Showing posts with label சந்திரன் படங்கள். Show all posts
Showing posts with label சந்திரன் படங்கள். Show all posts

Feb 22, 2015

எல்லாமே அதே நிலா

Share Subscribe
கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதியும் 21 ஆம் தேதியும் சூரியன் மறைந்த பின்னர் மேற்கு வானில் பிறைச் சந்திரனும் அதே சமயத்தில் செவ்வாய் (Mars) வெள்ளி  (Venus) ஆகிய கிரகங்களும் ஒரே சமயத்தில் தெரிந்தன. பார்ப்பதற்கு இது ரம்மியமாக இருந்தது.

இது ஒன்றும் பெரிய அதிசயமல்ல, என்றாலும் இது அடிக்கடி நிகழ்வதல்ல. காரணம் வெள்ளி, செவ்வாய் ஆகியவை வானில் தொடர்ந்து இடம் மாறிக் கொண்டிருப்பவை. சந்திரன் தினமும் இடம் மாறிக் கொண்டிருப்பதாகும்.  .

அன்றைய தினம் மேற்கு வானைக் கவனித்த பலர் தாங்கள் எடுத்த புகைப்படங்களை Earthsky.org என்னும் இணைய தளத்துக்கு அனுப்பி வைத்தனர். அந்த இணைய தளம் அவற்றில் பல படங்களை வெளியிட்டது.

கீழே நீங்கள் காணும் புகைப்படங்கள் அந்த இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டவையே. அப்படங்களில் நான் கவனித்த விஷயம் அந்தப் படங்களில் சந்திரன் வெவ்வேறு கோணத்தில் காட்சி அளித்தது என்பதாகும். அந்த அளவில் படங்கள் மேற்படி இணையம் வெளியிட்டவையாகும். ஆனால் அவை வெவ்வேறு கோணங்களில் தெரிவது பற்றிய விளக்கம் என்னுடையதாகும்.

பௌர்ணமியன்று நீங்கள் உலகில் எங்கிருந்து பார்த்தாலும்-- பூமியின் நடுகோட்டுக்கு வடக்கே இருந்து பார்த்தாலும் சரி, தெற்கிலிருந்து பார்த்தாலும் சரி --- முழு நிலவாகத் தெரியும். ஆனால் பிறைச் சந்திரன் மட்டும் பூமியில் எங்கிருந்து பார்க்கிறீர்கள் என்பதைப் பொருத்து வித்தியாசமாகத் தெரியும்.

நடுக்கோட்டுக்கு வடக்கே இருந்து பார்த்தால் ஒரு விதமாகவும் தெற்கே இருந்து பார்த்தால் வேறு விதமாகவும் இருக்கும். கீழே உள்ள படங்களில் பிரேஜிலில் எடுக்கப்பட்ட படம் நடுக்கோட்டுக்கு தெற்கே இருந்து எடுக்கப்பட்டதாகும்.

நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள இடங்களிலும் சரி இந்தியா போன்ற இடங்களிலிருந்து பார்த்தால் பிறைச் சந்திரன்  மிதக்கும் படகு போன்று இருக்கும். வடக்கே போகப் போக சாய்வு தெரியும்.

நீங்கள் கீழே உள்ள படங்களைப் பார்த்தால் இது விளங்கும்.

பிப்ரவரி 20 .இடம் ரியோடி ஜெனிரோ, பிரேஜில்
படம் எடுத்தவர்:ஹெல்லோ டி கார்வால்ஹோ விடால். படங்கள்: நன்றி Earthsky.0rg
பிப்ரவரி 20. இடம் அமெரிக்காவில் பிளாரிடா.
படம் எடுத்தவர் கிங் எங்கல்வுட்

பிப்ரவரி 20 . இடம் ஹங்கேரி
படம் எடுத்தவர் ஜிசா பார்கோனில்

பிப்ரவரி 20.  இடம் இந்தியா ராஜஸ்தான்
படம் எடுத்தவர் ரஜீப் மாஜி

பிப்ரவரி 20.  இடம் கலிபோர்னியா, அமெரிக்கா
படம் எடுத்தவர் எரிக் ஸ்மித்.
இந்த படங்கள் அனைத்தும் ஒரே தேதியில் எடுக்கப்பட்டவை.  ஆனால் சந்திரன் மட்டும் வெவ்வேறு கோணங்களில் காட்சி அளிக்கின்றன என்பதைக் கவனிக்கவும்.

அன்றைய தினம் மட்டும் வட துருவத்துக்கு அருகே உள்ள இடத்திலிருந்து பிறைச் சந்திரன் படம் எடுக்கப்பட்டிருக்குமானால் அது  )   அதாவது நிற்பது  போலத்     தெரிந்திருக்கும். தென் துருவத்துக்கு அருகிலிருந்து படம் எடுத்திருந்தால் அது ( மாதிரியில் தெரிந்திருக்கும்,

காண்க: அமெரிக்காவில் பார்த்த நிலா