Jan 15, 2018

முதல் முறையாக சந்திரனின் மறுபுறத்துக்கு ஒரு விணகலம்

Share Subscribe
1959 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ந் தேதி ரஷியாவின் லூனா – 2 விண்கலம் சந்திரனில் இறங்கியதில் தொடங்கி சந்திரனில் பல விண்கலங்கள் இறங்கியுள்ளன.

ஆனால் இவை எல்லாமே சந்திரனின் முன்புறத்தில் தான் இறங்கியுள்ளன. சந்திரனின் மறு புறத்தில் ஒரு விண்கலம் கூட இறங்கியதில்லை. இப்போது முதல் முறையாக சந்திரனின் மறுபுறத்தில் ஒரு விண்கலம் போய் இறங்கப் போகிறது.

சீன விண்கலம்தான் இந்த சாதனையை நிகழ்த்தப் போகிறது. சீனாவின் அந்த இறங்குகலத்தின் பெயர் சாங்கி-4

சந்திரனின் மறுபுறத்தில் போய் இறங்குவது என்பது அப்படியென்ன எளிதில் சாதிக்க முடியாத சமாச்சாரமா? இல்லை. ரஷியாவும் அமெரிக்காவும் நினைத்திருந்தால் எளிதில் சந்திரனின் மறு புறத்தில் தங்களது விண்கலங்களை இறக்கியிருக்க முடியும். ஆனால் அதில் ஒரு பெரிய பிர்ச்சினை இருந்தது. அது தகவல் தொடர்பு சம்பந்தப்பட்ட்து.

இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். சந்திரன் எப்போதும் தனது ஒரு புறத்தை மட்டுமே நமக்குக் காட்டி வருகிறது. சந்திரன் தனது அச்சில் சுழல்வதற்கு ஆகும் நேரமும் அது பூமியை ஒரு தடவை சுற்றி முடிப்பதற்கு ஆகும் காலமும் (27 நாட்கள்) சம்மாக இருப்பதால் சந்திரனின் ஒரு புறத்தைத் தான் நாம் எப்போதும் பார்த்து வருகிறோம். சந்திரனின் மறுபுறத்தை யாரும் கண்டது கிடையாது.

எனவே சந்திரனின் மறுபுறத்தில் ஒரு விண்கலம் போய் இறங்குமானால் அது பத்திரமாகத் தரை இறங்கியதா என்ற தகவல் கூட பூமிக்கு வந்து சேராது.

சந்திரனின் முன்புறம் (இடது) சந்திரனின் மறுபுறம் (வலது)
காரணம் இது தான். ஒளியும் சரி, தகவல் தொடர்பு சிக்னல்களும் சரி, எப்போதும் நேர்கோட்டில் செல்பவை. எனவே சந்திரனின் மறுபுறத்திலிருந்து ஒரு விண்கலம் சிக்னல்களை அனுப்பினால் அந்த சிக்னல்கள் பூமிக்கு வந்து சேராது.. ஆகவே தான் அமெரிக்கா, ரஷியா ஜப்பான் முதலான நாடுகள் தங்களது விண்கலங்கள் சந்திரனில் பூமியைப் பார்த்தபடி உள்ள முன்புறத்தில் போய் இறங்கும்படி செய்தன. ஆறு தடவை சந்திரனுக்குச் சென்ற அமெரிக்க விண்வெளி வீர்ர்களும் சந்திரனின் முன்புறத்தில் தான் போய் இறங்கினர். சீனா முன்னர் அனுப்பிய ஒரு விண்கலமும் சந்திரனின் முன்புறத்தில் தான் போய் இறங்கியது.

இப்போது சீனா அனுப்பும் சாங்கி-4 இறங்குகலம் சந்திரனின் மறுபுறத்தில் போய் இறங்கினால் அது அனுப்புகின்ற சிக்னல்கள் பூமிக்கு வந்து சேர வாய்ப்பில்லை என்பதால் சீனா இதற்கு ஒரு தக்க ஏற்பாட்டைச் செய்ய இருக்கிறது.

சாங்கி 4 விண்கலம் சந்திரனின் பின்புறத்திலிருந்து அனுப்புகிற சிக்னல்களைப் பெற்று பூமிக்கு அனுப்ப இன்னொரு விண்கலத்தை சீனா அனுப்ப இருக்கிறது. அதை ரிலே விண்கலம் என வருணிக்கலாம்.

அந்த அளவில் சாங்கி-4 விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்புவதற்கு முன்னால் அதாவது இந்த ஆண்டின் முற்பகுதியில் சீனா ரிலே விண்கலத்தை சந்திரனை நோக்கி அனுப்பும்.

ரிலே விண்கலம் சந்திரனையும் தாண்டிச் சென்று சந்திரனிலிருந்து 67 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தபடி ஜெயண்ட் வீல் மாதிரியில் மேலிருந்து கீழாகச் சுற்றும். சந்திரனிலிருந்து அவ்வளவு தொலைவில் இருந்தால் அது தொடர்ந்து சந்திரனுக்குப் பின்புறமாகவே இருந்து கொண்டிருக்கும்.. சந்திரனை விட்டு விலகிச் செல்லாது.

அதன் பலனாக சந்திரனின் மறுபுறத்திலிருந்து சாங்கி -4 விண்கலம் அனுப்பும் சிக்னல்களை அது தொடர்ந்து பெற்று அந்த சிக்னல்களை சீனாவின் விண்வெளித் தலைமையகத்துக்கு அனுப்பி வரும். ரிலே விண்கலம் மேலிருந்து கீழாக சுற்றுவதால் சந்திரன் அந்த விண்கலத்தை மறைக்காது.எனவே அதிலிருந்து பூமிக்கு சிக்னல்கள் பிரச்சினையின்றிக் கிடைக்கும்.

ரிலே விண்கலம் சந்திரனுக்கு அப்பால் லாக்ராஞ்சியன் புள்ளியில் அமைந்திருக்கும்


சாங்கி 4 விண்கலம் சந்திரனில் தரை இறங்கிய பின்னர் அதிலிருந்து ஒர் குட்டி வாகனம் வெளிப்பட்டு அங்குமிங்கும் நடமாடும். அது அனுப்பும் சிக்னல்களை சாங்கி 4 பெற்று ரிலே விண்கலத்துக்கு அனுப்பும்.

ரிலே விண்கலம் அமைந்த புள்ளியானது லாக்ராஞ்சியன் புள்ளி எனப்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கணித நிபுணரான ஜோசப் லூயி லாக்ராஞ்ச் கணக்குப் போட்டு அவ்விதப் புள்ளி பற்றி எடுத்துக் கூறினார். அவர் இத்தாலியைச் சேர்ந்தவர். அவரது கருத்துப்படியான அந்தப் புள்ளியில் ஒரு விண்கலம் இருக்குமானால் அது சந்திரனை எப்போதும் நோக்கியபடி இருக்கும்

இந்த உத்தியை அமெரிக்காவோ ரஷியாவோ கையாண்டிருக்க முடியும். என்ன காரணத்தாலோ அவை அதற்கு முற்படவில்லை. எனினும் சந்திரனின் பின்புறம் எப்படி உள்ளது என்பதை நாம் 1959 ஆம் ஆண்டிலேயே தெரிந்து கொண்டோம்.

ரஷியா அனுப்பிய லூனா-3 விண்கலம் சந்திரனை சுற்றி வந்த போது சந்திரனின் முதுகைப் படம் பிடித்து அனுப்பியது. பின்னர் அமெரிக்காவின் அப்போலோ விண்கலத்தில் சென்ற விண்வெளி வீர்ர்கள் சந்திரனின் பின்புறத்தைப் படம் பிடித்து அனுப்பினர்.

நாம் எப்போதும் காணும் சந்திரனின் முன் பகுதியில் நிலப் பகுதியானது பெரிதும் சமவெளி போல உள்ளது. சந்திரனின் பின் புறத்தில் வட்ட வடிவப் பள்ளங்கள் அதிகம் உள்ளன.

13 comments:

Nagendra Bharathi said...

அருமை

Arun said...

Dear Sir,

Thanks for the article. Glad to see your articles.
Question, did Apollo go to the other side of the moon to take pictures? If yes, how did they communicate to the base?

Thanks
Arun

Anonymous said...

could you post, our Indian army news sir?

என்.ராமதுரை / N.Ramadurai said...

திரு அருண்
சந்திரனுக்கு ஆறு முறை அனுப்பப்பட்ட அப்ப்லோ விண்கலங்கள் சந்திரனை நெருங்கிய பின்னர் ஓரிரு முறை சந்திரனை சுற்றி விட்டு அதன் பிறகே சந்திரனில் தரை இறங்கின. அதற்கு முன்னதாக ஒத்திகையாக அப்பலோ 10 செலுத்தப்பட்டு அது சந்திரனில் இறங்காமல் சந்திரனை சுற்றி விட்டு பூமிக்குத் திரும்பியது. இவ்வாறு சந்திரனை சுற்றிய போது அமெரிக்க விண்வெளி வீரர்கள் சந்திரனின் மறு புறத்துக்கு மேலேயும் பறந்தனர். அப்போது அவர்கள் சநதிரனின் மறு புறத்தை உயரே இருந்தபடி படம் எடுத்து அனுப்பினர். சந்திரனின் மறுபுறத்துக்கு மேலே இருந்த சமயங்களில் அவர்களால் பூமியுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.

என்.ராமதுரை / N.Ramadurai said...

army news பற்றி எழுதுமாறு அன்பர் ஒருவர் கேட்டுள்ளார்.இந்த இணைய தளம் அறிவியல் தொடர்பானது என்று குறிப்பிட விரும்புகிறேன்.

Anonymous said...

ஐயா,
பூமியும் சந்திரனும் ஒரு பெரிய மற்றும் சிறிய பந்து என வைத்துக்கொண்டாலும் இரண்டு பந்துகளும் தன்னை தானே சுற்றும்போது பெரிய பந்தாகிய பூமியின் ஏதாவது ஒரு பகுதியில் சிறிய பந்தாகிய சுற்றிக்கொண்டிருக்கும் நிலவின் மறுபகுதி தெரியாமலா இருக்கும்? தயவு செய்து விளக்கவும்
இப்படிக்கு
செந்தில்பாண்டியன்

Unknown said...

ஒளியும், தகவல்தொடர்பு சிக்னல்களும் நேர் கோட்டில் செல்பவை.அப்படி என்றால் அமெரிக்க விண்வெளி வீரர்கள் சந்திரனில் இருந்த போது அமெரிக்க நிலவை பார்க்க முடியாத போது அவர்களிடம் இருந்து எந்த தகவலையும் பெற வில்லையா? அப்படி என்றால் நிலவில் இறங்கியதை எப்படி liveஆக பார்த்தார்கள்.சற்று விளக்கி கூருங்கள் ஐயா.

என்.ராமதுரை / N.Ramadurai said...

Ramesh Paramasivam
சந்திரனுக்கு செலுத்தப்பட்ட அப்போலோ விண்கலங்களில் மூவர் சென்றனர். ஒருவர் சந்திரனை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்த அப்போலோ விண்கலத்திலேயே இருந்தார். மற்ற இருவர் மட்டுமே சந்திரனில் இறங்கினர்.அந்த இருவரும் சந்திரனில் பூமியைப் பார்த்தபடி இருந்த பகுதியில் தான் இறங்கினர். எனவே அங்கிருந்தபடி பூமிக்கு டிவி சிக்னல்களை அனுப்புவதில் பிரச்சினை இருக்கவில்லை.
மேலே சந்திரனைச் சுற்றிக் கொண்டிருந்த மூன்றாவது நபருடன் அந்த இருவரும் மற்றும் அமெரிக்காவில் தலைமைக் கேந்திர நிபுணர்களும் தொடர்பு கொள்வதில் பிரச்சினை இருந்தது.அப்போலோ விண்கலம் சந்திரனின் மறுபுறத்துக்குச் சென்ற சமயங்களில் அந்த மூன்றாவது விண்வெளி வீரரால் யாருடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு சுற்றின் போதும் சில நிமிஷங்களே தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது. இது பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை

என்.ராமதுரை / N.Ramadurai said...

திரு செந்தில் பாண்டியன்
தரையில் சாக் பீஸ் கொண்டு ஒரு பெரிய வட்டம் போடுங்கள்.நட்ட நடுவில் நீங்கள் நிற்க வேண்டும். அடுத்த நபர் அநத வட்டத்தின் மீது உங்களைப் பார்த்தபடி நிற்க வேண்டும். அவர் உங்களைப் பார்த்தபடி பக்கவாட்டில் சிறிது சிறிதாக நகர வேண்டும். புறப்பட்ட இடத்துக்கு அவர் வந்து சேர்ந்த பின் உங்களை ஒரு சுற்று முடித்தவராக இருப்பார். அவர் இப்படி பக்கவாட்டில் நகரும் போது ஒரு போதும் அவரது முதுகை நீங்கள் பார்க்க மாட்டீர்கள்.அதே நேரத்தில் அவர் தனது அச்சில் ஒரு தடவை சுற்றி முடிப்பவராக இருப்பார்
சந்திரன் இவ்விதமாகத்தான் பூமியைச் சுற்றி வருகிறது

Unknown said...

ஐயா இன்று தினதந்தியில் உங்களது சந்திரகிரகணம் பற்றிய கட்டுரை படித்தேன். எனக்கு சந்திரகிரகணத்திற்கும் அமாவாசைக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கவும்.

Nandha said...

Hi Sir,

Question: If relay satellite is placed 67 thousand kms away from the moon and travels like a giant wheel, will it travel under the influence of moons gravitational pull? if not, it will be given constant thrusters to maintain its orbit?

என்.ராமதுரை / N.Ramadurai said...

Ramesh Paramasivam
சந்திர கிரகணத்துக்கும் அமாவாசைக்கும் எவ்விதத் தொடரபும் கிடையாது.
பௌர்ணமிக்கும் சந்திர கிரகணத்துக்கும் தொடர்பு உண்டு. பௌர்ணமியன்று தான் சந்திர கிரகணம் நிகழும். அன்று சூரியன் பூமி- சந்திரன் ஆகியவை அந்த வரிசையில் நேர்கோட்டில் இருக்கும். அப்படியான நிலையில் பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் சந்திர கிரகணம் நிகழ்கிறது
அமாவாசையன்று சந்திரன் நடுவே இருக்கும். சூரியன் - சந்திரன் - பூமி என்ற வரிசையில் அவை இருக்கும். சில அமாவாசைகளில் சூரிய கிரகணம் நிகழும். சந்திரன் நேர் குறுக்கே வந்து நிற்கும் போது சூரிய கிரகணம் ஏற்படும்.
பூமியை சந்திரன் சுற்றி வருகிறது. அதன் சுற்றுப் பாதை சாய்வாக இருக்கிறது.எப்போதாவது மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைகின்றன. அப்போது தான் கிரகணங்கள் ஏற்படுகின்றன.

என்.ராமதுரை / N.Ramadurai said...

Dear Nandha
No need for thrusters.பூமி சந்திரன் ஆகியவற்றின் ஈர்ப்பு சக்தியின் விளவாக அந்த ரிலே செயற்கைக்கோள் தொடர்ந்து சந்திரனைப் பின்பற்றி சந்திரனுக்கு அருகேயா இருந்து வரும்.

Post a Comment