மேலே போய் அதாவதுசுமார் 300 கிலோ மீட்டர் உயரத்துக்குப் போய் அங்கிருந்து பார்த்தால் நட்சத்திரங்கள் மினுக்காது, ஒளிப்புள்ளிகளாகத் தெரியும்.
சந்திரனிலிருந்து பார்த்தாலும் நட்சத்திரங்களும் கிரகங்களும் மினுக்காமல் ஒரே மாதிரியாகத் தெரியும்..

Post a Comment