Showing posts with label விண்வெளி. Show all posts
Showing posts with label விண்வெளி. Show all posts

Nov 12, 2015

ராக்கெட்டின் பகுதி இலங்கை அருகே கடலில் விழும்

Share Subscribe
எப்போதோ உயரே செலுத்தப்பட்ட ஒரு  ராக்கெட்டின் பகுதி வெள்ளிக்கிழமை (நவம்பர் 13 ஆம் தேதி) முற்பகலில் இலங்கைக்குத் தெற்கே கடலில் விழலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.  ஒரு வேளை இது விண்கலம் ஒன்றின் பகுதியாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கடலில் விழப்போகும் அப்பகுதி    இரண்டு மீட்டர் நீளம் (சுமார் 7 அடி) கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் எடை என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை.  இரண்டு டன் அளவுக்கும் இருக்கலாம்.
ராக்கெட் துண்டின் சுற்றுப்பாதை.(சிவந்த நிறம்) Credits: Data - Bill Gray/Project Pluto, Image - Celestia
இது எந்த நாடு செலுத்திய ராக்கெட்டின் பகுதி என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை. சந்திரனை நோக்கி செலுத்தப்பட்ட ராக்கெட்டின் பகுதியாக இருக்கலாம். ஏனெனில் இது பூமியை நீள் வட்டப்பாதையில் சுற்றி வந்துள்ளது. அதன் பாதை சந்திரனின் சுற்றுப்பாதையையும் தாண்டி அமைந்துள்ளது.

 கடந்த 5 ஆம் தேதி இது பூமியிலிருந்து சுமார் 6 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. அங்கிருந்து பூமியை நோக்கி வருகின்ற அது 13 ஆம் தேதி பூமியின் காற்று மண்டலத்தில் நுழையும்.

பின்னர் அது கீழ் நோக்கி மணிக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாயும். அப்போது அது  மிகுந்த சூடேறி தீப்பற்றும்.  அதன் விளைவாக அது வானிலேயே எரிந்து அழிந்து விடலாம்.  அப்படி அது  நடுவானிலேயே அழிந்து விட்டால் சாம்பல் தான் கீழே வந்து விழும்.
ராக்கெட் துண்டு  நடுவானில் அழியாமல் போனால் கடலில் எங்கு விழும் என்பது
 பச்சை வட்டம் வடிவில் காட்டப்பட்டுள்ளது.
ஆனாலும் இலங்கை அரசு முன்னெச்சரிக்கையாக அந்த கடல் பகுதியில் யாரும் மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளது.  அப்பகுதியில் வானில் விமானம் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் செலுத்தப்படும் பல வகையான செயற்கைக்கோள்கள் செயலிழந்த பிறகு கடைசியில் மெல்ல கீழ் நோக்கி இறங்க ஆரம்பிக்கும். காற்று மண்டலத்தில் நுழையும் போது மிகுந்த சூடேறி தீப்பிடித்து அனேகமாக முற்றிலுமாக எரிந்து போகும். செயற்கைக்கோள்களைச் செலுத்தும் ராக்கெட்டுகள் ஒவ்வொரு கட்டத்திலும் கழன்று கீழ் நோக்கி இறங்கும். அவையும் இப்படி தீப்பிடித்து அழிகின்றன.

ஆனாலும் விண்வெளியில் ராக்கெட்டுகளின் துண்டுப் பகுதிகள், செயலிழந்த செயற்கைக்கோள்களின் ப்குதிகள் என  லட்சக் கணக்கில்   இருக்கின்றன. அவை பூமியைத் தொடர்ந்து சுற்றி வருகின்றன.

 பூமிக்கு மேலே கால்பந்தை விட பெரிய சைஸில் உள்ள துண்டுகள் சுமார் 20 ஆயிரம் இருக்கலாம். கோலிக்குண்டு சைஸில் சுமார் 5 லட்சம் துண்டுகள் இருக்கலாம். அதை விடச் சிறியவை சுமார் 10 கோடி இருக்கலாம். இவை அனைத்துமே பூமியைச் சுற்றிவந்த வண்ணம் உள்ளன.

இப்போது பூமியை நோக்கி இறங்க இருக்கும் துண்டுக்கு WT 1190F என்று பெயர்  வைக்கப்பட்டுள்ள்து. உயரே இருக்கும் போதே அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு தொடர்ந்து கவனிக்கப்பட்டு, இந்தத் தேதியில் இந்த நேரத்தில் இந்த இடத்தில் கீழே விழும் என்று முதல் முறையாகக் கணிக்கப்ப ராக்கெட் துண்டு இதுவேயாகும்.

இலங்கைக்குத் தெற்கே கடல் பகுதியில் நாளை காலை 11-50  மணிக்கு இது விழ்லாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச வானவியல் சங்கமும் ஐக்கிய அரபு குடியரசின் விண்வெளி அமைப்பும் சேர்ந்து ஒரு விமானத்தை அமர்த்திக் கொண்டு அந்த ராக்கெட் துண்டு கீழே விழுவதைக் கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளன.

Latest Update

எதிர்பார்த்தபடி அந்த ராக்கெட்  துண்டு இன்று முற்பகலில் இலங்கைக்குத் தெற்கே காற்று மண்டலத்தில் நுழைந்த போது தீப்பிடித்து அழிந்தது. கீழே படம்
தீப்பிடித்து எரிந்தபடி கீழே பாயும் ராக்கெட் துண்டு


Aug 11, 2015

தாங்கள் பயிரிட்ட கீரையை ருசித்த விண்வெளி வீரர்கள்

Share Subscribe
பூமிக்கு மேலே 350 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station) வசித்து வரும் விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்தில் தாங்கள் வளர்த்த கீரையை திங்களன்று புசித்தனர்.

விண்வெளி நிலையத்தில் தானியங்கள், கீரை வகைகள் முதலியன தனிக் கூண்டுகளில் வளர்க்கப்படுவது இது முதல் தடவை அல்ல. இது நீண்டகாலமாக நடந்து வருவதாகும். ஆனால் விண்வெளி வீரர்கள் தாங்கள் பயிரிட்ட கீரையை அவர்களே சாப்பிடுவது என்பது இதுவே முதல் தடவை
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கீரையை பச்சையாக
சுவைக்கும் விண்வெளி வீரர்கள்
.விண்வெளி நிலையத்தில் வளர்க்கப்பட்டது red romaine lettuce  வகைக் கீரையாகும்

லெட்டூஸ் கீரையை வெறுமனே கூட சாப்பிடலாம். விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் வெறுமனே அப்படியே சாப்பிட்டனர். தவிர,கீரையுடன் ஆலிவ் எண்ணெய்,  இனிப்பும் புளிப்பும் கலந்த basalmic vinegar  ஆகியவற்றைச் சேர்த்தும் சாப்பிட்டனர்.

"சாப்பாட்டுக்கு உட்கார்ந்ததும் "அவர்கள் சியர்ஸ் என்று சொல்லி விட்டுத் தான் லெட்டூஸ் கீரையை ருசி பார்த்தனர். " நல்லாத் தான் இருக்கு" என்று 51 வயதான அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி கூறினார்."பிரமாதம்” என்றார் மற்றொரு அமெரிக்கரான லிண்ட்கிரென். “பிடிச்சிருக்கு” என்றார் ஜப்பானிய விண்வெளி வீரர்.
விண்வெளி நிலையத்தில் வளர்க்கப்பட்ட லெட்டூஸ் கீரை
மூன்று ரஷிய விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்துக்கு வெளியே அந்தரத்தில் தொங்கியபடி பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய பங்காக ஒரு பகுதி கீரை தனியே வைக்கப்பட்டது.

லெட்டூஸ் கீரை எனப்படும் வகைக் கீரை தான் அவர்கள் வளர்த்த கீரையாகும். சூரிய வெளிச்சத்துக்குப் பதில் கூண்டுக்குள் இது சிவப்பு, நீல, பச்சை நிற LED பல்புகளின் வெளிச்சத்தில் வளர்க்கப்பட்டது.  நீரை உறிஞ்சும் தன்மை கொண்ட குஷன்கள் மீது தான் விதைப்பு செய்யப்பட்டது.

பூமியில் செய்வது போன்று தண்ணீர் ஊற்ற முடியாது. கிட்டத்தட்ட ஈர்ப்பு சக்தி கிடையாது என்பதால் தண்ணீரை ஊற்றினால் அது கீழே விழுவதற்குப் பதில் விண்வெளி நிலையத்துக்குள்  உருண்டைகளாக நாலாபுறமும் மிதக்கும். எனவே விசேஷ முறையில் குஷன்களுக்குள் செலுத்தப்பட்டது.


பூமியில் வளர்க்கப்பட்ட அதே வகைக் கீரை
கடந்த மாதம் 8 ஆம் தேதி விசேஷ கண்ணாடிக் கூண்டுக்குள்  விதைப்பு நடந்தது. 33 நாட்களில் நன்கு வளர்ந்த நிலையில் அறுவடை செய்யப்பட்டது.

விண்வெளி வீரர்கள் அறுவடை செய்த கீரையில் பாதி தனியாக பேக் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அது அமெரிக்காவில் உள்ள விண்வெளிக் கட்டுப்பாட்டு கேந்திரத்துக்கு அனுப்பப்படும். அங்கு அது பல வகைகளிலும் சோதிக்கப்படும்.

கடந்த ஆண்டில் அவர்கள் இதேபோல கீரை வளர்த்தனர். ஆனால் அந்த கீரை முழுவதும் கீழே விண்வெளி க்ட்டுப்பாட்டு கேந்திரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விண்வெளி நிலையத்தில் அதிகபட்சம் ஆறு விண்வெளி வீரர்கள் இருக்க முடியும்..இவர்களுக்குத் தேவையான உணவு கீழே இருந்து அவ்வப்போது மேலே அனுப்பப்படுகின்றன.  அந்த உணவைத் தான் அவர்கள் சாப்பிடுகிறார்கள். சில சமயங்களில் அமெரிக்க ரஷிய விண்வெளி வீரர்கள் அல்லாமல் ஜப்பான், ஸ்பெயின் போன்ற நாடுகளைச் சேர்ந்த ஓரிருவரும் இருப்பது உண்டு.
2002 ஆம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தில்
தாம் வளர்த்த செடியை ஆராய்கிறார் ரஷிய விண்வெளி வீரர்
எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, அவரவர் விருப்பத்துக்கும் ருசிக்கும் ஏற்ற்வாறு உணவுகள் உயரே அனுப்பப்படுகின்றன.

விண்வெளி நிலையங்களில் விதைப்பு செய்து பயிர்களை வளர்த்து சோதிக்கும் பரிசோதனைகள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.

விண்வெளியில் ஈர்ப்பு சக்தி என்பது மிகவும் குறைவு. தவிர பூமியில் தரையில் பயிரிடப்படும் பயிர்கள் மேல் நோக்கி -- சூரியனை நோக்கி - வளருகின்றன. ஆனால் விண்வெளியில் ஈர்ப்பு சக்தி குறைவு என்பதுடன் மேல் கீழ் என்பது கிடையாது. விண்வெளியில் இருந்தபடி பூமியை சுற்றுகின்ற விண்வெளி நிலையம் ஒரு நாளில் 16 தடவை பூமியை சுற்றுகிறது. இதனால் முளைத்து வெளியே வரும் செடிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

ஒரு சமயம்  விண்கலம் ஒன்றில்  நெல் விதைகளும் விதைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
எதிர்காலத்தில் செவ்வாயில் செடி கொடிகளை  இவ்விதமாக
வளர்க்க வேண்டியிருக்கலாம்
எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்துக்கு ஆறு விண்வெளி வீரர்கள் பயணம் மேற்கொண்டால் போய்ச் சேர எட்டு மாத காலம் ஆகும். உணவுத் தேவையை ஓரளவில்  பூர்த்தி செய்து கொள்ள அவர்கள் விண்கலத்துக்குள்ளாக கீரை, முள்ளங்கி, தக்காளி போன்றவற்றை விளைவித்துக் கொண்டாக வேண்டும்.

இவை தேவையான சத்துக்களை அளிக்கும் என்பதுடன், பயிர்களைப் பார்க்கும் போது விண்வெளி வீரர்களுக்கு மனதுக்கு தெம்பை அளிப்பதாகவும் விளங்கும்

செவ்வாயில் போய் இறங்கிய விண்வெளி வீரர்களுக்கு பூமியிலிருந்து அவ்வப்போது உணவு அனுப்பப்படும் என்றாலும் அங்கு அவர்கள் காய்கறி பழங்களை விளைவித்துக் கொள்ள வேண்டியிருக்கும்.  இதற்கான வகையில் செடி வளர்ப்புக் கூண்டுகள் தயாரிக்கப்படும்.


Feb 4, 2015

விண்வெளியிலிருந்து தமிழகம்

Share Subscribe
இரவில் பிரகாசிக்கும் தமிழக நகரங்கள் நன்றி NASA/earthsky
மேலே நீங்கள் பார்க்கும் படம் பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.இந்த விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர் ஒருவர் 2015 ஜனவரி 15 ஆம் தேதி இந்தியாவில் இரவாக இருக்கின்ற நேரம் பார்த்து இப்படத்தை எடுத்துள்ளார்.

படத்தில் சென்னை நகரம் இல்லை என்றாலும் கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி முதலிய நகரங்கள் காணப்படுகின்றன. கோவை பெரிய நகரம் என்பதால் அது அதிகம் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது.  படம் எடுக்கப்பட்ட சமயத்தில்  தமிழகம் மீது அதிக மேகங்கள் இல்லை என்பதால் (குறிப்பிட்ட இடத்தில் மட்டும் மேகங்கள் உள்ளன)  நகரங்களின் இரவு நேர ஒளி தெளிவாக விழுந்துள்ளது.

 நகரங்களை இணைக்கும் சாலைகளும் வாகனங்களின் ஒளி காரணமாக நீண்ட கோடுகளாகத் தென்படுகின்றன. படத்தில் நீண்டு கருமையாகக் காணப்படும் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையாகும்.படத்தில் கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களையும் காண முடிகிறது.
  நாஸாவின் ஜெமினி விண்கலம் பகலில் எடுத்த படம். நன்றி:NASA/earthsky
மேலே உள்ள படம் பகல் நேரத்தில்  விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்டதாகும். 1966 ஆம் ஆண்டு செப்டம்பரில் நாஸாவினால் உயரே செலுத்தப்பட்ட ஜெமினி -11 விண்கலத்தில் இருந்த விண்வெளி வீரர்கள் இப்படத்தை எடுத்தனர். ஜெமினி விண்கலம் மூலம் இரு அமெரிக்க விண்வெளி வீரர்கள் உயரே சென்றனர்.

விண்கலம் அதிக உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது இப்படம் எடுக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. பூமியின் வளைவையும் படத்தில் காண முடிகிறது. 

நிலப் பகுதி மீது அங்குமிங்கும் மேகங்கள் இருப்பதைக் காணலாம். படத்தில் நீண்ட தண்டு போன்று காணப்படுவது ஜெமினி விண்கலத்துடன் இணைந்த ஒரு பகுதியாகும்.

Oct 29, 2014

ஆகாயத்திலிருந்து குதித்தவர்

Share Subscribe
”அப்படியென்ன, அவர் ஆகாசத்திலிருந்து குதிச்சவரா? “ என்று கேட்பதுண்டு. இப்போது ஒருவர் உண்மையிலேயே ஆகாயத்திலிருந்து - அதாவது 41 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்து உலக சாதனை படைத்துள்ளார். இவ்விதம் உயரே இருந்து குதிப்பது skydiving  என்று குறிப்பிடப்படுகிறது.

கூகுள் என்றால் பெரும்பாலோருக்குத் தெரியும். கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆலன் யுஸ்டாஸ் (Alan Eustace) (வயது57 ) இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவர் ஒரு கம்ப்யூட்டர் விஞ்ஞானி.

கீழே குதித்தது சரி, அவர் எப்படி அவ்வளவு உயரத்துக்குச் சென்றார்? ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட  ஒரு பிரும்மாண்டமான பலூனின் அடிப்புறத்தில் அவர் இணைக்கப்பட்டிருந்தார். ஹீலியம் வாயுவானது காற்றை விட லேசானது. ஆகவே பலூன் தானாகவே மேலே மேலே சென்று கொண்டே இருக்கும்.

வானில் மிக உயரத்திலிருந்து கீழே பார்த்தால் எல்லாமே பிரமிப்பூட்டுவதாக இருக்கும். பரவச உணர்வு ஏற்படும். ஆனால் 11 கிலோ மீட்டர் உயரத்துக்குப் போனால் குளிர் மைனஸ் 11 டிகிரி அளவுக்கு இருக்கலாம். சுவாசிக்கப் போதுமான காற்று கிடைக்காது.  மயக்கம் வரும். விரைவில் மரணம் ஏற்படும்.
விசேஷ காப்பு உடையில் அந்தரத்தில் யுஸ்டாஸ்
அந்த அளவில் வானில் மிக உயரத்துக்குச் செல்வது என்பது ஆபத்தான பயணமே. ஆகவே தான் யுஸ்டாஸ் விண்வெளி வீரர் அணிவது போன்ற விசேஷ காப்பு உடையை அணிந்திருந்தார். சுவாசிப்பதற்கான காற்றை அளிப்பது, கடும் குளிர் தாக்காமல் தடுப்பது உட்பட அந்த காப்பு உடையில் எல்லா வசதிகளும் இருந்தன.

பலூன் அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள ரோஸ்வெல் என்னுமிடத்திலிருந்து 24 ஆம் தேதி காலை 7 மணிக்கு உயரே கிளம்பியது. சுமார் 2 மணி 7 நிமிஷங்களுக்குப் பிறகு  பலூன் 1,35,890 அடி ( 41,420 மீட்டர்)  உயரத்தை எட்டியது.
ஹீலியம் நிரப்பப்பட்ட ராட்சத பலூனின் நுனியில் யுஸ்டாஸ்( Courtesy:Paragon Space Development Corporation)
                                              
 இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உலக சாதனை படைத்த பெலிக்ஸ் பாம் கார்ட்னர் எட்டிய உயரத்தை விட சுமார் இரண்டு கிலோ மீட்டர் அதிகம்.
யுஸ்டாஸ் தமது அனுபவம் பற்றிப் பின்னர் கூறுகையில் " அற்புதமான அனுபவம். அங்கிருந்து பார்த்த போது வானம் காரிருளாக இருந்தது. கீழே காற்று மண்டல அடுக்குகள் தெரிந்தன ” என்றார்.

சாதனை படைக்கும் உயரத்துக்குச் சென்றதும் அவர் பலூனிலிருந்து  தம்மைத் துண்டித்துக் கொண்டார். பூமியின் ஈர்ப்பு சக்தியின் விளைவாக அவர் கீழ் நோக்கி விழலானார். உயரே தூக்கிப் போட்ட கல் எப்படி பூமியை நோக்கி விழுமோ அது போல அவர் கீழ் நோக்கி வேகமாக விழலானார்.
சுவாசக் கருவி அணிந்தவராக தலைக் கவசத்துக்குள் யுஸ்டாஸ்
சுமார் நாலரை நிமிஷம் அவர் இப்படி கீழ் நோக்கி இறங்கிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவர் மணிக்கு 1321 கிலோ மீட்டர் வேகத்தில் விழுந்து கொண்டிருந்தார். உண்மையில் இது பயங்கர வேகமே.

தரையிலிருந்து சுமார் 5400 மீட்டர் உயரத்தில் பாரசூட் விரிந்து கொண்டது. அதன் பிறகு அவர் கீழ் நோக்கி இறங்கும் வேகம் மிகவும் குறைந்தது. அவர் வானை நோக்கிக் கிளம்பிய இடத்திலிருந்து சுமார் 113 கிலோ மீட்டர் தள்ளி ஓரிடத்தில் மெல்லத் தரை இறங்கினார்.

யுஸ்டாஸ் வானிலிருந்து குதிப்பது இது முதல் தடவை அல்ல. இந்த விஷயத்தில் அவருக்கு முன்னரே நல்ல பயிற்சி உண்டு. தவிர, அவருக்கு விமானங்களை ஓட்டும் அனுபவமும் உண்டு.
பாராசூட் உதவியுடன் தரை இறங்கும் கட்டத்தில்
 யுஸ்டாஸ்  (courtesy; Paragon Space Development Corporation)
சுமார் 34 மாத காலம் தொடர்ந்து நடந்து வந்த ஏற்பாடுகளின் பலனாகவே யுஸ்டாஸினால் உலக சாதனை படைக்க முடிந்தது. இதில் அவருக்கு உதவிகளையும் ஏற்பாடுகளும் செய்வதில் ஒரு பெரிய படையே செயல்பட்டது.

முன்னர் 2012 ஆம் ஆண்டில் பாம் கார்ட்னர் சாதனை நிகழ்த்திய போது பிரபல மென்பான நிறுவனம் முன்னின்று எல்லா செலவுகளையும் ஏற்றுக்கொண்டது. ஆனால் யுஸ்டாஸ் தமது சொந்த ஏற்பாட்டின் மூலமே தமது முயற்சியை மேற்கொண்டார்.

இதற்கு முன்னர் 2012 அக்டோபரில் பாம் கார்ட்னர் நிகழ்த்திய சாதனை பற்றிய விவரம் காண்க: 39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால்....  



Oct 21, 2014

அமெரிக்க ராணுவத்தின் மர்ம விண்வெளி விமானம்

Share Subscribe
அமெரிக்க ராணுவத்தின் விண்வெளி விமானம் ஒன்று  22 மாத காலம் பூமியைச் சுற்றி விட்டு இப்போது பத்திரமாகத் தரை இறங்கியுள்ளது. இத்தனை காலம் அது விண்வெளியில் என்ன செய்தது என்பது தான் மிக மர்மமாக உள்ளது.ராணுவத் துறை சம்பந்தப்பட்டது என்பதால் இந்த விஷயம் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

இது ஆளில்லாத விமானம். ஆனால் அதில் “ஆராய்ச்சிக்கான” நுட்பமான கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. கடந்த 2012 டிசம்பர் 11 ஆம் தேதி உயரே செலுத்தப்பட்ட இந்த விமானம் இம்மாதம் 17ஆம் தேதி பூமிக்குத் திரும்பியது.

பூமியை  சுற்றிச் சுற்றி வந்தது என்ற முறையில் இதனை செயற்கைக்கோள் என்று தான் கூற வேண்டும். ஆனால் வடிவமைப்பில் இது விமானம் போன்று இருப்பதால்,அத்துடன் விண்வெளியில் இயங்கியதால் இதனை விண்வெளி விமானம் எனலாம்.
அமெரிக்க ராணுவத்தின் விண்வெளி விமானம்
இந்த விண்வெளி விமானம் அமெரிக்க ராக்கெட் ஒன்றுடன் இணைக்கப்பட்டு செங்குத்தாக உயரே செலுத்தப்பட்டது. உயரே சென்று 22 மாத காலம் செயல்பட்ட பிறகு அது பூமியை நோக்கி இறங்கியது.

பூமியை நோக்கி காற்று மண்டலம் வழியே எது இறங்கினாலும் அது பயங்கரமான அளவுக்கு சூடேறி தீப்பற்றும். விண்வெளி விமானம் தீப்பற்றி அழிந்து விடக்கூடாது என்பதற்காக அதன் வெளிப்புறத்தில் கடும் வெப்பத்தைத் தாங்கி நிற்கும் ஓடுகள்  பதிக்கப்பட்டிருந்தன.

அமெரிக்காவின் நாஸா 1983 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரை பயன்படுத்திய ஷட்டில் (Space Shuttle) எனப்படும் ( விமானம் போல் வடிவமைப்பு கொண்டது)  வாகனங்களிலும் இதே போல வெப்பத் தடுப்பு ஓடுகள் பதிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளி ஷட்டில்: ஷட்டில் வாகனம் பற்றி சுருக்கமாகக் குறிப்பிடுவது உசிதமாக இருக்கும். இது உண்மையில் பிரும்மாண்டமான வாகனம். ஷட்டில் செங்குத்தாக உயரே கிளம்பியது. இதன் இரு புறங்களிலும் இரு ராக்கெட்டுகள் பொருத்தப்பட்டிருந்தன. ஷட்டில் வாகனமே ராக்கெட் எஞ்சின்கள் பொருத்தப்பட்டதாக இருந்தது. இந்த எஞ்சினுக்கு திரவ ஆக்சிஜனையும் திரவ ஹைட்ரஜனையும் அளிப்பதற்காக ஷட்டிலுடன் ராட்சத எரிபொருள் டாங்கி பொருத்தப்பட்டிருந்தது.

செலவு அதிகம். நினைத்த நேரத்தில் தயார்படுத்த முடியாத நிலை. எரிபொருள் டாங்கியின் மீது பூசப்பட்ட நுரை பொருள் பிய்த்துக் கொண்டு ஷ்ட்டிலைத் தாக்கி அதன் விளைவாக  ஷட்டிலின் காப்பு ஓடுகள் பெயர்ந்து போனதால் ஏற்பட்ட பிரச்சினை. இப்படியான காரணங்களால் ஷட்டில் போன்ற வாகனத்தை மறுபடி தயாரிப்பதில்லை என நாஸா முடிவு செய்தது.

 நாஸா பயன்படுத்திய ஷட்டில் வாகனம்.
பழுப்பு நிறத்தில் காணப்படுவது எரிபொருள் டாங்கி  
அமெரிக்க ராணுவத்தின் இப்போதைய விண்வெளி விமானம் முந்தைய ஷட்டில் வாகனம் போலவே கிளைடர் பாணியில் விண்வெளித் தளத்தில் வந்து இறங்கியது.

இங்கே சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டாக வேண்டும்.அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் சீகாகஸ் என்னுமிடத்தில் சில நாட்களுக்கு முன்னர் வானிலிருந்து அதிசயப் பொருள் ஒன்று அதி வேகத்தில் கீழே வந்து விழுந்தது.

அது ஐந்து அங்குல நீள அகலம் கொண்டதாக தடிமனாக இருந்தது. அது ஒரு வித ஓடு என்பது தெரிந்தது. அந்த ஓடு மூன்று அடுக்கு கொண்டதாக இருந்தது.
அடிப்புறத்தில் ரப்பர் மாதிரியிலான பொருள். நடு அடுக்கு உலோகத்தால் ஆனது. மேற்புற அடுக்கு மண் போன்ற பொருளால் ஆனது.

நாஸா விளக்கமளிக்கையில் இது என்றோ ஓய்வு பெற்றுவிட்ட ஷட்டில் வாகனத்தின் ஓடு அல்ல என்று கூறி விட்டது. அனேகமாக இது அமெரிக்க ராணுவத்தின் விண்வெளி விமானத்தில் பொருத்தப்பட்டு பின்னர் தனியே கழன்று வானிலிருந்து விழுந்த ஓடாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அமெரிக்க ராணுவத்தின் விண்வெளி விமானம் ஒரு புறம் இருக்க, இந்தியாவும் ஒரு வகை விண்வெளி விமானத்தைத் தயாரிக்கும் திட்டத்தைத் தயாரித்துள்ளது. இதன் சுருக்கமான பெயர் அவதார்(Avatar).இப்பெயரானது Aerobic Vehicle for hypersonic  Aerospace Transportation  என்பதன் சுருக்கமாகும்.

 விண்வெளி விமானம் என்று சொல்லத்தக்க அவதார் வாகனம் விமானம் போன்று விமான நிலைய ஓடுபாதையிலிருந்து உயரே கிளம்பும். இந்த விமானத்தில் ஹைட்ரஜன் திரவ எரிபொருள் இருக்கும். அவதார் உயரே கிளம்பியதும் காற்றுமண்டலத்திலிருந்து காற்றை உறிஞ்சும். அக்காற்றிலிருந்து ஆக்சிஜன் வாயுவைத் தனியே பிரித்து அந்த வாயுவை திரவ ஆக்சிஜனாக மாற்றிக் கொள்ளும்.
அவதார் விண்வெளி விமானத்தின் மாடல்
குறிப்பிட்ட உயரம் சென்றதும் அவதார் வாகனம் ஒரு ராக்கெட் போல செயல்பட்டு திரவ ஹைட்ரஜனையும் திரவ ஆக்சிஜனையும் சேர்த்து எரித்து சுமார் 250 அல்லது 300 கிலோ மீட்டர் உயரத்தை அடைந்து ஒரு  செயற்கைக்கோளை அதி வேகத்தில் செலுத்தும். சுமார் ஒரு டன் எடை கொண்ட செயற்கைக்கோளை அது செலுத்தும் என்று கருதப்படுகிறது.

இந்த வேலை முடிந்ததும் அது கீழ் நோக்கி இறங்கி விமான நிலையத்தில் விமானம் போன்று இறங்கும். செயற்கைகோள்களைச் செலுத்த அவதார் வாகனத்தைத் திரும்பத் திரும்ப 100 தடவை செலுத்த இயலும் என்று கருதப்படுகிறது. அவதார் விண்வெளி விமானத்தின் வெளிப்புறத்திலும் வெப்பத் தடுப்பு ஓடுகள் இருக்கும் என்று கருதப்படுகிறது.

அவதார் விண்வெளி விமானம் உயரே கிளம்பும் கட்டத்தில் அதன் எடை 25 டன் அளவில் இருக்கும். இத்துடன் ஒப்பிட்டால் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட் உயரே கிளம்பும் கட்டத்தில் அதன் எடை சுமார் 300 டன்.

செயற்கைக்கோள் ஒன்றை  உயரே செலுத்துவதற்கு ராக்கெட்டைப் பயன்படுத்தும் போது அந்த ராக்கெட் முற்றிலுமாக அழிந்து விடுகிறது. ஒவ்வொரு தடவையும் பெரும் செலவில் ராக்கெட்டை உருவாக்க வேண்டியிருக்கிறது. ஆகவே செயற்கைக்கோளைச் செலுத்துவதற்கு நிறைய செலவாகிறது.

ஆனால் செயற்கைக்கோள்களைச் செலுத்த அவதார் வாகனத்தை திரும்பத் திரும்பப் பயன்படுத்த முடியும் என்பதால் செயற்கைக்கோள்களைச் செலுத்துவதற்கு ஆகும் செலவு கணிசமாகக் குறையும். எனினும் அவதார் உருவாக்கப்பட்டு பயனுக்கு வருவதற்கு சில ஆண்டுகள் ஆகலாம்.


Sep 21, 2014

விண்வெளியில் மரித்த ரஷியப் பல்லிகள்

Share Subscribe
ஜெர்மனியில் ராக்கெட் நிபுணர் பான் ப்ரான் பிரபல வி-2 ராக்கெட்டை  உருவாக்கிய காலத்திலிருந்து கடந்த சுமார் 70 ஆண்டுகளில் எண்ணற்ற பிராணிகளும் பூச்சிகளும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவை உயிருடன் பூமிக்கு மீட்கப்பட்டது என்பது அபூர்வமே.

ஆரம்ப காலத்தில் விண்வெளிப் பிராந்தியம் என்பது எப்படிப்பட்டது ? மனிதன் விண்வெளிக்குச் சென்றால் எதிர்ப்படக்கூடிய ஆபத்துகள் யாவை என்று அறிந்து கொள்ளும் நோக்கில் தான் இவை உயரே அனுப்பப்பட்டன.

ரஷிய விண்கலத்தில் சென்ற லைகா
விண்வெளிக்குச் சென்று மரித்த நாய்கள் பல உண்டு. பூமிக்கு உயிருடன் திரும்பிய நாய்களும் உண்டு. விண்வெளிக்குச் சென்ற நாய்களில் லைக்கா உலகெங்கிலும் பிரபலம் பெற்றது. 1957 ஆம் ஆண்டில் ரஷியாவின் ஸ்புட்னிக் விண்கலத்தில் வைத்து உயரே செலுத்தப்பட்ட லைகாவின் படம் உலகில் பல பத்திரிகைகளில் வெளியாகியது.

இதன் பிறகு 1961 ஆம் ஆண்டு ஏப்ரலில் ரஷியாவின் யூரி ககாரின் வோஸ்டாக் விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்று திரும்பினார். விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் அவரேயாவார்.

அமெரிக்காவும் சரி, நாய், குரங்கு போன்ற பிராணிகளை விண்வெளிக்கு அனுப்பி வைத்து சோதனைகளை நடத்திய பின்னரே முதல் அமெரிக்கரை விண்வெளிக்கு அனுப்பியது.
அமெரிக்கா அனுப்பிய குரங்கு
பிரான்ஸ்  விண்வெளிக்கு மனிதனை அனுப்பியது கிடையாது என்றாலும் அது தனது ராக்கெட்டுகளில் பிராணிகளை விண்வெளிக்கு அனுப்பியது.

  விண்வெளிக்கு முதல் சீனரை அனுப்பியதற்கு முன்னர்  சீனாவும் இவ்விதமே பிராணிகளை அனுப்பிச் சோதனைகளை நடத்தியது.
தேனீக்கள். விண்வெளிக்கு அமெரிக்க அனுப்பியதற்கு முன்னர்
அடுத்து விண்வெளிக்கு நாய் அல்லது குரங்கை அனுப்பப்போகும் நாடு இந்தியாவாக இருக்கும். ஏனெனில் விண்வெளிக்கு இந்திய ராக்கெட் மூலம் விண்வெளி வீரரை அனுப்பும் திட்டம் இந்தியாவிடம் உள்ளது. இந்தியா உருவாக்கப் போகும் விண்கலத்தில் முதலில் செல்வது  நாயாக இருக்கலாம்.அல்லது குரங்காகவும் இருக்கலாம்.

விண்வெளி நிலைமைகள் எவ்விதமானவை என்று அறியப்பட்ட பிறகும் வேறு  நோக்கிலான ஆராய்ச்சிக்காக அமெரிக்காவும் சரி, ரஷியாவும் சரி அவ்வப்போது எலிகளையும் பூச்சிகளையும் அனுப்பிக் கொண்டு தான் இருக்கின்றன.கடந்த பல ஆண்டுகளாக பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல பிராணிகளையும் பூச்சிகளையும் வைத்து நீண்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு ஜூலையில் ரஷியா பட்டுப்புழு முட்டைகள், பழ வண்டுகள், பல்லிகள் ஆகியவற்றைக் கொண்ட விண்கலத்தை உயரே செலுத்தியது. மொத்தம் ஐந்து பல்லிகளில்  நான்கு பெண் பல்லிகள். ஒரு ஆண் பல்லி.
ரஷியா அண்மையில் விண்வெளிக்கு அனுப்பிய  பல்லிகள்
விண்வெளியில் உள்ள எடையற்ற நிலையில் இனப்பெருக்கம் எந்த அளவுக்கு சாத்தியம் என்று கண்டறிவது இதன் நோக்கமாக இருந்தது. உடனே மேற்கத்திய ஏடுகள் இதற்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் அளித்தன. சில மேற்கத்திய ஊடகங்கள் “விண்வெளி செல்லும் செக்ஸ் பல்லிகள்’ என்றும் தலைப்பிட்டன.

விண்வெளியில் செலுத்திய பின்னர்  ஒரு கட்டத்தில் அந்த விண்கலத்துடன் தொடர்பு அறுந்தது. பின்னர் மீண்டும் தொடர்பு சாத்தியமாகியது. இரண்டு மாதம் இருக்க வேண்டிய விண்கலம் 44 நாட்கள் இருந்து விட்டு செப்டம்பர் முதல் தேதி பூமிக்குத் திரும்பியது. பழ வண்டுகள் உயிரோடு இருந்த போதிலும் பல்லிகள் செத்துப் போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பல்லிகள் மரித்தன என்ற செய்தியை மேற்கத்தியப் பத்திரிகைகள் ’செக்ஸ் பல்லிகள் மரித்தன ’ என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டன.

விண்வெளியிலான இனப் பெருக்க ஆராய்ச்சிக்கு ஒரு நோக்கம் உண்டு. மனிதன் பல மாத காலம் விண்வெளியில் நீண்ட பயணம் மேற்கொள்கின்ற கட்டம் ஏற்பட்டால் விண்கலத்துக்குள்ளாகவே கோழிகளை வளர்த்து, காய்கறிகளை பயிரிட்டு உணவுத் தேவையை ஓரளவேனும் தீர்த்துக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும்.

கடந்த காலத்தில் பலவகையான தானியங்கள் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவற்றை விசேஷ பாத்திகளில் வளர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஓரளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

உலகில் எண்ணற்ற கால்நடைப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் நோக்கமே இனப் பெருக்கம் தான். இவற்றில் உள்ள காளைகளை  செக்ஸ் காளைகள் என்றோ செக்ஸ் கிடாக்கள் என்றோ யாரும் வருணிப்பதில்லை.

புலி, சிங்கம் என வன விலங்குகளுக்கான காப்பங்களும் உள்ளன. அவற்றின் இனம் அழிந்துவிடாமல் காப்பதே அதன் நோக்கம். இனப் பெருக்கம் என்பது கீழ்த்தரமான  நோக்கில் காணப்பட வேண்டிய ஒன்றல்ல.

Dec 21, 2013

குலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு?

Share Subscribe
சென்னைக்கு வடக்கே ஸ்ரீஹரிகோட்டா விண்வெளிக் கேந்திரத்திலிருந்து இந்தியாவின் செயற்கைக்கோள்களும் ஆளில்லா விண்கலங்களும் செலுத்தப்பட்டு வருகின்றன. இங்கு இரண்டு ராக்கெட் செலுத்து மேடைகள் உள்ளன மூன்றாவது மேடை ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதற்கிடையே வேறு ஓர் இடத்தில் புதிதாக ஒரு விண்வெளிக் கேந்திரம் ஒன்றை அமைக்கத் திட்டம் உள்ளது.

இப்புதிய விண்வெளிக் கேந்திரத்தைத் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் பல தரப்பினர் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றனர்
.  .
ராக்கெட்டுகளைச் செலுத்துவதற்கான விண்வெளிக் கேந்திரத்தை அமைக்க முதலில் இரு முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். முதலாவதாக அது கிழக்குக் கடற்கரை ஓரமாக இருக்க வேண்டும். இரண்டாவதாக அது கூடியவரை பூமியின் நடுக்கோட்டுக்கு (Equator) அருகே இருக்க வேண்டும். குலசேகரப்பட்டினம் இந்த இரு தகுதிகளையும் பூர்த்தி செய்கிறது. அது கடலோரமாக அமைந்துள்ளது. அது 8 டிகிரி வடக்கு அட்சரேகையில் (Latitude) அதாவது பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே அமைந்துள்ளது.

அது ஏன் கிழக்குக் கடற்கரை ஓரமாக இருக்க வேண்டும்? பொதுவில் பெரும்பாலான செயற்கைக்கோள்கள் கிழக்கு திசை நோக்கித் தான் செலுத்தப்படுகின்ற்ன. உயரே கிளம்பும் ராக்கெட்டில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு அதன் காரணமாக அது வெடிக்கக்கூடும் அவ்வித நிலைமையில் ராக்கெட்டின் பகுதிகள் கடலில் விழுவது தான் நல்லது.

வேறு சில சமயங்களில் ஏதோ கோளாறு காரணமாக  ராக்கெட் திசை திரும்பி கரையை நோக்கி அதாவது விண்வெளிக் கேந்திரத்தை நோக்கிப் பாயலாம். இவ்வித நிலையில் விண்வெளிக் கேந்திர அதிகாரிகள் ராக்கெட்  கடல் பகுதிக்கு மேலாக இருக்கும் போதே அதை  நடுவானில் அழிப்பர்.

இதற்கான பொத்தானை அமுக்குவதற்கென்றே தனி அதிகாரி இருப்பார். உதாரணமாக 2010 ஆம் ஆண்டு டிசமபர்  25 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து  உயரே செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் திசை மாறிய போது இவ்விதமாக நடுவானில் அழிக்கப்பட்டது.

விண்வெளிக் கேந்திரத்தை கூடிய வரை பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே அமைப்பது வழக்கம். இப்படி அமைப்பதால் ஆதாயம் உண்டு. அதாவது பூமி தனது அச்சில் சுழல்வதன் பலனாக ராக்கெட்டுக்கு கூடுதல் வேகம் கிடைக்கும் இது இலவசமாகக் கிடைப்பதாகும்.

பூமியானது பம்பரம் போல மேற்கிலிருந்து கிழக்கு திசை நோக்கி சுழல்கிறது. எனவே பூமிக்கு சுழற்சி வேகம் உண்டு. பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் பூமியின் சுற்றளவு 40,075 கிலோ மீட்டர். பூமி தனது அச்சில் ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு   23.93 மணி நேரம் பிடிக்கிறது..  பூமியின் சுற்றளவை 23.93 ஆல் வகுத்தால் பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் பூமியின் சுழற்சி வேகம் மணிக்கு 1674 கிலோ மீட்டர்.

ஆனால் பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே செல்லச் செல்ல இந்த வேகம் குறையும். உதாரணமாக 20 டிகிரி வடக்கு அட்சரேகையில் சுழற்சி வேகம் மணிக்கு  1569 கிலோ மீட்டராகத் தான் இருக்கும். ஆகவே 20 டிகிரி அட்சரேகையில் ஒரு விண்வெளிக் கேந்திரம் இருந்தால் அங்கிருந்து செலுத்தப்படுகிற ராக்கெட்டுக்கு பூமியின் சுழற்சியால் கிடைக்கிற இலவச வேகம் மேலே சொன்ன அளவுக்குக் குறைவாகத் தான் இருக்கும்.

உலகில் செயற்கைக்கோள்கள்/விண்கலங்கள் ஆகியவற்றை செலுத்தும் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, இந்தியா, சீனா முதலான நாடுகளை எடுத்துக் கொண்டால் ரஷியாவின் விண்வெளிக் கேந்திரங்கள் தவிர்க்க முடியாத வகையில் உள் நாட்டில் தான் உள்ளன. சீனாவின் சில விண்வெளிக் கேந்திரங்கள் உள் நாட்டில் உள்ளன. தவிர அவை பூமியின் நடுக் கோட்டிலிருந்து வடக்கே மிகவும் தள்ளி அமைந்துள்ளன.

ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் விண்வெளிக் கேந்திரம் பிரெஞ்சு குயானாவில் அட்லாண்டிக் கடலின் கிழக்குக் கரை ஓரமாக  பூமியின் நடுக்கோட்டுக்கு மிக அருகில் 5 டிகிரி வடக்கு அட்சரேகையில் அமைந்துள்ளது. அங்கிருந்து ராக்கெட்டை ஏவினால் 1662 கிலோ மீட்டர் வேகம் கூடுதலாகக் கிடைக்கும். அமெரிக்காவின் கேப் கெனவரல் விண்வெளிக் கேந்திரம் மிகவும் தள்ளி 28 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ளது. அங்கிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகளுக்கு கிடைக்கும் இலவச வேகம் குறைவுதான்.

ஆகவே பூமியின் நடுக்கோட்டுப் பகுதியிலிருந்து ராக்கெட்டைச் செலுத்தினால் கூடுதல் எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் செலுத்த முடியும் என்பதால் ரஷிய, அமெரிக்க தனியார் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து பசிபிக் கடலில் மிதக்கும் மேடையிலிருந்து ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை செலுத்தி வருகின்றன 
  
இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளிக் கேந்திரம் 13 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ளது. அங்கிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுக்கு பூமியின் சுழற்சியால் கிடைக்கிற கூடுதல் வேகம் 1625  கிலோ மீட்டர். ஆனால் குலசேகரப்பட்டினத்தில் விண்வெளிக் கேந்திரம் அமைத்து அங்கிருந்து ராக்கெட் செலுத்தினால் கிடைக்கிற கூடுதல் வேகம் மணிக்கு 1651 கிலோ மீட்டர்.
 .
படம்: நன்றி- Mahendragiri LPSC Staff Assn Report
ஆகவே குலசேகரப்பட்டினத்தில் விண்வெளிக் கேந்திரம் அமைத்தால் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து வழக்கமாகச் செலுத்தப்படுகிற அதே ராக்கெட்டில் குறைவான எரிபொருளை நிரப்பினால் போதும். அந்த அளவில் ராக்கெட்டின் முகப்பில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை வைத்துச் செலுத்த முடியும்.

குலசேகரப்பட்டினத்தில் மேலும் ஒரு ஆதாயம் உள்ளது. அதாவது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள் மூலம் வடக்கு-தெற்காக செலுத்தப்படுகின்ற துருவ செயற்கைக்கோள்களை நேர் தெற்காகச் செலுத்த முடிவதில்லை.

அப்படிச் செலுத்தினால் அது இலங்கை மீதாகச் செல்வதாக இருக்கும். இந்திய விண்வெளித் துறையினர் இதைத் தவிர்க்க விரும்புகின்றனர். ஆகவே ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கிளம்பியதும் சிறிது தூரம் கிழக்கு நோக்கிச் சென்று விட்டுப் பிறகு தெற்கு நோக்கிச் செல்கின்றது. இதனால் கூடுதல் எரிபொருள் செலவாகிறது.

குலசேகரப்பட்டினத்திலிருந்து இந்த துருவ செய்ற்கைக்கோள்களைச் செலுத்தினால் இலங்கை மீது பறக்கின்ற பிரச்சினையே இராது. அந்த செயற்கைக்கோள்களை நேர் தெற்காகச் செலுத்த முடியும். இதனால் எரிபொருள் செலவு மிச்சமாகும். இந்தியாவோ பல்வேறு பணிகளுக்காக அடிக்கடி துருவ செயற்கைக்கோள்களைச் செலுத்தி வருகிறது. இந்த வகை செயற்கைக்கோள்களை நிரந்தரமாக குலசேகரப்பட்டினத்திலிருந்து செலுத்தலாம்.

டிவி ஒளிபரப்பு, வானிலை தகவல், ரேடியோ ஒலிபரப்பு  என பல்வேறு பணிகளுக்காக பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் இந்தியா 13 செயற்கைக்கோள்களைப் பெற்றுள்ளது. இவை அனைத்தும் இந்தியாவைப் பார்த்தபடி உள்ளன. பங்கு மார்க்கெட் வர்த்தகம், தனியார் நிறுவனங்களின் தகவல் தொடரபு, மணியார்டர் அனுப்புதல் என வேறு பல ;பணிகளையும் இவை செய்து வருகின்றன. இவை இன்றேல் நாடே ஸ்தம்பித்து விடும்.

 எடை மிக்க இந்த செயற்கைக்கோள்களை இந்தியா தயாரித்தாலும் அனேகமாக இவை அனைத்தும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் கூரூ விண்வெளிக் கேந்திரத்திலிருந்து பிரெஞ்சு ஏரியான் ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட்டவை.

இந்த வகை செயற்கைக்கோள்களையும் இந்திய மண்ணிலிருந்தே செலுத்த ஜி.எஸ்.எல்..வி  ராக்கெட் உருவாக்கப்பட்டு அவை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட்டன. இந்த வகை ராக்கெட் முழு வெற்றி பெற்றதாகச் சொல்ல முடியாது. அடுத்து ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 என்ற மேலும் சக்தி மிக்க ராக்கெட் உருவாக்கப்படுகிறது. இவற்றுக்கென ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் தளம் உள்ளது.

இந்த வகை ராக்கெட்டுகளையும் குலசேகரப்பட்டினத்திலிருந்து செலுத்த இயலும். இவை தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் கிழக்கு நோக்கிச் செலுத்தப்படும் இவை பூமியின் நடுக்கோட்டுக்கு நேர் மேலே இருக்க வேண்டியவை.

ஸ்ரீஹரிகோட்டா 13 டிகிரி வடக்கு அட்சரேகையில் இருப்பதால் இவை குறிப்பிட்ட கோணத்தில் திரும்பி அதன் பிறகே பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே வந்து சேரும்.. குலசேகரப்பட்டினம் 8 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ளது. அதாவது ஸ்ரீஹரிகோட்டாவுடன் ஒப்பிட்டால் இது பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே உள்ளது.

ஆகவே இங்கு புதிய விண்வெளிக் கேந்திரத்தை அமைத்து மேற்படி ராக்கெட்டுகளைச் செலுத்தினால் அவை திரும்ப வேண்டிய கோணம் குறையும். இதன் மூலம் எரிபொருள் செலவு குறையும். ஆகவே அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் செலுத்த முடியும்.
ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டுகளை செலுத்துவதற்கென்றே ஸ்ரீஹரிகோட்டாவில் அவ்வளவு ஏற்பாடுகளையும் செய்து விட்டு மறுபடி குலசேகரப்பட்டினத்திலும் மறுபடி அதே வசதிகளைச் செய்வது வீண் செலவாக இருக்குமே என்று இஸ்ரோ கருதலாம்

. ஆனால் ஒன்று. இந்தியா இந்த வகை ராக்கெட்டுகள் மூலம் எடைமிக்க செயற்கைக்கோள்களை செலுத்த ஆரம்பித்தால் பல நாடுகளும் தங்களது தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை உய்ரே செலுத்த இந்தியா பக்கம் திரும்பலாம்.

தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை உயரே செலுத்தித்  தருவது என்பது உலகில் இப்போது பெரும் பணம் கொழிக்கும் வியாபாரமாகும். உள்ளபடி ( இந்தியா உட்பட) உலகின் பல நாடுகளும் தனியார் நிறுவனங்களும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் ராக்கெட்டை நாடுகின்றன. முன்கூட்டிப் பதிவு செய்து கொண்டு காத்திருக்கும் நிலை உள்ளதாகவும் சொல்லலாம்.

உலகில் இந்தியா உட்பட விரல் விட்டு எண்ணும் அளவிலான நாடுகளும் தனியார் நிறுவனங்களும் தான் செயற்கைக்கோள்களைச் செலுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுக் காலத்தில் புதிதாக மொத்தம் சுமார் 1150 செயற்கைக்கோள்கள் செலுத்தப்படலாம் என்று யூரோகன்சல்ட் என்னும் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை ஏரியான் மூலம் அல்லது பிற நாடுகளின் ராக்கெட் மூலம் செலுத்துவதற்கு ஆகும் செலவுடன் ஒப்பிட்டால் இந்தியாவிலிருந்து செலுத்துவதற்கு ஆகும் செலவு நிச்சயம் குறைவு. ஆகவே வருகிற ஆண்டுகளில் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை செலுத்தும் மார்க்கெட்டில் கணிசமான பகுதியை இந்தியா கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருக்கத் தான் செய்கிறது.

தவிர, பிற நாடுகள் கேட்டுக் கொண்டால் அவற்றுக்கென நவீன செயற்கைக்க்கோள்களைத் தயாரித்து அளிக்கும் திறனும் இந்தியாவிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே குலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையும் செயற்கைக்கோள்களையும் செலுத்தும் வசதிகளை செய்வதற்கு ஆகும் செலவு வீண் போகாது.

 குறிப்பு: இக்கட்டுரை தினமணி டிசம்பர் 20 ஆம் தேதி இதழில் வெளியாகியது. படம் மற்றும் கூடுதல் தகவல்களுடன் இங்கு வெளியிடப்படுகிறது

Apr 23, 2013

மூஞ்சூறும் பல்லிகளும் விண்வெளிக்குப் பயணம்

Share Subscribe
மூஞ்சூறு, சுண்டெலி,பல்லி, நத்தை மீன் முதலியவை ஒரு விண்கலத்தில் வைக்கப்பட்டு ரஷிய  ராக்கெட் மூலம் ஏப்ரல் 19 ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன.இவை விண்வெளியில் ஒரு மாத காலம் தங்கி விட்டு மே  18 ஆம் தேதி பூமிக்குத் திரும்பும்.
பிராணிகளுடன் ரஷிய சோயூஸ் ராக்கெட் உயரே கிளம்புகிறது. Credit :Roscosmos
விண்வெளியில் உள்ள எடையற்ற நிலைமை இவற்றின் உடலில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள், நீண்ட நாள் விண்வெளியில் இருந்தால் உறுப்புகள, திசுக்கள் ஆகிய்வற்றில் உள்ள செல்களில் ஏற்படும் மாற்றங்கள், கதிர்வீச்சினால் ஏற்படக்கூடிய பாதிப்பு முதலியவற்றை ஆராய்வது இதன் நோக்கம்.

விசேஷ விண்கலத்துக்குள் 45 சுண்டெலி 15 பல்லிகள், எட்டு மூஞ்சூறுகள் பல நத்தைகள் ம்ற்றும் நுண்ணுயிர்கள், தாவரங்கள். மீன் தொட்டியில வைக்கப்பட்ட மீன்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன..
ம்ங்கோலிய மூஞ்சூறு Credit :IBMP
விண்வெளிக்கு பிராணிகள் அனுப்பப்ப்டுவது இது முதல் தடவை அல்ல.உலகின் முதலாவது செயற்கைக்கோளை ( ஸ்புட்னிக் 1) அக்டோபர் 4 1957ல் செலுத்தி உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்திய ரஷியா ( அப்போதைய சோவியத் யூனியன்) மறு மாதம் 3 ஆம் தேதி ஸ்புட்னிக் 2 செயற்கைக்கோளில் ஒரு நாயை வைத்து அனுப்பியது.

விண்வெளியில் உள்ள நிலைமைகளால் உயிரினத்துக்கு ஏற்படுகின்ற விளைவுகள் ஆராயப்படுவதும் இது முதல் தடவை அல்ல. கடந்த காலத்தில் பல விண்வெளி வீரர்கள் உயரே சென்று வந்துள்ளன்ர்.
 நடுவே இருப்பது தான் பிராணிகளை ஏற்றிச்சென்றுள்ள விண்கலம்.  Credit:Roscosmos
மனிதன் விண்வெளியில் நீண்ட நாட்கள் இருந்தால் கால் சூம்பும். தோள் பகுதி பெருத்துவிடும். முகம் உப்பும். உய்ரம் சற்றே அதிகரிக்கும். பூமிக்குத் திரும்பிய பின்னர் இந்த பாதிப்புகள் மறைந்து விடும்..இவையெல்லாம் ஏற்கெனவே  தெரிந்தது தான்.

எனினும் பிராணிகள் விஷயத்தில் ஏற்படும் விளைவுகள் வேறு விதமாக இருக்க வாய்ப்பு உண்டு.Bion M 1  என்று அழைக்கப்படும் ரஷியாவின் இத்திட்டத்தில் அமெரிக்காவின் நாஸா அமைப்பும் பங்கு பெற்றுள்ளது.ஜெர்மனி, போலந்து கனடா, ஹாலந்து ஆகிய நாடுகளும் பங்கு கொண்டுள்ளன.
ப்யணிகளில் ஒன்றான பல்லி. Credit Roscosmos
இந்தப் பிராணிகளின் ரத்த நாளம், முதுகுத் தண்டு, முழங்கால் பகுதி. மூட்டுப்பகுதி முதலியவற்றில் ஏற்படக்கூடிய மாறுதல்கள் குறிப்பாக ஆராயப்படும்.

பூமியிலிருந்து சுமார் 576 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்று வருகின்ற இந்த விண்கலத்தில் வெவ்வேறு பிராணிகளும் தனித்தனி கூண்டுகளில் வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக 45 சுண்டெலிகளும் ஒரு கூண்டுக்கு மூன்று என தனிக் கூண்டுகளில் உள்ளன.

பிராணிகளுக்கு பசை வடிவில் உணவு வைக்கப்பட்டுள்ளது. வைட்டமின்கள் அடங்கிய தானியங்களும் உள்ளன. குடிப்பதற்குத் தண்ணீர் உண்டு.உடலுக்கு இதமான வெப்ப நிலை பராமரிக்கப்படுகிறது.விண்கலத்தில் அடங்கிய காற்றில் தகுந்த ஈரப்பதம் உண்டு.

பிராணிகளின் உடல்  நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணிக்க விடியோ காமிராக்கள் உள்ளன. தவிர, தகவல் அனுப்பும் கருவிகளும் இடம் பெற்றுள்ளன.

பிராணிகள் அனைத்தும் விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பும் பாணியில் பாரசூட் மூலம் கீழே வந்து இறங்கும். பின்னர் விஞ்ஞானிகள் இப்பிராணிகளின் உடல் நிலையை விரிவாக ஆராய்வர்.பிறகு இவை கருணை அடிப்படையில் மரிக்கும்படி செய்யப்படும். பின்னர்  இப்பிராணிகளின் உடல்கள் பாதுகாக்கப்படும்.
விண்கலத்தில் சுண்டெலிகளின் இருப்பிடம்.Credit IBMP
உயரே சென்றுள்ள பிராணிகள் குறிப்பான சில அடிப்படைகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்டவை. உதாரணமாக மூஞ்சூறுகள் மங்கோலிய மூஞ்சூறு வகையைச் சேர்ந்தவை.

ரஷியா முன்னர் 1973 முதல்  நான்கு ஆண்டுக்காலம் பிராணிகளை விண்வெளிக்கு அனுப்பி சோதனைகளை நடத்தியுள்ளது. ஆனால் இதற்கு முன்னர் ந்டந்த சோதனைகளின் போது பிராணிகள் ஓரிரு வாரங்களில் பூமிக்குத் திரும்பின. உய்ரே செல்லும் பிராணிகள் ஒரு மாத காலம் தங்குவது என்பது இதுவே முதல் தடவை. தவிர, பிராணிகள் விண்வெளியில் தங்கியிருக்கும் போது அவற்றைப் பராமரிக்கவும் கண்காணிக்கவும் இப்போது மிக  நவீன முறைகள் பின்ப்ற்றப்படுகின்றன.

Mar 24, 2013

வானிலிருந்து விழும் “நட்சத்திரம்”

Share Subscribe
 நிலவற்ற நாட்களில் இரவு வானைக் கவனித்தால் திடீரென்று பிரகாசமான ஒளிக் கீற்று வேகமாக் கீழ் நோக்கி இறங்கும். சில கணங்களில் அது மறைந்து விடும். கிராமப்புறங்களில் இக்காட்சியை நன்கு காண முடியும்.

'"நட்சத்திரம் கீழே விழுகிறது" என்று பலரும் இதைத் தவறாக வருணிப்பர். இதைப் பார்க்க நேரிட்டால், "உடனே ப்ச்சை மரத்தைப் பாரு” என்றும் கூறுவார்கள்.
 
காற்று மண்டலம் வழியே கீழே இறங்குவது நட்சத்திரம் அல்ல 

 இவ்விதம் வான மண்டலம் வழியே கீழே இறங்கும் ஒளிக் கீற்றானது  நட்சத்திரமே அல்ல. விண்வெளியிலிருந்து மிளகு சைஸிலான சிறிய கல் துணுக்கு அல்லது அதை விடச் சிறிய மணல் துணுக்கு ஒன்று காற்று மண்டலத்தில் நுழைய நேரிட்டால் இவ்விதம் தீப்பற்றி கீழ் நோக்கி இறங்கும். இவ்விதத் துணுக்குகள் முற்றிலுமாக எரிந்து பொடியாகி அந்தப் பொடி காற்றோடு கலந்து பூமியில் வந்து சேரலாம். ஆக, சிறிய துணுக்கு தான் இவ்விதம் "ஷோ" காட்டுகிறது.

நட்சத்திரம் பூமியை விட பல ஆயிரம் அல்லது பல லட்சம் மடங்கு பெரியது. தவிர, நட்சத்திரங்கள் பூமியிலிருந்து பல நூறு கோடி கிலோ மீட்டர் அப்பால் உள்ளவை. சொல்லப் போனால் பெரும்பாலான நட்சத்திரங்கள்  பயங்கர வேகத்தில் பூமியிடமிருந்து மேலும் மேலும் விலகிச் சென்று கொண்டிருக்கின்றன. ஆகவே எந்த நட்சத்திரமும் பூமியை நெருங்க வாய்ப்பே கிடையாது. ஆகவே "நட்சத்திரம் விழுகிறது" என்பது முற்றிலும் தவறான விளக்கம்.

ஆப்பிரிக்காவில் இப்போதைய நமீபியா நாட்டில் வந்து விழுந்த விண்கல். இதன் எடை 60 டன் 

விண்வெளியில் எண்ணற்ற விண்கற்கள் (Asteroids)  உள்ளதாக முந்தைய பதிவில் குறிப்பிட்டோம். பறக்கும் மலை என்று சொல்லத்தக்க விண்கல்லிலிருந்து  நம் வீட்டு அம்மிக்கல் வரை வெவ்வேறு சைஸ்களில் விண்கற்கள் உள்ளன. இவை அல்லாமல்   ரோடு போடுவதற்குப் பயன்படும் ஜல்லி சைஸிலும் கூழாங்கல் சைஸிலும் விண்கற்கள் உள்ளன. தவிர மணல் துணுக்குகள், தூசு முதலியவையும் விண்வெளியில் உள்ளன.இவை தோன்றியது எப்படி?

செவ்வாய் கிரகத்துக்கும் வியாழன் கிரகத்துக்கும் இடையே Main Asteroid Belt  உள்ளது பற்றி முந்தைய பதிவில் கூறினோம். சூரியனைச் சுற்றி வரும் இந்த பல லட்சம் அஸ்டிராய்டுகள் அணிவகுத்துச் செல்கையில் ஒன்றோடு ஒன்று மோதி உடைகின்றன். இவ்வித மோதல்களின் போது தோன்றும் துண்டு துணுக்குகள், மணல். தூசு ஆகியவையும் பூமி இருக்கின்ற வட்டாரத்துக்கு வந்து சேர்ந்து பூமியின் காற்று மண்டலம் வழியே கீழே இறங்குகின்றன. அப்போது தான் "நட்சத்திரம் விழுவது" போன்ற காட்சி தோன்றுகிறது.

வால் நட்சத்திரங்கள் உடைவதால் ஏற்படுகின்ற தூசு, இயல்பாக விண்வெளியில் உள்ள தூசு முதலியவையும் இவ்விதம் பூமிக்குள் வந்து இறங்குகின்றன. ஓர் ஆண்டில் சுமார் 10   ஆயிரம் டன் எடை அளவுக்கு இவை பூமியில் வந்து விழுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது (அண்டவெளித் தூசு என தனி சமாச்சாரமும் உள்ளது).

வால் நட்சத்திரங்கள்  வந்து செல்லும் போது ஏராளமான நுண்ணிய துகள்களை விட்டுச் செல்லும்.  அவற்றை அடித்துச் செல்ல விண்வெளியில் காற்று கிடையாது என்பதால் அத்துகள்கள் விண்வெளியில் பரவி நிற்கும். பூமி தனது பாதையில் அத்துகள்களின் ஊடே செல்லும் போது அத்துகள்கள் வான் மண்டலம் வழியே கீழே இறங்கும். அப்போது எண்ணற்ற ஒளிக்கீற்றுகள் தென்படும். இதை ஒளிமழை (Meteor Shower) என்று கூறுவார்கள். இது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

ஆண்டில் சில மாதங்களில் இவ்விதம் ஒளிமழையைக் காணலாம் 

ஆண்டில் குறிப்பிட்ட மாதங்களில் இந்த ஒளிமழை தென்படும். மேலை நாடுகளில் ஆர்வலர்கள் இரவில் ஊருக்கு வெளியே வாய்ப்பான இடங்களில் கூடி இதைக் காண்பர்.

இது ஒருபுறம் இருக்க கால்பந்து அல்லது அதை விட சற்றே பெரியதான விண்கற்கள் அவ்வப்போது பூமியில் வந்து விழுகின்றன. இவை முற்றிலுமாக எரிந்து போவது கிடையாது. இவை நெருப்புப் பந்து போல வானிலிருந்து கீழே இறங்கும். அக்கட்டத்தில் இவை பல துண்டுகளாக வெடித்து அத்துண்டுகள் பூமியில் வந்து விழும். ஆங்கிலத்தில் இதை Meteorite என்கிறார்கள்,.

பாலைவண மணலில் கிடக்கும்    விண்கற்கள்

விஞ்ஞானிகளைப் பொருத்த வரையில் இவை மிக அரிய கற்கள். இந்த விண்கற்கள் சூரிய மண்டலம் தோன்றிய போது உருவானவை என்று கருதப்படுகிறது. ஆகவே புதிதாக விண்கல் கிடைத்தால் விஞ்ஞானிகள் அதை ஆராய்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, அரும் பொருட்களைச் சேகரிக்கிறவரகள் விண்கற்களை விலைக்கு வாங்கி சேகரிக்கின்றனர். இவற்றுக்கு நல்ல விலை உண்டு. பாலைவனங்கள், மற்றும் அண்டார்டிகா போன்று பனிக்கட்டியால் மூடப்பட்ட  பிராந்தியங்கள் ஆகிய இடங்களில் வானிலிருந்து கீழே வந்து விழுந்த விண்கற்களை எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது. உங்கள் வீட்டுத் தோட்டத்தில் கூட விண்கல் வந்து விழலாம். ஆனால் எது விண்கல் என்று கண்டுபிடிக்கத் தனித் திறன் தேவை.

ஒரு சமயம் அமெரிக்காவில் சிறிய சைஸ் விண்கல் ஒன்று  (மரப் பலகையால் ஆன) கூரையைப் பொத்துக் கொண்டு விட்டுக்குள் வந்து விழுந்தது. ஜெர்மனியில் சாலையில்  சென்று கொண்டிருந்த சிறுவன் மீது மிகச் சிறிய விண்கல் விழுந்தது.

பூமியில் கண்டுபிடிக்கப்பட்ட விண்கற்களிலேயே மிகப் பெரியது இப்போதைய நமீபியா நாட்டில் வந்து விழுந்த  ஹோபா (Hoba Meteorite) விண்கல்லாகும். இதன் நீளம் சுமார் 3 மீட்டர். அகலம் மூன்று மீட்டர். உயரம் ஒன்றரை மீட்டர். எடை 60 டன். ஏறக்குறைய  80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் விழுந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. எனினும் 1920 ஆம் ஆண்டில் தான் இது கண்டுபிடிக்கப்பட்டது.  விழுந்த இடத்திலேயே அப்படியே  பாதுகாக்கப்பட்டு வரும் இந்த விண்கல் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறது.

அபூர்வமாக பல மீட்டர் நீளமுள்ள விண்கல் பூமியின் காற்று மண்டலத்தில் நுழைவது உண்டு. ரஷியாவில் 2013ம் ஆண்டு பிப்ரவரியில் செலியாபின்ஸ்க் நக்ருக்கு அருகே சுமார் 15 மீட்டர் நீளமுள்ள விண்கல் (அஸ்டிராய்ட்) காற்று மணடலத்தில் நுழைந்து வெடித்து சுக்கு நூறாக உடைந்து சிதறியது. அப்போது தோன்றிய அதிர்ச்சி அலைகள் காரணமாகவே எண்ணற்ற கட்டடங்களில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

வானில் ஒரு விண்கல் வெடிப்பது என்பது மிக அபூர்வமாகவே நிகழும். இதற்கு முன்னர் 1908 ஆம் ஆண்டில் ரஷியாவின் சைபீரியா பிராந்தியத்தில் துங்குஸ்கா என்னுமிடத்தில் இது போன்று ஏற்பட்டது. அது மனித நடமாட்டமற்ற இடம், ஆனால் ஊசியிலைக் காடுகள் நிறைந்தது. வானில் ஏற்பட்ட பெரும் வெடிப்பின் விளைவாகக் கடும் அதிர்ச்சி அலைகள் தோன்றின். அதன் காரணமாக  எண்ணற்ற மரங்கள் ஒரேயடியாகச் சாய்ந்தன.

துங்குஸ்காவில் சரிந்து கிடந்த மரங்கள் 

அங்கு வானில் வெடித்தது விண்கல்லா அல்லது பூமியை நோக்கி இறங்கிய வால் நட்சத்திரமா என்பது தெரியவில்லை.

மிக மிகப் பெரிய விண்கல் ஒன்று பூமியில் வந்து விழுந்து பெரு நாசத்தை ஏற்படுத்துவது என்பது மிக அபூர்வமானது. சுமார் 65 மிலியன் ஆண்டுகளுக்கு முன்னர்  வட அமெரிக்க கணடத்தின் தென் புறத்தில் சுமார் 10 கிலோ மீட்டர் குறுக்களவு கொண்ட விண்கல் வந்து விழுந்ததாகக் கருதப்படுகிறது. இந்த விண்கல் வந்து விழுந்ததால் ஏற்பட்ட விளைவுகள் காரணமாகவே டைனோசார் வகை விலங்குகள் அழிந்து போனதாகவும் கருதப்படுகிறது.

அந்த விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட பெரிய பள்ளம் இப்போது கடலுக்கு அடியில் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் டைனோசார் விலங்குகள் இனம் அழிந்ததற்கு பெரிய விண்கல் விழுந்தது தான் காரணமா என்பது குறித்து இன்னமும் சர்ச்சை உள்ளது. விழுந்தது விண்கல்லாக இல்லாமல்  ஒரு வால் நட்சத்திர்மாக இருக்கலாம் என இப்போது ஒரு புதுக் கருத்து கூறப்பட்டுள்ளது.

விழுந்தது எதுவாக இருந்தாலும் சரி, எதிர்காலத்தில் இப்படியான பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பது தான் இப்போதுள்ள கேள்வி.

May 25, 2012

இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்

Share Subscribe
பிரான்ஸ் நாட்டின் ஸ்பாட்- 6 என்னும் 800 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் விரைவில் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட இருக்கிறது. பிரான்ஸ் நாட்டிடம் இல்லாத ராக்கெட்டா? பல டன் எடை கொண்ட செயற்கைக்கோளை உயரே எடுத்துச் செல்லக்கூடிய ஏரியான்-5 ராக்கெட்டை பிரான்ஸ் நாட்டின் தயாரிப்பு என்று சொல்லலாம். பிறகு ஏன் ஸ்பாட் செயற்கைக்கோள் இந்தியாவுக்கு வருகிறது?

இந்திய ராக்கெட் மூலம் செலுத்தினால் செலவு குறைவு. ஆகவே தான் பிரான்ஸ் ஏரியான் 5 (Ariane) ராக்கெட்டை நாடாமல் நம்மை அணுகுகிறது. இதற்கு பிரான்ஸ் நமக்குப் பணம் தரும்.


இந்தியாவின் பி.எஸ்.எல். வி. ராக்கெட்

(இதற்கு நேர்மாறாக இந்தியாவின் ஜிசாட்-10 செயற்கைக்கோள் - எடை 3435 கிலோ - தென் அமெரிக்காவில் உள்ள கூரூ என்னுமிடத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது (Guiana Space Centre, Kourou, French Guiana). பிரெஞ்சு கயானா பிரான்ஸ் நாட்டின் பிரதேசம். ஐரோப்பிய நிறுவனங்கள் கூரூ விண்வெளி தளத்தை உபயோகிக்கின்றன.)

ஜூலை-ஆகஸ்ட் மாத வாக்கில் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் 5 ராக்கெட் மூலம் ஜிசாட்-10 உயரே செலுத்தப்படும். இந்த அளவுக்கு எடை கொண்ட செயற்கைக்கோளை உயரே அனுப்ப இந்தியாவிடம் தகுந்த ராக்கெட் இல்லை. ஆகவே தான் அது கூரூ நிலையத்துக்குச் செல்கிறது. இதற்காக நாம் ஐரோப்பிய விண்வெளி அமைப்புக்கு நிறையவே பணம் தருவோம்.

இந்தியாவின் பி.எஸ்.எல்.வி (PSLV) ராக்கெட் மிக நம்பகமானது தான் - அது கடந்த பல ஆண்டுகளில் 20 தடவை வெற்றி கண்டுள்ளது. ஆனால் அதன் மூலம் அதிகபட்சம் சுமார் 1800 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளைத் தான் உயரே செலுத்த முடியும்.


. ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்

மூன்று டன், நான்கு டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை உயரே செலுத்துவதற்கான சக்திமிக்க ராக்கெட்டுகளை உருவாக்க இந்தியா முயற்சி செய்யாமல் இல்லை. இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி. (GSLV) எனப்படும் புதிய வகை ராக்கெட்டின் நோக்கமே அது தான். ஆனால் அந்த முயற்சிகள் நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றதாகச் சொல்ல முடியாது. அதனால் தான் பிரச்சினை.

சக்திமிக்க ராக்கெட்டை உருவாக்க கிரையோஜெனிக் எஞ்சின் தேவை. இந்தியா சொந்தமாக கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சினை உருவாக்க 1986 ஆம் ஆண்டிலிருந்தே முயன்று வருகிறது. இதற்கிடையே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தொழில் நுட்பத்தை இந்தியாவுக்கு விற்க ரஷியா சம்மதித்து. இதன் விளைவாக அப்போது இந்தியாவின் முயற்சியில் சற்று சுணக்கம் ஏற்பட்டதாகவும் கூறலாம்.

ஆனால் ராக்கெட் துறையில்-- வேறு எந்தத் துறையிலும் -- இந்தியா முன்னேறுவதை அமெரிக்காஅப்போது விரும்பவில்லை. எனவே இந்தியாவுக்கு கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் தொழில் நுட்பத்தை விற்கக்கூடாது என்று ரஷியா மீது அமெரிக்கா பெரும் நிர்பந்தத்தைச் செலுத்தியது. சோவியத் யூனியன் உடைந்து ரஷியாவை அதிபர் யெல்ட்சின் ஆண்டு கொண்டிருந்த காலம் அது.

இந்தியா உருவாக்கிய
கிரையோஜெனிக் எஞ்சின் சோதிக்கப்படுகிறது

அக்கால கட்டத்தில் பல பிரச்சினைகளை எதிர்ப்பட்டிருந்த யெல்ட்சின் எளிதில் அமெரிக்க நிர்பந்தத்துக்குப் பணிந்தார். இந்தியாவுடனான ஒப்பந்தம் 1992 ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக ஏழு கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின்களை மட்டும் இந்தியாவுக்கு அளிக்க ரஷியா முன்வந்தது.

ரஷியா அளித்த கிரையோஜெனிக் எஞ்சின்கள் இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி.   ராக்கெட்டுகளில் பயனப்டுத்தப்பட்டன. ரஷிய எஞ்சினைப் பயன்படுத்தி 2001 ஆம் ஆண்டிலிருந்து ஆறு தடவை உயரே செலுத்தியதில் இரண்டு தடவை மட்டுமே வெற்றி கிட்டியது. இதல்லாமல் இந்தியா சொந்தமாக உருவாக்கிய கிரையோஜெனிக் எஞ்சினை 2010 ஆம் ஆண்டில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் பொருத்தி உய்ரே செலுத்திய போது அது தோல்வியில் முடிந்தது.

பிரச்சினை என்ன என்பது தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது. இந்திய கிரையோஜெனிக் எஞ்சின் மே மாதம் கூட நாகர்கோயில் அருகே மகேந்திரகிரி என்னுமிடத்தில் மறுபடி சோதிக்கப்பட்டது.

ஒரு ராக்கெட்டை உருவாக்குவதில் தோல்விகள் சகஜம். ஐரோப்பிய நாடுகள் ஏரியான் ராக்கெட்டை வெற்றிகரமாக உருவாக்கியதற்கு முன்னர் 1960 களின் பிற்பகுதியில் யுரோப்பா என்னும் ராக்கெட்டை உருவாக்க முயன்ற போது தொடர்ந்து தோல்விகளே கிட்டியது. கடைசியில் அத்திட்டமே கைவிடப்பட்டது.

கிரையோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பத்தை அனேகமாக எல்லா நாடுகளுமே சிரமப்பட்டு தான் உருவாக்கிக் கொண்டன. அமெரிக்கா 1963 ஆம் ஆண்டில் இதில் வெற்றி பெற்றது. ஜப்பான் 1977. பிரான்ஸ் 1979. சீனா 1984. ரஷியா தான் முதன் முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பி சாதனை படைத்தது என்றாலும் 1987 ஆம் ஆண்டில் தான் ரஷியா கிரையோஜெனிக் ராக்கெட் தொழில் நுட்பத்தில் வெற்றி கண்டது.

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் - அதாவது கிரையோஜெனிக் எஞ்சின் - முழு வெற்றி காணவில்லை என்பதால் இந்திய விண்வெளித் திட்டத்தில் சில கோணல்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மறுக்க முடியாது. இந்தியாவின் எடை மிக்க செயற்கைக்கோள்கள் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் தான் இனி செலுத்தப்படும் என்ற நம்பிக்கையில் இந்த வகை செயற்கைக்கோள்களுக்கு இதுவரை இருந்துவந்த இன்சாட் என்னும் பெயருக்குப் பதிலாக ஜிசாட் என்று பெயர் வைக்கப்பட்டது.

ஆனால் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் முழு வெற்றி பெறாமல் போனதால் ஜிசாட்-8 கூரூவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஏரியான் மூலம் செலுத்தப்பட்டது. ஏற்கெனவே குறிப்பிட்டபடி ஜிசாட்-10 செயற்கைக்கோளும் ஏரியான் மூலமே செலுத்தப்பட உள்ளது. சந்திரனுக்கு சந்திரயான்-2 என்னும் ஆளில்லா விண்கலத்தைச் செலுத்துவதிலும் தாமதம் ஏற்படும் என்று தோன்றுகிறது. இந்தியாவுக்கு ஏழு கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின்களை அளித்த ரஷியா இப்போது அவ்வகையான எஞ்சின்களின் உற்பத்தியை நிறுத்தி விட்டது. எனவே இந்தியா சொந்தமாக உருவாக்கிய கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சினை எப்படியாவது வெற்றி பெறச் செய்தாக வேண்டும் என்ற நிலையில் உள்ளது.

இந்தியா உருவாக்கிய ராக்கெட்டுகள், இடமிருந்து:
1. எஸ்.எல்.வி 2. ஏ.எஸ்.எல்.வி 3. பி.எஸ்.எல்.வி
4. ஜி.எஸ்.எல்.வி மார்க்-2 5. ஜி.எஸ்.எல்.வி மார்க்-3
(இவற்றில் முதல் இரு வகை ராக்கெட்டுகள்
இப்போது பயனில் இல்லை)

இந்தியா இப்போதைய ஜி.எஸ்.எல்.வி. மார்க்-2 ராக்கெட்டைப் போல இரண்டு மடங்கு திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டைத் தயாரித்து வருகிறது. இது முற்றிலும் புது மாதிரியிலானது. இதில் இரண்டாவது அடுக்கில் இந்தியாவின் கிரையோஜெனிக் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த ராக்கெட் மட்டும் வெற்றி பெற்றால் இந்தியா தனது எடை மிக்க செயற்கைக்கோள்களை இந்திய மண்ணிலிருந்தே செலுத்த இயலும். ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் 5 ராக்கெட்டை நம்பி இருக்க வேண்டியிராது.

May 20, 2012

கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் என்பது என்ன?

Share Subscribe
ராக்கெட்டும் ஒரு வாகனமே. அது செயற்கைக்கோளை சுமந்து உயரே கொண்டு சேர்க்கிறது. ஆகவே செயறகைக்கோளைச் செலுத்தும் ராக்கெட்டுகளுக்கு “செயறகைக்கோள் செலுத்து வாகனம்” (Satellite Launch Vehicle) என்ற பொதுப் பெயர் உண்டு. ராக்கெட்டுக்குள் வைக்கப்படுகின்ற எரிபொருள் பயங்கர வேகத்தில் பின்புறம் வழியே தீப்பிழமபை பீச்சிடுவதால் முன் நோக்கி அதாவது உயரே பாய்கிறது.

ஒரு ராக்கெட் உயரே கிளம்புகிறது
எந்த எரிபொருளானாலும் அது எரிவதற்கு ஆக்சிஜன் தேவை. கார், லாரி போன்று தரையில் செல்கின்ற வாகனங்களுக்கும் சரி, வானில் செல்லும் விமானங்களுக்கும் சரி, காற்று மண்டலத்திலிருந்து ஆக்சிஜன் இயற்கையாகக் கிடைக்கிறது.

ஆனால் ராக்கெட்டானது மிக உயரே செல்வதாகும். அந்த உயரத்தில் காற்று (ஆக்சிஜன்) அனேகமாக இராது. ஆகவே ராக்கெட்டில் உள்ள எரிபொருள் எரிவதற்கு உதவக்கூடிய ஆக்சிஜன் அடங்கிய பொருளையும் சேர்த்து ராக்கெட்டில் வைக்க வேண்டியுள்ளது. பல வேதியல் பொருட்கள் இவ்விதம் ஆக்சிஜனை அளிக்கக்கூடியவை.

செயற்கைக்கோளைச் செலுத்துகின்ற ராக்கெட்டில் ஆக்சிஜனும் அடங்கிய திட எரிபொருளை மட்டும் வைக்கலாம். அல்லது திரவ எரிபொருளையும் அது எரிவதற்கு உதவும் ஆக்சிஜன் அடங்கிய பொருளையும் வைக்கலாம்.

நீல நிறத்தில் இருப்பது திரவ ஹைட்ரஜன் டாங்க்.
சிவப்பு நிறத்தில் உள்ளது திரவ ஆக்சிஜன் டாங்க்.
ஹைட்ரஜன் வாயுவையும் ஆக்சிஜன் வாயுவையும் பயன்படுத்துகின்ற ராக்கெட்டாக இருந்தால் அது அதிக உந்து விசையை அளிக்கும். ஆகவே அதிக எடை கொண்ட செயறகைக்கோளை சுமந்து செல்ல முடியும். ஆனால் ராக்கெட்டில் தனித்தனி டாங்கிகளில் ஹைடரஜன் வாயுவையும் ஆக்சிஜன் வாயுவையும் எடுத்துச் செல்வதானால் பெரிய பெரிய டாங்கிகள் தேவைப்படும். அப்படியான டாங்கிகளைக் கொண்ட ராக்கெட்டை உயரே கிளம்பச் செய்வதே கடினம்.

எனினும் ஹைடரஜன வாயுவை மைனஸ் 253 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குளிர்வித்தால் அது திரவமாகி விடும். அதே போல ஆக்சிஜன் வாயுவை மைனஸ் 184 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குளிர்வித்தால் அதுவும் திரவமாகி விடும். ராக்கெட்டின் முன்புறத்தில் தனித்தனி டாங்கிகளில் இந்த திரவங்களை சேமித்து வைக்க முடியும். ராக்கெட் உயரே செல்கையில் இந்த இரண்டும் ராக்கெட்டின் கீழ்ப்புறமுள்ள எஞ்சின் அறையில் வாயுவாக மாறி ஒன்று சேர்ந்து எரிந்து நல்ல உந்து விசையை அளிக்கும்.

கடும் குளிர் நிலையில் உள்ள திரவங்களைப் பயன்படுத்தும் துறைக்கு கிரையோஜெனிக்ஸ் (Cryogenics) என்று பெயர். இது கிரேக்க மொழிச் சொல். எனவே இவ்விதமான குளிர் நிலை திரவங்களைப் பயன்படுத்தும் ராக்கெட் எஞ்சினுக்கு கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் என்று பெயர். திரவ ஹைட்ரஜன், திரவ ஆக்சிஜன் ஆகியவற்றை கிரையோஜெனிக் எரிபொருட்கள் என்றும் கூறலாம்.

கிரையோஜெனிக் ராக்கெட்
எஞ்சின் சோதிக்கப்படுகிறது
கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சினை உருவாக்குவதில் பல சிக்கல்கள் உள்ளன. முதல் பிரச்சினை உலோகவியல் தொடர்பானது. கடும் குளிர் நிலையில் உலோகங்கள் விசித்திரமாகச் செயல்படும்.உலோகங்கள் எளிதில் உடையும். மெழுகு போலவும் ஆகிவிடலாம். ஆகவே ராக்கெட்டில் திரவ ஆக்சிஜன், திரவ ஹைட்ரஜன் ஆகியவற்றை சேமித்து வைப்பதற்கான டாங்கிகள் விசேஷ கலப்பு உலோகத்தால் ஆனவையாக இருக்க வேண்டும். இந்த டாங்கிகளிலிருந்து எஞ்சின் பகுதிக்கு வந்து சேருவதற்கான குழாய்கள் , பம்புகள் போன்றவையும் விசேஷ உலோகத்தால் ஆனவையாக இருக்க வேண்டும்.

டாங்கிகளிலிருந்து இந்த இரு திரவங்களும் எஞ்சின் பகுதிக்கு குறிப்பிட்ட விகிதத்தில் வந்து சேர வேண்டும்.

கடும் குளிர் நிலை ஒரு பிரச்சினை என்றால் கடும் வெப்பமும் ஒரு பிரச்சினையே. எஞ்சின் பகுதியில் இந்த இரு திரவங்களும் வாயுவாக மாறி சேர்ந்து எரியும் போது பயங்கர வெப்பம் தோன்றும். எஞ்சின் பகுதி என்பது கவிழ்த்து வைக்கப்பட்ட அண்டா மாதிரியிலானது. கடும் வெப்பத்தில் இது உருகி விடக்கூடாது. ஆகவே கடும் குளிர் நிலையில் உள்ள திரவங்கள் இந்த அண்டாவைச் சுற்றிலும் பாய்ந்து செல்கின்ற ஏற்பாடும் இருக்க வேண்டும். அப்போது தான் எஞ்சின் பகுதி உருகி விடாமல் இருக்கும். இப்படியாகப் பல பிரச்சினைகள் உள்ள்ன.

சியோல்கோவ்ஸ்கி
திரவ ஆக்சிஜனையும் திரவ ஹைட்ரஜனையும் பயன்படுத்தி ராக்கெட்டை செலுத்த இயலும் என 1903 ஆம் ஆண்டிலேயே ரஷிய மேதை சியோல்கோவ்ஸ்கி கூறினார் என்றாலும் இப்படியான ராக்கெட் எஞ்சினை உருவாக்குவதில் இருந்த எண்ணற்ற் பிரச்சினைகளால் அது சாத்தியமாவதற்குப் பல ஆண்டுகள் பிடித்தன.


அமெரிக்காவில் பிரபல ராக்கெட் நிபுணர் கொடார்ட் திரவ ஆக்சிஜனையும் பெட்ரோலையும் பயன்படுத்தும் மிகச் சிறிய ராக்கெட்டை 1926 ஆம் ஆண்டில் பரிசோதித்து வெற்றி கண்டார்.



உயரே இருப்பது தான் ராக்கெட்.
அதன் அருகே கொடார்ட்
எனினும் பின்னர் ஜெர்மனியில் பான் பிரான் என்னும் ராக்கெட் மேதை பல ஆண்டுக் காலம் பெரும் பாடுபட்டு 1942 அக்டோபரில் திரவ ஆக்சிஜனையும் ஆல்கஹாலையும் (சாராயம் என்றும் சொல்லலாம்) பயன்படுத்துகிற நவீன ராக்கெட்டை உருவாக்கினார். பறக்கும் குண்டு என்று சொல்லத்தக்க அந்த V2 ராக்கெட்டை ஹிட்லரின் படைகள் பிரிட்டன் உட்பட பல நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்தின. ஹிட்லரின் அந்த ராக்கெட்டுகள் உலகை நடுங்க வைத்தன.

ஜெர்மனி உருவாக்கிய V 2 ராக்கெட்
பான் பிரான்
(Wernher von Braun)
இரண்டாம் உலகப் போர் முடிந்த உடனேயே அமெரிக்காவும் ரஷியாவும் போட்டி போட்டுக் கொண்டு ஜெர்மனியில் மீதம் இருந்த பல நூறு V2 ராக்கெட்டுகளை அள்ளிச் சென்றன. ஜெர்மன் ராக்கெட் நிபுணர்களையும் பிடித்துச் சென்றன. பான் பிரான் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அமெரிக்காவும் ரஷியாவும் V2 ராக்கெட்டுகளை அடிபபடையாக வைத்து பல ராக்கெட்டுகளை உருவாக்கின.

பின்னர் அமெரிக்காவின் குடிமகனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பான் பிரான் சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப உதவிய சாடர்ன்-5 என்னும் பிரம்மாண்டமான ராக்கெட்டை உருவாக்கி உலகப் புகழ் பெற்றார்.

அமெரிக்காவின் சாடர்ன்-5 ராக்கெட்
எல்லா ராக்கெட்டுகளிலும் திரவ ஆக்சிஜனும், திரவ ஹைட்ரனும் பயன்படுத்தப்படுவதில்லை. பல ராக்கெட்டுகளில் திட எரிபொருளும் அத்துடன் கடும் குளிர்விப்பு தேவைப்படாத திரவ எரிபொருளும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவ்வித ராக்கெட்டுகளால் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்ல இயலாது.

அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை ராக்கெட் சுமந்து செல்ல வேண்டுமானால் கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் தேவை. ஏற்கெனவே குறிப்பிட்டபடி இவ்வகை எஞ்சின் அதிக உந்து விசையை அளிப்பதாகும்

ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் 5 ராக்கெட்டானது அனாயாசமாக எட்டு டன் எடை கொண்ட செயற்கைக்கோளை சுமந்து செல்கிறது. அது திரவ ஆக்சிஜனையும் திரவ ஹைட்ரஜனையும் பயன்படுத்துகிறது.

ஐரோப்பிய விண்வெளி அமைப்பின்
ஏரியான் 5 ராக்கெட்
உலகில் இன்று அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் கிரையோஜெனிக் ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் திறன் பெற்றவையாக விளங்குகின்றன.ஆகவே இந்த நாடுகளால் எடை மிக்க செயற்கைக்கோள்களை உயரே செலுத்த முடிகிறது. ஆனால் இந்தியா இன்னும் அத்திறனைப் பெறவில்லை.

இந்தியா இத்தொழில் நுட்பத்தைப் பெற்றுவிடாதபடி அமெரிக்கா ஆரம்ப முதலே முட்டுக்கட்டை போட்டது. ஒரு கட்டத்தில் ரஷியாவும் இதற்கு உடந்தையாக இருக்க நேரிட்டது. இந்தியா பெரும் பாடுபட்டு சொந்தமாக கிரையோஜெனிக் ராக்கெட்டைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் ஓரளவு வெற்றி கண்டுள்ளது. அது தனிக் கதை.