Jun 18, 2015

மேற்கு வானில் அருகருகே வியாழன், வெள்ளி

Share Subscribe
அடுத்த சில தினங்களில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கு  திசையில் நோக்கினால் வியாழன்(Jupiter), வெள்ளி(Venus) ஆகிய இரு கிரகங்களும் அருகருகே இருப்பதைக் காணலாம்.
ஜூன் 23 ஆம் தேதி இரவு 7-30 மணி வாக்கில் மேற்கு வானில் வியாழனும் வெள்ளியும் இவ்விதமாகத் தெரியும்.
வியாழன் சற்று மேலே இருப்பதைக் கவனிக்கவும்.(Stellarium/NR)
இது ஒன்றும் அபூர்வமானது அல்ல. பல மாதங்களுக்கு ஒரு முறை நிகழ்வதாகும். எனினும் வியாழன், வெள்ளி கிரகங்களைப் பார்த்திராதவர்களுக்கு இவற்றைக் காண்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

வானில் வெறும் கண்ணால் பார்த்தால் அதிகப் பிரகாசத்துடன் தெரிவது வெள்ளி கிரகமே. வியாழன் அதற்கு அடுத்த இடத்தை வகிக்கிறது.


வருகிற 23 ஆம் தேதிக்குப் பிறகு இந்த இரு கிரகங்களும் மேலும் நெருக்கமாகத் தெரியும். ஜூன் 29 ஆம் தேதியன்றும் ஜூன் 30 ஆம் தேதியன்றும் அனேகமாக இந்த இரண்டும் சேர்ந்து ஒரே புள்ளியாகத் தெரியும். அதாவது வெள்ளி கிரகத்துக்கு நேர்  பின்னால் வியாழன் அமைந்ததாகி விடும்.  இது ஒருவரின் பின்னால் இன்னொருவர் நிற்பது போன்றது.
படத்தில் 1. சூரியன். 2. பூமி. 3. வெள்ளி. 4. வியாழன்..
சூரியனை வியாழனும் வெள்ளியும் தனித்தனிப் பாதைகளில் சுற்றுகின்றன.
ஆனாலும் பூமியிருந்து பார்க்கும் போது (ஆரஞ்சு நிறக் கோடு) இந்த இரண்டு கிரகங்களும்
அருகருகே இருப்பது போன்று காட்சி அளிக்கின்றன.(வரைபடம் NR)
  அப்போது வெள்ளி கிரகம் சூரியனிலிருந்து சுமார் 10 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும் வியாழன் கிரகம் சூரியனிலிருந்து சுமார்  77 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கும்.  பூமியைப் போலவே வியாழன், வெள்ளி ஆகிய இரண்டும் தனித்தனிப் பாதைகளில் சூரியனை சுற்றி வருபவை.

ஜூன் 30 ஆம் தேதிக்குப் பிறகு இரண்டும் தனித்தனியே தெரிய ஆரம்பிக்கும்.. அதுவரை வியாழன் மேலேயும் வெள்ளி கீழேயும் இருந்த நிலைமை மாறி வெள்ளி கிரகம் சற்று மேலேயும் வியாழன் சற்று கீழாகவும் தெரியும். வானில் வெள்ளி கிரகம் தனது சுற்றுப்பாதையில் வேகமாக நகருவது இதற்கு முக்கிய காரணமாகும்.
மேற்கு வானில் ஜூலை முதல் வாரத்தில் சுமார் 7-30 மணி வாக்கில்
வியாழனும் வெள்ளியும் இவ்விதம் தெரியும். வெள்ளி கிரகம்
சற்று மேலே இருப்பதைக் கவனிக்கவும்.( Stellarium/NR)
வெள்ளி கிரகத்துடன் ஒப்பிட்டால் வியாழன் கிரகம் தனது சுற்றுப்பாதையில் மெதுவாக நகருகிறது.

 சூரியனை வியாழன் ஒரு முறை சுற்றி முடிக்க   சுமார் 12  ஆண்டுகள் ஆகின்றன. 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ராசியிலும் வியாழன் ஓராண்டு இருக்கும். வியாழன் இப்படி வானில் நகர்ந்து வருவதையே குருப் பெயர்ச்சி (வியாழன் கிரகத்துக்கு குரு என்ற பெயரும் உண்டு) என்கிறார்கள்.

வெள்ளியை விட வியாழன் கிரகம் குறுக்களவில் 11 மடங்கு பெரியது. எனினும் வெள்ளி ஒப்புநோக்குகையில் பூமிக்கு அருகில் இருப்பதால் அதிக பிரகாசத்துடன் தெரிகிறது.

வியாழன், வெள்ளி ஆகிய இந்த இரண்டு கிரகங்களுக்கும் சுய ஒளி கிடையாது. அவற்றின் மீது சூரிய ஒளி படுவதால் அவை நமக்குத் தெரிகின்றன.

14 comments:

ABUBAKKAR K M said...

வணக்கம் அய்யா .
தக்க தருணதில் சரியான தகவலை தெரிவித்துள்ளீர்கள் .
காட்சிகளை பார்ப்போம் , மகிழ்வோம் .
பதிவுக்கு மிக்க நன்றி .
<> கோ.மீ. அபுபக்கர்
கல்லிடைக்குறிச்சி 627416

Anonymous said...

அண்டம் தரும் ஆச்சரியம் அடங்காதது. தகவலுக்கு நன்றி.

Anonymous said...

Sir Great Work !!!,

Greetings.

When observing Venus, (Sunday 21-06-2015) sometimes it is there and suddenly it disappears, again it appears. We thought, b'se of clouds, but Jupiter visible static. Please explain, why Venus appears and disappears again and again with time intervel. (but it is not blinking like stars)
Thanks and Regards,
Saravanan.M, Tirupur

என்.ராமதுரை / N.Ramadurai said...

Anonymous
Venus தெரிவதும் மறைவதுமாக இருந்ததாகக் கூறியிருக்கிறீர்கள். நம் கண்ணுக்குத் தெரியாத சிறிய மேகங்கள் காரணமாக இருந்திருக்கலாம். வெகு தொலைவில் இருக்கிற ஜுபிட்டர் -வியாழன் - தெரியும் போது வெள்ளி --வீன்ஸ் தெரியாமல் இருக்க வேறு காரணமே இல்லை..நட்சத்திரங்கள் கண் சிமிட்டும். கிரகங்கள் கண் சிமிட்டுவதில்லை.
நீங்கள் காண்கின்ற வெள்ளி உண்மையில் பிறை வடிவில் இருக்கும். சக்திமிக்க பைனாகுலர்ஸில் பார்த்தால் அதன் பிறை வடிவம் தெரியலாம். வீனஸை ஒரு போதும் முழு வட்டமாக -- பௌர்ணமி நிலவு போலக் காண முடியாது. அது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் அமைந்த உள் கிரகம் என்பதே அதற்குக் காரணம்.

Anonymous said...

மேலே நிலாவும் சேர்ந்து அற்புதமான காட்சியாக இருக்கிறது!
சரவணன்

Anonymous said...

Ayya, pagirvuku miga nandri. Ulundurpetai yil indru Iru gragangalayum kaana mudindadhu.

Anonymous said...

அய்யா எனது பெயர் அ.பரமானந்தன்
நான் நன்கு கடலில் மீன்பிடிக்க தெரிந்தவன் ஆனாலும் நவீன முறைபடி ஆழ்கடலில் டிவ்னா வகை மீன்பிடிக்க வலைதளத்தில் தேடினேன் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளதால் சிரமமாக உள்ளது தயவு செய்து எனக்கு உதவுங்கள் மன்னிக்கவும் என் சமுதாயத்திர்கே....

மரணத்தின் வாயிலை நோக்கி! said...

நான் நேற்று தான், சுமார் 19:30 மணியளவில் வானத்தைப் பார்த்தேன். என் வீட்டின் வாயிலில் இருந்து வானின் மேற்குப் பகுதியைத் தான் காண முடியும். அவ்வாறு கண்ட போது, 2 ஒளிப் புள்ளிகள் அருகருகே இருப்பதைக் கண்டேன். "இவ்ளோ ப்ரைட்'டா இருக்கே!" என்று கண்டதும் வியந்தேன். நிச்சயம் இவை விண்மீன்களாய் இருக்க முடியாது என்று கருதினேன்! இருந்தாலும் என் எண்ணம் சரி தானா என்று இப்போது வரை தெரியாமல் இருந்தது. உண்மையில் உங்கள் பதிவை இப்போது தான் பார்க்கிறேன். உங்கள் பதிவைப் பார்க்கும் வரை இப்படியொரு சம்பவம் இருக்குமென்று எனக்குத் தெரியாது! படித்து விளங்கிக் கொண்டேன் "நாம கெஸ் பண்ணுனா மிஸ் ஆகுமா?" என்று சட்டைக் காலரைத் தூக்கி விட்டு! :-) ;-)

என் உளப் பூர்வ நன்றிகளுக்கு உரித்தானது தான் உங்கள் பதிவு! :-)

என்.ராமதுரை / N.Ramadurai said...

மரணத்தின் வாயிலை நோக்கி
உங்கள் கெஸ் சரியானது குறித்து மகிழ்ச்சி.வானில் எளிதில் தெரிகின்றவ்ற்றைப் பற்றி பலரும் அறிந்து கொள்ள வேணடும் என்ற எனது குறிக்கோள் ஈடேறியது குறித்து எனக்கும் மகிழ்ச்சி

என்.ராமதுரை / N.Ramadurai said...

அ.பரமானந்தன்
எனக்கு மீன்க்ள் பற்றித் தெரியாது. விண்மீன்கள் ( நட்சத்திரங்கள் பற்றி ஏதோ கொஞ்சம் தெரியும்). தாங்கள் கூறும் மீன் tuna மீன் தானா என்பதும் புரியவில்லை. ஆங்கிலம் நன்கு தெரிந்த தங்களது நண்பர்களை நீங்கள் அணுகுவது தான் சரியான தீர்வாக இருக்க முடியும்.

மரணத்தின் வாயிலை நோக்கி! said...

என்.ராமதுரை / N.Ramadurai

என் பின்னூட்டத்தை அனுமதித்ததிற்கும், அப்பின்னூட்டத்திற்கு மதிப்பளித்ததற்கும் மிக்க நன்றி! :-)

A.SESHAGIRI said...

"கருந்துளையில் வெளிப்பட்ட பிரமாண்ட ஒளி வெள்ளம் இந்திய விஞ்ஞானிகள் அறிய கண்டுபிடிப்பு" என்ற தலைப்பில் இன்று (05.07.15) தினமலரில் வந்துள்ள செய்தியைப்பற்றி மேற்கொண்டு விவரம் தெரிவிக்க வேண்டுகிறேன்.

என்.ராமதுரை / N.Ramadurai said...

A.SESHAGIRI
தாங்கள் குறிப்பிட்டுள்ள செய்தி எது என்று என்னால் கண்டறிய முடியவில்லை. இயற்பியல் விதிகளின்படி கருந்துளை (Black Hole) ஒளி வெளியே வராது. அக்காரணத்தால் தான் அதன் பெயரில் Black என்ற சொல் இடம் பெற்றுள்ளது. நீங்கள் கூறும் செய்திக்கு link கொடுக்க முடியுமானால் பார்த்துக் கூறுகிறேன்

Unknown said...

சூரைமீன் - Tuna
டியூனா மீன்

Post a Comment