Showing posts with label சூரிய மண்டலம். Show all posts
Showing posts with label சூரிய மண்டலம். Show all posts

Jun 18, 2015

மேற்கு வானில் அருகருகே வியாழன், வெள்ளி

Share Subscribe
அடுத்த சில தினங்களில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கு  திசையில் நோக்கினால் வியாழன்(Jupiter), வெள்ளி(Venus) ஆகிய இரு கிரகங்களும் அருகருகே இருப்பதைக் காணலாம்.
ஜூன் 23 ஆம் தேதி இரவு 7-30 மணி வாக்கில் மேற்கு வானில் வியாழனும் வெள்ளியும் இவ்விதமாகத் தெரியும்.
வியாழன் சற்று மேலே இருப்பதைக் கவனிக்கவும்.(Stellarium/NR)
இது ஒன்றும் அபூர்வமானது அல்ல. பல மாதங்களுக்கு ஒரு முறை நிகழ்வதாகும். எனினும் வியாழன், வெள்ளி கிரகங்களைப் பார்த்திராதவர்களுக்கு இவற்றைக் காண்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

வானில் வெறும் கண்ணால் பார்த்தால் அதிகப் பிரகாசத்துடன் தெரிவது வெள்ளி கிரகமே. வியாழன் அதற்கு அடுத்த இடத்தை வகிக்கிறது.


வருகிற 23 ஆம் தேதிக்குப் பிறகு இந்த இரு கிரகங்களும் மேலும் நெருக்கமாகத் தெரியும். ஜூன் 29 ஆம் தேதியன்றும் ஜூன் 30 ஆம் தேதியன்றும் அனேகமாக இந்த இரண்டும் சேர்ந்து ஒரே புள்ளியாகத் தெரியும். அதாவது வெள்ளி கிரகத்துக்கு நேர்  பின்னால் வியாழன் அமைந்ததாகி விடும்.  இது ஒருவரின் பின்னால் இன்னொருவர் நிற்பது போன்றது.
படத்தில் 1. சூரியன். 2. பூமி. 3. வெள்ளி. 4. வியாழன்..
சூரியனை வியாழனும் வெள்ளியும் தனித்தனிப் பாதைகளில் சுற்றுகின்றன.
ஆனாலும் பூமியிருந்து பார்க்கும் போது (ஆரஞ்சு நிறக் கோடு) இந்த இரண்டு கிரகங்களும்
அருகருகே இருப்பது போன்று காட்சி அளிக்கின்றன.(வரைபடம் NR)
  அப்போது வெள்ளி கிரகம் சூரியனிலிருந்து சுமார் 10 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும் வியாழன் கிரகம் சூரியனிலிருந்து சுமார்  77 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கும்.  பூமியைப் போலவே வியாழன், வெள்ளி ஆகிய இரண்டும் தனித்தனிப் பாதைகளில் சூரியனை சுற்றி வருபவை.

ஜூன் 30 ஆம் தேதிக்குப் பிறகு இரண்டும் தனித்தனியே தெரிய ஆரம்பிக்கும்.. அதுவரை வியாழன் மேலேயும் வெள்ளி கீழேயும் இருந்த நிலைமை மாறி வெள்ளி கிரகம் சற்று மேலேயும் வியாழன் சற்று கீழாகவும் தெரியும். வானில் வெள்ளி கிரகம் தனது சுற்றுப்பாதையில் வேகமாக நகருவது இதற்கு முக்கிய காரணமாகும்.
மேற்கு வானில் ஜூலை முதல் வாரத்தில் சுமார் 7-30 மணி வாக்கில்
வியாழனும் வெள்ளியும் இவ்விதம் தெரியும். வெள்ளி கிரகம்
சற்று மேலே இருப்பதைக் கவனிக்கவும்.( Stellarium/NR)
வெள்ளி கிரகத்துடன் ஒப்பிட்டால் வியாழன் கிரகம் தனது சுற்றுப்பாதையில் மெதுவாக நகருகிறது.

 சூரியனை வியாழன் ஒரு முறை சுற்றி முடிக்க   சுமார் 12  ஆண்டுகள் ஆகின்றன. 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ராசியிலும் வியாழன் ஓராண்டு இருக்கும். வியாழன் இப்படி வானில் நகர்ந்து வருவதையே குருப் பெயர்ச்சி (வியாழன் கிரகத்துக்கு குரு என்ற பெயரும் உண்டு) என்கிறார்கள்.

வெள்ளியை விட வியாழன் கிரகம் குறுக்களவில் 11 மடங்கு பெரியது. எனினும் வெள்ளி ஒப்புநோக்குகையில் பூமிக்கு அருகில் இருப்பதால் அதிக பிரகாசத்துடன் தெரிகிறது.

வியாழன், வெள்ளி ஆகிய இந்த இரண்டு கிரகங்களுக்கும் சுய ஒளி கிடையாது. அவற்றின் மீது சூரிய ஒளி படுவதால் அவை நமக்குத் தெரிகின்றன.

Jul 26, 2014

புதன் கிரகமும் மோல்னியா செயற்கைக்கோளும்

Share Subscribe
வானில் கிரகங்களைக் காண்பது குறித்து  இப்பகுதியில் எழுதப்பட்ட கட்டுரையைப் படித்த ஒரு வாசகர் சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கிரகம் சூரியனில் போய் விழாமல் இருப்பது எப்படி என்று கேள்வி கேட்டிருந்தார்.

அவர் கேட்டது நியாயமான கேள்வியே. சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பது புதன் கிரகமே. ராஜ சிநேகிதம் ஆபத்து என்பார்கள். சூரியனுக்குப் பக்கத்தில் இருப்பதால் புதன் கிரகம் படாதபாடு படுகிறது.

புதன் கிரகம் வெயிலில் உலர்த்தப்பட்ட இலந்தைப் பழம் மாதிரி சுருங்கி  வதங்கிக் கிடக்கிறது.  புதனில் வெயில் அடிக்கும் பக்கத்தில் ( புதனின் பகல்) ஆளைக் கொல்லும் வெயில். இரவாக இருக்கின்ற பக்கத்தில் சொல்ல முடியாத குளிர். ஆளில்லா விண்கலம் புதன் கிரகத்தில் போய் இறங்கினால் எவ்வளவு மணி நேரம் தாங்கும் என்பது கேள்விக்குறியே.

புதன் கிரகம் தனது சுற்றுப்பாதையில் அசுர வேகத்தில் செல்கிறது. ஆகவேதான் அது சூரியனின் ஈர்ப்புப் பிடியில் சிக்காமல் இருக்கிறது   புதன் கிரகத்தின் வேகம் அது இருக்கின்ற இடத்தைப் பொருத்து மாறுபடுகிறது.

புதன் கிரகம் சூரியனை சற்றே  நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. ஆகவே ஒரு சமயம் புதன் கிரகத்துக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் 4.6 கோடி கிலோ மீட்டராக உள்ளது. வேறு ஒரு சமயம் மிகவும் தள்ளி இருக்கிறது. அப்போது சூரியனுக்கு உள்ள தூரம் 7 கோடி கிலோ மீட்டர்.

புதன் கிரகத்தின் சுற்றுப்பாதை.
உத்தேசமாக வரையப்பட்ட இப்படத்தில் சூரியன் நடுவே உள்ளது.
வட்டத்தின் மீது உள்ளது புதன் கிரகம்.
A  முதல்  B  வரையிலான தூரத்தை புதன்
மிக வேகமாகக் கடக்கிறது.
சூரியனுக்கு அருகாமையில் வரும் போது காரின் ஆக்சிலேட்டரை அழுத்தியது போல புதன் கிரகத்தின் வேகம் (Orbital velocity) தானாக அதிகரிக்கிறது. அதாவது சூரியனை சுற்றுகிற புதன் சூரியனை நெருங்கும் வேளையில் அதன் வேகம் மணிக்கு சுமார் 2 லட்சம் கிலோ மீட்டர். சூரியனிலிருந்து அப்பால் இருக்கும் போது வேகம் ஒரு லட்சத்து 36 ஆயிரம் கிலோ மீட்டர். மனிதன் உருவாக்கிய எந்த வாகனமும் எந்த விண்கலமும் இவ்வ்ளவு வேகத்தில் செல்வதில்லை.

புதன் கிரகத்தின் வேகம் ஒரு சமயம் குறைவதும் வேறு சமயம் அதிகரிப்பதும் இயற்கை விதிகளின்படி   நடைபெறுவதாகும்.

புதன் கிரகத்துடன் ஒப்பிட்டால் பூமியானது தனது சுற்றுப்பாதையில் மணிக்கு சுமார் ஒரு லட்சத்து 8 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. சூரியனிலிருந்து மிகத் தொலைவில் உள்ள நெப்டியூன் கிரகத்தின் வேகம் மணிக்கு சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர்.

ஒரு கிரகம் சூரியனிலிருந்து எந்த அளவுக்குத் தொலைவில் உள்ளதோ அந்த அளவுக்கு அதன் சுற்றுப்பாதை வேகம் குறைவாக இருக்கும். இதை 1609 ஆம் ஆண்டு வாக்கில்  ஜோஹன்னஸ் கெப்ளர் என்ற ஜெர்மன் விஞ்ஞானி கண்டுபிடித்துக் கூறினார்.

பூமியைச் சுற்றுகின்ற செயற்கைக்கோள்களுக்கும் இது பொருந்தும். பூமியை ஒரு செயற்கைக்கோள் நீள் வட்டப்பாதையில் சுற்றி வருவதாக வைத்துக் கொண்டால் அது பூமிக்கு அருகில் வரும் போது வேகம் அதிகரிக்கும். பூமியிலிருந்து அது விலகிச் செல்லும் போது அதன் வேகம் குறைந்து விடும்.

ரஷியா தனது தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களைப் பறக்க விடுவதில் இந்த இயற்கை விதியை  நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. ரஷியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் ரஷியப் பிராந்தியத்துக்கு மேலே இருந்தால் தான் அவற்றை டிவி ஒளிபரப்பு போன்றவற்றுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் செயற்கைக்கோள்கள் வானில் ஓரிடத்தில் அல்லது ஒரு பிராந்தியத்துக்கு மேலே நிலையாக இருக்க இயலாது. அவை பூமியைச் சுற்றிக் கொண்டே இருந்தாக வேண்டும்.

எனவே ரஷியா அவற்றை  மிக நீள் வட்டப் பாதையில் பறக்கும்படி செலுத்தி வருகிறது. அவை ரஷியப் பிராந்தியத்துக்கு மேலே இருக்கும் போது 40 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும். பூமியின் தென் பாதிக்கு வரும் போது சுமார் 500 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும்.
மோல்னியா செயற்கைக்கோளின் சுற்றுப்பாதை
(படம்: நன்றி விக்கிபிடியா)
பூமிக்கு அருகே இருக்கும் போது வேகமாகச் செல்லும் என்பதால் பூமியின் தென் பாதிக்கு மேலே சுமார் 4 மணி நேரமே இருக்கும். வடபாதிக்கு வரும் போது அதாவது ரஷியப் பிராந்தியத்திற்கு மேலே பறக்கும் போது -- மிகத் தொலைவில் இருப்பதால் மெதுவாகப் பறக்கும். ஆகவே ரஷியப் பிராந்தியத்துக்கு மேலே சுமார் எட்டு மணி நேரம் இருக்கும்.

மொத்தம் மூன்று செயற்கைக்கோள்களை இவ்விதம் பறக்க விடும் போது அவற்றை மாறி மாறிப் பயன்படுத்தித் தொடர்ந்து 24 மணி நேரமும் தொடர்பு இருக்கும்படி பார்த்துக் கொள்ள முடிகிறது.

இவ்வகையான செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதை மோல்னியா (Molniya orbit) சுற்றுப்பாதை என்று அழைக்கப்படுகிறது. இவ்விதப் பாதையில் பறக்கும் செயற்கைக்கோள்களும் அப்பெயர் கொண்டே அழைக்கப்படுகின்றன.

Jul 28, 2013

சனி கிரகத்திலிருந்து பார்த்தால் பூமி எப்படித் தெரியும்?

Share Subscribe

ஸ்மைல் பிளீஸ்’

 உலகிலேயே அது தான் மிகப் பெரிய குரூப் போட்டோவாக இருக்க வேண்டும்.

நாஸா விஞ்ஞானிகள் ஏற்கெனவே கேட்டுக்கொண்டபடி   உலகில் பல்வேறு நாடுகளிலும் பல நகரங்களில் ஜூலை 19 ஆம் தேதி குறிப்பிட்ட நேரத்தில் மக்கள் வெளியே வந்து திறந்தவெளியில் ஒன்று கூடி நின்று குரூப் போட்டோவுக்காக புன்சிரிப்பை வரவழைத்துக் கொண்டனர்.

 பல லட்சம் மக்கள்  குறிப்பிட்ட நேரத்தில்  இவ்விதம் திறந்த வெளியில் கூடி நின்று கொண்டு வானத்தைப் பார்த்தபடிசிறிது நேரம் அசையாமல் நின்ற்னா.

அது ஏன் வானத்தை அண்ணாந்து பார்க்க வேண்டும்.?

 ஏனெனில்  படம் பிடிக்கிற கேமிரா   சுமார் 144 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சனி கிரகத்துக்கு அருகே காசினி என்னும் பெயர் கொண்ட விண்கலத்தில் தான் இருந்தது.

காசினி விண்கலத்தின் கேமிராவில் இந்த பல லட்சம் மக்களின் முகம் விழுந்திருக்குமா? உள்ளபடி நாஸா விஞ்ஞானிகள் செய்த ஏற்பாட்டின்படி அந்த விண்கலம் பூமியைத் தான் படம் பிடித்தது. அவ்விதம் எடுக்கப்பட்ட படத்தில் பூமியே வெறும் புள்ளியாகத்தான் தெரிகிறது. பூமியின் கண்டங்கள் கடல்கள் எதுவுமே தெரியவில்லை.

அப்படியானால் உலகின் பல பகுதிகளிலும் பல லட்சம் மக்கள் கூடி நின்று போஸ் கொடுத்தது ஏன்?

பல கோடி கிலோ மீட்டர் தொலைவிலிருந்து பூமியைப் படம் பிடிக்கச் செய்வது என்பது மிகக் கடினமான அபூர்வமான பணியாகும். ஆகவே தான் காசினி எடுக்கும் போட்டோவில் தங்கள் முகம் விழாது என்பது தெரிந்தும் பல லட்சம் மக்கள் நாஸாவின் அப்பணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

காசினி விண்கலத்தில் உள்ள கேமிரா ஜூலை 19 ஆம் தேதி பூமியைப்  படம் எடுத்தது.அது எடுத்த படங்களை நிபுணர்கள் சீராக்கும் பணி முடிய சில நாட்கள் ஆகின.அதன் பிறகு இப்போது தான் அப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன


மேலே  உள்ள  படத்தில்  சனி கிரக உருண்டையின் ஒரு பகுதி தெரிகிறது. சனி கிரகத்தின் வளையங்களும் தெரிகின்றன். படத்தின் கீழ்ப் பகுதியில் சிறிய அம்புக்குறிக்கு மேலே சிறிய புள்ளியாகத் தெரிவது தான் பூமி.

பூமியின் கண்டங்கள், கடல்கள், நீண்ட மலைத் தொடர்கள், நாஸா கேட்டுக் கொண்டதால் திறந்த வெளியில் நின்று குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுத்த பல லட்சம் பேர்  என எல்லாமே இந்த சிறிய புள்ளியில் அடக்கம்.

 மேலே உள்ள படத்தைக் கூர்ந்து கவனித்தால் இரண்டு புள்ளிகள் தெரியும். இடது புறத்தில் உள்ளது பூமி. வலது புறத்தில் மங்கலாக இருப்பது சந்திரன். இதுவும் காசினி எடுத்த ப்டமே.

நாஸா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, இத்தாலிய விண்வெளி அமைப்பு ஆகியன சேர்ந்து 1977 ஆம் ஆண்டில் காசினி என்று பெயரிடப்பட்ட  விண்கலத்தை சனி கிரகத்தை நோக்கிச் செலுத்தின. இந்த விண்கலம் 2004 ஆம் ஆண்டில் சனி கிரகத்தை நெருங்கி ஆராயத் தொடங்கியது.படங்களை எடுத்து அனுப்பியது. காசினியில் உள்ள கேமிரா இது வரை  பல ஆயிரம் படங்களை அனுப்பியுள்ளது.  சனி கிரகம், அக்கிரகத்தைச் சுற்றுகின்ற 62 சந்திரன்கள் ஆகியவற்றின் விதவிதமான படங்கள்  முதலியன அவற்றில் அடங்கும்.

காசினி பூமியைப் படம் பிடித்து அனுப்புவது இது முதல் தடவை அல்ல. 2006 ஆம் ஆண்டில் காசினி எடுத்து அனுப்பிய படத்தை மேலே காணலாம். படத்தில் வலது ஓரமாக உற்றுப் பார்த்தால் மிகச் சிறிய புள்ளியாகத் தெரிவது தான் பூமி. ஆனால் அப்போது  யாரும் வானை நோக்கி நின்று  குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுக்கவில்லை.

ஆனால் இந்தத் தடவை நாஸாவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி டாக்டர் கரோலின் போர்க்கோ  ஐடியா பண்ணி  வானவியல் சமாச்சாரத்தில் மக்களின் ஈடுபாட்டை வளர்க்கக் கருதி  பல லட்சம் மக்கள் ஆங்காங்கு திரண்டு குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்படி செய்தார்.

கண்ணுக்கே தெரியாத காசினி விண்கலம்  வானில் இருப்பதாகக் கருதப்பட்ட இடத்தை நோக்கி கையை ஆட்டி போஸ் கொடுக்கும் அமெரிக்க மக்கள்

எனினும் அமெரிக்காவின் மேற்குக் கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் மட்டும் மக்களால்   குறைந்த பட்சம் சனி கிரகத்தைக் காண முடிந்தது

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திரண்டு நின்ற கூட்டம்
 சனி கிரகம் அருகே காசினி விண்கலம் இருக்கின்ற தொலைவிலிருந்து பார்த்தாலே பூமியானது கடுகை விடச் சிறியதாகத் தெரிகிறது. காசினி விண்கலம்  சுமார் 144 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சனி கிரகத்தையும் தாண்டி சூரிய மண்டலத்தின் எல்லையிலிருந்து அதாவது 1450 கோடி கிலோ மீட்டர் தொலைவிலிருந்து பார்த்தால் பூமி சுத்தமாகத் தெரியாது. சூரியனோ மங்கலான ஒரு நட்ச்த்திரமாகத் தெரியும்.( சூரியன் ஒரு நட்சத்திரமே).

இதையே வேறு விதமாகக் காண்போம். நிலவற்ற இரவில் வானில் எண்ணற்ற நட்சத்திரங்கள்  நமக்கு சிறிய சிறிய ஒளிப்புள்ளிகளாகத் தெரிகின்றன. இந்த நட்சத்திரங்களில் பலவற்றுக்குப் பூமி போன்ற கிரகங்கள் இருக்கலாம். பெரிய டெலஸ்கோப் கொண்டு பார்த்தாலும் அந்த கிரகங்கள் தெரிவதில்லை.

விண்வெளி என்பது பிரும்மாண்டமானது. விஸ்தாரமானது. நீங்கள்   2000 கோடி கிலோ மீட்டர் தொலைவில் ஒரு விண்கலத்தில்  இருப்பதாக வைத்துக் கொள்வோம். எந்தத் திசையில் நோக்கினாலும் எண்ணற்ற ஒளிப்புள்ளிகள் தெரியும்.விண்வெளியானது எல்லையற்றது. பகல் இரவு என்பது கிடையாது. ,நிரந்தமான காரிருள் கப்பியது. வாட்டும் கடும் குளிர் நிலவுவது. உயிரற்றது.

மாறாக, ஒளியும் வெப்பமும் உயிர் வாழ்க்கைக்கு அத்தியாவசிய்மானவை. ஆகவே தான் நாம் “ ஆண்டவனே,  இருளை அகற்றி ஒளியை அளிப்பாயாக ” என்று பிரார்த்திக்கிறோம்.

Dec 16, 2012

பூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்

Share Subscribe
பூமி நிச்சயம் அழியப் போவதில்லை.

 உலகம் அழியப் போகிறது. பூமியே அழியப் போகிறது என்பதாகப் பல ஊடங்கங்கள் மூலம் பரப்பப்படுகிற வதந்திகளை நம்பாதீர்கள். எல்லாமே கட்டுக்கதை

பூமி அழியப் போகிற்து என்று வதந்தி கிளப்புவோர் தங்களது கூற்றுக்கு ஆத்ரவாகக் கூறுகின்ற ”ஆதாரங்களுக்கு” எந்த அறிவியல் அடிப்படையும்  இல்லை.

உலகம் அழியப் போவதாகப் பல ஆண்டுகளாக அவ்வப்போது கிளம்பி வந்துள்ள அனைத்து வதந்திகளும் பொய்யாகிப் போயின. இப்போதைய வதந்தியும் அப்படி பொய்யாகிப் போகிற வதந்தியே.

தமிழகத்தில் ஒரு குக்கிராமத்தில்அம்மன் கோயிலில் திடீரென விளக்கு அணைந்து விட்டதால ஆண்களுக்கு ஆகாது என்று வதந்தி கிளம்புகிறது. மூன்று நாட்கள் எல்லோர் வீடுகளிலும் பெண்கள்  வீட்டு வாசலில் விளக்கு ஏற்றி வைக்கிறாரக்ள். இப்படியான செய்தி அடிக்கடி தமிழ்ப் பத்திரிகைகளில் வருகிறது. இந்தச் செய்தியைப் படிக்கிறவர்க்ள் இப்படியும் மூட நம்பிக்கையா என வியக்கின்றனர்.

ஆனால் பூமி அழியப் போவதாக இண்டர்னெட்டில் செய்தி வெளியானால் யாரும் அதை மூட நம்பிக்கை என புறக்கணிப்பதில்லை. ஏனெனில் இண்டர்னெட்டில வந்தால் அதற்கு தனி மரியாதை. அது ஆங்கிலத்தில் இருப்பதால் தனி அந்தஸ்து. அமெரிக்காவிலிருந்து வருவதால் அது மதிக்கப்பட வேண்டிய ஒன்று என்று கருதுகிறார்கள்.

உலகம் அழியப் போவதாகக் கிளப்பி விடப்பட்டுள்ள செய்தி இப்படியாகத் தான் சீரியஸாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதை யாரும் ஒதுக்கித் த்ள்ளுவதில்லை.இந்த வதந்திகளுக்கு அறிவியல் சாயம் பூசப்பட்டுள்ளதும் ஒரு காரணமாகும்.

மாயன் காலண்டரில் பூமி அழியும் என்று சொல்லியிருக்கிறதாம். உலகில் மாயன் காலண்டர் அல்ல. வெவ்வேறான பல காலண்டர்களும் இருந்து வந்துள்ள்ன. .பாபிலோனியர், எகிப்தியர், சீனர்கள், பண்டைக்கால இந்தியர்கள் என ஒவ்வொருவரும் தனித்தனி காலண்டர்களைப் பின்பற்றினர். 2012 ஆம் ஆண்டில் பூமி அழியப் போவதாக ஒருமுகமாக  எல்லா காலண்டர்களிலும் கூறப்பட்டுள்ளதா? அப்படி ஒன்றுமில்லை.

இந்தியாவில் பின்பற்றப்பட்டு வந்துள்ள ஹிந்து காலண்டரின்படி கலியுகம் முடியவே இன்னும் 4,26,887 ஆண்டுகள் உள்ளன. கலியுகம் முடிந்த பின்னர் பூமி அழியப் போவதாக சொல்லப்படவில்லை. கலியுகம்முடிந்த பின்னர் மறுபடி சத்திய யுகம், திரேதா யுகம், துவாபர யுகங்கள் வரிசையாக  வரும் என்று தான் கூறப்பட்டுள்ளது.  எல்லாக் காலண்டர்களிலும் இப்படித்தான்.இது ஒவ்வோர் ஆண்டும்  டிசம்பர் மாதம் முடிந்ததும் பழையபடி ஜனவரி மாதம் வருவதைப் போலத்தான்.

தங்களைச் சுற்றி உள்ளவர்கள், அத்துடன்  தங்களைப் பின்பற்றுபவர்கள் ஆகியோர் மீது தங்கள் பிடி இருக்க வேண்டும் என்பதற்காகக்  கடந்த காலத்தில் காட்டுவாசிகளின் தலைவர்கள், பூசாரிகள், மத குருமார்கள், ராஜ குருக்கள் போன்றோர்  சந்திர கிரகணம், சூரிய கிரகணம், வால் நட்சத்திரத்தின் தோற்றம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு மக்களைப் பயமுறுத்தி தங்களுக்கு அடிபணிந்து நடக்கும்படி செய்து வந்தனார்.. மக்களின் அறியாமை இதற்கு வசதியாக இருந்தது

.
ஐரோப்பாவில் 1860 ஆண்டில் பெரிய வால் நட்சத்திரம் தோன்றிய போது விஷயமறியாத மக்கள் உலகம் அழியப் போகிறது என்று பீதியில் ஆழ்ந்தனர். பலர் தங்கள்து சொத்துக்களை மடங்களுக்கு எழுதி வைத்தனர்.

இப்போது அறிவியல் முன்னேற்றம் காரணமாக மக்களை எளிதில் ஏமாற்றி விட முடியாது. ஆகவே மக்களை நம்ப வைப்பதற்குப் புதிதாக ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும். மாயன் காலண்டர் பற்றிய “ கண்டுபிடிப்பு” அப்படிப்பட்டதே.

 உலகம் எப்படி அழியப் போகிறதாம்?  நிபிரு என்ற ஒரு கிரகம்  பூமி மீது மோதப் போகிறதாம். சொல்லப் போனால் நிபிரு என்ற கிரகமே கிடையாது. அது  எங்கிருந்தோ வந்து மோதவும் வாய்ப்பு கிடையாது
.
பூமியை சந்திரன் சுற்றுகிறது. பூமியும் மற்றும் எட்டு கிரகங்களும் சூரியனை சுற்றுகின்றன. இது பல நூறு கோடி ஆண்டுகளாக இயற்கை நியதிகளின்படி நடைபெற்று வருவதாகும். சூரியன்.இந்த கிரகங்களை இழுத்துக் கொண்டு  நமது அண்டத்தின் ( Galaxy) மையத்தைச் சுற்றி வருகிறது. இதுவும் பல கோடி ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது.

சூரிய மண்டலத்துக்குள்ளாகப்  பறக்கும் பாறைகள் என்று சொல்லத் தக்க அஸ்டிராய்டுகள் தங்களது பாதைகளில் சுற்றி வருகின்றன.பூமிக்கு அருகே வந்து செல்கின்ற அஸ்டிராய்டுகள் உண்டு. விஞ்ஞானிகள்  இவற்றின் பட்டியலை ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ளனர். ஐந்து மீட்டர், பத்து மீட்டர் நீளம் கொண்ட பாறைகளின் சுற்றுப்பாதைகளும் அளந்து பதிவு செய்யப்பட்டுள்ளன

 உதாரணமாக டிசம்பர் 14 ஆம் தேதியன்று விஞ்ஞானிகள் எதிர்பார்த்தபடி ஐந்து மீட்டர் நீளமுள்ள பாறை ஒன்று பூமியைக் கடந்து சென்றது. விபரீதமாக எதுவும் நிகழ்ந்து விடவில்லை. இவை அனைத்தும் டெலஸ்கோப்புகள், ராடார்கள், பூமியைச் சுற்றும் செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன

எந்த பறக்கும் பாறை என்றைய தினம் பூமியைக் கடந்து செல்லும் என்பது பற்றிய விவரத்தை விஞ்ஞானிகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.விஞ்ஞானிகள் இப்படியான விஷயங்களை மூடி மறைப்பது இல்லை.

ஒரு வால் நட்சத்திரத்தின் தலையின் சைஸ் பத்து அல்லது இருபது கிலோ மீட்டர்களே. ஒரு வால் நட்சத்திரம் சில லட்சம கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போதே அதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விடுகிறார்கள்.

ஆகவே நிபிரு என்ற கிரகம் பூமியைத் தாக்கப் போகிறது என்றால் இத்தனை நேரத்துக்கு அது பூமியை நெருங்கியிருக்க வேண்டும்.அப்படியானால் அது டெலஸ்கோப், ராடார், செயற்கைக்கோள் ஆகியவற்றில் தென்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இதுவரை தட்டுப்படவில்லை.

நிபிரு பூமியைப் போல நான்கு மடங்கு பெரியதாம். அப்படி  என்றால் அது பல ஆயிரம் கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டதாக இருக்க வேண்டும்.ஐந்து மீட்டர் பறக்கும் பாறையே விஞ்ஞானிகளின் கருவிகளில் சிக்கும் போது அந்த அளவுள்ள நிபிரு  கிரகம் இது வரை ஏன்  தட்டுப்படவில்லை? நிபிரு கற்பனையான கிரகம் என்பதால் தான் அது தட்டுப்படவில்லை.

அமாவாசை இரவில் கருப்புப் போர்வை போர்த்திக் கொண்டு சுவர் ஏறிக் குதிக்கின்ற ஒரு திருடன் போல நிபிரு கிரகம் பூமியை நெருங்கித் தாக்க வாய்ப்பே இல்லை

பூமிக்கு வேறு வகையில் ஆபத்து ஏற்படும் என்றும் விஷமிகள் கதை கட்டி விட்டுள்ளனர். சூரியனில் பயங்கர சீற்றம் ஏற்பட்டு சூரியனிலிருந்து நெருப்பு ஜுவாலைகள் பூமியைத் தாக்கி பூமியை அழிக்கப் போவதாக பீதி கிளப்பிவிட்டு ள்ளனர். இதுவும் அறிவியல் சாயம் பூசப்பட்ட கற்பனையே.

சூரியனில் இப்போது அடிக்கடி சீற்றம் ஏற்படுகிறது என்பது உண்மையே. ப்தினோரு ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் கரும்புள்ளிகள் (Sunspots) அதிகபட்சமாக இருக்கும்.இப்போது அப்படியான நிலைமை உள்ளது. ஆகவே தான் சூரியனில் சீற்றம் காணப்படுகிறது

இது பல கோடி ஆண்டுகளாக நிகழ்ந்து வருவதாகும்.சூரியனில் சீற்றம் ஏற்படும் போது சூரியனிலிருந்து ஆற்றல் மிக்க துகள்கள் அடங்கிய மொத்தை தூக்கி எறியப்படும். இது Coronal Mass Ejection  (CME) எனப்படுவதாகும்.

கடந்த பல மாதங்களில் பல CME க்கள் தோன்றியுள்ளன. இவற்றிலிருந்து   பூமியின் காந்த மண்டலம் நம்மை பாதுகாக்கிறது. தவிர, இந்த CME க்களால் பூமியைச் சுற்றுகின்ற செயற்கைக்கோள்கள், பூமியில் உள்ள மின் இணைப்பு கிரிட்டுகள்,  நிலத்துக்கு  அடியில் உள்ள எண்ணெய், மற்றும் வாயுக் குழாய்களுக்கு சேதம் ஏற்படுமே தவிர, மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை.

சூரியனில் கரும்புள்ளிகள் 2013 ல் உச்சத்தை எட்டிவிட்டுப் பிறகு குறைய ஆரம்பிக்கும். முன்னர் 1980 ஆம் ஆண்டில் சூரியப் புள்ளிகள் மிக அதிகமாகவே இருந்தன. 2000 ஆம் ஆண்டில் அதை விடக் குறைவாக இருந்தது. இப்போது அதை விடவும் குறைவாக உள்ளது.2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு சூரியனில் கரும்புள்ளிகள் குறைய ஆரம்பிக்கும்.

 சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரிப்பதும் குறைவதும் வழக்கமான ஒன்று. கடந்த காலத்தில் சூரியனில் கரும்புள்ளிகள் அதிகமாக இருந்த ஆண்டுகளில் விபரீதம் எதுவும் ஏற்ப்ட்டுவிடவில்லை. ஆகவே சூரியனிலிருந்து நெருப்பு ஜுவாலை பூமியை வந்து தாக்கலாம் என்பது வெறும் கற்பனையே.

பூமி அழியப் போகிற்து. மக்கள் அழியப் போகிறார்கள் என்று பீதி கிளப்பப்படுவது இது முதல் தடவை அல்ல. 1806, 1843, 1891, 1910, 1982, 1997, 1999,  என கடந்த பல ஆண்டுகளில் இப்படி பீதி கிளப்பப்பட்டது. ஆனால்  எதுவும் நிகழ்ந்து விடவில்லை. இந்தத் தடவை இந்த பீதி பரவலாகப் பரவியுள்ளது. இண்டர்னெட், பேஸ்புக் எனற சாதனங்கள் மூலம் எளிதில் எதையும் ப்ரப்ப முடியும் என்பதே இதற்குக் காரணம்.

 இப்படியான பீதி பரவும் போது பல சமூக விரோத செயல்கள் தோன்றும். மன உறுதியற்றவர்கள் தற்கொலை எண்ணத்தைப் பெறுவர். சில நாட்கள் தானே உயிரோடு இருக்கப் போகிறோம், அதற்குள்ளாக எல்லாவற்றையும் அனுபவித்து விட வேண்டும் என முறைகேடான செயல்களுக்கு தூண்டப்படுவோர் இருப்பர்.

சமூகத்தில் சீர்குலைவை ஏற்படுத்தும் வகையில் பீதி கிளப்புவது என்பது கிரிமினல் குற்றமாகும். இதில் ஈடுபடுவோரைக் கைது செய்து சிறையில் அடைக்க உலகில் எல்லா நாடுகளிலும் அரசுக்கு அதிக்ர்ரம் உண்டு.

சீனாவில் ஒரு நகரில் “உலகம் அழியப் போகிறது” என்பதாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்துச் சென்றவர் மற்றும் நோட்டீஸ் வினியோகித்துச் சென்றவர் உடபட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலைமை முற்றினால் மேலும் பல நாடுகளிலும் இவ்வித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.

ஆகவே உலகம் அழியப் போவதாகக் கூறும் பீதியைப் பரப்புவதில் நீங்கள் ஒருவராக இருக்க முற்படாமல் இருப்பது நல்லது.

சீனாவிலும் ரஷியாவிலும் பெரும் பீதி நிலவுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.அமெரிக்காவில் நிலத்துக்கு அடியில் உள்ள பாதாளப் புகலிடங்களில் இடம் பிடிக்கப் பலரும் ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் போய் தங்கினால் அழிவிலிருந்து தப்பிவிடலாம் என்ற வதந்தி கிள்ம்பி பல்ரும் அந்த கிராமத்தை நோக்க்ப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.அதிகாரிகள் இதைச் சமாளிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

நல்ல வேளையாக இந்தியாவில் பெரும் பீதி எதுவும் இல்லை. சென்னை செண்டிரல், அல்லது எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 21 ஆம் தேதி கிளம்பும் ரயில் வண்டிகளில் இடம் இருப்பது சந்தேகமே. அன்றைய தினம் சென்னையில் உள்ள சினிமா தியேட்டர்களில் நீங்கள் விரும்பும் படத்தைக் காண டிக்கெட் கிடைப்பது எளிதாக இராது. சென்னை விமான நிலையத்துக்குப் போனால் வழக்கம் போல கூட்டம் காணப்படும். சாதாரண பொது மக்களுக்கு பூமி அழியும் என்று சொல்லப்படுகிற வதந்தி பற்றியே தெரிந்திராது. அல்லது அதை அவர்கள் பொருட்படுத்தாதவாகள்.

பூமி அழிந்து விடும் என்று சொல்லப்படுகிற வதந்தி பற்றி அதே வேலையாக இண்டர்னெட்டைக் குடைந்து கொண்டிருப்பவர்க்ள் பலரிடம் ஒரு வேளை பீதி  நிலவலாம்.

.எந்த ஆபத்தும் ஏற்படப் போவதில்லை என  நாஸா உட்பட யார்  சொன்னாலும் நம்ப மறுக்கிறவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அவர்களை விட்டு விடுங்கள். நீங்கள் தெளிவாக இருங்கள். வருகிற  டிசம்பர் 21 ஆம் தேதி மற்ற நாட்களைப் போல ஒரு நாள். அவ்வளவு தான். உலகம் அழியாது

(Update: ஜ்னவரி முதல் தேதி 2013--  பூமி நிச்சயம் அழியப் போவதில்லை என்று எழுதி பத்து நாட்கள் கழிந்து விட்டன. ஆனால் இது தொடர்பாக பீதி கிளப்பியவர்கள் தங்களது ஜோசியம் ஏன் பொய்த்தது என்பதற்கான நொண்டிச் சாக்கு எதையும் இதுவரை கூறவில்லை.
     எனினும் இப்படி ஒரு பீதி மறுபடி கிளம்பாது என்று சொல்லி விட முடியாது. இப்போது கிளப்பி விடப்ப்ட்ட பீதி பற்றிய விவகாரம் எளிதில் மறக்கப்பட்டு விடும். ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடி இது மாதிரியான புரளி மீண்டும் கிளம்பும். ஏமாறுவதற்கு ஆட்கள் இருக்கின்ற வரையில் ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பர்)

 (குறிப்பு:  இந்த வலைப் பதிவுக்கு Link  கொடுக்க என்னால் அனுமதிக்கப்பட்டுள்ள ஓரிரு இணைய தளங்கள், வலைப் பதிவுகள் தவிர, வேறு எவரும் கண்டிப்பாக இந்த வலைப்பதிவில் வெளியாகும் கட்டுரைகளை அப்படியே காப்பியடித்து அல்லது அவற்றின் ஒரு பகுதியைத் தங்களது இணைய தள்த்தில்  அல்லது வலைப் பதிவில் போடலாகாது என்று எச்சரிக்கப்படுகிறார்கள்)

Nov 10, 2012

சூரிய மண்டலத்துக்கு ஒரு ;குட் பை;

Share Subscribe
ஒருவர் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கிளம்புகிறார். சற்று நேரத்தில் அவர் இந்திய கடல் ஆதிக்கப் பிராந்தியத்தைத் தாண்டியதும் இந்தியாவுக்கு விடை கொடுத்தவராகிறார்.

பூமியின் ஆதிக்க எல்லை இத்தோடு சரி என்று கோடு கிழிக்க முடியாது என்றாலும்   விண்வெளி வீரர் ஒருவர் விண்கலம் மூலம் பூமியிலிருந்து கிளம்பி சுமார் 7 லட்சம் கிலோ மீட்டர் சென்று விட்ட பிறகு பூமியின் பிடியிலிருந்து கிட்டத்தட்ட  விடுபட்டவராகி பூமிக்கு குட்பை சொல்லிவிடலாம்.

பூமி உட்பட பல கிரகங்களை உள்ளடக்கிய சூரிய மண்டலத்திலிருந்து விடுபட்டு சூரியனுக்கு குட்பை சொல்ல கிட்டத்தட்ட இது தான் எல்லை என்று குத்துமதிப்பாகச் சொல்ல முடியும்.. அது எவ்வளவு தூரம்?

சூரியனிலிருந்து ’சூரியக் காற்று ’துகள்கள் ஓயாது வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன
முதலில் சூரியனைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும்.சூரியனிலிருந்து ஓயாது ஒழியாது சக்தி மிக்க துகள்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றின் வேகம் குறைந்தது மணிக்கு 14 லட்சம் கிலோ மீட்டர். இத்துகள்களின் வேகம் அவ்வப்போது மாறும். வெளிப்படும் துகள்களின் அளவும் அவ்வப்போது மாறும்.

இவை துகள்களே என்றாலும்  நிபுணர்கள் இவற்றுக்குப் பொருத்தமில்லாமல் ‘சூரியக் காற்று’(Solar Wind) என்று பெயர் வைத்து விட்டார்கள். நாமும் சூரியக் காற்று என்றே குறிப்பிடுவோம்.

இந்த சூரியக் காற்று சூரியனிலிருந்து கிளம்பி நாலா புறங்களிலும் சென்று கொண்டே இருக்கிறது. சூரியனைச் சுற்றுகின்ற பூமி, செவ்வாய், வியாழன் சனி என எல்லாக் கிரகங்களையும் தாண்டிச் சென்று கொண்டே இருக்கிறது.. (உயிரினத்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய இத் துகள்கள் நம்மைத் தாக்காதபடி  பூமியின்  காந்த  மண்டலம் தடுத்து விடுகிறது.)

சூரிய மண்டலத்தின் எல்லையிலுள்ள புளூட்டோ கிரகத்தையும் தாண்டி இத்துகள்கள் சென்று கொண்டிருக்கின்றன.தடுப்ப்தற்கு எதுவும் இன்றி இவை நேர்கோட்டில் சென்று கொண்டிருக்கின்றன.  எனினும் பல நூறு கோடி கிலோ மீட்டரைக் கடந்த பிறகு   மேற்கொண்டு செல்ல முடியாமல் தடுக்கப்பட்டு விடுகின்றன. அந்த நிலையில் அவை  இட்து புறமும் வலது புறமும் பிரிந்து செல்ல ஆரம்பிக்கின்றன.
வாயேஜர் 1 கருவியில் பதிவான சூரியக் காற்றுத் துகள்களின் எண்ணிக்கை ஒரேயடியாகக் குறைந்துள்ளதைக் காட்டும் வரிவடிவப் படம்
சூரிய மண்டல எல்லைக்கு அப்பால் நட்சத்திரங்கள் உள்ளன என்பதை மறந்து விடலாகாது.  அந்த நட்சத்திரங்களிலிருந்து வருகின்ற ஆற்றல் மிக்க  நுண் துகள்கள் தான் சூரியக் காற்று மேற்கொண்டு செல்ல முடியாதபடி தடுத்து விடுகின்றன.
வாயேஜர் 1 கருவியில் பதிவான நட்சத்திர மண்டல துகள்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
விண்வெளியின் அப்பகுதியில் அவற்றின் சக்தி தான் அதிகம். ஆகவே சூரியக் காற்று இவ்விதம் தடுக்கப்படுகின்ற விண்வெளிப் பகுதியை சூரிய மண்டலத்தின் எல்லை (Heliopause)  என்று சொல்லலாம்.  சூரியக் காற்று அத்தோடு நின்று விடுகிறது என்பதை எப்படிக் கண்டுபிடித்தார்கள்?.
வாயேஜர் 1 விண்கலம்
அமெரிக்காவின் நாஸா விண்வெளி அமைப்பு  1977 ஆம் ஆண்டில் வாயேஜர் -1  என்னும் ஆளில்லா விண்கலத்தை அனுப்பியது.  அந்த விண்கலம்  வியாழன், சனி ஆகிய கிரகங்கள நெருங்கி ஆராய்ந்து பல அரிய படங்களையும் அத்துடன் அந்த இரு கிரகங்கள் பற்றிய த்கவல்களையும் சேகரித்து அனுப்பியது. எந்த கிரகத்திலும் இற்ங்காமல் அவற்றைக் கடந்து சென்ற  அந்த் விண்கலம் அதன் பிறகு தொடர்ந்து விண்வெளியை நோக்கிப் ப்ய்ணத்தைத் தொடர்ந்தது.

வாயேஜரின் முக்கிய பணி முடிவடைந்து விட்ட போதிலும் அது இடைவிடாது விண்வெளி நிலைமைகள் பற்றித் தகவல் அனுப்பி வருகிற்து.. சூரியக் காற்றின் துகள்கள் பற்றியும் அது தெரிவித்து வருகிறது.  எனவே எவ்வளவு துகள்கள் வாயேஜரின் கருவியில் பதிவாகின்றன என்ற தகவல்  நாஸாவின் தலைமைக் கேந்திரத்துக்குத் தொடர்ந்து கிடைத்து வருகிறது

வாயேஜரிலிருந்து  கடந்த செப்டம்பரில்  கிடைத்த தகவலகளை ஆராய்ந்த போது சூரியக் காற்றின் துகள்களின் எண்ணிக்கை ஒரேயடியாகக் குறைந்து விட்டது தெரிய வந்தது. அதே நேரத்தில் அண்டவெளியிலிருந்து சூரிய மண்டலத்தைத் தாக்கும் ஆற்றல் மிக்க துகள்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.

இதிலிருந்து தான் வாயேஜர் சூரிய மண்டல எல்லையை எட்டி விட்டதாகத் தோன்றுகிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இப் பகுதி அமைந்துள்ள தூரம் சூரியனிலிருந்து சுமார் 1840 கோடி கிலோ மீட்டர் ஆகும். இது  சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தைப் போல 122 மடங்கு.

சூரிய மண்டலத்தின் எல்லை அவ்வளவு தொலைவில் உள்ளதாகச் சொல்லலாம். அங்கிருந்து பார்த்தால் பூமி முதலான கிரகங்கள் தெரியாது. சூரியன் பிரகாசமான ஒளி புள்ளியாக அதாவது நட்சத்திரமாகத் தெரியும். (சூரியன் ஒரு நட்சத்திரமே)

சூரிய மண்டலத்துக்கு குட்பை சொல்லி விட்டு வெளியேறும் வாயேஜர் 1 எங்கே செல்லும்? அண்டவெளி என்பது  எல்லையற்ற வெளி.    ஒபியுகஸ் என்று பெயரிடப்பட்டுள்ள நட்சத்திர மண்டலத்தை நோக்கி அது சென்று கொண்டிருக்கும்.  இந்த நட்சத்திர மண்டலம் விருச்சிக ராசிக்கு அருகே உள்ளது. வாயேஜர் 1  எந்த நட்சத்திரத்தையும் நெருங்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வாயேஜரில் வைக்கப்பட்டுள்ள CD
வாயேஜர் விண்கலத்தில் ஒரு CD  வைக்கப்பட்டுள்ளது. அதில் சூரிய மணடலம்  மற்றும் பூமி முதலான கிரகங்கள் எங்கே உள்ளன என்ற தகவலகள் உள்ளன. ஆண், பெண் உருவம், பூச்சிகள் விலங்குகளின் ப்டங்கள்  35 மொழிகளிலான வாழ்த்துச் செய்தி, என பல விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.  உலகின் பல்வேறு வகையான இசைகளின் சாம்பிள்களும் இதில் இடம் பெற்றுள்ளன... இந்தியாவைச் சேர்ந்த இந்துஸ்தானி இசைப் பாடகி கேசர்பாய் கேர்கரின் குரலும் இவற்றில் அடங்கும்.

ஒரு வேளை அன்னிய கிரகவாசிகள் ( அப்படி யாரேனும் இருந்தால் ) வாயேஜர் விண்கலத்தைக் கைப்பற்ற நேர்ந்தால் பூமி பற்றியும் மனித இனம் பற்றியும் தெரிவிக்கும் நோக்கில் தான் இந்த CD வைக்கப்பட்டுள்ளது.   அப்படி அன்னிய கிரகவாசிகள் இருக்க நேரிட்டு அவர்களின் கையில் இது கிடைப்பதற்கு அனேகமாக வாய்ப்பே இல்லை என்று பிரபல விஞ்ஞானி கார்ல் சாகன் கூறியுள்ளார்.
வாயேஜர் விண்கலங்கள், பயனீர் விண்கலங்கள் சென்று கொண்டிருக்கும் பாதைகள்
நாஸா கடந்த பல ஆண்டுகளில் வாயேஜர் 1 விண்கலத்தை  மட்டுமன்றி வாயேஜர் 2,  ப்யனீர் 10,  பயனீர் 11 ஆகிய ஆளில்லா விண்கலங்களையும் அனுப்பியுள்ளது. ஒரு கால கட்டத்தில் இவையும் சூரிய மண்டல எல்லையை விட்டு வெளியேறும்.


Nov 1, 2012

பூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா?

Share Subscribe
பொதுவில் வதந்திகளுக்குப் பதில் கூறுவதில் அர்த்தமே இல்லை.  ஒரு வகையில் அது அந்த வதந்தியை மேலும் பரப்புவதாகவே அமையும். ஆனால் இந்த வலைப் பதிவைப் படித்து வருகிற  ஓர் அன்பர் எனக்கு இந்த் வதந்தி பற்றிக் குறிப்பிட்டு  அது உண்மையா, அப்படி நடக்குமா என்று இ மெயில் மூலம் கேட்டிருந்தார். இது இணைய தளத்தில் பரவலாகக் கிளம்பியுள்ள வதந்தி என்பதால் அவருக்குப் பதிலளித்தேன்.

 அடுத்த மாதம் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பூமி இருளில் மூழ்கிவிடுமாம். அது தான் அந்த வதந்தி. நாஸா இது பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த வதந்தி கூறுகிறது.அன்பர் சுதாகர் எனக்கு இமெயில் மூலம் அனுப்பிய கேள்வியையும் நான் அளித்த பதிலையும் கீழே கொடுத்துள்ளேன். அந்த பதிலுடன் மேலும் சில விளக்கத்தையும் இங்கு சேர்த்திருக்கிறேன்.

”NASA predicts total blackout on 23-25 Dec 2012 during alignment of Universe. US scientists predict Universe change, total blackout of planet for 3 days from Dec 23 2012. It is not the end of the world, it is an alignment of the Universe, where the Sun and the earth will align for the first time. The earth will shift from the current third dimension to zero dimension, then shift to the forth dimension. During this transition, the entire Universe will face a big change, and we will seea entire brand new world. The 3 days blackout is predicted to happen on Dec 23, 24, 25....during this time, staying calm is most important, hug each other, pray pray pray, sleep for 3 nights...and those who survive will face a brand new world....for those not prepared, many will die because of fear. Be happy..., enjoy every moment now. Don't worry, prayto God everyday. There is a lot of talk about what will happen in 2012, but many people don't believe it, and don't want to talk about it for fear of creating fear and panic. We don't know what will happen, but it is worth listening to USA's NASA talk about preparation.

இது உண்மையா?.....உங்களிடமிருந்து இது பற்றிய தகவல்கள் கிடைத்தால் மிக்க மகிழ்ச்சியடைவோம்.”  -சுதாகர்

to Sudhakar
Dear Sir
   நான் அறிந்த வரையில் நாஸா  அப்ப்டி எந்த எச்சரிக்கையையும் விடவில்லை. total blackout  என்பது என்ன என்று புரியவில்லை. உலகில் உள்ள அனைத்து மின்சார நிலையங்களும் மின் உற்பத்தி செய்யாமல் பாதிக்கப்படும் என்ற அர்த்தம் என்றால் அது சாத்தியமில்லை. அனைத்து மின் நிலையங்களும் ஒரே சமயத்தில் செயலற்றுப் போக வாய்ப்பில்லை.

 அல்லது மூன்று நாள் சூரியனே தலை காட்டாது . மூன்று நாளும் ஒரே இருளாக இருக்கும் என்றால் அதற்கும் சாத்தியமில்லை.சூரியன் தனது இடத்திலிருந்து எங்கோ மூன்று நாள் லீவில் போய்விட்டுத் திரும்ப வாய்ப்பில்லை.  பூமி  தனது அச்சில் சுழல்வதால் தான் இரவும் பகலும் ஏற்படுகின்றன.
 
பூமி தனது அச்சில் சுழலாமல் நிலை குத்தி நிற்பதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் பூமியின் ஒரு பாதியில் மூன்று நாள் தொடர்ந்து இரவாக இருக்கும். மறு பாதியில் மூன்று நாள் தொடர்ந்து பகலாக இருக்கும். ஆகவே பூமி முழுவதிலும் மூன்று நாள் இரவாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இது பகுத்தறிவுக்கு முரணானது.
 
சூரியன் மற்றும் பூமியின் alignment  பற்றிய சமாச்சாரமும் அபத்தமாகவே உள்ளது. பூமியின் Dimension  மாற்றம் வெறும் உளறல்.
 நாஸா இப்படி கூறியது அப்படிக் கூறியது என்று வதந்தி கிளம்புவது இது முதல் தடவை அல்ல. 
 
Pray  செய்பவர்கள் தப்பித்துக் கொள்வார்கள் என்றால் நியூயார்க் நகரை சாண்டி புயல் தாக்கிய போது அவரவர் தங்கள் இடத்திலிருந்து பிரார்த்தனை செய்திருந்தால் தப்பித்திருக்கலாமே.

 படித்தவர்களும் இந்த வதந்திகளை நம்ப முற்படுவது வேதனையைத் தருகிறது. நமது உலகம், சூரிய மண்டலம், அண்டம், பிரப்ஞ்சம் ஆகியவை ஓர் ஒழுங்கு உட்பட்டவை. விபரீத மாறுதல்களுக்கு இடமே இல்லை.
 வீண் வதந்திகளை நம்பாதீர்கள். எனது இந்தச் செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்

ராமதுரை

இப்போது கூடுதல் விளக்கம்:

சந்திரனை விடப் பலப் பல மடங்கு பெரியதான ஒன்று ( பெரிய கிரகம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்)  சூரியனுக்கும் பூமிக்கும் குறுக்கே வந்து நிற்குமானால் பூமிக்கு சூரிய ஒளியே கிடைக்காமல் பூமி முற்றிலும் இருளில் மூழ்கலாம்.

அப்படி பிரும்மாண்டமான ஒன்று குறுக்கே நிற்பதானால் அது  விண்வெளியில் எங்கிருந்தாவது வந்தாக வேண்டும். பூமியை நோக்கி அப்படி எதுவும் வருவதாக இதுவரை கண்டறியப்படவில்லை. அப்படி ஒன்று வருவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் இத்தனை நேரம் விஞ்ஞானிகள் அதைக் கண்டுபிடித்திருப்பார்கள்.

அப்படி ஒன்று வருவதாக வைத்துக் கொண்டால் ,  காரை பிரேக் போட்டு நிறுத்துவது போல அது திடீர் என்று பிரேக் போட்டு நிற்க வாய்ப்பே இல்லை. பூமி அல்லது சந்திரன் பிரேக் போட்டு நிற்காது. ஆகவே எதுவும் சூரியனுக்கும் பூமிக்கும் குறுக்கே வந்து மூன்று நாள் முகாம் போட முடியாது.

சரி, அது பிரேக் போட்டு நிற்பதாகவே வைத்துக் கொள்வோம். மறுபடி அதை எந்த சக்தி அங்கிருந்து கிளப்பும்? மூன்று நாட்கள் கழித்து அது தானாக எப்படி கிளம்பும்?  இது நியூட்டன் வகுத்த விதிகளை மீறுவதாக இருக்கும்.

ஒரு வேளை பூமியை விட பிரும்மாண்டமான ஒன்று சூரியனுக்கும் பூமிக்கும் குறுக்கே வந்து நின்று பூமிக்கு சூரிய ஒளி கிடைக்காமல் தடுக்கும் என்றால் அது சில நிமிஷ நேரமே ( சூரிய கிரகணத்தின் போது நிகழ்வது போல்)  அவ்விதம் தடுக்க முடியும்.

ஏனெனில் அதுவும் பூமியைப் போல சூரியனை சுற்றியாக வேண்டும். அப்படியானால் சூரியனைச் சுற்றி வருவதில்  அதன் வேகமும் பூமியின் வேகமும் வித்தியாசப்படும். அந்த பிரும்மாண்டமான ஒன்றினால் தொடர்ந்து மூன்று நாட்கள் அல்லது பல நாட்கள் பூமிக்கு சூரிய ஒளி கிடைக்காமல் தடுக்க முடியாது. அப்படி நிகழ்வதானால் அது கெப்ளர் வகுத்த விதிகளை மீறிவதாக இருக்கும்.

ஆக்வே வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். டிசம்பர் 23, 24 , 25 தேதிகள் வழக்கம் போலத் தான் இருக்கும்.
(ப்டங்கள் இல்லை, மன்னிக்கவும்)



Jul 17, 2012

தூக்கியெறியப்பட்ட கிரகத்துக்கு இன்னொரு சந்திரன்

Share Subscribe
சில ஆண்டுகளுக்கு முன் அச்சிடப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் பாடப் புத்தகத்தைப் புரட்டினால் சூரிய மண்டலத்தில் மொத்தம் ஒன்பது கிரகங்கள் உள்ளன என்று காணப்படும். ஆனால் இந்த ஒன்பது கிரகங்களில் ஒன்றான புளூட்டோ ( Pluto) என்ற கிரகத்தை ’ அது கிரகமே அல்ல’ என்று கூறி வானவியல் விஞ்ஞானிகள் கடந்த 2006 ஆம் ஆண்டில் தூக்கி எறிந்து விட்டார்கள்.

ஆனால் அமெரிக்காவில் இல்லினாய் மாகாண அரசு புளூட்டோவை இன்னமும் ஒரு கிரகமாகக் கருதுகிறது. அந்த மானிலம் ஆண்டுதோறும் மார்ச் 13 ஆம் தேதியை புளூட்டோ தினமாகக் கொண்டாடுகிறது. காரணம் புளூட்டோ கிரகத்தைக் கண்டுபிடித்த கிளைட் டாம்போ அந்த மானிலத்தைச் சேர்ந்தவர். புளூட்டோ 1930 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதே போல நியூ மெக்சிகோ மாகாணமும் புளூட்டோ தொடர்ந்து ஒரு கிரகமாக இருந்து வருவதாகக் கருதுகிறது.ஏனெனில் புளூட்டோவைக் கண்டுபிடிப்பதற்கு டாம்போவுக்கு உதவிய வான் ஆராய்ச்சிக்கூடம் அந்த மாகாணத்தில் தான் உள்ளது. ஆகவே நியூ மெக்சிகோ மாகாண சட்டமன்றம் 2007 ஆம் ஆண்டில் புளூட்டோ ஒரு . கிரகம் தான் என்று அறிவித்து சட்டம் நிறைவேற்றியது. இதெல்லாம் பழங்கதை.

இப்போது புளூட்டோ பற்றிய புதிய செய்தி உண்டு.  புளூட்டோ கிரகத்துக்கு ஐந்தாவது சந்திரன் உள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர். பூமிக்கே ஒரு சந்திரன் தான் உள்ளது. நமது சந்திரனை விடச் சிறியதான் புளூட்டோ ஐந்து சந்திரன்களைப் பெற்றுள்ளது என்பது வியக்கத் தக்க ஒன்றாகும்.
புளூட்டோ ம்ற்றும் அதன் சந்திரன்கள்
புளூட்டோவின் ஐந்து சந்திரன்களில் சாரோன்,1978 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. நிக்ஸ், ஹைட்ரா ஆகியவை 2005 ஆம் ஆண்டிலும் P4 எனப்படும் சந்திரன் 2011 ஆம் ஆண்டிலும் கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சந்திரனின் பெயர் P 5 ஆகும். சாரோன் தவிர, மற்ற நான்கும் வானில் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் ஹப்புள் டெலஸ்கோப் மூலம் கண்டுபிடிக்கப்பட்டன.. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சந்திரனின் குறுக்களவு சுமார் 24 கிலோ மீட்டராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முதலில் புளூட்டோ எங்கே இருக்கிறது என்று பார்ப்போம். புளூட்டோவுக்கு அப்பால் கிரகம் கிடையாது என்று சொல்கின்ற அளவுக்கு அது சூரிய மண்டல எல்லையில் உள்ளது. பூமியிலிருந்து புளூட்டோ குறைந்தது 430 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புளூட்டோ அவ்வளவு தொலைவில் உள்ளதால் அது சூரியனை ஒரு தடவை சுற்றி முடிக்க 248 ஆண்டுகள் ஆகின்றன.
 நியூஹொரைசன்ஸ் விண்கலம் எவ்வளவு தூரம் சென்றுள்ளது என்பதைக் காட்டும் வரைபடம். புளூட்டோ சூரிய மண்டல எல்லையில் இருப்பதைக் கவனிக்கவும்.
சூரிய மண்டலத்தில் புளூட்டோ நீங்கலாக எல்லா கிரகங்களுக்கும் ஆளில்லா விண்கலங்கள் அனுப்பப்பட்டு அவை விரிவாக ஆராயப்பட்டுள்ளன. ஆகவே தான் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸா புளூட்டோவை நெருங்கி ஆராய்ந்து படங்களைப் பிடிப்பதற்காக நியூ ஹொரைசன்ஸ் (New Horizons) என்ற ஆளில்லா விண்கலத்தை 2006 ஜனவரில் செலுத்தியது.

அமெரிக்க விண்வெளிக் கேந்திரத்திலிருந்து மணிக்கு 58 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தப்பட்ட அந்த விண்கலம்.  இதுவரை பாதிக்கும் அதிகமான தூரத்தைத் கடந்துள்ளது.. நியூ ஹொரைசன்ஸ் 2015 ஆம் ஆண்டு ஜூலை வாக்கில் தான் புளூட்டோவை நெருங்கும். ஆனால் அது புளூட்டோவில் தரை இறங்காது.
புளூட்டோ. ஹப்புள் டெலஸ்கோப் எடுத்த ப்டம்
நியூஹொரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவை வேகமாகக் கடந்து செல்லும். அப்போது விண்கலத்தில் உள்ள நுட்பமான கருவிகள் புளூட்டோவை ஆராய்ந்து தகவலகளை பூமிக்கு அனுப்பும். விண்கலத்தில் உள்ள் படப்பிடிப்புக் கருவிகள். துல்லியமான படங்களைப் பிடித்து அனுப்பும். இதன் மூலம் புளூட்டோ பற்றி விஞ்ஞானிகள் மேலும் பல தகவலகளை அறிய இயலும்.

புளூட்டோவின் ஐந்தாவது சந்திரன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திரன்களில் எந்த ஒன்றின் மீதும் நியூஹொரைசன்ஸ் மோதாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.அந்த விண்கலம் புளூட்டோவை நெருங்கும் நேரத்தில் மணிக்கு 48 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதாக இருக்கும்.

பொதுவில் எந்த விண்கலத்தையும் பிரேக் போட்டு நிறுத்த முடியாது. திடீரென அதன் பாதையை மாற்ற இயலாது. வேகத்தையும் திடீரென குறைக்க இயலாது. அந்த அளவில் விஞ்ஞானிகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஐந்தாவது சந்திரனையும் கணக்கில் கொண்டு முன்கூட்டியே நியூஹொரைசன் விண்கலத்தின் பாதையைத் தகுந்தபடி நிர்ணயிக்க வேண்டியிருக்கும். ஏனெனில் நெல்லிக்காய் அளவு உள்ள சிறிய பொருள் மோதினாலும் போதும். விண்கலத்துக்குப் பெரும் சேதம் ஏற்பட்டு விடும்.

நியூஹொரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவை சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலிருந்து ஆராய்வது என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் ஐந்தாவது கிரகம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பாக மேலும் அதிக தொலைவிலிருந்து ஆராயும் வகையில் அதன் பாதை மாற்றப்படலாம்.

சரி, புளூட்டோ ஒரு கிரகம் அல்ல என்று சர்வதேச வானவியல் சங்கம் ஏன் தீர்ப்பளித்தது ஒரு கிரகம் என்றால் அது சில தகுதிகளைப் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும் என்பது அச்சங்கத்தின் கருத்து.. முதலாவதாக ஒரு கிரகம் என்றால் அது சூரியனைத் தனிப்பாதையில் சுற்றி வர வேண்டும். இரண்டாவதாக அது உருண்டையாக இருக்க வேண்டும். இந்த இரு தகுதிகளையும் புளூட்டோ பூர்த்தி செய்கிறது.
புளூட்டோ எவ்வளவு சிறியது என்பதைக் காட்டும் படம்
மூன்றாவது தகுதி ஒரு கிரகம் தனது வட்டாரத்தில்,-- சுற்றுப்பாதையில் இருக்கக்கூடிய துண்டு துக்கடாக்களை தன் பால் ஈர்த்து அவற்றை கபளீகரம் செய்திருக்க வேண்டும். இந்த மூன்றாவது தகுதி புளூட்டோவுக்கு இல்லை என்பது சர்வதேச வானவியல் சங்கத்தின் கருத்து.

நீண்டகாலம் மக்களால் கிரகம் என்று கருதப்பட்ட புளூட்டோவை இப்படி திடீரென தகுதி நீக்கம் செய்வது சரியல்ல என்பது பலரின் கருத்து. தவிர, சர்வதேச வானவியல் சங்க கூட்டத்தில் புளூட்டோ பற்றி முடிவு எடுக்கப்பட்ட போது மொத்த உறுப்பினர்களில் 40ல் ஒரு பங்கு உறுப்பினர்களே இருந்ததால் அது முறையாக எடுக்கப்பட்ட முடிவு ஆகாது என்றும் வாதாடப்படுகிறது.   புளூட்டோ ஆதரவாளர்களின் இந்த வாதத்தில் நியாயம் இருப்பதாகத் தோன்றுகிறது.


Jun 5, 2012

சூரிய ஒளித் தட்டில் கருப்பாகத் தெரியும் வெள்ளி

Share Subscribe
பெயருக்கு ஏற்ப வெள்ளி கிரகம் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கு வானில், அல்லது சூரிய உதயத்துக்கு முன்னர் கிழக்கு வானில், வைர மூக்குப் பொட்டு போல ஜொலிக்கும். மாலையில் இருட்டிய பிறகு மேற்கு வானில் தெரிந்தால் அதன் பெயர் அந்தி வெள்ளி, அதி காலையில் கிழக்கு வானில் தெரிந்தால் விடி வெள்ளி என்று அழைக்கின்றனர். இரண்டுமே ஒன்று தான். வெள்ளி (Venus) கிரகத்தைக் காணாதவர்கள் இருக்க முடியாது. பிரகாசமான ஒளியை வீசுவதால் அது இயல்பாக உங்களைக் கவரும்.

மேற்கு வானில் சந்திரன் அருகே
ஒளிப்புள்ளியாகத் தெரிவதே வெள்ளி கிரகம்
ஆனால் ஜூன் 6 ஆம் தேதி காலையில் சூரியனின் ஒளித் தட்டில் வெள்ளி கிரகத்தை நீங்கள் கருப்புப் பொட்டு வடிவில் காணலாம். இது ஒரு வகையில் கிரகணம் போன்றதே. ஆனாலும் இதை கிரகணம் என்று வர்ணிப்பதில்லை.

சூரிய கிரகணம் பற்றி நமக்குத் தெரியும். சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே நேர் குறுக்காக வந்து நிற்கும் போது அது சூரிய ஒளித் தட்டை முற்றிலுமாக அல்லது ஓரளவில் மறைக்கும். எல்லா அமாவாசைகளிலும் சந்திரன் இப்படி சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே அமைந்திருக்கும் என்றாலும் நேர் குறுக்கே வராது. சந்திரனின் சுற்றுப்பாதை பெரும்பாலான சமயங்களில் சாய்வாக அமைவதே அதற்குக் காரணம்.  அபூர்வமாக சூரியன்,- சந்திரன் - பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அந்த வரிசையில் அமையும் போது மட்டுமே சூரிய கிரகணம் நிகழ்கிறது.

வெள்ளி கிரகத்தின் சுற்றுப்பாதை
 பூமிக்கும் சூரியனுக்கும் இடையே அமைந்துள்ளது
சூரிய மண்டலத்தில் புதன் கிரகம் சூரியனுக்கு அருகில் உள்ளது. புதன் முதல் வட்டத்தில் உள்ளது என்றால், வெள்ளி கிரகம் இரண்டாவது வட்டத்திலும் பூமி மூன்றாவது வட்டத்திலும் அமைந்துள்ளன. வேறு விதமாக்ச் சொல்வதானால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே புதன், வெள்ளி ஆகியவை அமைந்துள்ளன. (இந்திய ஜோசிய சாஸ்திரத்தில் வெள்ளி கிரகத்துக்கு சுக்கிரன் என்று பெயர்)

வெள்ளி கிரகமானது 583  நாட்களுக்கு ஒரு முறை சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே அமைகிறது. அதாவது சூரியன், வெள்ளி, பூமி ஆகியவை ஒரே வரிசையில் இருக்கும். ஆனால் வெள்ளியின் சுற்றுப்பாதை சற்றே சாய்வாக இருப்பதால் அது சூரியனுக்கும் பூமிக்கும் நேர் குறுக்கே வந்து நிற்காது. அதாவது அது சூரியனை மறைத்துக் கொண்டு நிற்பதில்லை.ஆனால் 105 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியன், வெள்ளி, பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் அமைகின்றன. ஆனால் நடுவே அமைந்த வெள்ளி கிரகம் சூரியனை முழுதாக மறைப்பதில்லை. இதற்குக் காரணம் உண்டு.

சூரியன், வெள்ளி (சுக்கிரன்) பூமி ஆகிய மூன்றும்
ஒரே நேர்கோட்டில் இருந்தால் மட்டுமே வெள்ளி கடப்பு நிகழும்
சந்திரன் பூமியிலிருந்து அதிகபட்சம் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வெள்ளி கிரகமோ 4 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நீங்கள் டிவி பார்க்கும் போது ஒரு கண்ணை மூடிக்கொண்டு இன்னொரு கண் முன்னே புருவத்தைத் தொடுகிற அளவுக்கு உங்கள் கட்டை விரலை வைத்துக் கொண்டால் டிவி திரை முற்றிலுமாக மறைக்கப்படும். ஆனால் நீங்கள் அடுத்து கையை நன்கு நீட்டி வைத்துக் கொண்டால் அதே கட்டை விரல் டிவி திரையை மறைக்காது. டிவி திரையின் பின்னணியில் கட்டை விரல் கருப்பாகத் தெரியும்.

வெள்ளி கிரகம் சூரியனுக்கும் பூமிக்கும் நேர் குறுக்கே வந்து நிற்கும் போது அது சூரிய ஒளித் தட்டில் வெறும் கருப்புப் பொட்டு போலத் தெரிவதற்கு அதுவே காரணம். இதைத் தான் வெள்ளி கடப்பு (Transit of Venus) என்று குறிப்பிடுகின்றனர். இந்த நிகழ்வை தமிழகத்தில் உள்ளவர்கள் ஜூன் 6 ஆம் தேதி காலை காணலாம். சூரியன் உதிக்கும் போதே அதன் இடது புறத்தின் மேல் மூலையில் வெள்ளி கிரகம் கருப்புப் பொட்டாகத் தெரியும். இது இந்திய நேரப்படி காலை 10-20 வரை தெரியும். பின்னர் வெள்ளி கிரகம் சூரிய ஒளித் தட்டிலிருந்து விலகி விடும்.

சூரிய ஒளித் தட்டில் வெள்ளி  இவ்விதமாகக்
கரும் புள்ளியாகத் தெரியும்
சூரிய ஒளித் தட்டில் வெள்ளி கிரகம் கரும் பொட்டாகத் தெரிகின்ற வேளையில் வெள்ளி கிரகத்துக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் சுமார் 11 கோடி கிலோ மீட்டராக இருக்கும். வெள்ளி கடப்பின் போது அதை உலகின் பல பகுதிகளிலும் இருந்து விஞ்ஞானிகள் ஆராய்வார்கள்.

வெள்ளி கடப்பு ஒரு தடவை நிகழ்ந்தால் அடுத்து எட்டு ஆண்டுகளில் அதே போல இன்னொரு வெள்ளி கடப்பு நிகழும். இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டில் இது போன்ற வெள்ளி கடப்பு நிகழ்ந்தது. இதற்கு முன்னர் வெள்ளி கடப்பு 1874 ஆம் ஆண்டிலும் 1882 ஆம் ஆண்டிலும் நிகழ்ந்தது. அடுத்து 2117 ஆம் ஆண்டிலும் 2125 ஆம் ஆண்டிலும் நிகழும். ஆனால் அவை தமிழகத்தில் தெரியாது. 2255 ஆம் ஆண்டில் நிகழும் வெள்ளி கடப்பு தமிழகத்தில் தெரியும்.

சூரிய ஒளித் தட்டில் வெள்ளி எவ்விதமாக நகரும்
என்பதை இந்த வரை படம் காட்டுகிறது
முன்பு 1761 ஆம் ஆண்டிலும் பின்னர் 1769 ஆம் ஆண்டிலும் நடந்த வெள்ளி கடப்பு வரலாற்று ரீதியிலும் அறிவியல் ரீதியிலும் முக்கியமானது. பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் எவ்வளவு என்பது அறியப்படாத காலம் அது. வெள்ளி கடப்பின் போது வெள்ளி கிரகம் சூரிய ஒளித் தட்டை எப்போது தொடுகிறது, எப்போது விலகுகிறது என்பதை மிகத் துல்லியமாக அறிந்து கொண்டால் பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தைக் கணக்கிட்டு விட முடியும் என்று அப்போது இங்கிலாந்தின் மற்றும் ரஷியாவின் விஞ்ஞானிகள் கருதினர். ஆகவே சூரிய கடப்பு நிகழும் போது உலகின் பல பகுதிகளுக்கும் விஞ்ஞானிகளை அனுப்பி இத்தகவல்களைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த ஏற்பாட்டின்படி 1761 ஆம் ஆண்டில் பிரெஞ்சு விஞ்ஞானி ஒருவர் சைபீரியாவுக்குச் சென்று வெள்ளி கடப்பு தகவலகளைப் பதிவு செய்தார். அதே விஞ்ஞானி பின்னர்1769 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவுக்கும் சென்று வெள்ளி கடப்பு நிகழ்வை ஆராய்ந்தார். அங்கு அவர் டைபாய்ட் ஜூரத்தால் பாதிக்கப்பட்டு கடைசியில் இறந்தே போனார். 1769 ஆம் ஆண்டு வெள்ளி கடப்பு நிகழ்ச்சியைப் பதிவு செய்வதற்காக இங்கிலாந்திலிருந்து பிரபல கேப்டன் குக் தென் பசிபிக் கடலில் உள்ள தாகிதி தீவுக்கு அனுப்பப்பட்டார். அப்போதெல்லாம் பாய்மரக் கப்பலில் தான் கடற்பயணம் மேற்கொள்ள முடியும். கேப்டன் குக் எட்டு மாத கால கடற்பயணத்துக்குப் பிறகு தாகிதி தீவுக்கு போய்ச் சேர்ந்து அங்கிருந்தபடி வெள்ளி கடப்பு நிகழ்ச்சியைப் பதிவு செய்தார்.

தாகிதி தீவுக்கு அனுப்பப்பட்ட
கேப்டன் குக்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கில்லாமே டி ஜெண்டில் என்ற விஞ்ஞானியின் அனுபவம் துயரம் வாய்ந்தது. அவர் 1760 ஆண்டு பாண்டிச்சேரி நோக்கிக் கப்பலில் கிளம்பினார். இந்தியாவில் காலூன்ற அப்போது இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே கடும் போட்டா போட்டி நடந்து கொண்டிருந்தது. அவர்கள் இடையிலான போரில் பாண்டிச்சேரி அடிக்கடி கைமாறியது.

ஜெண்டில் கிளம்பிய சமயம் பாண்டிச்சேரி பிரான்ஸ் வசம் இருந்தது. ஆனால் அவர் பாண்டிச்சேரி வந்து சேருவதற்குள் அது பிரிட்டிஷார் வசமாகிவிட்டிருந்தது. ஆகவே பாண்டிச்சேரியில் வந்து இறங்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் நடுக்கடலில் கப்பலில் இருந்தபடியே அவர் 1761 ஆம் ஆண்டு வெள்ளி கடப்பை ஆராய்ந்தார்.

அடுத்த வெள்ளி கடப்புக்கு மேலும் எட்டு வருடங்கள் இருந்தாலும் அவர் நாடு திரும்ப விரும்பவில்லை. எப்படியும் குறிக்கோளை அடைய விரும்பிய அவர்  ஆப்பிரிக்காவில் இருந்த பிரெஞ்சுப் பகுதிகளில் காலத்தைக் கழித்து விட்டு 1768 மார்ச் வாக்கில் மறுபடி பாண்டிச்சேரிக்குத் திரும்பினார். அது மீண்டும் பிரான்ஸ் வசம் வந்துவிட்டதால் அவருக்குப் பிரச்சினை ஏற்படவில்லை. பாண்டிச்சேரியில் சிறிய வான் ஆராய்வுக்கூடத்தை நிறுவி 1769 ஜூன் 4 ஆம் தேதி நிகழவிருந்த வெள்ளி கடப்பை ஆராய்வதற்கு ஆயத்தமானார். அந்தத் தேதியும் வந்தது.

ஆனால் அவரது துரதிருஷ்டம், வான்ம் மேகங்களால் சூழப்பட்டதாகக் காட்சி அளித்தது..பைத்தியம் பிடிக்காத குறை. மனமொடிந்தவராக தாயகம் நோக்கிக் கிளம்பினார். கப்பலில் செல்கையில் அவருக்கு வயிற்றுக் கடுப்பு. ஏதோ தீவில் அவரை இறக்கிவிட்டுச் சென்றனர். பிறகு ஒரு வழியாக பிரான்ஸ் வந்து சேர்ந்தார். 11 ஆண்டுகளாக ஆளைக் காணாததால் அவர் செத்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

பிரெஞ்சு ராயல் அகாடமியில் அவர் வகித்து வந்த பதவியில் வேறு ஒருவர் அமர்ந்திருந்தார். அது கூடப் பரவாயில்லை. தமது மனைவி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு விட்டதை அறிந்தார். ஜெண்டிலின் சொத்துக்களை அவரது சொந்தக்காரர்கள் பிரித்துக் கொண்டு அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

ஜெண்டில் வழக்குப் போட்டார். மன்னரிடம் முறையிட்டார். மீண்டும் பதவி கிடைத்தது. சொத்துக்களும் அவரது கைக்கு வந்தன. அவர் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு புது வாழ்க்கையைத் தொடங்கினார். எவ்வளவோ இன்னல்கள் ஏற்பட்டாலும் அறிவியலுக்காக அவற்றைத் தாங்கிக் கொண்ட விஞ்ஞானிகளில் ஜெண்டிலும் ஒருவர்.

1769 ஆம் ஆண்டு வெள்ளி கடப்பின் போது உலகில் 70 க்கும் மேற்பட்ட இடங்களில் பல நாடுகளின் விஞ்ஞானிகளும் சேகரித்த தகவல்களை வைத்து கணக்கிட்டதில் பூமியிலிருந்து சூரியனுக்கு உள்ள தூரம் 93 மில்லியன் மைல்களாக இருக்கலாம் என்று உத்தேசமாகத் தோன்றியது. அதுவரையில் சூரியனுக்கு உள்ள தூரம் 55 மிலியன் மைல்களாக இருக்கலாம் என்று ஊகிக்கப்பட்டு வந்தது. 1960 களில் நவீன முறைகளைப் பின்பற்றிக் கணக்கிட்டதில் சூரியனுக்கு உள்ள சராசரி தூரம் 149 மிலியன் கிலோ மீட்டர் என்பது தெரிய வந்தது.

 இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, ஜூன் 6 ஆம் தேதி காலை சூரியன் உதித்த பின்னர் சூரிய ஒளித் தட்டில் வெள்ளி கிரகம் கருப்புப் பொட்டாகத் தெரியுமா என்பது உங்கள் ஊரில் வானிலை நிலவரம் எப்படி என்பதைப் பொருத்தது.

Dec 11, 2011

புளூட்டோவை நோக்கி: ஆறு ஆண்டுகளாகப் பயணம்

Share Subscribe
மனிதன் செலுத்திய விண்கலம் ஒன்று கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக அதிவேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. அது தனது இலக்கை எட்டுவதற்கு இன்னும் மூன்றரை ஆண்டுகள் ஆகும். நியூ ஹொரைசன்ஸ் (New Horizons) எனப்படும் அந்த ஆளில்லா விண்கலம் புளூட்டோவை (Pluto) நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.

இந்த விண்கலத்தை செலுத்திய அமெரிக்க நாஸா(NASA) விண்வெளி அமைப்பானது இடைக்கால அறிக்கை போல அந்த விண்கலம் இப்போது எங்கே உள்ளது என்பது பற்றி அண்மையில் தெரிவித்தது.

அந்த விண்கலம் இப்போது ஒரு நாளில் பத்து லட்சம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கிறது. அவ்வளவு வேகத்தில் சென்றாலும் புளூட்டோவை நெருங்க இன்னும் மூன்றரை ஆண்டுகள் ஆகும். இதிலிருந்து புளூட்டோ எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

  நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் செல்லும் பாதை.
இன்னும் செல்ல வேண்டிய தூரம் சிவப்பு நிறத்தில் உள்ளது.
(இடம் கருதி இப்படத்தில் புதன், சுக்கிரன், செவ்வாய் 
கிரகங்கள் குறிப்பிடப்படவில்லை)
புளூட்டோ சுமார் 591 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இத்துடன் ஒப்பிட்டால் சூரியன் பூமியிலிருந்து 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பல சமயங்களிலும் சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை ஓர் அலகாகக் கொள்வது உண்டு. இத்தூரத்தை ஒரு வான் அலகு (Astronomical Unit) என்று நிபுணர்கள் கூறுவர். இந்த கணக்கின்படி புளூட்டோ ஒரு சமயம் 48 கோடி வான் அலகு தூரத்திலும் வேறு சில சமயங்களில் 29 வான் அலகு தூரத்திலும் இருக்கிறது. புளூட்டோவின் சுற்றுப்பாதை நீள் வட்டமாக இருப்பதே அதற்குக் காரணம். புளூட்டோ ஒரு தடவை சூரியனை சுற்றி முடிக்க 248 ஆண்டுகள் ஆகின்றன.

புளூட்டோ சூரிய மண்டலத்தின் கடைசி ஸ்டேஷன். அதைத் தாண்டினால் நாம் அனேகமாக எல்லையற்ற விண்வெளியில் காலடி எடுத்து வைப்பவர்களாகி விடுவோம். சூரிய மண்டல எல்லையில் உள்ள ஒன்று எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? அதற்காகத் தான் 2006 ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி நியூ ஹொரைசன்ஸ் விண்கலத்தைச் செலுத்தினார்கள். அது 2015 ஆம் ஆண்டு ஜூலை வாக்கில் புளூட்டோவை நெருங்கி அதைப் படம் பிடித்து அனுப்புவதுடன் புளூட்டோ பற்றிய தகவலக்ளையும் அனுப்பும்.

யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்களை நெருங்கி ஆராய்வதற்கு கடந்த கால்த்தில் பயனீர்(Pioneer), வாயேஜர்(Voyager) ஆகிய ஆளில்லா விண்கலங்கள் செலுத்தப்பட்டன. அந்த விண்கலங்கள் இந்த இரு கிரகங்களையும் நெருங்கிச் சென்று அவை பற்றிய தகவலகளையும் ப்டங்களையும் அனுப்பின. புளூட்டோ ஒன்று தான் மீதி இருந்தது.

புளூட்டோ சமாச்சாரம் ஒரு சோகக் கதை. சூரிய மண்டலத்தில் நமது அண்டை வீடு என்று சொல்லத்தக்க செவ்வாயைத் தாண்டிச் சென்றால் இருக்கக்கூடிய வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்குமே ராட்சதக் கிரகங்கள். ஆனால் சூரிய மண்டலத்தின் வெளிக் கோடியில் காவல்காரன் போல இருக்கின்ற புளூட்டோ, புதன் கிரகத்தைக் காட்டிலும் சிறியது. எனினும் புளூட்டோவை நான்கு குட்டி சந்திரன்கள் சுற்றி வருகின்றன.

புளூட்டோவும் மற்ற சில கிரகங்களும்
சூரிய மண்டலத்தில் புளூட்டோவையும் சேர்த்து ஒன்பது கிரகங்கள் உள்ளதாகக் கடந்த பல ஆண்டுகளாகப் பள்ளிகளில் போதிக்கப்பட்டு வந்தது. விஞ்ஞானிகளும் அவ்வாறே கூறி வந்தனர்.

ஆனால் 2006 ல் நடந்த சர்வதேச வானவியல் நிபுணர்கள் சங்க மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி புளூட்டோ ஒரு கிரகம் அல்ல என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு அதன் சிறிய வடிவம் காரணமல்ல. ஒரு கிரகம் என்ற அந்தஸ்து இருக்க வேண்டுமானால் அது தனது வட்டாரத்தில் உள்ள வேறு சிறிய வான் பொருட்கள் இல்லாதபடி அவற்றை ஈர்த்து அந்த வட்டாரத்தில் தனது ஆளுமையை நிலை நாட்டியிருக்க வேண்டும். அந்த அளவுகோலின்படி புளூட்டோ கிரகம் அல்ல என்று முடிவு செய்யப்பட்டது.

புளூட்டோ.
ஹப்புள் டெலஸ்கோப் எடுத்த படம்
இதை வேறு விதமாகச் சொல்வதானால் ஒரு பேட்டையில் ‘தாதா’ ஒருவர் தனது போட்டியாளர்களை ஒடுக்கி தனது அதிகாரத்தை நிலை நாட்டியிருக்க வேண்டும். அப்படியானவரே ‘தாதா’ என குற்றக் கும்பல் வட்டாரத்தினரால் மதிக்கப்படுவார்.

புளூட்டோ இருக்கின்ற வட்டாரத்தில் பல ‘சிறு கோள்கள்’ உள்ளன. அந்த வகையில் புளூட்டோவும் ‘சிறு கோள்’ என்று தீர்மானிக்கப்பட்டது. எனினும் புளூட்டோவை கிரகம் என்ற அந்தஸ்திலிருந்து அகற்றியது சரியல்ல என்று கருதுவோர் நிறையவே உள்ளனர். நியூ ஹொரைசன்ஸ் விண்கலத்தை அனுப்பிய குழுவினர் புளூட்டோ ஒரு கிரகம் தான் என்று கருதுகின்றனர்.

புளூட்டோவை கிளைட் டாம்பா (Clyde Tombaugh) என்ற அமெரிக்க வானவியல் விஞ்ஞானி நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள வான் ஆராய்ச்சிக்கூடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது 1930 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். அதனால் நியூ மெக்சிகோ மாகாண சட்ட மன்றம் புளூட்டோ ஒரு கிரகம் தான் என்று அடித்துக் கூறி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. டாம்பா இல்லினாய் மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதால் இல்லினாய் மாகாண சட்ட மன்றமும் புளூட்டோ ஒரு கிரகம் தான் என்று கூறி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கலிபோர்னியா மாகாண சட்ட ம்ன்றமும் புளூட்டோவுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றியது.

புளூட்டோவுக்கு ஆதரவாக இயக்கம் நீடிக்கிறது
புளூட்டோவுக்கு கிரக அந்தஸ்து கிடையாது என்று சர்வதேச வானவியல் யூனியன் (International Astronomical Union) 2006 ஆம் ஆண்டில் எடுத்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு உள்ளதற்குக் காரணம் உண்டு. இந்த யூனியனில் மொத்தம் 9000 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 2700 பேர் தான் மாநாட்டில் பங்கு கொண்டனர். புளூட்டோவை நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது அரங்கில் 424 பேர் தான் இருந்தன்ர். இக்காரணத்தாலும் புளூட்டோ பற்றிய தீர்மானம் குறித்து இன்னமும் சர்ச்சை நிலவுகிறது. புளூட்டோவுக்கு மீண்டும் கிரக அந்தஸ்து கிடைக்கச் செய்ய இன்னமும் இயக்கம் நடந்து வருகிறது.

கிரேக்க புராணப்படி புளூட்டோ பாதாள உலகின் மன்னன். புளூட்டோ மரணத்தின் தேவன் என்றும் சில புராணங்கள் கூறுகின்றன. ஆக, கிரக அந்தஸ்திலிருந்து கீழே தள்ளப்பட்ட தண்டனையை புளூட்டோ என்றாவது ஒரு நாள் வென்று மறுபடி கிரக அந்தஸதைப் பெற்றால் வியப்பில்லை.

Nov 25, 2011

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ இயலுமா?

Share Subscribe
இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், பலருக்கும் செவ்வாய் கிரகத்தைக் கண்டால் ஆகாது. செவ்வாய் தீங்கு விளைவிக்கின்ற கிரகம் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம். செவ்வாய் கிரகத்தைப் பிடிக்காது என்பதால் செவவாய்க் கிழமையைக் கூட ஒதுக்கிவிடுவார்கள். அக்கிழமையில் புதிய முயற்சிகளைத் தொடங்க விரும்ப மாட்டாகள். ஆனால் வானவியல் நிபுணர்களுக்கும் விண்வெளித் துறையினருக்கும் செவ்வாய் மிகவும் வேண்டப்பட்ட கிரகமாகும்.

 நீல நிறத்தில் உள்ளது பூமியின் சுற்றுப்பாதை.
சிவந்த நிறம் செவ்வாயின் சுற்றுப்பாதை.
டெலஸ்கோப் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து அதிகம் ஆராயப்பட்ட கிரகம் செவ்வாய் தான். வாய்ப்பான சமயத்தில் செவ்வாய் கிரகத்தை விடிய விடியத் தொடந்து ஆராய்ந்து கொண்டே இருக்கலாம். மனிதன் வேறு ஒரு கிரகத்துக்கு போக விரும்பினால செவ்வாய் கிரகம் ஒன்றுக்குத் தான் செல்ல முடியும். ஆகவே தான் வேறு எந்த கிரகத்தையும் விட செவ்வாய்க்குத் ஆளில்லா விண்கலங்கள் நிறைய அனுப்பப்பட்டன. இப்போது கியூரியாசிடி விண்கலம் அனுப்பப்படுகிறது.

மற்ற கிரகங்களை விட செவ்வாயைப் பற்றித் தான் நிறைய நூல்கள் வெளியாகியுள்ளன. ஹாலிவுட் படத் தயாரிப்பாளர்களும் செவ்வாயைப் பின்புலனாக வைத்து நிறைய திரைப்படங்களை எடுத்துள்ளனர்.

சூரிய மண்டலத்தில் பூமியும் செவ்வாயும் அடுத்தடுத்த சுற்றுப்பாதைகளில் அமைந்துள்ளன. இரவு வானில் வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய கிரகங்களில் செவ்வாயும் ஒன்று. வானவியலின்படி செவ்வாய் இப்போது சிம்ம ராசியில் உள்ளது. நீங்கள் அதிகாலை நான்கு மணி வாக்கில் எழுந்து வானைப் பார்த்தால் செவ்வாய் கிரகம் தலைக்கு மேலே தெரியும். சிவந்த நிறத்தில் ஒளிப்புள்ளியாகத் தெரியும். அதன் நிறத்தை வைத்துத் தான் அக்கிரகத்துக்கு செவ்வாய் என்று நமது முன்னோர்கள் பெயரிட்டுள்ளனர்.

வடிவத்தில் செவ்வாய் கிரகம் பூமியை விடச் சிறியது. செவ்வாய் கிரகத்தில் மலைகள் உள்ளன. வட்ட வடிவப் பள்ளங்கள் நிறைய உள்ளன. நதிகள் ஓடிய தடங்கள் உண்டு. ஆனால் நதிகள் இல்லை. செவ்வாய் கிரகம் வெறும் பொட்டல். உயிரினம் ஏதுமில்லை.

இடது புறம் பூமி.
வலது புறம் உள்ளது செவ்வாய்.
செவ்வாய் கிரகத்தில் உள்ள அவிந்து போன எரிமலை எவரெஸ்ட் சிகரத்தை விட உயரமானது. சூரிய மண்டலத்திலேயே இது தான் மிக உயரமான சிகரமாகும்.

பல்வேறு காரணங்களால் மனிதன் புதன் கிரகத்தில் அல்லது வெள்ளி (சுக்கிரன்) கிரகத்தில் போய்க் குடியேற முடியாது. சந்திரனும் ஒத்து வராது. சந்திரனில் பகல் என்பது இரண்டு வாரம். இரவும் அப்படித்தான். இத்துடன் ஒப்பிட்டால் செவ்வாய் கிரகத்தில் பகல் என்பது 12 மணி நேரமே. இரவும் அதே போலத்தான். தவிர,செவ்வாய் கிரகத்தில் காற்று மண்டலம் உள்ளது. சந்திரனில் இல்லை.

 செவ்வாயில் சூரிய அஸ்தமனம்.
ஸ்பிரிட் ஆய்வுக்க்லம் எடுத்த படம்.
பூமியின் காற்று மண்டலத்தில் நாம் சுவாசிப்பதற்கு மிக அவசியமான ஆக்சிஜன் வாயு 21 சதவிகித அளவுக்கு உள்ளது. செவ்வாயில் ஆக்சிஜன் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவு. கார்பன் டையாக்சைட் 95 சதவிகித அளவில் உள்ளது. ஆனால் நவீன தொழில் நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி செவ்வாயின் கார்பன் டையாக்சைடிலிருந்து ஆக்சிஜனைப் பிரித்துப் பயன்படுத்தலாம். தவிர, பெரிய பசுமைக் குடில்களை அமைத்து அவற்றுக்குள் செடி கொடிகளை வளர்த்தால் ஆக்சிஜன் கிடைக்கும்.

 செவ்வாயின் நிலப்பரப்பு.
தரை சிவப்பாக உள்ளதைக் கவனிக்கவும்.
செவ்வாய் கிரகத்தில் என்றோ பெரிய நதிகள் ஓடியதற்கான அடையாளங்கள் உள்ளன என்றாலும் இன்று செவ்வாயில் தண்ணீர் இல்லை. எனினும் செவ்வாயின் வட துருவப் பகுதியில் நிலத்துக்கு அடியில் உறைந்த நிலையில் - பனிக்கட்டி வடிவில் - நீர் உள்ளதாக அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேற முடியும். எனினும் வெளிக்காற்று நுழைய முடியாத, அத்துடன் வலுவான கூரை கொண்ட, கூட்டுக்குள் தான் வாழ இயலும். செவ்வாயின் காற்று மண்டலம் அடர்த்தியானது அல்ல என்பதால் சூரியனிலிருந்தும் விண்வெளியிலிருந்தும் வரக்கூடிய ஆபத்தான கதிர்களிலிருந்து பாதுகாப்பு தேவை. ஆகவே தான் இப்படி கூட்டுக்குள் வாழ்ந்தாக வேண்டும்.

 செவ்வாயில் இப்படியாக நிறுத்தப்பட்டுள்ள
கூட்டுக்குள் தான் வாழ வேண்டும் . படம் : நாஸா
பூமி நல்ல அடர்த்தியான காற்று மண்டலத்தைப் பெற்றுள்ளது என்பதால் அக்காற்று மண்டலம் ஆபத்தான கதிர்களைத் தடுத்து விடுகிறது. அத்துடன் விண்வெளியிலிருந்து வந்து விழும் விண்கற்கள் பூமியின் காற்று மண்டலத்தில் நுழைந்ததும் உராய்வு காரணமாகத் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகி விடுகின்றன. இப்படியான பாதுக்காப்பை செவ்வாயின் காற்று மண்டலம் அளிக்காது.

செவ்வாயில் காற்று மண்டலத்தின் அடர்த்தியைத் திட்டமிட்ட முறையில் செயற்கையாக அதிகரிக்க முடியும் என்றும் காற்று மண்டல ஆக்சிஜன் அளவையும் அதிகரிக்க முடியும் என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர்.  இதற்கு Terraforming என்று பெயர். இதற்கான பல வழிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. இவையெல்லாம் அறிவியல் ரீதியில் சாத்தியமே. செவ்வாயின் வட துருவப் பகுதியிலிருந்து தண்ணீரைப் பெற்றுக் கொள்வதும் சாத்தியமே என்று கூறப்படுகிறது.

 செவவாய் கிரகம் இப்போது
செவ்வாய் கிரகத்தில் மேலும் இரு பிரச்சினைகள் உள்ளன். பூமியில் உள்ளது மாதிரியில் அங்கு வெயில் கிடையாது. குளிர், கடும் குளிர் என இந்த இரண்டைத்தான் காண முடியும். சில சமயங்களில் செவ்வாயில் புழுதிப் புயல் தோன்றும். வானமே தெரியாது. கிரகம் முழுவதையும் சூழ்ந்து வீசுகின்ற இப்புயல பல வாரங்களுக்கு நீடிக்கும்.

செவ்வாயின் காற்று மண்டலத்தை
மாற்றியமைத்தால் இப்படி காட்சி அளிக்குமாம்
இவை அனைத்தையும் சமாளித்து செவ்வாயில் வாழ முடியலாம் என சில நிபுணர்கள் கூறுகின்றனர் .எவ்விதமான கூடாரங்கள் தேவை, ஆக்சிஜனை எப்படி உற்பத்தி செய்து கொள்வது, செடி கொடிகளை எவ்விதம் வளர்ப்பது என பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு நடைமுறை சாத்தியமான திட்டங்கள் ஏட்டளவில் தயாரிக்கப்பட்டுத் தயாராக உள்ளன. தனியார் துறை நிபுணர்களும் பல திட்டங்களை தீட்டியிருக்கிறார்கள்.

செவ்வாயில் திட்டமிட்ட ரீதியில் மககளைக் குடியமர்த்த வேண்டும் என்று கூறும் தனியார் அமைப்புகள் பல உள்ளன. Mars Society, Red Colony போன்றவை அவற்றில் அடங்கும். செவ்வாயில் மனிதன் குடியேறுவதானால் என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறி கடந்த காலத்தில் எண்ணற்ற கட்டுரைகள் வெளியாகியுள்ளன. நிபுணாகள் எழுதிய பல நூல்களும் வெளியாகியுள்ளன். செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் நோக்கில் தான் செவ்வாய் கிரகம் மேலும் மேலும் விரிவாக ஆராயப்படுகிறது.

செவ்வாய்க்குச் செல்வதற்கான ராக்கெட்டுகளையும் விண்கலங்களை உருவாக்கி மற்ற ஏற்பாடுகளையும் செய்வதானால் பல லட்சம் கோடி ரூபாய் தேவை. இப்போதுள்ள நிலையில் அமெரிக்காவால் மட்டுமே செவ்வாய்ப் பயணத் திட்டத்தை மேற்கொள்ள இயலும். அமெரிக்காவுக்கு பல நிதிப் பிரச்சினைகள் இருக்கும் போது செவ்வாய்ப் பயணத் திட்டத்துக்கு இப்போது அவசரம் ஏதுமில்லை தான்.

ஆனால் நாட்டின் கௌரவம் நிலை நாட்டப்பட வேண்டும் என்று நினைத்தால் செலவு அம்சம் பெரிதாகத் தெரியாது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் (இப்போதைய ரஷியாவையும் மற்றும் பல நாடுகளையும் உள்ளடக்கிய பெரிய நாடு) இடையே கடும் போட்டியும் விரோதமும் நீடித்து வந்தது. அப்போது சோவியத் யூனியன் விண்வெளியில் மேலும் மேலும் சாதனைகளை நிகழ்த்தி உலகை அதிசயிக்க வைத்தது. அவ்வித நிலையில் அமெரிக்கா மீதான மதிப்பு குறையலாயிற்று.

அக்காலகட்டத்தில் தான் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி சாதனை நிகழ்த்துவோம் என அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி 1961 ஆம் ஆண்டில் சபதம் ஏற்றார். சோவியத் யூனியனை மிஞ்ச வேண்டும் என்ற வேகத்தில் அமெரிக்க அரசு பெரும் பணத்தை ஒதுக்கிய போது அமெரிக்க சட்டமன்றம் உற்சாகத்துடன் அனுமதி அளித்தது. நாட்டு கௌரவமே முக்கியம் என்று கருதி மக்களும் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்கு பெரும் பணம் செலவிடப்படுவதை ஆட்சேபிக்கவில்லை.

ஆனால் இப்போதுள்ள நிலையில் செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்குப் பெரும் பணம் ஒதுக்குவதை அமெரிக்க சட்டமன்றமோ, அமெரிக்க மக்களோ ஆதரிக்க மாட்டார்கள். அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் ஆகியவை ஒன்றாகச் சேர்ந்து இத்திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாகத் தோன்றவில்லை.

சீனா இப்போது விண்வெளித் துறையில் வேகமாக முன்னேறி வருகிறது. வருகிற ஆண்டுகளில் சீனா செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்பப்போவதாக அறிவித்தால் உடனே அமெரிக்கா வீறு கொண்டு எழுந்து சீனாவை முந்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் செவ்வாய்ப் பயணத் திட்டத்தை அவசர அடிப்ப்டையில் மேற்கொள்ள முற்படலாம்.

செவ்வாய் கிரகம் பற்றிய தொடரின் மற்ற பதிவுகள்:

செவ்வாய் கிரகத்துக்குச் செல்வது எப்படி?
செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிடி என்ன செய்யும்?

Nov 16, 2011

சூரிய மண்டலத்திலிருந்து ஒரு கிரகம் தூக்கி எறியப்பட்டதா?

Share Subscribe
சூரிய மண்டலத்திலிருந்து ஒரு கால கட்டத்தில் பெரிய கிரகம் ஒன்று தூக்கி எறியப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க வானவியல் நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். சூரியனும் கிரகங்களும் தோன்றி 60 கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் இது நிகழ்ந்திருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சவுத்வெஸ்ட் ஆராய்ச்சிக் கழகத்தைச் (Southwest Research Institute) சேர்ந்த நிபுணர் டேவிட் நெஸ்வொமி (David Nesvomy) இவ்வாறு சொல்கிறார்.

சூரிய மண்டலத்தில் ஆரம்பத்தில் எவ்வளவு கிரகங்கள் இருந்திருக்கலாம்?இப்படி இருந்திருக்குமா அல்லது அப்படி இருந்திருக்குமா என்று கம்ப்யூட்டரில் கற்பனையான நிலைமைகளை (simulations) உண்டாக்கி அவற்றின் விளைவுகளை ஆராய்வது உண்டு. அப்படியாகப் பல ஆயிரம் நிலைமைகளைத் தோற்றுவித்து ஆராயந்து அதன் முடிவில் அவர் தமது மேற்கூறிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.

 சூரிய மணலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கிரகம்
இப்படியாக இருந்திருக்கலாம்.
சூரிய மண்டலத்தில் சூரியனை 9 கிரகங்கள் சுற்றுவதாகவே மிக நீண்டகாலம் பள்ளிகளில் போதிக்கப்பட்டு வந்தது. ஆனால் 2006 ஆம் ஆண்டு நடந்த சர்வதேச வானவியல் நிபுணர்கள் மாநாட்டில் புளூட்டோ ஒரு கிரகம் அல்ல என்று முடிவு எடுத்து அதனுடைய கிரக அந்தஸ்தை ரத்து செய்தனர். புளூட்டோவை விலக்கி விட்டுப் பார்த்தால் சூரிய மண்டலத்தில் இப்போது நான்கு ராட்சத கிரகங்களும் நான்கு சிறிய கிரகங்களும் உள்ளன.

 வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கும் ராட்சத கிரகங்கள்.  ராட்சதக் கிரகங்களை காலிப் பானையாக கற்பனை செய்து கொண்டால் வியாழனுக்குள் 1300 பூமிகளையும் சனி கிரகத்துக்குள் 700 பூமிகளையும் யுரேனஸில் 63 பூமிகளையும் நெப்டியூனில் 57 பூமிகளையும் போட்டு அடைத்து விடலாம்.

இவற்றுடன் ஒப்பிட்டால் பூமி, சுக்கிரன், செவ்வாய், புதன் ஆகியவை சிறியவை. நான்கு சிறிய கிரகங்களில் பூமி தான் பெரியது.

 சூரிய மண்டலம்
சூரிய மண்டலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கிரகம் இப்போதுள்ள ராட்சத கிரகங்களைப் போல வடிவில் பெரியதாக இருந்திருக்க வேண்டும் என்பது நெஸ்வோமியின் கருத்தாகும்.

சூரிய மண்டலம் தோன்றிய காலத்தில் நிலையற்ற தன்மை இருந்திருக்க வேண்டும். பூமியானது செவ்வாய், அல்லது வெள்ளி கிரகத்துடன் மோதுகின்ற நிலைமையும் ஏற்பட்டிருக்கலாம். வியாழன் சூரியனுக்கு நெருக்கமாக வர முயன்றிருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் நிகழ்ந்து விடாதபடி ஏதோ ஒரு பெரிய கிரகம் வியாழனை இழுத்துப் பிடித்திருக்க வேண்டும். கடைசியில் அந்த கிரகத்தை விடப் பெரியதான் வியாழன் அந்த கிரகத்தை சூரிய மண்டலத்திலிருந்தே வெளியே தூக்கியெறிவதில் போய் முடிந்திருக்கலாம் என்று நெஸ்வொமி கூறுகிறார்.

நெஸ்வோமி தமது இந்தக் கருத்துக்கு வேறு ஓர் ஆதாரத்தையும் குறிப்பிடுகிறார். கிரகங்கள் தாமாகத் தோன்றுவதில்லை. சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றித் தான் உண்டாகின்றன (சூரியனும் ஒரு நட்சத்திரமே). ஆனால் இப்போது எந்த நட்சத்திரத்தையும் சார்ந்திராமல் --வீட்டை விட்டு ஓடிப் போன பிள்ளை மாதிரியில் -- அண்ட வெளியில் ஏராளமான கிரகங்கள் காணப்படுகின்றன. ஆகவே சூரிய மண்டலத்திலிருந்து ஒரு கிரகம் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று கருத இடம் உள்ளது என்று அவர் கூறுகிறார்.

டாக்டர் நெஸ்வோமியின் கட்டுரை The Astrophysical Journal Letters இதழில் வெளியாகியுள்ளது.

 நெஸ்வோமியின இக்க்ருத்து சரிதானா என்பது வேறு பல விஞ்ஞானிகளும் இது போன்று ஆய்வுகளை நடத்தி உறுதிப்படுத்தினால் தான் ஏற்கத்தக்க ஒன்றாக இருக்கும்.