Showing posts with label வானிலை. Show all posts
Showing posts with label வானிலை. Show all posts

Oct 22, 2014

ஒரு மேகத்துக்கு தனி அந்தஸ்து

Share Subscribe
இந்த மேகம் தனி வகையானது என்றும்,
இதை மேகங்களின்  அட்லஸ் புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்றும்,
ஒருவர் விடாது போராடி வருகிறார்.
 நீங்கள் அவ்வப்போது வானைக் கவனித்து வந்தால் பல விதமான மேகங்கள் தென்படும். மேகங்களில் பல வகைகள் உண்டு. அவை அமைந்திருக்கின்ற உயரம், தோன்றும் விதம், அவற்றின் அமைப்பு என பல அம்சங்களைப் பொருத்து நிபுணர்கள் அவற்றை வகைப்படுத்தியுள்ளனர்.

 நிபுணர்களின் கணக்குப்படி மேகங்களில்  90 க்கும் அதிகமான வகைகள் உள்ளன.  எது எந்த வகை மேகம் என்று சுலபத்தில் அறிந்து கொள்ளும் வகையில் சர்வதேச வானிலை  அமைப்பு (World Meteorological Organization) பல வகையான மேகங்களின் படங்கள் அடங்கிய அட்லஸை (International Cloud Atlas) வெளியிட்டு வருகிறது.


இப்போது ஒருவர் தான் கூறுகின்ற மேகத்தை அந்த அட்லஸில் தனி வகை மேகமாகக் குறிப்பிட வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரி வருகிறார்.  அவர் பெயர் காவின் பிரிடோர் பின்னி என்பதாகும் (Gavin Pretor Pinney).  அவர் குறிப்பிடுகின்ற மேகம் ஒன்றும் உலகில்  இதுவரை வானில் காணப்படாத மேகம் அல்ல. ஏற்கெனவே அறியப்பட்டது தான்.

ஆனால்   அதைத் தனி வகையாகக் குறிப்பிட வேண்டும் என்பது தான் அவரது கோரிக்கையாகும்.  அந்த மேகத்தின் பெயர்  அண்டுலாடஸ் அஸ்பெராட்டஸ் என்பதாகும் (Undulatus Asperatus). இது அவராக வைத்த பெயர். கொந்தளிக்கும் மேகம் என்பது அதன் அர்த்தம்.

பல்வேறு மேகங்களுக்கும் லத்தின மொழியில் பெயர் வைப்பது தான் வழக்கம். ஆகவே பிரிடோர் பின்னி லத்தீன மொழி தெரிந்த ஒருவரின் உதவியுடன் அந்த மேகத்துக்கு அப்பெயரை வைத்தார்.

பின்னி வானிலை நிபுணர் அல்ல. அவர் ஓர் எழுத்தாளர். கிராபிக் டிசைனர். ஒரு சமயம் அவர் மேகங்களை கவனிக்கலானார். நீங்கள் வானை நோக்கினால் மேகங்கள் ஆலமரம் மாதிரி, காளை மாடு மாதிரி, சிங்கம் மாதிரி எல்லாம் சிறிது நேரம் தோற்றமளிக்கும். அவர் இப்படியாக பல வித உருவங்களிலான மேகங்களின் புகைப்படங்களை  சேகரிக்கலானார்.

விரைவிலேயே உலகில் அவர் போலவே பலரும் மேகங்களின் உருவங்களைப் படம் எடுத்து அவருக்கு அனுப்பலாயினர். அவர் அமைத்த மேக ரசிகர் சங்கத்தில் இன்று உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர்.


 மேகங்களின் விசித்திர உருவங்கள் மீது பின்னி ஆர்வம் காட்டியதுடன் நில்லாமல் ஒரு படி மேலே போய் மேகங்களின் வகைகள் மீதும் கவனம் செலுத்தனார். அந்த வகையில் தான் அவர்  அண்டுலாட்டஸ் அஸ்பெராட்டஸ் மேகத்தை ஆராயலானார். பலரும் அவருக்கு அந்த வகை மேகத்தின் படங்களை அனுப்பினர்.

இது சாதாரண அண்டுலாட்டஸ் மேகம் போன்றது அல்ல என்று அவருக்குத் தோன்றியது. ஆகவே தான் சர்வதேச வானிலை சங்கத்துக்கு இது பற்றி எழுதினார்.


உலகில் மேகங்களை வகைப்படுத்துவதில் சர்வதேச வானிலை அமைப்பு  தான் அதாரிடி. அந்த சங்கம் ஐ.  நா. அமைப்பின் ஓர் அங்கமாகும். அது நீண்டகாலமாக மேகங்களை வகைப்படுத்தி அவற்றின் படங்கள் அடங்கிய அட்லஸை வெளியிட்டு வருகிறது.  கடைசி பதிப்பு 1987 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.  கடந்த 60 ஆண்டுகளில் அந்த அட்லஸில் புது வகை மேகம் எதுவும் சேர்க்கப்படவில்லை.

பின்னிக்கு தாம் கூறுகின்ற  மேகம் அந்த அட்லஸில் தனி வகையாக இடம் பெற வேண்டும் என்று ஆசை. பின்னியின் முயற்சியால் இங்கிலாந்தில் ஒரு பல்கலைக்கழக மாணவர் அந்த குறிப்பிட்ட மேகம் பற்றி ஆராய்ச்சி நடத்தி ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேகங்களின் அட்லஸின் அடுத்த பதிப்பு விரைவில் தயாரிக்கப்படலாம். அதில் பின்னி கூறுகின்ற மேகம் இடம் பெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த அட்ல்ஸ் தயாரிப்பு தொடர்பான அதிகாரி ஒருவர் கூறுகையில் பின்னி தெரிவித்துள்ள  மேகம் ஒரு வேளை இடம் பெறலாம் என்றார்.


ஆனால் இது பற்றி உறுதியாக எதுவும் கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரு வேளை அட்லஸில் அந்த மேகம் சேர்க்கப்படுமானால் அதற்கு பின்னி வைத்த பெயருக்குப் பதில் வேறு (லத்தீன) பெயர் வைக்கப்படலாம் என்றும் அவர் சொன்னார்.

அட்லஸில் அது இடம் பெற்றால் போதும். நீங்கள் என்ன பெயர் வைத்தாலும் சரி என்கிறார் பின்னி.

அட்லஸில் அந்த மேகம் இடம் பெறுவதால் பின்னிக்கு என்ன லாபம்? ஒரு லாபமும் இல்லை. தான் குறிப்பிட்ட மேகம் தனி அந்தஸ்து பெற்று விட்டது என்ற திருப்தி தான்.

May 6, 2013

அக்னி நட்சத்திரத்தின் போது அதிக வெயில் ஏன்?

Share Subscribe
கோடைக்காலம் வந்து விட்டால் குறிப்பாகத்  தமிழ்ப் பத்திரிகைகளில் எந்த ஊரில் எவ்வளவு வெயில் என்ற விவரத்தை முதல் பக்கத்தில - பல சமயங்களில் கொட்டை எழுத்தில் - போட்டிருப்பார்கள். 2013ம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கடும் கோடை  நாட்கள் தொடங்கி விட்டதைத் தொடர்ந்து வேலூரில் அதிக பட்சமாக`107 டிகிரி (ஃபாரன்ஹைட்) வெயில் பதிவாகியது. வருகிற  நாட்களில் தமிழகத்தில் அனேகமாக எல்லா இடங்களிலும் வெயில் அதிகரிக்கும்.

சரி, வெயிலை எப்படி அளக்கிறார்கள்? வெப்பமானி மூலம் தான் என்பது எல்லோரும் உடனே சொல்லக் கூடிய விடை. ஆனால் வெப்பமானியை நல்ல வெயில் அடிக்கும் இடமாகப் பார்த்து மாட்டியிருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

சொல்லப் போனால் வெப்ப்மானியானது காற்று புகும் வசதி உள்ள ஒரு பெட்டியில் தான் வைக்கப்படுகிற்து. தவிர, அது வெயிலை அளப்பதே கிடையாது. தரையிலிருந்து சுமார் நான்கு அல்லது ஆறு அடி உயரத்தில் இருக்கின்ற காற்றின் வெப்பத்தைத் தான் அளக்கிறது. ஆகவே, உள்ளே காற்று எளிதில் புகும் வகையில் வெப்பமானிப் பெட்டியின் நான்கு புறங்களிலும் சாய்வான திறப்புகள் இருக்கும்.

திறந்த வெளியில் வெப்பமானி  வைக்கப்பட்டுள்ள பெட்டி. இதன் நான்கு புறங்களிலும் உள்ள சாய்வான திறப்புகள் வழியெ காற்று உள்ளே செல்லும்.

வெயிலானது காற்றை நேரடியாக சூடாக்குவது கிடையாது. அப்படிப் பார்த்தால் தரையிலிருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் காற்று பயங்கர சூடாக இருக்க வேண்டும். சூரிய ஒளி காற்று மண்டலம் வழியே வந்தாலும் சூரிய ஒளியானது காற்றை சூடாக்குவது கிடையாது.

சூரிய ஒளி தரையில் வந்து விழும் போது தரையை சூடாக்குகிறது. தரை சூடாகும் போது தரைக்கு சற்று மேலே உள்ள காற்று சூடாகிறது. இந்தக் காற்றின் வெப்பத்தைத் தான் வெப்பமானி அளக்கிறது. இதைத் தான் நாம் நேற்றைய வெயில் அளவு என்று கூறுகிறோம்.

வெப்பமானி எவ்விதமாக இருக்க வேண்டும், அதை எங்கு நிறுவ வேண்டும் எனபன பற்றி சர்வதேச அளவில் விதி முறைகள் உள்ளன. இவை உலக வானிலை அமைப்பு நிர்ணயித்தவை.

இதன்படி வெப்பமானி ஒரு மரப்பெட்டிக்குள் இருக்கும். அந்த மரப்பெட்டி திறந்த வெளியில் இருக்க வேண்டும். அருகே கட்டடங்கள் இருத்தல் கூடாது. மரங்கள் இருத்தல் கூடாது. அப்படி மரம் இருந்தால் மரத்தின் உயரத்தைப் பொருத்து வெப்பமானிக்கும் மரத்துக்கும் இடையே  எவ்வளவு தூரம் இருக்க வேண்டும் என்று கணக்கு உள்ளது.

வெப்பமானி பெட்டியின் உட்புறம்

வெப்பமானியானது காற்றின் வெப்பத்தை அளப்பதாகக் கூறினோம். தரை வெப்பத்துக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது. காற்றின் வெப்பமே இடத்துக்கு இடம் சற்று மாறுபடும்.  தரை வெப்பமோ இடத்துக்கு இடம் நிறையவே மாறுபடும்.

ஒரு நகரில் கட்டடங்கள் நிறைய உள்ள இடத்தில் தார் ரோடில், தார் உருகும் அளவுக்கு வெப்பம் இருக்கின்ற அதே நேரத்தில், அருகே ஓரிடத்தில் புல் தரையில் வெறும் காலால் நிற்க இயலும். தோட்டங்களில் மர நிழலில் தரை சுடாது. ஆகவே தான் காற்றின் வெப்பத்தை அளக்கிறார்கள். ஆனாலும் ஆற்றின் கரையோரமாக ஜிலு ஜிலு காற்று அடிக்கலாம்.

அந்த அளவில் வெப்பமானி அளவிடுகின்ற காற்றின் வெப்பம் கூட இடத்துக்கு இடம் சற்றே மாறலாம். ஆகவே நாளிதழில் நீங்கள் படிக்கின்ற வெப்ப அளவு அந்த நகரில் எல்லா இடங்களிலும் ஒரே சீராக உள்ள வெப்பம் அல்ல. வெப்பமானியில் பதிவாகி நாளிதழ்களில் பிரசுரிக்கப்படுவது குத்துமதிப்பான ஒன்றே.

கோடைக் காலத்தில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழுவதால் வெயில் அதிகமாக இருக்கும். சூரியனின் கதிர்கள் சாய்வாக விழும் போது குளிர்காலமாக இருக்கும்

உச்சி வெயில், மண்டை வெடிக்கிற வெயில் என்பார்கள். அதாவது சூரியன் தலைக்கு நேர்  மேலே இருக்கின்ற போது தான் வெயில் மிக அதிகபட்சமாக இருக்கும் என்று பலரும் கருதுவர். ஆனால் அது அப்படி அல்ல.

பெரும்பாலும் பிற்பகல் சுமார் இரண்டு அல்லது இரண்டரை மணிக்குத் தான் வெப்பம் அதிகமாக இருக்கும். ஓரிடத்தில் அதிகபட்ச வெப்பமும் அந்த நேரத்தில் தான் வெப்பமானியில் பதிவாகிறது

இதற்குக் காரணம் உண்டு. வெயில் ஏற ஏறத்  தரை மேலும் மேலும் சூடாகத் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் சூடேறிய தரையானது அதிக அளவில் வெப்பத்தை வெளியிட ஆரம்பிக்கிறது. பிற்பகல் இரண்டு மணி அளவில் இது ஏற்படுகிறது.

இவையெல்லாம் ஒரு புறம் இருக்க தமிழகத்தில் மே மாதத்தில், அதாவது இரண்டாவது மூன்றாவது வாரங்களில், வெயில் கடுமையாக இருப்பதற்குக் காரணம் உண்டு. சூரியன் அப்போது பூமிக்கு அருகில் இருப்பதாக சிலர் தவறாகக் கருதுவர்.

உண்மையில் சூரியன் ஆண்டுதோறும் ஜனவரி 4 ஆம் தேதி வாக்கில் தான் பூமிக்கு சற்றே அருகில் உள்ளது. ஆனால் அப்போதோ பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள இடங்களில் குளிர் காலமாக உள்ளது. தமிழகத்திலும் தான்.

பூமியானது 23.5 டிகிரி சாய்வான நிலையில் சூரியனைச் சுற்றி வருகிறது. இதுவே உலகில் கோடைக்காலம் குளிர் காலம் ஏற்படுவதற்கான காரணமாகும்.

சூரியனின் கதிர்கள் எந்த இடங்களில் எல்லாம் செங்குத்தாக விழுகிறதோ அந்த இடங்களில் எல்லாம் கோடைக்காலம் ஏற்படும். பூமியின் இந்த சாய்மானம் காரணமாக சூரியன் தெற்கே போவது போலவும் வடக்கே போவது போலவும் தோன்றுகிறது.

அந்த வகையில் மார்ச் 23 ஆம் தேதி சூரியன் பூமியின் நடுக்கோட்டுக்கு நேர் மேலே இருந்தது. அதன் பிறகு அது மெல்ல மெல்ல வடக்கே நகர ஆரம்பித்தது. மே மாதத்தில் சூரியன் தமிழகத்துக்கு நேர் மேலே இருக்கிறது. ஆகவே வெயில் அதிகமாக உள்ளது.

வடக்கு  நோக்கி நகர்ந்து செல்லும் சூரியன் ஜூன் 21 ஆம் தேதி வாக்கில் கடக ரேகைக்கு( 23.5 வட்க்கு அட்ச ரேகை)  நேர் மேலே இருக்கும். சூரியன் பிறகு தெற்கு நோக்கி - அதாவது பூமியின் நடுக்கோட்டை நோக்கி - நகர ஆரம்பிக்கும். இதன் விளைவாக சூரியன் இரண்டாம் தடவை தமிழகத்துக்கு நேர்  மேலே இருக்கும். அப்போது இரண்டாம் தடவையாக ஆவணி-புரட்டாசி மாதங்களில் வெயில் கடுமையாக இருக்கும். அந்த வகையில் தமிழகத்துக்கு இரண்டு கோடை உண்டு

பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள இடங்களில் கோடையாக இருக்கும் போது நடுக்கோட்டுக்கு தெற்கே உள்ள  நாடுகளில் குளிர் காலமாக இருக்கும். அங்கு சூரியனின் கதிர்கள் சாய்வாக விழும் என்பதே காரணம்.

மறுபடி அன்றாட வெயில் விஷயத்துக்கு வருவோம். ஓரிடத்தில் தினமும் பதிவாகிற அதிகபட்ச வெயிலை வைத்து மாத மற்றும் வருடாந்திர சராசரி வெப்பம் கணக்கிடப்படும்.  உலகில் பல நூறு இடங்களிலும் இவ்விதம் கணக்கிடப்படுகிற வருடாந்திர சராசரி வெப்பத்தை வைத்து உலக சராசரி வெப்பம் கணக்கிடப்படும்.  இந்த சராசரி வெப்ப அளவு மனிதனின் பல்வேறு செயல்களால் கடந்த 150 ஆண்டுகளில் மெல்ல உயர்ந்து வருவதாகவும் இதனால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்றும் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

Sep 4, 2012

ஒரு நதி பின்னோக்கி ஓடுமா?

Share Subscribe
ஆகஸ்ட் மாதக் கடைசி வாக்கில் அமெரிக்காவின் தென் பகுதியை ஐசக் என்று பெயரிடப்பட்ட புயல் தாக்கிய போது மிஸ்ஸிஸிபி  நதியானது  சுமார் 24 மணி நேரத்துக்குப் பின்னோக்கி ஓடியது. இதற்குப் புயலே காரணம்.

மிஸ்ஸிஸிபி நதியானது அமெரிக்காவின் மிகப் பெரிய நதியாகும். இந்த நதி கடலில் கலக்கும் இடத்தைத் தான் புயல் தாக்கியது. மணிக்கு சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசிய போது கடும் காற்று கடல் நீரை கரையை நோக்கியும் நதியின் முகத்துவாரத்தையும் நோக்கித் தள்ளியது.அதே நேரத்தில் காற்றினால் கடலில் ஏற்பட்ட அலைகளும் கடல் நீரை நதி முகத்துவாரத்தை நோக்கித் தள்ளின.
ஐசக் புயலினால் ஏற்பட்ட வெள்ளம்
இதன் விளைவாக கடல் நீர் பெரும் பிரவாகமென நதிக்குள் புகுந்தது. இதன் விளைவாக நதி நீரும் கடல் நீரும் சேர்ந்து பின்னோக்கிச் சென்றன.இது நதியின் போக்கையே மாற்றியது. சாதாரண நாட்களில் மிஸ்ஸிஸிபி நதியில் கடலை நோக்கி வினாடிக்கு1,25,00 கன அடி வீதம் நீர் பாயந்து கொண்டிருக்கும்.ஆனால் புயல் தாக்கிய போது கடலிலிருந்து நதிக்குள் வினாடிக்கு 1,82,000 கன அடி வீதம் வெள்ள நீர் பாய்ந்தது. இது நதியை பின்னோக்கி ஓடும் விளைவை ஏற்படுத்தியது.
கடல் நீர் வெள்ள்மென உள்ளே பாய்கிறது
புயல் வெள்ளம்  நதிக்குள் பாய்ந்ததன் விளைவாக நதியின் நீர் மட்டம் வழக்கத்தை விட 10 அடிக்கும் அதிகமாக  உயர்ந்தது.  நதியில் பெல்லி சாஸே என்னுமிடத்தில் உள்ள அளவுமானிகள் இவை அனைத்தையும் பதிவு செய்து  காட்டின.
புயலினால் மிஸ்ஸிஸிபி நதியின் நீர் மட்டம் ஆக்ஸ்ட் 28 ஆம் தேதி எந்த அளவுக்கு உயர்ந்தது என்பதைக் காட்டும் வரிவடிவப் படம். நன்றி :USGS
பொதுவில் நதி முகத்துவாரப் பகுதியில் புயல் தாக்கினால் தற்காலிக அளவில் நதி பின்னோக்கி ஓடுவது சகஜமே

.கடந்த 2005 ஆம் ஆண்டில் இதே வட்டாரத்தை கட்ரினா என்னும் பெயர் கொண்ட பயங்க்ரப் புயல் தாக்கிய போது இதே போல மிஸ்ஸிஸிபி நதி பின்னோக்கி ஓடியது. அப்போது நதி நீர் மட்டம் வழக்கத்தை விட 14 அடி அதிகமாக இருந்தது.

மிஸ்ஸிஸிபி நதி கடலில் கடக்கும் இடத்தில் அமைந்த நியூ ஆர்லியன்ஸ் நகர மக்களுக்கு புயல் என்றாலே பெரும் பீதி தான். காரணம் இந்த நகரமும் சுற்று வட்டாரப் பகுதிகளும் கடல் மட்டத்தை விடத் தாழ்வாக உள்ளன. கடல் பொங்கினால் கடல் நீர் நகருக்குள் புகுந்து விடாமல் தடுக்க மிக விரிவான அள்வில் ஏரிக்க்ரை போல நெடுக நல்ல உயரமான தடுப்புக் கரைகள் அமைக்கப்பட்டுள்ளன. புயல் தாக்கி கடல் நீர் வெள்ளமெனப் பாயும் போது இந்த தடுப்புக் கரைகளையும் தாண்டி நகருக்குள் வெள்ளம் புகுந்தால் பெரும் பிரச்சினை தான். கட்ரினா  புயல் தாக்கிய போது நகரம் வெள்ள்க்காடாகி பல வார காலம் தண்ணீரில் மிதந்தது..

நதி ஒன்று பின்னோக்கி ஓடுவதற்கு புயல் ஒன்று தான் காரணம் என்று சொல்ல முடியாது. அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்த மிசவுரி மாகாணத்தில்  மிஸ்ஸிஸிபி  நதிக் கரையில் நியூ மாட்ரிட் என்ற நகரம் அமைந்துள்ளது. அந்த நகரம் அமைந்த வட்டாரத்தில் 1812 ஆம் ஆண்டில் கடும் பூகம்பம் நிகழ்ந்தது. அப்போதும் மிஸ்ஸிஸிபி நதி பின்னோக்கி ஓடியது.


Jan 3, 2012

எல்லாப் புயல்களும் ஒரே மாதிரி சுழலுமா?

Share Subscribe
வங்கக் கடலில் பொதுவில் நவம்பர் மாதத்தில் புயல்கள் உருவாகும். டிசம்பர் இரண்டாவது வாரம் வரையிலும் புயல் சீசன் தான். இந்த ஆண்டில் அசாதாரண்மான வகையில் வங்கக் கடலில் நவம்பரில் ஒரு புயல் கூடத் தோன்றவில்லை. இதற்குப் பரிகாரமாக டிசம்பர் கடைசியில் - 30 ஆம் தேதியன்று - ஒரு புயல் தமிழகத்தைத் தாக்கிக் கடும் சேதத்தை விளைவித்தது.

கம்ப்யூட்டர் வசதி கொண்டவர்களில் பலரும் இந்திய வானிலை இலாகாவின் வலைத் தளத்துக்குச் சென்று கல்பனா செயற்கைக்கோள் அவ்வப்போது அனுப்பிய படங்களைப் பார்த்து புயல் எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொண்டிருப்பர். ஆனால் அவர்களும் சரி, புயல் சுழலும் பாணியை உன்னிப்பாகக் கவனிக்கத் தவறியிருக்கலாம்.

1. வலமிருந்து இடம் 2. இடமிருந்து வலம்
கல்பனா (Kalpana) செயற்கைக்கோள் அனுப்பும் படங்கள் சில பத்திரிகைகளிலும் வெளியாவதுண்டு. அப்படங்களைப் பார்க்கின்றவர்களும் சரி, புயல் சுழலும் பாணியைக் கவனிக்காமல் இருக்கலாம்.

வங்கக் கடலில் உருவாகின்ற புயல்கள அனைத்துமே வலப்புறத்திலிருந்து இடப்புறமாக சுழல்வதாக (Anti Clockwise) இருக்கும்.

வலமிருந்து இடமாகச் சுழலும்
வட கோளார்த்தப் புயல் 
அட்லாண்டிக் கடலிலும் இவ்விதம் புயல்கள் தோன்றி அமெரிக்காவின் தென் கிழக்குப் பகுதியைத் தாக்குகின்றன. ஜப்பானை யொட்டிய கடல் புகுதியிலும் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அருகில் உள்ள கடலிலும் இது போன்று புயல்கள் உருவாகின்றன. சீனாவின் கிழக்குக் கரையை ஒட்டிய கடலிலும் புயல்கள் தோன்றுகின்றன.

சொல்லி வைத்தாற் போல இந்த அத்தனை புயல்களும் வலமிருந்து இடமாகத் தான் சுழலும். பூமியின் நடுக்கோட்டுக்கு(Equator) வடக்கே எந்தப் புயலும் இப்படியாகத் தான் சுழலும்.

டிசம்பர் 2011, "தானே”(Thane) புயல்.
வலமிருந்து இடமாகச் சுழல்கிறது.
நன்றி: IMD
இதற்கு நேர் மாறாக நடுக்கோட்டுக்கு தெற்கே தோன்றும் புயல்கள் அனைத்தும் இடமிருந்து வலப்புறமாகச் சுழலும். கீழே உள்ள படத்தில் புயல் இடமிருந்து வலப்புறமாக (Clockwise) சுழல்வதைக் கவனிக்கவும். இப்புயல் தென் கோளார்த்தத்தில் உருவானதாகும்.தென் கோளார்த்தத்தில் புயல்கள் அனைத்தும் இவ்விதமாகத் தான் சுழலும்.

இடமிருந்து வலமாகச் சுழலும்
தென் கோளார்த்தப் புயல்

குஸ்டாவ் கொரியாலிஸ்
வட கோளார்த்தப் புயல்கள் ஒரு விதமாகவும் தென் கோளார்த்தப் புயல்கள் வேறு விதமாகவும் சுழல்வதற்கு கொரியாலிஸ் விளைவு(Coriolis Effect) காரணம். பிரெஞ்சு விஞ்ஞானியும் கணித நிபுணருமான குஸ்டாவ் கொரியாலிஸ் (Gaspard-Gustave de Coriolis) 1835 ஆம் ஆண்டில் அறிவித்த கொள்கை புயல்களின் இப்போக்குக்கான அடிப்படையை விளக்கியது. ஆகவே இதற்கு அவரது பெயர் வைக்கப்பட்டது.

பூமியானது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சுழல்கிறது. ஆகவே வட கோளார்த்தத்தில் புயல் உருவாகி மேகக் கூட்டங்கள் சுழல ஆரம்பிக்கும் போது வட திசையிலிருந்து தெற்கு நோக்கி வீசும் காற்றும் அத்துடன் மேகங்களும் பூமி சுழலும் திசையை நோக்கி அதாவது வலப் புறமாக சற்று திருப்பப்படுகின்றன. ஆகவே அவை வலப்புறத்திலிருந்து இடப்புறமாகச் சுழல ஆரம்பிக்கின்றன.

தென் கோளார்த்ததில் இதற்கு நேர் மாறான விளைவு ஏற்பட்டு புயல் மேகங்கள் இடமிருந்து வலப்புறமாகச் சுழல முற்படுகின்றன.

கொரியாலிஸ் விளைவு புயல்கள் சுழலும் பாணியை மட்டுமன்றி பீரங்கிக் குண்டுகள் செல்லும் பாதையிலும் விளைவை உண்டாக்குகின்றன. தரைப் படை மற்றும் போர்க்கப்பல்களில் உள்ள பீரங்கிகளின் குண்டுகள் பல கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடியவை.

பூமியின் வட கோளார்த்தத்தில் வடக்கு நோக்கி பீரங்கிக் குண்டுகளைச் செலுத்தும் போது கொரியாலிஸ் விளைவு காரணமாக சற்றே வலப்புறம் விலகும். ராணுவத்தினர் பீரங்கித் தாக்குதல் நடத்தும் போது இதனை மனதில் கொண்டு குண்டுகளைச் செலுத்துவர். அப்போது தான் அவை இலக்கை சரியாகத் தாக்கும்.

ஆனால் முதல் உலகப் போரின் போது பிரிட்டிஷ் படைக்கும் ஜெர்மன் படைக்கும் பூமியின் நடுக்கோட்டுக்குத் தெற்கே கடற் போர் நடந்தது. போரின் ஆரம்பக் கட்டத்தில் பிரிட்டிஷ் கடற் படையின் பீரங்கிக் குண்டுகள் மிகவும் தள்ளிப் போய் விழுந்தன. அவர்கள் கொரியாலிஸ் விளைவை (வட கோளார்த்தத்தில் ஏற்படுகின்ற விளைவை)  மனதில் கொண்டு அத்ற்கேற்பத் தாக்கினர். ஆனால் தென் கோளார்த்தத்தில் பீரங்கிக் குண்டுகள் இடது புறம் விலகும் என்பதை உணரவில்லை. இதை உணர்ந்த பின்னர் பிரச்சினை எதுவும் இருக்கவில்லை.

Dec 6, 2011

வங்கக் கடலில் புயல்களைக் காணோம்

Share Subscribe
இந்தத் தலைப்பைப் பார்த்ததும் தமிழக மக்களில் பலர், “இப்போது தான் மழை ஓய்ந்து நிம்மதியாக இருக்கோம். புயல் தோன்றாமல் போனதால் இப்போ என்ன கெட்டுப் போச்சு” என்று பாய்வார்கள்.போதுமான மழை பெய்து விட்டது. ஆகவே புயல் தோன்றாவிட்டால் நல்லது தான். ஆனால் புயல்கள் தோன்றவில்லை என்பது செய்தி.

இந்த ஆண்டில் அக்டோபர் மாதக் கடைசியில் வட கிழக்குப் பருவமழை தொடங்கியது. நவம்பர் 30 வரை தமிழகத்திலும் புதுவையிலுமாகப் பெய்த மழை அளவு வானிலைத் துறையினரின் தகவலின்படி மொத்தம் 47 சென்டிமீட்டர். இது வழக்கமாக இந்த சமயத்தில் பெய்யக்கூடிய மழையை விட 35 சதவிகிதம் அதிகம்.

இந்த காலகட்டத்தில் தமிழகத்தின் கரையோரமாக பல தடவை காற்றத் தாழ்வு மண்டலங்கள் தோன்றின. ஆனால் ஒரு புயல் கூடத் தோன்றவில்லை.

2010 ஆம் ஆண்டில் கரையை நெருங்கும் புயல்
பொதுவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தை விட புயலின் விரிவெல்லை அதிகம். நிறைய மழை மேகங்களை ஈர்க்கும். பரந்த வட்டாரத்தில் மழையைப் பெய்விக்கும். தவிர, புயல் என்பது நிலையாக நிற்பது கிடையாது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் பல நாட்கள் நீடித்துக் கழுத்தறுக்கும். இக்காரணத்தால் பல சமயங்களில் புயல்களை விட காற்றழுத்த மண்டலங்கள் தான் குறிப்பிட்ட வட்டாரத்துக்குள் அதிக மழையைக் கொண்டு வரும்.

நவம்பர் கடைசி வரையிலான காலத்தில் தமிழகத்தில் கூடுதல் மழை பெய்துள்ள அதே நேரத்தில் ஆந்திர மாநிலத்தில் பெய்துள்ள மழை அளவு வழக்கத்தை விட 45 சதவிகிதம் குறைவு. ஒடிஷா(ஒரிசா) மாநிலத்தில பெய்துள்ள மழை அளவு வழக்கத்தை விட 83 சதவிகிதம் குறைவு.

வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் சென்னைக்குத் தென் கிழக்கே வங்கக் கடலில் மூன்று நான்கு புயல்களாவது உருவாகும். இவை தமிழகம், ஆந்திரம் அல்லது ஒடிஷாவில் கரை கடக்கும். இதன் பலனாக அப்பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும். வங்கக் கடலில் உருவாகின்ற புயல்கள் அபூர்வமாக வங்கதேசத்துக்குச் செல்வதும் உண்டு.

இப்படி வங்கக் கடலில் உருவாகின்ற புயல்கள் நவம்பர் மாதத்தில் அதிகமாக இருக்கும். டிசம்பரில் புயல்கள் தோன்றுவது அபூர்வம். டிசம்பர் 15 தேதிக்கு மேல் வட கிழக்குப் பருவ மழை நீடிப்பது கிடையாது. இந்த ஆண்டில் டிசம்பர் மத்தி வரை ஒரு புயல் கூடத் தோன்றாமல் போனால் அது அசாதாரண நிலைமையாகவே கருதப்படும்.

வடகிழக்குப் பருவ மழை என்பது நம்மூர் சமாச்சாரம் என்றாலும் காற்று மண்டலம் என்பது உலகளாவியது. உலகின் கடல்களும் சரி, ஒன்றோடு ஒன்று பிணைந்தவை. அந்த அளவில் உலகின் பிற பகுதிகளில் காணப்படுகிற நிலைமைக்கும் - குறிப்பாக பசிபிக் கடலில் இருக்கின்ற நிலைமைக்கும் - வட கிழக்குப் பருவ மழைக்கும் (அத்துடன் தென்மேற்குப் பருவ மழைக்கும் தான்) தொடர்பு உண்டு என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

உலகின் கடல்களில் பசிபிக் கடல் தான் மிகப் பெரியது. அக்கடலின் மேற்பரப்பில் உள்ள வெப்ப நிலை முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது -  இன்னும் சரியாகச் சொன்னால் பூமியின் நடுக்கோட்டில் அமைந்த பசிபிக் கடலின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளின் மேற்பரப்பு.

அங்கு மேற்பரப்பு நீரின் வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக் இருந்தால் எல் நின்யோ (El Nino) என்றும், வழக்கத்தை விட குறைவு என்றால் லா நின்யா(La Nina) என்றும் குறிப்பிடப்படுகின்றன (இவை ஸ்பானிஷ் மொழிச் சொற்கள்).

 2007 ஆம் ஆண்டில் தோன்றிய லா நின்யா:
கடல் நீரின் வெப்பம் வழக்கத்தை விடக் குறைவாக
உள்ளதை நீல நிறம் காட்டுகிறது.
பசிபிக் கடலின் மேற்படி பகுதிகளில் இப்போது லா நின்யா நிலைமை உள்ளது இந்த நிலைமையில் இந்தியாவில் நிறைய மழை பெய்யும் என்று சொல்லப்படுகிறது.

எல் நின்யோ லா நின்யாவுக்கு நேர் மாறானது. 2009 ஆம் ஆண்டில் பசிபிக் கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதியில் கடலின் மேற்பரப்பு நீரின் வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருந்ததால் எல் நின்யா நிலைமை தோன்றி, அதன் விளைவாக இந்தியாவில் தென்மேற்குப் பருவ மழை பொய்த்தது.

வங்கக் கடலில் வழக்கமாகக் காணப்படுகின்ற புயல்கள் தோன்றாமல் போனது ஏன் என்பதற்கு வருகிற வாரங்களில் வெளியாகக் கூடிய ஆய்வறிக்கைகளில் காரணம் தெரிவிக்கப்படலாம்.

இந்தியாவின் பெரும் பகுதிகளுக்கு மழையை அளிக்கின்ற தென்மேற்குப் பருவ மழை பற்றி கடந்த பல ஆண்டுகளில் விரிவாகவே ஆராயப்பட்டுள்ளது. இத்துடன் ஒப்பிட்டால் ஒரு நிபுணரின் கருத்துப்படி வடகிழக்குப் பருவ மழை அந்த அளவுக்கு விரிவாக ஆராயப்படவில்லை.

இந்திய வானிலைத் துறையின் டைரக்டர் ஜெனரல் அஜித் தியாகி அண்மையில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தென்மேற்குப் பருவ மழை பற்றியே இன்னும் நிறையத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டார். ஆகவே வட கிழக்குப் பருவ மழை பற்றி சொல்லவே வேண்டாம்.

Nov 3, 2011

தமிழகத்தின் மழை சீசன்

Share Subscribe
"ஐப்பசியில் அடை மழை" என்று சொல்வார்கள். தமிழ் பஞ்சாங்கம் பற்றித் தெரியாதவர்களுக்கென சொல்வதானால் ஐப்பசி மாதம் என்பது அக்டோபர் மத்தியில் தொடங்கி நவம்பர் மத்தி வரை நீடிப்பதாகும்.

ஐப்பசியில் அடை மழை என்று சொல்லப்பட்டாலும் தமிழகத்தில் டிசம்பர் மத்தி வரை மழை நீடிப்பது உண்டு. அதாவது கார்த்திகை முடியும் வரை மழைபெய்ய வாய்ப்பு உண்டு. ஒரு சமயம் டிசம்பர் 18 ஆம் தேதியன்று புயல் வீசியது.
 வடகிழக்குப் பருவக் காற்று
அக்டோபர் மத்தியிலிருந்து டிசம்பர் மத்தி வரையில் பெய்கின்ற மழைக்கு வடகிழக்குப் ப்ருவ மழை என்றும் பெயர். வடகிழக்குத் திசையிலிருந்து வீசுகின்ற காற்று இந்த மழையைக் கொண்டு வருவதால் அப்பெயர்.

ஜூன் கடைசியில் சூரியன் தெற்கே செல்ல ஆரம்பித்ததும் ஆசியாவின் மத்தியப் பகுதி குளிர்ந்து விடும். காற்று அடர்த்தியாகி விடும். காற்றழுத்தமும் அதிகரித்து விடும். ஆனால் பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே உள்ள பகுதியில் தொட்ர்ந்து வெப்பம் நிலவும். உதாரணமாக செப்டம்பரில் தமிழகத்தில் கடும் வெயில் வீசுகிறது. இதன் விளைவு அக்டோபரிலும் நீடிக்கிறது. ஆகவே இதனால் பூமியின் நடுக்கோட்டுக்கு சற்று வடக்கே உள்ள ப்குதியில் காற்றின் அடர்த்தியும் அழுத்தமும் குறையும். இதன் விளைவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கிக் காற்று வீசத் தொடங்கும்.

பாசன ஏரி
பூமியின் சுழற்சி காரணமாக காற்று வீசும் திசை சற்றே விலகும். இதன் விளைவு தான் வடகிழக்குப் பருவக் காற்று. வங்கக் கடல் மேலாக் வரும் போது அது நிறைய ஈரப் ப்சையை எடுத்துக் கொள்கிறது. அதன் விளைவாக மழை பெய்கிறது.

பொதுவில் ஜூன் முதல் ஆகஸ்ட் மத்தி வரை இந்தியா முழுவதிலும் பெய்கின்ற தென் மேற்குப் பருவ மழையால் தமிழகத்துக்குப் பெரிய பலன் எதுவும் கிடையாது. மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வரும். பெரியார் அணை, வைகை அணை, பவானி சாகர் போன்றவை நிரம்பும். நீலகிரி மலையில் முக்கியமாக மின்சார உற்பத்திக்காகக் கட்டப்பட்ட சிறு அணைகளும் நிரம்பும்.  

ஐப்பசி கார்த்திகை மாதங்களில் பெய்யும் மழையைத் தேக்கி வைத்துப் பின்னர் பாசனத்துக்குப் பயன்படுத்துவதற்கென்றே தமிழக்த்தில் கடந்த பல நூற்றாண்டுகளில் மன்னர்கள் ஆயிரமாயிரம் ஏரிகளைத் தோண்டினர்.இப்போது இவற்றில் பலவும் மேடிட்டுப் போய் விட்டன. ஆக்கிரமிப்பு காரணமாக பல ஏரிகள்  இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய் விட்டன.

கோயில் குளம்
குளங்கள் வேறு வகை. தமிழகத்தில் கோயில்களுக்குப் பஞ்சமில்லை. கோயில் என்றால் அருகே ஒரு குளம் இருக்கும்.அதைச் சுற்றிலும் மரங்கள் இருக்கும். குளம, மரங்கள், நிலத்தடி நீர் மூன்றுக்கும் ஒரு வகையான தொடர்பு உண்டு.மரங்களை வெட்டினால் குளம் வற்றி விடும். குளங்கள் வற்றினால் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் மடடம் கீழே இறங்கி கிணறுகளும் வற்றி விடும்.

வடகிழக்குப் பருவ மழை ஒரு வகையில் தென்மேற்குப் பருவ மழையிலிருந்து வேறு பட்டது. தென் மேற்குப் பருவ மழையின் போது தென் மேற்கிலிருந்து தொடர்ந்து அலை அலையாக மழை மேகங்கள் வந்து கொண்டிருக்கும். வடகிழக்குப் பருவ மழை சீசனின் போது வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தோன்றினால் தான் நல்ல மழை பெய்யும். அதே போல வங்கக் கடலில் புயல் சின்னங்கள் உருவானாலும் நல்ல மழை பெய்யும்.

வடகிழக்குப் பருவ மழையால் தமிழகம் மட்டுமன்றி ஆந்திரம், ஒரிசா ஆகிய மானிலங்களும் மழையைப் பெறுகின்றன்.

Nov 2, 2011

அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்?

Share Subscribe
‘வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுததத் தாழ்வு மண்டலம் காரண்மாக தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் பரவலாக மழை இருக்கலாம்‘ என்று டிவி அல்லது ரேடியோவில் வானிலை அறிவிப்பின் போது தெரிவிப்பார்கள்.மழை சீசனின் போது இவ்வித அறிவிப்பைக் கேட்கலாம்.

அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்?

தரையிலிருந்து தொடங்கி வானில் பல கிலோ மீட்டர் உயரம் வரை காற்று வியாபித்துள்ளது.காற்றுக்கு எடை உண்டு. ஆகவே மேலிருந்து கீழ் வரை உள்ள காற்று நம்மை அழுத்துகிறது. எந்த ஒருவரையும் காற்றானது கடல் மட்டத்தில சதுர செண்டி மீட்டருக்கு ஒரு கிலோ வீதம் அழுத்துகிறது. ஒரு புறத்திலிருந்து மட்டும் அழுத்தம் இருந்தால் நம்மால் உணர முடியும்.

 ஆனால் காற்று நம்மை எல்லாப் புறங்களிலிருந்தும் அழுத்துவதால் காற்று அழுத்துவதை நம்மால் உணர முடிவதில்லை.


ஓர் இடத்துக்கு மேலே இருக்கின்ற மொத்தக் காற்றின் அளவு இடத்துக்கு இடம் வித்தியாசப்படும். ஆகவே காற்றழுத்தமும் வித்தியாசப்படும். ஓரிடத்தில் காற்றழுத்தம் மிக் அதிகமாக இருக்கும்.வேறிடத்தில் குறைவாக இருக்கும்.இதற்கு சூரியனும் காரணம்.

 காற்றழுத்தம் அதிகமாக உள்ள இடத்திலிருந்து காற்றழுத்தம் குறைவாக உள்ள பகுதியை நோக்கி காற்று வீசும். காற்றுடன் மேகங்களும் நகரும். ஆகவே காற்றழுத்த நிலைமைகள் வானிலைத் துறையினருக்கு மிக் முக்கியம்.

வானிலைத் துறையினர் காற்றழுத்தத்தை அளக்க மேலே சொன்ன (சதுர செண்டிமீட்டருக்கு இவ்வளவு என்ற) கணக்கை பின்பற்றுவதில்லை.அவர்கள் கணக்குப்படி கடல் மட்டத்தில் சராசரி காற்றழுத்தம் 1013 மில்லி பார். காற்றழுத்தம் இடத்துக்கு இடம் மாறுபடுவதால் ஆங்காங்கு காற்றழுத்த அளவு மானி வைக்கப்படுகிறது.

காற்றழுத்தமானிகள் தெரிவிக்கின்ற எண்ணற்ற தகவலகளை வைத்து காற்றழுத்த நிலவரப் படம் தயாரிப்பார்கள். எந்தெந்த இடங்களில் ஒரே மாதிரி அழுத்தம் இருக்கிறதோ அந்த இடங்களை எல்லாம் சேர்த்து கோடு போடுவார்கள். இதற்கு Isobar  என்று பெயர்.அருகே உள்ள படத்தில் L என்ற எழுத்து Low  என்பதைக் குறிப்பதாகும்.H என்பது High  என்பதைக் குறிப்பதாகும்.படத்தில் 1008 என்று குறிப்பிடப்பட்ட கோட்டைக் கவனிக்கவும்.அக் கோடு அமைந்துள்ள இடங்கள் அனைத்திலும் காற்றழுத்தம் அந்த அளவில் இருக்கிறது என்று அர்த்தம்.

ஓரிடத்தில் காற்றழுத்தம் குறைவாக இருக்க, அதைச் சுற்றியுள்ள இடங்களில் எல்லாம் அதிகமாக இருக்க நேரிடலாம். நட்ட நடுவே காற்றழுத்தம் குறைவாக உள்ள இடத்தை Low என்று குறிப்பிடுவார்கள். நேர் மாறாக நட்ட நடுவே ஓரிடத்தில் அதிகமாக இருந்தால் அது High.

மேடாக இருக்கும் இடத்திலிருந்து தண்ணீர் பள்ளமாக இருக்கின்ற இடத்தை நோக்கிப் பாய்வது போலவே காற்றும் செயல்படுகிறது. வடகிழக்குப் பருவ மழைக் காலத்தின் போது காற்று வட கிழக்கிலிருந்து வீசுகிறது. கடல் மீதாக வருகின்ற மேகங்கள் ஆவி வடிவிலான நீரைத் தாங்கியவையாக வருகின்றன். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அந்த மேகங்களை ஈர்க்கும் போது மழை பொழிகிற்து.. ஆகவே கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தோன்றினால் மழை பெய்யும் வாய்ப்பு தோன்றுகிறது.