Jan 21, 2012

பணக்காரர்களின் மின்சாரம்

Share Subscribe
இன்னும் சில ஆண்டுகளில் சென்னை, கோவை, சேலம் போன்ற நகரங்களில் பெரும் பணக்காரர்கள், வசதி படைத்த நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோர் தங்கள் வீட்டு மாடிகளில் சூரிய மின் பலகைகளைப் பொருத்தி வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தில் கணிசமான பகுதியைத் தாங்களே உற்பத்தி செய்து கொள்ளும் ஏற்பாடு வந்து விடலாம்.

சூரிய மின் பலகைகள் (Solar Panels) சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றித் தருபவை. வீட்டில் இருந்தபடி ஆர்டர் கொடுத்தால் போதும். சில வாரங்களில் மாடி ’மின்சார நிலையம்’  நிறுவப்பட்டு விடும். இதை செயல்படுத்தித் தர இப்போது இந்தியாவில் பல தனியார் நிறுவனங்கள் உள்ளன.

வெளிநாட்டில் வீட்டுக் கூரை மீது
சூரிய மின் பலகைகள்
அமெரிக்காவிலும் பிற மேற்கத்திய நாடுகளிலும் வீடுகளில் ஏற்கெனவே இப்படியான மாடி மின் நிலையங்கள் வந்து விட்டன.  வர்த்தக நிறுவனங்களின் கூரைகளிலும் சூரிய மின் பலகைகள் பொருத்தப்பட்டு அவையும் சொந்தமாக மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ள ஆரம்பித்துள்ளன.

பாக்ட்ரியின் கூரை மீதும்
சூரிய மின் பலகைகள்
சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் சிறிய சில்லுகள் 1954 ஆம் ஆண்டு வாக்கில் தான் முதல் தடவையாக உற்பத்தி செய்யப்படலாயின.  ஆரம்ப நாட்களில் இவ்வித சில்லுகள் விளையாட்டு பொம்மைகள், கால்குலேட்டர்கள் ஆகியவற்றில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. பின்னர் இத்தொழில்நுட்பத்தில் வேகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அப்படியும் கூட இந்த முறையின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான செலவு மிக அதிகமாக இருந்தது. ஆகவே சூரிய மின் பலகைகளைப் பயன்படுத்தி கணிசமான அளவில் மின்சாரம் உற்பத்தி செய்ய இயலாது என்ற நிலைமைதான் இருந்தது.

செயற்கைக்கோளின் இரு புறங்களிலும்
சூரிய மின் பலகைகள்
பூமியைச் சுற்றுகின்ற செயற்கைக்கோள்களில் உள்ள கருவிகள் இயங்குவதற்கு மின்சாரம் தேவை என்பதால் -- செலவானாலும் பரவாயில்லை என்று சூரிய மின் பலகைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். 1958 ஆம் ஆண்டில் தான் முதல் தடவையாக அமெரிக்காவின் வான்கார்ட் (Vanguard) செயற்கைக்கோளில் சூரிய மின் பலகைகள் பயன்படுத்தப்பட்டன.

சூரிய மின் பலகைகள் மூலம் மின்சாரத்தைப் பெறுவதானால் ஒரு வாட் மின்சாரம் பெற 100 டாலர் செலவாகும் என்ற நிலைமைதான் 1971 ஆம் ஆண்டில் இருந்தது. பின்னர் பல நவீன முன்னேற்றங்கள் காரணமாக இது 10 டாலர் ஆகக் குறைந்தது. கடந்த ஆண்டு அக்டோபரில் இது கிட்டத்தட்ட ஒரு டாலராகக் குறைந்து விட்டது.

சூரிய மின்சார நிலையங்கள் நிறைய இடத்தை
அடைத்துக் கொள்பவை
எனினும் இந்தியாவில் வீட்டு மொட்டை மாடியில் பெரிய சூரிய மின் பலகைகளை வைத்து வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை உற்ப்த்தி செய்து கொள்வதானால் மின்சார உற்பத்திக்கான செலவு ஒரு யூனிட்டுக்கு ரூ 15 ஆக இருக்கும் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது. இது மின்சார வாரியம் மூலம் பெறும் மின்சாரத்துக்கு அளிக்கும் கட்டணத்தை விட மிக அதிகம்.

மேலை நாடுகளிலும் சரி, ஜப்பான் போன்ற நாடுகளிலும் சரி, தனியார் நிறுவனங்கள் தான் மின்சாரத்தை உற்பத்தி செய்து வினியோகிக்கின்றன. இவை வசூலிக்கும் கட்டணமும் வீட்டு மாடியில் சூரிய மின் பலகைகள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்வதற்கு ஆகும் செலவும் கிட்டத்தட்ட சம நிலையை எட்டுமானால் அப்போது நிறையப் பேர் சூரிய மின் பலகைகளுக்கு மாறுவர். இந்த சம நிலையானது Grid Parity என்று குறிப்பிடப்படுகிறது. பல ஐரோப்பிய நாடுகளில் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்த சம நிலை எட்டப்படலாம் என்று கூறப்படுகிறது. சீனாவில் இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த நிலை எட்டப்படலாம் என்று ஒரு தகவல் கூறுகிறது.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை
சூரிய மின்பலகைகள்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், ஜப்பான் ஆகியவற்றில் ஏற்கெனவே இந்த நிலை எட்டப்பட்டு விட்டது. ஹவாய் தீவுகளில் டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் அங்கு சூரிய மின் பலகைகள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்வது ஆதாயமாக உள்ளது.

சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்வதானால் ஓரிடத்தில் ஆண்டில் சுமார் 300 நாட்கள் வெயில் அடிப்பதாக இருக்க வேண்டும். தவிர, வீடு, அல்லது அலுவலகத்தின் மின் தேவை முழுவதையும் சூரிய ஒளி மூலம் பெற முடியாது. ஏனெனில் பகலில் மட்டுமே மின் உற்பத்தி சாத்தியம். ஆகவே மொத்த மின் தேவையில் ஒரு பகுதியை மட்டுமே இந்த முறை மூலம் பெற முடியும். மீதித் தேவைக்கு பொது மின் இணைப்பு (Grid) மூலம் கிடைக்கும் மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.

வீட்டு மாடியில் அல்லது அலுவலக மாடியில் சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை உறபத்தி செய்து கொள்வது என்பது அவரவர் செய்கின்ற முடிவாகும். அரசு அல்லது பெரிய மின் நிறுவனம் பெரிய அளவில் பல மெகாவாட்(Mega Watt) மின்சாரத்தை உற்பத்தி செய்வது என்பது வேறு விஷயம்.

பெரிய அளவில், அதாவது பல மெகாவாட் அளவில், மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் அமெரிக்காவும் பல ஐரோப்பிய நாடுகளும் முன்னணியில் உள்ளன. குறிப்பாக ஜெர்மனி முதல் இடம் வகிக்கிறது. சூரிய மின்சாரத்திலும் இரண்டு வித முறை உள்ளது. முதல் முறையில் திறந்த வெளியில் பல ஏக்கர் நிலப்பரப்பில் எண்ணற்ற சூரிய மின் பலகைகள் நிறுவப்பட்டு நிறைய மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முறையில் சூரிய ஒளி நேரடியாக மின்சாரமாக மாற்றப்படுகிறது.

சூரிய ஒளியை ஆடிகள் மூலம்
திருப்பி விட்டு மின் உற்பத்தி
இரண்டாவது முறை சற்று வித்தியாசமானது. திறந்த வெளியில் ய்ரமான கோபுரம் நிறுவப்படுகிறது. அதன் உச்சியில் தண்ணீர் அல்லது வேறு திரவம் இருக்கும். கோபுரத்தைச் சுற்றித் தரையில் எண்ணற்ற ஆடிகள் (Mirrors) பொருத்தப்பட்டிருக்கும். இவை சூரிய ஒளியை கோபுர உச்சிக்குத் திருப்பும். இதனால் உச்சியில் உள்ள திரவம் கடுமையாகச் சூடேறும். இந்த சூடான திரவத்தைப் பயன்படுத்தி நீராவி உற்பத்தி செய்யப்படும். இந்த நீராவி (அனல் மின் நிலையத்தில் நடைபெறுவது போல்) மின் உற்பத்திக்கான ஜெனரேட்டர்களை இயக்கும்.

இந்த இரண்டு முறைகளிலுமே நிறைய நிலம் தேவை. உதாரணமாக சுமார் 80 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதானால் 600 ஏக்கர் நிலம் தேவை. தவிர, பகல் நேரங்களில் மட்டுமே மின் உற்பத்தி சாத்தியம். ஆனால் அண்மையில் இரண்டாவது முறையில் மேலும் முன்னேற்றம் புகுத்தப்பட்டுள்ளது. கோபுரத்தின் உச்சியில் உப்பு வைக்கப்படுகிறது. இது சூடேறி கொதிக்கும் உப்புக் குழம்பாக மாறுகிறது. இதில் ஒரு பகுதி நிலத்துக்கு அடியில் சேமித்து வைக்கப்படுகிறது. அதைக் கொண்டு இரவிலும் மின் உற்பத்தி சாத்தியமாக்கப்பட்டுள்ளது (காண்க சூரியன் மூலம் 24 மணி நேர மின் உற்பத்தி).

மேலே குறிப்பிடப்பட்ட முதல் முறை மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வது இப்போது இந்தியாவில் ஆரம்ப நிலையில் உள்ளது. தனியார் நிறுவனங்கள் சூரிய மின் நிலையங்களை நிறுவுவதை இந்திய அரசு ஊக்குவிக்கிறது. இதற்கான பல சலுகைகளை அளிக்கிறது. ஆகவே பல நிறுவனங்கள் இதில் இப்போது தீவிரமாக முனைந்துள்ளன. இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை அரசின் தேசிய மின்சார நிறுவனம் வாங்கிக் கொள்ளவும் ஏற்பாடு உள்ளது. இந்த ஏற்பாட்டில் ஒரு யூனிட் மின்சாரம் எட்டு ரூபாய் என்ற விலையில் வாங்கிக் கொள்ளப்படும் என்று ஒரு தகவல் கூறுகிறது.

சூரிய ஒளி மூலம் மின்சாரத்தைப் பெறுவதில் இந்தியாவில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. முதலாவதாக இந்தியாவில் மேலே குறிப்பிடப்பட்ட Grid Parity ஏற்பட நீண்ட காலம் ஆகலாம். தவிர, சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் ஏக்கர் கணக்கில் நிலத்தை விழுங்குபவை. மக்கள் அடர்த்தி அதிகமுள்ள இந்தியாவில் இது ஒரு பிரச்சினையே.

மானிலங்களின் மின் வாரியத்திடமிருந்து தேவையான மின்சாரத்தைப் பெற முடியாத நிலையில் அதிகச் செலவில் டீசல் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ள வேண்டியுள்ள தனியார் நிறுவனங்கள் சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை வாங்கிக் கொள்ள முன்வரலாம்.

சூரிய ஒளி வற்றாதது. என்றும் கிடைப்பது. ஆகவே சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வது வரவேற்கத்தக்கதே. ஆனாலும் உலகில் எந்த ஒரு சூரிய மின் நிலையமும் பொதுவில் 100 மெகாவாட்டுக்கு மேல் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில்லை. சீனாவில் இப்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள சூரிய மின்சார நிலையம் தான் 300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இருக்கிறது.

சூரிய மின் நிலையத்திலிருந்து இரவு பகல் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்க வழியில்லை. காற்றைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதிலும் பிரச்சினை உள்ளது. ஒரு மானிலத்தில் பல காற்றாலைகள் சேர்ந்து மொத்தம் 3000 மெகாவாட் மின்சாரத்தை அளிக்கலாம். ஆனால் மறு நாளே உற்பத்தி 400 மெகாவாட்டாக ஒரேயடியாகக் குறைந்து விடலாம். காற்றை நம்ப முடியாது.

இந்தியாவின் மொத்த மின்சார உபயோகத்தில் சுமார் 70 சதவிகிதம் அனல் மின் நிலையங்கள் மூலம் பெறப்படுகிறது. சூரிய மின்சாரமோ காற்றாலை மின்சாரமோ அனல் மின் நிலையத்துக்கு மாற்றாக இருப்பது சந்தேகம். ஆனால் எதிர்காலத்தில் அணுமின் நிலையங்கள் மாற்றாக விளங்கலாம்.

அணுமின் நிலைய யூனிட் ஒன்று 1400 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். ஒரே இடத்தில் மூன்று அல்லது நான்கு யூனிட்டுகளை அமைக்கும் போது குறைந்தது 4000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். அதுவும் பிரச்சினை இன்றி தொடர்ந்து இரவு பகல் 24 மணி நேரமும் கிடைக்கும்.

ஜப்பானில் உள்ள காஷிவாசாகி-கரிமா
அணுமின் நிலையம்
உதாரணமாக ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள காஷிவாசாகி-கரிவா அணுமின் நிலையம் மொத்தம் சுமார் 8000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. அதுவே உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையமாகும். அதற்கு அடுத்தபடியாக கனடாவில் உள்ள புரூஸ் அணுமின் நிலையம் 6000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. திட்டமிட்டபடி அனைத்து யூனிட்டுகளும் கட்டி முடிக்கப்பட்டால் கூடங்குளம் அணுமின் நிலையம் உலகில் இரண்டாவது இடத்தைப் பிடித்து விடலாம்.

மத்திய அமைச்சர் ஒருவர் அண்மையில் கூறுகையில் அணு மின்சாரம் தான் மிகவும் விலை குறைந்தது என்றார்.மேற்கத்திய நாடுகளில் நடத்தப்பட்ட சில ஆய்வுகளும் இதைக் காட்டுகின்றன. எனினும் இதில் இரண்டு விதக் கருத்து உண்டு - அணுமின்சாரம் குறைந்த விலையிலான மின்சாரம் அல்ல என்று கூறி புள்ளி விவரம் அளிப்பவர்களும் உள்ளனர். எது எப்படியோ சூரிய மின்சாரத்தை விட அணுமின்சாரம் நிச்சயம் விலை குறைவு என்ப்தை யாரும் மறுக்க மாட்டார்கள். அணுமின்சாரத்தை ஏழைகளின் மின்சாரம் என்று யாரும் கூற மாட்டார்கள் என்றாலும் சூரிய மின்சாரம் இன்றைய நிலையில் பணக்காரர்களின் மின்சாரமே.

12 comments:

Unknown said...

கருத்தும் பதிவும் மிக நன்று! தலைப்பை அவ்வாறு சொல்ல முடியாது!

Anonymous said...

//அணுமின்சாரம் குறைந்த விலையிலான மின்சாரம் அல்ல என்று கூறி புள்ளி விவரம் அளிப்பவர்களும் உள்ளனர்.//

உங்கள் வலைப்பதிவை தொடர்ந்து வாசிப்பவர்களில் ஒருவன் நான். உங்களது மேற்கண்ட வரிகள் மிகவும் மேலோட்டமாக உண்மையை தாண்டிச்செல்வது போல எழுதப்பட்டதாக நினைக்கிறேன். அணுமின்சக்தியின் மொத்த விலையானது மற்ற எந்த மின்சக்தியையும் விட மிக அதிகமானதே ஆகும். அதன் கழிவுகளை நீண்ட நெடுங்காலத்துக்கு பாதுகாக்கவும், அணு சக்தி மூலப்பொருட்களையும் கழிவுகளையும் கையாளும் போது ஏற்படும் மனித பாதிப்புகள்/ இழப்பீடு மற்றும் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் இவற்றை கணக்கில் கொண்டு பார்க்கும் போது ஏற்படும் செலவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். பிளாஸ்ட்டிக் ஒரு மலிவான, வசதியான மாற்றுப்பொருளாக உபயோகிக்கப்பட்ட சில பத்துஆண்டுகளிலேயே அதனால் அசுத்தமாக்கப்பட்ட சூழலையும், அதை சுத்தப்படுத்த ஆகும் செலவுகளையும், மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் புற்றுநோய் போன்ற நோய்களையும் நாம் கணக்கில் எடுத்தால் அது மலிவான, பாதுகாப்பான மாற்றுப்பொருளா என்று தெரியவரும். இப்படி யோசித்திருந்தால் பிளாஸ்டிக்கின் உபயோகம் தற்போதுள்ளது போல இல்லாமல் மேலும் கவனமாகவும், பொறுப்பாகவும் செய்யப்பட்டிருக்கும்.

Anonymous said...

அணுமின்சக்தி தொழில் நுட்பத்துக்கும் செலவிடப்படும் தொகைக்கும் கிடைக்குக் பலனுக்கும், சூரிய சக்திக்கும் செலவிடப்படும் தொகைக்கும் கிடைக்கும் பலனுக்கும் உள்ள விகிதத்தைக் கணக்கிட்டால் எது பணக்காரர்களின் மின்சக்தி என்பதும் தெரியவரும்.

Rathnavel Natarajan said...

தங்களது பதிவை இப்போது தான் படிக்கிறேன்.
அருமையான பதிவு. அருமையான விளக்கங்கள்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி ஐயா.

Ungalranga said...

அணு உற்பத்தி மீதான மக்களின் நம்பிக்கையின்மை ஒருபக்கம் இருந்தாலும், அதை பற்றிய தெளிவான விளக்கங்களை அறிவியல் ஆய்வாளர்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்காமல் இருப்பது நிச்சயம் சந்தேகத்திற்கு அடிகோல்கிறது.

Prabu Krishna said...

மேலே முகம் தெரியாத நண்பர் கூறி உள்ளது போல அணு மின்சாரம் செலவு அதிகம் தான். யோசித்து பாருங்கள் நான் மின்சாரம் ஒரு யூனிட் என்ன விலை என்று தான் பார்க்கிறோம். ஆனால் அதற்கு ஆகும் முதலீடு, பராமரிப்பு, அணு மின் கழிவுகளை பாதுக்கப்பாய் அப்புறப்படுத்த ஆகும் செலவுகளை கணக்கிட்டால் சூரிய மின்சாரத்தை விட அதிக செலவே ஆகும்.

அத்தோடு சூரிய மின்சாரத்தின் இந்த பதினைந்து ரூபாய் என்பது 2001 இல் மூலப் பொருட்களின் விலையை கொண்டு கணக்கிடப்பட்டது. இன்றைய சூழ்நிலையில் மூலப் பொருட்கள விலை மிகவும் குறைந்துள்ள நிலையில் ஒரு யூனிட் ஐந்து ரூபாய்க்கும் குறைவானதே.

என்.ராமதுரை / N.Ramadurai said...

பிரபு கிருஷ்ணா
அண்மையில் மத்திய அரசின் NTPC நிறுவனம் யூனிட் ரூ 12 என்ற விலையில் தான் சூரிய மின்சாரத்தை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. நீங்கள் கூறுவது போல சூரிய மின்சாரத்தின் விலை ரூ 5 அல்ல.

என்.ராமதுரை / N.Ramadurai said...

ரங்கன்
பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா ரகசியமாக அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருந்த போது அணுசக்தி பற்றிய பல விஷயங்கள் மூடுமந்திரமாக இருந்தது உண்மையே. இப்போது அப்படி இல்லை.கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும் அணுகுண்டு தயாரிப்புக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.கூடங்குளம் போன்ற அணுமின் நிலையங்களிலிருந்து அணுசக்திப் பொருள் எதுவும் அணுகுண்டு தயாரிப்புக்குச் செல்லாதபடி கண்காணிக்க சர்வதேச அணுசக்தி ஏஜன்சி என்ற அமைப்பு உள்ளது. அந்த அமைப்பின் நிபுணர்கள் வழக்கமாக அணுமின் நிலையங்களுக்குச் சென்று கண்காணிப்பது போல சில நாட்களுக்கு முன்னர் கூடங்குளத்துக்கும் வந்து சென்றார்கள். எல்லாவற்றிலும் ஏதோ மூடுமந்திரம் இருப்பதாக நினைப்பது வெறும் கற்பனை. பொய்யான பிரசாரங்களே இப்படி நினைக்க வைக்கிறது

RANGA said...

"ரொம்ப நன்றி சார் .....பதில் சொல்லாம இருந்ததுக்கு...."

அணுக் கழிவைப் பாதுகாக்க எவ்வளவு செலவாகும்?

அணு உலைக்கு ஆகும் செலவு எவ்வளவு?

இழப்பீட்டுச் சட்டத்தில் விபத்து ஏற்பட்டால் அணு உலை விற்ற கம்பேனி எவ்வளவு நஸ்ட ஈடு தரும்?

(தயவு செய்து ப‌தில் சொல்லுங்கள்...அணு உலையை ஆதரித்தவன் நான்..என் நண்பர்களுக்கு நான் மேற்கண்ட பதிலை அளிக்காவிடில் கேலி செய்கின்றனர்.போராட்டக்காரர்கள் போராடியது சரி என்ற முடிவுக்கே நான் வர இயலும்.)

என்.ராமதுரை / N.Ramadurai said...

Arul
தாங்கள் கேட்கின்ற கேள்விகளுக்குப் பதில் சொல்வதென்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட நீள்மான கட்டுரைகளை எழுத வேண்டியிருக்கும்.
அணுக்கழிவைப் பாதுகாக்க செலவு ஆகும் என்பது உண்மையே. ஆனால் அணு உலையில் எரிந்து தீர்ந்த எரிபொருள் தண்டுகளிலிருந்து விலை மதிப்பு மிக்க பொருட்களைப் பிரித்தெடுக்க முடியும் என்பதை யாரும் கணக்கில் கொள்வதில்லை.
அணு உலை வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம் முடிவற்றது. அதில் ஈடுபட நான் விரும்பவில்லை.

Unknown said...

திரு ராமதுரை அய்யா அவர்களுக்கு

“அணு உலை வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம் முடிவற்றது. அதில் ஈடுபட நான் விரும்பவில்லை”.
என்ற தங்களின் முடிவு என்னை போன்ற சாதாரண பொதுமக்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றதையும் ஏற்படுத்துகிறது. பொதுமக்களின் பயத்தையும் அறியாமையும் போக்குவது தங்களை போன்ற விஞ்ஞானிகளின் பொறுப்பும் கடமையும் கூட.
மைக்கேல் பாரடே போன்ற பல விஞ்ஞானிகள் மின்சாரத்தை கண்டுபிடித்தபொழுது அதை தொட்டால் மரணம் ஏற்படும் என்ற பீதி மக்களிடம் ஏற்பட்டபொழுது அதை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது என்று விஞ்ஞானிகள் மக்களிடம் விளக்கி அவர்களின் பயத்தை போக்கியதல்தான் இன்று மின்சாரம் மக்களின் அத்தியாவசிய ஒன்றாகியுள்ளது.
எந்த ஒரு விவாதத்துக்கும் முடிவு உள்ளது. அணு உலை பற்றி பயம் கொண்டுள்ள சில நூறு மக்களை தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் அணு மின் நிலையங்களுக்கு அழைத்துச்சென்று அங்கு எப்படி பாதுகாப்பாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது, அணுக்கழிவுகள் எப்படி பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்படுகிறது என்பதை விஞ்ஞானிகள், அரசாங்கம் விளக்கி அவர்கள் பயத்தை போக்க வேண்டும்.
இப்படிக்கு
முருகன். toolmurugan@gmail.com

என்.ராமதுரை / N.Ramadurai said...

நாட்டில் இப்போதுள்ள நிலையில் அணுமின்சார நிலையங்கள் அவசியமே என்பது என் கருத்து.ஈரானில் ரஷியாவில், கஜகஸ்தானில் உள்ளது போன்று இந்தியாவில் ஏராளமான அளவுக்கு எரிவாயு கிடைக்குமானால் அந்த எரிவாயுவைக் கொண்டு பலப் பல மின்சார நிலையங்களை அமைத்து விட முடியும்.
தென் மானிலங்களில் குறிப்பாகத் தமிழகத்தில் எரிவாயு அற்ப அளவுக்கே கிடைக்கிறது( நரிமணம்) நிலக்கரியும் கிடையாது. ஆனால் மின்சாரத் தேவையோ பயங்கரமான அளவுக்கு அதிகரித்துக் கொண்டு போகிறது.
ஆகவே மின்சார உற்பத்தியைப் பெருக்க அணுசக்தி ஒன்று தான் கதி என்ற நிலை உள்ளது.
உலகெங்கிலும் பல நூறு அணுமின்சார நிலையங்கள் பாதுகாப்பான அளவில் செயல்பட்டு வருகின்றன.
ஜப்பானில் புகுஷிமா அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டதற்கு முட்டாள்தனமே காரணம்.ஜப்பான் முன்னேறிய நாடு தான். ஆனால் ஜப்பானில் எல்லாமே மிகச் சிறப்பாக உள்ளது என்று நினைப்பது தவறு.ஜபபானில் அணுமின் நிலையங்கள் அனைத்தும் தனியார் துறையில் உள்ளன. ஆனால் அமெரிக்காவில் உள்ளது போல அவற்றைக் கண்காணிக்கின்ற ஏற்பாடு கிடையாது.
தனியார் துறையில் பல சமயங்களிலும் அசட்டு சிக்கனம் பிடிப்பார்கள்.அப்படியான விஷயமும் அங்கு விபத்து ஏற்பட்டதற்கு ஒரு காரணம்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவாக மேடைகளில் பேசியிருக்கிறேன். அணுமின்சாரத்தை தீவிரமாகவே ஆதரித்திருக்கிறேன்.
அணுமின்சாரம் போன்ற விஷயங்களில் அரசியலைக் கலப்பதோ, உணர்ச்சிகளைத் தட்டி விடுவதோ தவறானது.
அதே நேரத்தில் அணுசக்தி பற்றி மக்களுக்குப் புரியும் வகையில் எடுத்துக்கூற மத்திய அரசு தவறி விட்டது.என்று நான் கருதுகிறேன்.
அணுமின்சார நிலையங்கள் விஷய்த்தில் மத்திய அரசு முக்கியமாக எடுக்க வேண்டிய முடிவு ஒன்று இருக்கிறது. அதாவது அணுமின் நிலையங்களைக் க்ண்காணிக்க அமெரிக்காவில் இருப்பது போன்று சுய அதிகாரம் கொண்ட தனி அமைப்பு தேவை.அப்படியான அமைப்பு விரைவில் நிறுவப்பட்டாக வேண்டும்.

Post a Comment