Sep 18, 2014

நாலு கால் பாய்ச்சலில் ஓடும் ரோபாட்

Share Subscribe
யந்திர மனிதன் என்று வருணிக்கப்படுகிற ரோபாட்டுகள் வகை வகையாக உள்ளன. இப்போது நிபுணர்கள் நான்கு கால் பாய்ச்சலில் ஓடும் யந்திர விலங்கு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

அமெரிக்காவில் எம்.ஐ. டி எனப்படும் மாசசூசட்ஸ் தொழில் நுட்பக் கழகத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு இது மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடுகிறது. பார்ப்பதற்கு சீட்டா மாதிரீ இல்லை என்றாலும் இதற்கு யந்திர சீட்டா (Cheetah)  என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிக அதிக வேகத்தில் ஓடுகின்ற விலங்கு சீட்டா ஆகும். இது அதிகபட்சம் மணிக்கு 112 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியதாகும். அதை மனதில் கொண்டு யந்திர சீட்டா உருவாக்கப்பட்டுள்ளது. ( சீட்டா வேறு. சிறுத்தை ( Leopard) வேறு. சீட்டாவை சிறுத்தைப் புலி அல்லது சிவிங்கிப் புலி என்று வேண்டுமானால் கூறலாம்.

எம்.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் முதலில் கம்பியிலிருந்து தொங்குகிற அத்துடன் கம்பி இணைப்பு மூலம் இயங்குகிற யந்திர சீட்டாவை உருவாக்கினார்கள். அதை ஆராய்ச்சிக்கூடத்துக்குள் வைத்து இயக்கினார்கள். அது நகரும் மேடை மீது மணிக்கு 22 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடுவதாக இருந்தது.


                           யந்திர சீட்டா ஓடுவதைக் காட்டும் விடியோ படம்

இப்போது உருவாக்கப்பட்டுள்ள யந்திர சீட்டா திறந்த வெளியில் புல் தரையில் தானாக ஓடுகிறது. சிறு தடை இருந்தால் அதைத் தாண்டி ஓடக்கூடியதாகவும் உள்ளது. ஆராய்ச்சிக் குழுவினர் யந்திர சீட்டாவை தொழில் நுட்பக் கழக வளாகத்தில் ஓட விட்டு சோதித்தனர்.

இதன் வேகத்தை மணிக்கு 48 கிலோ மீட்டர் அளவுக்கு அதிகரிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இது பற்றிய ஆராய்ச்சி முழு வெற்றி பெற்றால் மனிதன் எதிர்காலத்தில் யந்திர விலங்கின் முதுகில் உட்கார்ந்து கொண்டு --குதிரை சவாரி மாதிரியில்--அலுவலகம் செல்ல முடியலாம்.

அமெரிக்காவில் வேறு ஆராய்ச்சிக்கூடங்களும் கடந்தகாலத்தில் யந்திர சீட்டாக்களை உருவாக்கின. ஆனால் அவற்றின் உள்ளே பெட்ரோலினால் இயங்கும் யந்திரங்கள் இடம் பெற்றிருந்தன. அவை ஓடும் போது நிறைய சத்தம் கிளம்பியது.

எம்.ஐ.டி நிபுணர்கள் இப்போது உருவாக்கியுள்ள யந்திர சீட்டா மின்சார மோட்டார் மூலம் இயங்குவதாகும்.சத்தம் எழுப்புவதில்லை.

யந்திர விலங்கை உருவாக்குவதில் பல பிரச்சினைகள் உள்ளன. அதன் கால்கள் ஒருங்கிணைந்து சீராக செயல்பட வேண்டும். ஸ்திர நிலை இருக்க வேண்டும். பக்கவாட்டில் சாய்ந்து விழுந்து விடக்கூடாது. எந்த அளவுக்குக் கால்கள் தரையில் நன்கு அழுந்துகிறதோ அந்த அளவுக்கு அது வேகமாக ஓடும்.

யந்திர சீட்டாவை உருவாக்கிய ஆராய்ச்சிக் குழுவினர்.
விலங்குகள் எப்படி ஓடுகின்றன என்று அறிவதே அடிப்படை நோக்கமாகும் என்று எம்.ஐ.டி  மெக்கானிக்கல் எஞ்சினீரிங் இணைப் பேராசிரியரும் ஆராய்ச்சிக் குழுவின் தலைவருமான சாங்க்பே கிம் கூறுகிறார். இதை நாம் அறிந்து கொண்டால் நன்கு இயங்குகின்ற செயற்கைக் கால்களை உருவாக்க முடியும். ஒரு வேளை மனிதனின் நடமாட்டத்துக்கு கார்களும் ரோடுகளும் தேவையே இல்லாமல் புது விதப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த முடியலாம் என்றும் அவர் சொன்னார்.

யந்திர விலங்கை உருவாக்குவதற்கான ஆராய்ச்சித் திட்டம் அமெரிக்க ராணுவத்தின் மேம்பட்ட ஆராய்ச்சி ஏஜன்சியின்(DARPA)  நிதி உதவியுடன் நடைபெறுகிறது.

( குறிப்பு :  Robot  என்பதை பல பத்திரிகைகள் ரோபோ என்று எழுதுகின்றன. டிவி சேனல்கள் ரோபோ என்று உச்சரிக்கின்றன. இது முற்றிலும் தவறு. Robot  என்பதன் உச்சரிப்பு ரோபாட் என்பதேயாகும்.)

6 comments:

Anonymous said...

சாவி கொடுத்தால் (அல்லது பாட்டரியில்) ஓடுகிற பொம்மைக் குதிரை, நாய் எல்லாம் பார்த்திருக்கிறோம் இல்லையா, அதையே பெரிதாகச் செய்தது மாதிரிதானே சார் இருக்கிறது? இதில் அப்படி என்ன விஷேசம் என்று எனக்கு சரியாகப் புரியவில்லை. மாடிப்படி ஏறுகிற, நடனம் ஆடுகிற ரோபாட்டைவிடவா?

சரவணன்

என்.ராமதுரை / N.Ramadurai said...

சரவணன்
சாவி கொடுத்தால் ஓடும் பொம்மைகள் ஒரு புறம் இருக்க பாட்டரியால் இயங்கும் பட்டாம் பூச்சுகள் கூட உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் சைஸ் பெரிதாகும் போது எடை அதிகரிக்கும் போது அத்துடன் வேகமும் சேர்ந்தால் நிறையப் பிரச்சினைகளை சமாளித்தாக வேண்டும். ய்ந்திர சீட்டா கிட்டத்தட்ட அசல் சீட்டா எடை கொண்டது. இதில் அசையும் உறுப்புகளும் அதிகம். பெரிய சைஸ் ரோபாட்டுகளில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் சமாளிக்கப்பட்டுள்ளன என்பது பெரிய விஷயமே

poornam said...

//யந்திர விலங்கை உருவாக்குவதில் பல பிரச்சினைகள் உள்ளன. அதன் கால்கள் ஒருங்கிணைந்து சீராக செயல்பட வேண்டும். ஸ்திர நிலை இருக்க வேண்டும். பக்கவாட்டில் சாய்ந்து விழுந்து விடக்கூடாது. எந்த அளவுக்குக் கால்கள் தரையில் நன்கு அழுந்துகிறதோ அந்த அளவுக்கு அது வேகமாக ஓடும்//
இந்தப் பிரச்சினைகளை சமாளிப்பதைவிட (போக்குவரத்து சாதனம் என்று பார்த்தால்) கார்களையே தானியங்கிகளாக்கலாமே?

என்.ராமதுரை / N.Ramadurai said...

poornam
ஏற்கெனவே தானியங்கி கார்கள் -- டிரைவர் இல்லாத கார்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் சில மானிலங்களில் இவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டிரைவர் இல்லாத டிரக் 1990 வாக்கிலேயே தயாரிக்கப்பட்டது. மனிதன் செல்ல முடியாத இடங்களைக் கடந்து செல்ல இது உருவாக்கப்பட்டது. அமெரிக்காவில் இந்த வாகனத்தை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இது பயனுக்கு வந்ததா என்பது தெரியாது.

Anonymous said...

பதிலுக்கு நன்றி சார். டிரைவர் இல்லாத கார் ஆராய்ச்சியில் இப்போது கூகுள் மும்முரமாக இருப்பதாகப் படித்திருக்கிறேன்.

சரவணன்

என்.ராமதுரை / N.Ramadurai said...

சரவணன்
தாங்கள் கூறுவது முற்றிலும் சரி. poornam அவர்களுக்கு நான் அளித்துள்ள பதிலையும் படிக்கவும்

Post a Comment